Published:Updated:

"படம் எடுக்கும் போது கோடீஸ்வரன்... ரிலீஸானால் பிச்சைக்காரன்!”

"படம் எடுக்கும் போது கோடீஸ்வரன்... ரிலீஸானால் பிச்சைக்காரன்!”

மூன்று மாத ஸ்டிரைக்கில் கனவுத் தொழிற்சாலை!

சினிமா தயாரிப்பாளர்கள் செய்துள்ள அறிவிப்பு அந்த துறையில் இருப்பவர்களை மட்டுமல்ல சினிமா ரசிகர்களையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது!

"படம் எடுக்கும் போது கோடீஸ்வரன்... ரிலீஸானால் பிச்சைக்காரன்!”

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

தமிழ் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவராக தாணு பொறுப்பேற்ற பின், முதல் பொதுக்குழு கூட்டம் கடந்த 8-ம் தேதி நடைபெற்றது. அமைதியாகத் தொடங்கிய கூட்டத்தில் ஒரு கட்டத்தில் தயாரிப்பாளர்கள் கொந்தளிக்க ஆரம்பித்தனர். பொதுக்குழு முடிந்தபின் 'மூன்று மாதங்களுக்குப் படப்பிடிப்பு, படத் தயாரிப்பை நிறுத்தப் போகிறோம்’ என்று தாணு அறிவித்தார். இந்த திடீர் அறிவிப்பால் தமிழ் சினிமா உலகம் அதிர்ச்சியில் இருக்கிறது. இதுகுறித்து தமிழ் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் தாணுவிடம் கேட்டோம். ''வழக்கம்போல் பொதுக்குழு கூட்டம் ஆரம்பித்தது. திடீரென 'ஆறுமுகம்’ படத் தயாரிப்பாளர் மன்னன் எழுந்தார், 'சின்ன பட்ஜெட் தயாரிப்பாளர்களுக்கு தியேட்டர்கள் கிடைக்க​வில்லை. அப்படியே கஷ்டப்பட்டு தியேட்டர்களை பிடிச்சு ரிலீஸ் செய்தாலும் ஒரு ஷோ மட்டும் போட்டுட்டு படத்தையே நிறுத்திடுறாங்க. கோடியைக் கொட்டி எடுத்தாலும் வசூல் சுத்தமா இல்லை. பேசாம ஆறுமாசத்துக்கு பட தயாரிப்பையே நிறுத்துங்க’ என்று ஆவேசமாகப் பேச ஆரம்பித்ததும் உறுப்பினர்கள் எல்லோரும் கைதட்டினர். அடுத்து பேசவந்த தயாரிப்பாளர் இப்ராஹிம் ராவுத்தர், 'நாலரை கோடி போட்டு 'புலன் விசாரணை2’ படம் எடுத்தேன். 25 லட்சம் செலவுசெய்து விளம்பரம் கொடுத்தேன். அதற்கான  வசூலே இல்லை. பேசாம மூணு மாசத்துக்கு யாரும் சினிமா தயாரிக்க வேண்டாம்’ என்று ஆதங்கமாய் சொன்னார்.

என் அருகில் இருந்த செயலாளர் ராதாகிருஷ்ணன், 'ராவுத்தர் சொன்ன கருத்தை அப்படியே சங்கம் உடனடியாக அமல்படுத்த வேண்டும்’ என்றார். நான் எழுந்தேன். 'இது தமிழ் தயாரிப்பாளர்கள் சங்கம் மட்டும் முடிவெடுக்கும் விஷயமல்ல; நடிகர் சங்கம், இயக்குநர்கள் சங்கம், ஃபெப்சி, திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் என்று எல்லா அமைப்புகளுடனும் கலந்து ஆலோசித்துவிட்டு, அறிவிக்க வேண்டிய விஷயம். நாம் தன்னிச்சையாக அறிவிக்கக் கூடாது’ என்று சொன்னேன். எல்லோரும் ஆமோதித்தனர். ஃபிலிம் முறையிலிருந்து க்யூப் முறை வந்தபிறகு ஒரு க்யூபுக்கு ரூ.9,000 போதுமானது என்றார்கள். இப்போது அதை, திடீரென 30,000 ரூபாயாக உயர்த்திவிட்டனர். ஒரு படம் பூஜை போடும்போது தயாரிப்பாளர் கோடீஸ்வரன். அந்தப் படம் ரிலீஸானால் பிச்சைக்காரன். இதுதான் 95 சதவிகித தயாரிப்பாளர்களின் உண்மைநிலை. சின்ன பட்ஜெட் படங்களுக்கு தியேட்டரே கிடைப்பதில்லை. அப்புறம் எதற்குப் படங்களைத் தயாரிப்பது? பேசாமல் மூன்று மாதங்களுக்குப் படத்தைத் தயாரிக்காமல் இருப்பதே உத்தமம். சினிமா உலகில் இருக்கும் எல்லா சங்கத்துடனும் பேசி வருகிறேன். விரைவில் ஒரு அறிவிப்பை வெளியிடுவோம்'' என்று விளக்கம் கொடுத்தார்.

