உலகப் புகழ்பெற்ற பரதநாட்டியக் கலைஞர் லட்சுமி விஸ்வநாதன், இன்று (19.01.2023) சென்னையில் காலமானார். 79 வயதாகும் இவர், உடல்நலக் குறைவால் உயிரிழந்ததாக அவர் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். ஏழு வயதில் தன்னுடைய அரங்கேற்றத்தைச் செய்த இவர், ஐம்பது வருடங்களுக்கு மேல் பரதநாட்டியக் கலைஞராகத் துடிப்புடன் பல நாடுகளில் பரதக் கலையைக் கொண்டு சென்றுள்ளார். இவருக்குக் கலைமாமணி விருது வழங்கப்பட்டுள்ளது. அதேபோல கிருஷ்ண கான சபாவின் வாழ்நாள் சாதனையாளர் விருது, சென்னை மியூசிக் அகாடமியின் நிருத்ய கலாநிதி போன்ற விருதுகளையும் பெற்றுள்ளார்.

லட்சுமி விஸ்வநாதன் பற்றியும் அவருடனான அழகான நினைவுகளைப் பற்றியும் நடனக் கலைஞர் சித்ரா விஸ்வேஸ்வரன் நம்முடன் பகிர்ந்துகொண்டார்.
"நாங்க ரெண்டு பேருமே, ரொம்ப நல்ல நண்பர்கள். அவர் ரொம்ப அன்பான மனிதர். நல்ல நகைச்சுவை உணர்வு கொண்டவர். அவருடன் பேசும் போது மனம் மகிழ்ச்சியில் திளைக்கும். அவருடைய பரதம் போலவே, அவர் உடைகள், வீடு என அனைத்திலுமே ஓர் அழகியல் இருக்கும்.

லட்சுமி பரதக் கலையைத் தாண்டி, மிகவும் நல்ல எழுத்தாளர், பேச்சாளரும் கூட. சமீபத்தில் டிசம்பர் 25 அன்று அவருடன், நான், பத்மா சுப்ரமணியம் மற்றும் சுதாராணி ரகுபதி சேர்ந்து கலாசேத்திராவில் நடனமாடினோம். அது மிகவும் மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. அந்த அழகான காலைப் பொழுதை ஒரு பொக்கிஷமாக என் நினைவுகளில் என்றும் வைத்திருப்பேன்.
இத்தனை ஆண்டுகள் பரதக் கலையில் நான் கடந்து வந்த பாதைகள் ஏராளம். பலர் தங்கள் நடனம் மூலம் என்னை மெய் சிலிர்க்க வைத்திருந்தாலும், மிகவும் குறைந்த கலைஞர்களே நமக்கு உத்வேகம் கொடுப்பார்கள். அந்த உத்வேகம் எனக்கு லட்சுமியின் நடனத்தில் பல முறை கிடைத்திருக்கிறது.

லட்சுமி தன்னுடைய கற்பனைகளையும், கிரியேட்டிவிட்டியையும் தன் நடனத்தில் புகுத்தி, பார்வையாளர்களைச் சிலிர்க்க வைப்பார். அவர் இதுவரை வாழ்ந்த நாள்களில் தன்னைச் சுற்றி இருப்பவர்களுக்கு மகிழ்ச்சியையும், அன்பையும், ஊக்கத்தையும் அளித்தார். அப்படிப்பட்ட ஒரு அன்பான அழகான மனிதராக லட்சுமி எல்லோர் மனதிலும் நீங்காத ஓர் இடத்தை பிடித்துள்ளார்" என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார் சித்ரா விஸ்வேஸ்வரன்.