Published:Updated:

"வெளிவராத படங்களுக்கு விருது தரலாமா?”

சிக்கலாகும் தேசிய விருது!

பிரீமியம் ஸ்டோரி

விருது என்றாலே சர்ச்சையும் சேர்ந்து வரும்.

2014-ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுப் பட்டியலை கடந்த 24-ம் தேதி மத்திய அரசு அறிவித்தது. 'நானு அவனல்ல  அவளு’ என்ற கன்னட படத்துக்காக சிறந்த நடிகராக கன்னட நடிகர் விஜய்யும் சிறந்த நடிகையாக 'குயின்’ இந்தி படத்துக்காக கங்கனா ரணாவத்தும் தேர்வு பெற்றுள்ளனர். சிறந்த துணை நடிகர் 'ஜிகர்தண்டா’ பாபி சிம்ஹா, சிறந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமார், சிறந்த எடிட்டர் 'ஜிகர்தண்டா’ விவேக் ஹர்ஷன், சிறந்த பின்னணி பாடகியாக 'சைவம்’ உத்ரா, சிறந்த குழந்தை நட்சத்திரங்களாக 'காக்கா முட்டை’ விக்னேஷ், ரமேஷ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். சிறந்த பிராந்திய மொழிப் படமாக 'குற்றம் கடிதல்’, மாநில சிறந்த குழந்தைப் படமாக 'காக்கா முட்டை’ தேர்வு செய்யப்பட்டுள்ளன. விருதுபெற்ற அனைவரும் பாராட்டத்தக்கவர்கள். அதில் சந்தேகம் இல்லை. ஆனால் ரிலீஸ் ஆகாத படத்துக்கு விருது தரலாமா என்பதே சிலரது சிக்கலான கேள்வி.

"வெளிவராத படங்களுக்கு விருது தரலாமா?”

பெயர் சொல்ல விரும்பாத தயாரிப்பாளர் ஒருவர், ''தமிழ் படங்களுக்கு விருதுகள் கிடைத்திருப்பதை வரவேற்கிறேன். விருது பெற்றவர்களைப் பாராட்டுகிறேன். ஆனால், வெளியான நல்ல படங்களுக்கு விருது கொடுத்தால் தத்தளிக்கும் தயாரிப்பாளர் நெஞ்சில் பால்வார்த்த மாதிரி இருக்கும். இன்னும் ரிலீஸே ஆகாத 'குற்றம் கடிதல்’, 'காக்கா முட்டை’ ஆகிய படங்களுக்கு விருது கொடுத்தது ஏன்?'' என்று கொந்தளித்தார்.

இதுகுறித்து இரண்டு படங்களுக்கும் தேசிய விருது கொடுத்த ஜூரிகளின் தலைவரான  இயக்குநர் பாரதிராஜாவிடம் பேசினோம். ''திரைப்படங்கள் ரிலீஸான பிறகுதான் மக்கள் தீர்ப்பு  சொல்லி விடுகிறார்களே, அப்புறம் நாங்கள் எதற்கு இருக்கிறோம்? சென்ற ஆண்டு சென்சார் செய்யப்பட்ட படம் என்கிற தகுதி ஒன்றே எங்களுக்குப் போதும். மற்றபடி அந்தப் படம் ரிலீஸானதா? மக்கள் பார்த்தார்களா? என்கிற சங்கதிகள் தேவையற்றவை. எனது '16 வயதினிலே’ திரைப்படம் 1976ல் வெளியானது. அப்போது என் படத்தை தேசிய விருதுக்கு அனுப்பினேன். அதே காலகட்டத்தில் ஜான் ஆபிரகாம் இயக்கிய 'அக்ரஹாரத்தில் கழுதை’ படமும் தேசிய விருது குழுவுக்கு அனுப்பப்பட்டது. '16 வயதினிலே’ படத்துக்கு விருதை எதிர்பார்த்துக் காத்திருந்தேன். ஆனால், சிறந்த படத்துக்கான தேசிய விருதை 'அக்ரஹாரத்தில் கழுதை’ படத்துக்கு வழங்கினர்.