"படம் எடுக்கும் போது கோடீஸ்வரன்... ரிலீஸானால் பிச்சைக்காரன்!”

நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ராதாரவியிடம் பேசினோம். ''பணம் போட்டு படம் எடுப்பவர்கள் தயாரிப்பாளர்கள். அவர்கள் முடிவெடுத்தால் அதற்கு முக்கியமான காரணம் ஏதாவது இருக்கும்'' என்றார்.

தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் தலைவர் விக்ரமனிடம் கேட்டோம். ''பெரிய பட்ஜெட் படங்களுக்கு  10 கோடி ரூபாய் செலவு செய்து விளம்பரம் செய்கிறார்கள். முதலில் விளம்பரக் கட்டுப்பாடு கொண்டு வரவேண்டும். ஆரம்பத்தில் ஒன்றிரண்டு சேனல்கள் இருந்தபோது, சினிமா சாட்டிலைட் வியாபாரம் நன்றாகவே இருந்தது. இப்போது ரிமோட்டை அழுத்தினால் ஏகப்பட்ட தமிழ் சேனல்கள் இருந்தும் சின்ன பட்ஜெட் படங்களுக்கு சாட்டிலைட் வியாபாரம் இல்லை. டிக்கெட் புக் செய்ய இன்டெர்நெட்டை பார்த்தால் புதுப்படங்கள் எல்லா தியேட்டரிலும் ஃபுல் என்று வருகிறது. படத்தின் ரிசல்ட்டை பார்த்தால் வசூல் இல்லை என்கிறார்கள். உண்மையில் என்னதான் நடக்கிறது... எங்கேயோ தப்பு நடக்கிறது'' என்றார்.

தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதன், ''எந்தத் தொழிலையும் நிறுத்திவைத்து மீண்டும் ஆரம்பிப்பது சரியான அணுகுமுறை அல்ல. ரிலீஸ் ஆகும் படங்களின் எண்ணிக்கையை மாதத்துக்கு ஆறு படங்கள், நான்கு படங்கள் என வரைமுறைப்படுத்தலாம். தயாரிப்பை முறைப்படுத்தினால் போதும். தயாரிப்பை நிறுத்த வேண்டியது இல்லை'' என்றார்.

"படம் எடுக்கும் போது கோடீஸ்வரன்... ரிலீஸானால் பிச்சைக்காரன்!”

ஃபெப்சி அமைப்பின் தலைவர் 'ஃபெப்சி’ சிவாவிடம் பேசினோம். ''சினிமாவை நம்பி வாழும் தொழிலாளர்கள் வாழ்க்கையும் இதில் உள்ளடங்கி இருக்கிறது. திடீரென தயாரிப்பை நிறுத்தினால் தொழிலாளர்கள் நிலைமை என்னாகும்... அதுமட்டுமல்ல நிறைய படங்களின் படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது. அவற்றைப் பாதியிலே நிறுத்திவிட்டால் தயாரிப்பாளர்களுக்குத்தான் நஷ்டம் அதிகம். அதனால் ஃபெப்சி அமைப்பு தமிழ் தயாரிப்பாளர்கள் சங்கத்தோடு பேசி சுமுகமான முடிவை எடுக்கும்'' என்றார்.

பொதுவாக தொழிலாளர்கள்தான் ஸ்டிரைக் நடத்துவார்கள்... இங்கே தயாரிப்பு முதலாளிகளே ஸ்டிரைக் நடத்தப்போகிறார்களாம்.

சினிமா துறைக்கு கனவுத் தொழிற்சாலை என்று சரியாகத்தான் பெயர் வைத்திருக்கிறார்கள்!

எம்.குணா