சினிமா
தொடர்கள்
Published:Updated:

அரசியல் பேசும் இசையமைப்பாளர்கள்!

ஏ.ஆர்.ரஹ்மான், இளையராஜா
பிரீமியம் ஸ்டோரி
News
ஏ.ஆர்.ரஹ்மான், இளையராஜா

எல்லாத்திசைகளில் இருந்தும் எதிர்ப்புக்குரல்கள் வந்ததைத் தாண்டி, இளையராஜாவுக்கு அவர் இல்லத்திலிருந்தே எதிர்வினை வந்தது

தமிழ் சினிமாவுக்கும் அரசியலுக்குமான தொடர்பு புதிதல்ல. எம்.ஜி.ஆர் முதல் விஜய் வரை அரசியல் அடையாளங்களையும் ஆசைகளையும் வெளிப்படுத்திக்கொண்டவர்கள்தான். ஆனால் இதுவரை நடிகர்கள், இயக்குநர்கள், பாடலாசிரியர்கள் மட்டுமே நேரடி அரசியலில் ஈடுபட்டிருக்கிறார்கள்; கருத்து தெரிவித்திருக்கிறார்கள். இசையமைப்பாளர்கள், பாடகர்கள் எப்போதும் அரசியல் பேசியதில்லை. ஆனால் முதன்முறையாகத் தமிழ் சினிமா இசையமைப்பாளர்கள் அரசியல் பேசுவதைத் தமிழ்நாடே ஆச்சர்யத்துடன் பார்க்கிறது.

‘வந்தேமாதரம்’, ‘செம்மொழியான தமிழ்மொழியாள்’ என்று இரண்டு பாடல்களுக்கும் இசை மீட்டியவர்தான் ஏ.ஆர்.ரஹ்மான். அப்போதெல்லாம் அவர் அரசியலுக்கு அப்பாற்பட்டவராக இருந்தார். ஆனால் ‘இந்து-இந்தி-இந்தியா’ என்னும் ஒற்றை அஜெண்டாவுடன் பா.ஜ.க இந்தியாவின் பன்முகத்தன்மையைச் சிதைப்பதாகக் குற்றம் சாட்டப்படும் சூழலில் இந்தித் திணிப்பை எதிர்த்தும் தமிழ்ப்பற்றை உயர்த்திப்பிடித்தும் சமீபகாலமாகத் தன் கருத்தை அழுத்தமாகப் பதிவு செய்கிறார் ரஹ்மான்.

அரசியல் பேசும் இசையமைப்பாளர்கள்!

குறிப்பாக ‘`ஆங்கிலத்துக்குப் பதிலாக இந்தியையே இணைப்புமொழியாகப் பயன்படுத்த வேண்டும்” என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சொன்ன சூழலில், சந்தோஷ் நாராயணன் வரைந்த தமிழணங்கு ஓவியத்தை ‘இன்பத்தமிழ் எங்கள் உரிமைச் செம்பயிருக்கு வேர்’ என்ற புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் வரிகளோடு ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார், ஏ.ஆர்.ரஹ்மான். மேலும் சி.ஐ.ஐ மாநாட்டில் கலந்துகொண்ட ஏ.ஆர்.ரஹ்மானிடம், ‘இந்திதான் இணைப்பு மொழி என்று அமித்ஷா சொல்லியிருக்கிறாரே?’ என்று செய்தியாளர் ஒருவர் கேட்க, ‘தமிழ்தான் இணைப்பு மொழி’ என்று அழுத்தமாகச் சொன்னதும் பரபரப்பைக் கிளப்பியது.

இந்த நிலையில்தான் தொடங்கியது இளையராஜா சர்ச்சை. புளூ கிராஃப்ட் டிஜிட்டல் ஃபவுண்டேஷன் என்ற நிறுவனம் வெளியிட்டிருந்த ‘மோடியும் அம்பேத்கரும்’ என்ற புத்தகத்தில் இளையராஜா எழுதிய அணிந்துரையில் மோடியையும் அம்பேத்கரையும் ஒப்பிட்டு மோடியைப் பாராட்டியிருந்தது சர்ச்சைகளுக்கு வழிவகுத்தது. ‘அம்பேத்கரின் சித்தாந்தமும் மோடியின் இந்துத்துவ சித்தாந்தமும் ஒன்றுக்கொன்று நேரெதிரானவை. சாதி ஒழிப்பை முன்வைத்து இந்துமதத்தின் மீது விமர்சனம் வைத்து மதத்திலிருந்தே வெளியேறியவர் அம்பேத்கர். இந்துத்துவமோ சாதியாதிக்கத்தை வலுப்படுத்துவது. அம்பேத்கர் உருவாக்கிய ரிசர்வ் வங்கி போன்ற சுயச்சார்பு நிறுவனங்களின் அதிகாரத்தைப் பறிப்பது மோடி அரசு. மோடியுடன் ஒப்பிடுவது அம்பேத்கரை அவமானப்படுத்துவது’ என்று கடும் கண்டனங்கள் எழுந்தன.

அரசியல் பேசும் இசையமைப்பாளர்கள்!

ராயல்டி உட்பட பல தனிப்பட்ட சர்ச்சைகளில் சிக்கியிருந்தாலும் இதுவரை இளையராஜா அரசியல் விமர்சனங்களுக்கு ஆளானதில்லை. ‘அம்பேத்கர்’ என்ற பெயரையே உச்சரிக்காத இளையராஜா, முதன்முதலாக அம்பேத்கர் பெயரை உச்சரித்து அவரை மோடியுடன் ஒப்பிட்டதுதான் இந்தக் கண்டனங்களுக்குக் காரணம்.

எல்லாத்திசைகளில் இருந்தும் எதிர்ப்புக்குரல்கள் வந்ததைத் தாண்டி, இளையராஜாவுக்கு அவர் இல்லத்திலிருந்தே எதிர்வினை வந்தது. கறுப்புச்சட்டை, கறுப்புக் கைலியுடன் ‘கறுப்பு திராவிடன், பெருமைமிகு தமிழன்’ என்ற வரிகளுடன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார் யுவன்ஷங்கர் ராஜா. இஸ்லாத்தைத் தழுவிய யுவன் ஏற்கெனவே ‘இந்தி தெரியாது போடா’ டிஷர்ட் அணிந்ததும் அப்போது பரபரப்பைக் கிளப்பியது. ‘இந்தி பேசாததால் நானும் அவமானங்களைச் சந்தித்தேன்’ என்று விகடன் பிரஸ்மீட்டில் தன் வலியையும் பகிர்ந்துகொண்டவர்தான் யுவன்.

‘இனக்கலவரத்தின் கறைபடிந்தவரை, இந்திய வரலாற்றின் பொன்னேடுகளில் பொறிக்கப்பட்டிருக்கிற சமத்துவச் சிந்தனையுள்ள ஒருவரோடு ஒப்பிட்டுப் பேசுவது எப்படி ஏற்றுக்கொள்ளப்படும்?’ என்று இளையராஜாவுக்கு நேரடியாகவே எதிர்ப்பு தெரிவித்த ஜேம்ஸ் வசந்தனிடம் பேசினேன்.

அரசியல் பேசும் இசையமைப்பாளர்கள்!

“கடந்த எட்டு வருடங்களாக இந்தியா செல்லத் தொடங்கியிருக்கிற அபாயகரமான திசையைக் கண்டு அளவில்லாத கோபம் வருகிறது. இதுவரை அரசியல் கருத்துகள் அதிகம் பேசாத நானும் பேசவேண்டிய இடத்துக்குத் தள்ளப்பட்டேன். நாம் பேசவில்லையென்றால் இந்தப் போக்கின் விளைவுகளால் வரும் தலைமுறையினர், நம் பிள்ளைகள்தான் துயருறுவார்கள்’’ என்கிறார்.

இளையராஜாவைத் தொடர்ந்து இயக்குநர் பாக்யராஜும் மோடிக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்து, பிறகு அதற்கு மன்னிப்பும் கேட்டுக்கொண்டார். ஆனால், பாக்யராஜ் கருத்து தெரிவித்தபோது, ‘ஆக... தமிழ் சினிமா ஆளுமைகளை ஒவ்வொன்றாக இழக்கின்றோம்’ என்று ஃபேஸ்புக்கில் எழுதியிருந்தார் இசையமைப்பாளர் தாஜ்நூர்.

அரசியல் பேசும் இசையமைப்பாளர்கள்!

“திடீரென்று அந்த மாதிரி கோபம் வந்ததற்கு காரணம், அந்த ஒப்பீடுதான். இந்தியாவுடைய அரசியலமைப்பு சாசனத்தையே தீர்மானித்தவர் அம்பேத்கர். இன்றைக்கு எவ்வளவோ விஷயங்கள் மாறியிருக்கிறது என்றால் அதற்கு அம்பேத்கரின் பங்கு அளப்பரியது. அவரை யாருடனும் ஒப்பிடுவதில் எனக்கு உடன்பாடில்லை. எனக்கும் மோடி மீது தனிப்பட்ட விரோதமெல்லாம் இல்லை. ஆனால் அன்னை தெரசாவையும் குஷ்பூவையும் ஒப்பிட்டுப் பேசமுடியுமா? பாக்யராஜ் சார் சொன்ன கருத்தைத் திரும்பப் பெற்றதற்கு என்னை மாதிரி சிலர் சொன்ன கருத்துதான் காரணம். எதையும் கண்டுகொள்ளாமல் போய்விட்டால் எதிர்காலம் என்னாகுமோ என்ற பயம் வருகிறது” என்கிறார் தாஜ்நூர்.

ஜேம்ஸ் வசந்தன்
ஜேம்ஸ் வசந்தன்
தாஜ்நூர்
தாஜ்நூர்

பாப்மார்லி முதல் கத்தார், கோவன் வரை இசையை அரசியல் ஆயுதமாக உயர்த்திப்பிடித்த எத்தனையோ கலைஞர்கள் உண்டு. ஆனால் தமிழ் சினிமா இசைக்கலைஞர்களோ புரட்சிகர அரசியல் அல்ல, தேர்தல் அரசியலையே தவிர்த்தவர்கள். இப்போது தமிழ் சினிமா இசையமைப்பாளர்கள் வெளிப்படையாக அரசியல் பேச ஆரம்பித்திருப்பது அடுத்தடுத்து என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.