"வெளிவராத படங்களுக்கு விருது தரலாமா?”

எனது திரைப்படம் ரிலீஸாகி எப்படி மக்களின் வரவேற்பைப் பெற்றது என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆனால், 39 வருடங்களைக் கடந்தும், தேசிய விருது பெற்ற 'அக்ரஹாரத்தில் கழுதை’ திரைப்படம் இன்னும் ரிலீஸே ஆகவில்லை. அதற்காக அப்போது விருது கொடுத்ததைக் குறை சொல்ல முடியுமா?

சில படங்கள் விருது பெறுவதற்கென்றே திட்டமிட்டு எடுக்கப்படுகின்றன. முதலில் தேசிய விருதுக்கு அனுப்புவார்கள். அப்புறம் உலக சினிமா விருதுக்கு அனுப்பி,  விருதுகளை அள்ளிக்குவிப்பார்கள். அப்படி செய்து வருபவர்களில் ஒருவர்தான் இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன். ரிலீஸான படங்களுக்குத்தான் விருது தரவேண்டும் என்கிற சட்டநியதி எதுவும் இல்லை. சிறந்த குழந்தைப் படமாக விருது பெற்ற 'காக்கா முட்டை’ சேரி பின்னணியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம். இரண்டு சிறுவர்கள் தங்களின் பிஞ்சு முகத்தில் பிரதிபலிக்கும் உணர்வுகளைப் பார்த்து வியந்து போனேன்.

"வெளிவராத படங்களுக்கு விருது தரலாமா?”

'குற்றம் கடிதல்’ படத்தில் சின்னச்சின்ன காட்சிகளைக்கூட நேர்த்தி குறையாமல், குலையாமல் கோத்துக் கொடுத்திருக்கும் நுட்பத்துக்கு எப்படி விருது தராமல் தவிர்க்க முடியும்? அந்தப் படத்தில் டீச்சராக நடித்த ராதிகாவின் நடிப்பு அபாரம். தேசிய அளவில் அவர்தான் சிறந்த நடிகைக்கான விருது பெறுவார் என்று எதிர்பார்த்தேன். ஆனால், கங்கணா ரணாவத் விருதைத் தட்டிச் சென்றுவிட்டார். இன்னும் வெளிவராத படங்களுக்கு எப்படி விருது தரலாம் என்று கேள்வி கேட்காதீர்கள். முதலில் படங்களைப் பாருங்கள். அதற்குள் விருதுக்கான விஷயங்கள் இருப்பதை உணருங்கள்.

தேசிய விருதுகளைத் தேர்ந்தெடுக்கும்  ஜூரிகளில் நானும் இடம்பெற்றது ரொம்ப மகிழ்ச்சியானது, நெகிழ்ச்சியானது.  தெற்கு, வடக்கு, மேற்கு, கிழக்கு என நான்கு சேனல்கள் இருக்கின்றன. எல்லோரும் சேர்ந்து விருதுக்குரியவர்களைத் தேர்ந்தெடுத்தோம்.தேசிய விருதுகளைத் தேர்ந்து எடுக்கும் குழுவில் அரசியல் தலையீடு இருக்கும் என்று யாராவது அங்கலாய்த்தால் அது அக்மார்க் பொய். நாங்கள் சுதந்திரமாக சிறந்த கலைஞர்களைத் தேர்தெடுத்து, விருது கொடுத்து கெளரவித்து இருக்கிறோம்'' என்று சொன்னார்.

விருதுக்குப் பிறகாவது அந்தப் படங்கள் வெளியாகட்டும்.

நார்வே திரைப்பட விழாவில் கலந்துகொண்டு ஆறு விருதுகளை அள்ளிய 'காவியத்தலைவன்’ திரைப்படம், தேசிய விருதுக்கு அனுப்பப்படவில்லை. படத்தின் இயக்குநருக்கும் தயாரிப்பாளருக்கும் இடையில் நிகழ்ந்த ஈகோ போரே அதற்குக் காரணமாம்.

எம்.குணா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு