Published:Updated:

சாதி எதிர்ப்பு... அரசியல் பின்னணி... சென்சார் சிக்கல்...

கொம்பு சீவப்படும் ‘கொம்பன்’

பிரீமியம் ஸ்டோரி

சாதிச் சாயமும் அரசியல் பின்னணியும் சென்சார் சர்ச்சையும் பின்னிப் பிணைந்து கொம்பு சீவிவிடப்பட்டிருக்கிறது 'கொம்பன்’ திரைப்படம். புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி எதிர்ப்பு, சென்சார் போர்டில் நடந்த சண்டை, 'நண்பேன்டா’ படத்துக்குப் போட்டி என இந்தப் படத்துக்குப் பின்னால் நடந்த விவகாரங்கள் சினிமாவைவிட படு த்ரில். பல தரப்பிலும் பேசி திரட்டப்பட்ட தகவல்கள் இங்கே...

சாதி எதிர்ப்பு... அரசியல் பின்னணி... சென்சார் சிக்கல்...

'கொம்பன்’ படம் சென்சாருக்கு அனுப்பப்பட்டபோது உறுப்பினர்கள் நல்லி குப்புசாமி, தி.மு.க-வைச் சேர்ந்த விஜயா தாயன்பன், காங்கிரஸ் கட்சியின் எர்னஸ்ட்பால் ஆகியோர் படத்தைப் பார்த்திருக்கிறார்கள். எர்னஸ்ட்பால் மட்டும் 'படத்தை வெளியிட்டால் நிறைய பிரச்னைகள் வரும்’ எச்ன சொல்லி படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். இதனால், படம் மறு தணிக்கைக்கு அனுப்பப்பட்டது. ரிலீஸுக்குத் தேதி குறித்துவிட்ட நிலையில் சென்சார் சர்டிஃபிகேட் கிடைக்காததால் தயாரிப்புத் தரப்புக்கு பல்ஸ் எகிறிப் போனது. மார்ச் 29-ம் தேதி எஸ்.வி.சேகர் தலைமையில் நடிகை குயிலி, ரேவதி கிருஷ்ணா என ஐந்து பெண் உறுப்பினர்கள் உட்பட 10 பேர் கொண்ட தணிக்கைக் குழு, மறு தணிக்கைக்காகப் படத்தைப் பார்த்திருக்கிறது.

படத்தில் சர்ச்சைக்குரிய விவகாரங்கள் இருப்பதைக் கேள்விப்பட்டு அங்கே ஆஜர் ஆன டாக்டர் கிருஷ்ணசாமி, படத்தைப் பார்க்க வந்த உறுப்பினர்களிடம் மனு கொடுத்திருக்கிறார். தென் மாவட்டங்களில் நிலவும் பிரச்னைகளையும் படம் வெளியானால் ஏற்படும் பாதிப்பையும் மனுவில் குறிப்பிட்டிருக்கிறார்.

குறிப்பிட்ட சாதியினர் என்பதை அடையாளப்படுத்திக் காட்டுவதற்காக கையில் வண்ணக் கயிறு கட்டும் மிகமோசமான கலாசாரம் தென் மாவட்டங்களில் பரவிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில், படத்தில் கார்த்தி கையில் பச்சைக் கயிறு கட்டியிருக்கிறார். அவரை எதிர்த்து சண்டை போடுகிறவர்கள் வேறு வண்ணத்தில் கயிறு கட்டியிருக்கின்றனராம். படம் தென் மாவட்டத்தில் நடப்பதால் இந்தப் பிரச்னை எதிரொலிக்கலாம் என்று சொல்லியிருக்கிறார்கள். படத்தைப் பார்த்த குழு, 25 இடங்களுக்கும் மேல் 'கட்’ கொடுத்ததாம்.

''கொம்பன் பாத்தா பனை மரமும் பொளந்துக்கிட்டு எரியும்'', ''மறவன், கவ்விட்டு வான்னா வெட்டிட்டு வருவான்டா'', ''மறவன் யாருன்னு காட்டுறேன் பாருடா'' போன்ற டயலாக்குகள் நீக்கப்பட்டிருக்கின்றன. 'முதுகுளத்தூர்’ போலீஸ் ஸ்டேஷன் காட்சிகள் படத்தில் நிறைய இடத்தில் வருகிறது. 'முதுகுளத்தூர்’ ஊர் பெயர் தொடர்பான போர்டுகளை காட்டக் கூடாது எனவும் சொல்லியதாம் சென்சார் போர்டு. ''இது முழுக்க முழுக்கக் கற்பனை கதை. இதை சாதி சாயலில் பார்க்காதீர்கள். எந்த இடத்திலும் சாதியை முன் வைக்கவில்லை'' என்று படக்குழு சொல்லியிருக்கிறது. 'கொம்பன்’ தலைப்புக்கும் சென்சார் போர்டு எதிர்ப்பு தெரிவித்ததாம். கடைசியில் 'கொ’ என மாற்றிக்கொள்கிறோம் என்றார்களாம். ''படம் ரிலீஸுக்குத் தேதி குறித்துவிட்டோம். சென்சார் அனுமதி கிடைக்கவில்லை எனில், நிறைய நஷ்டம் ஏற்படும் என்று சொல்லியிருக்கிறது தயாரிப்பாளர் தரப்பு. படத்தில் படிக்காசு என்ற பெயரில் ஒரு கேரக்டர் வருகிறது. படிக்காசு பெயரையும் தூக்கச் சொல்லிவிட்டார்கள். ''படிக்காசு கடன் கொடுத்தால் விடமாட்டான். படுக்கக் கூப்பிடுவான்'' என்கிற வசனத்துக்கும் கட் விழுந்திருக்கிறது.

இந்த வாக்குவாதங்கள் நடக்கும்போது ஒரு கட்டத்தில் வார்த்தைகள் வேகமாக வந்து விழுந்திருக்கின்றன. ''தமிழகத்தில் அ.தி.மு.க ஆட்சி நடக்கவில்லை. தி.மு.க ஆட்சிதான் நடக்கிறது'' என படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா கோபத்தோடு சொல்லியிருக்கிறார். ''தமிழகத்தில் இல்லை, இந்தியாவிலேயே

பி.ஜே.பி ஆட்சிதான் நடக்கிறது'' என்று எஸ்.வி.சேகர் சொல்ல.... ''ஸ்டாலினுக்காக இந்தப் படத்தை...'' என்று ஞானவேல்ராஜா சொல்ல வர.... ''அரசியல் பேசாதீங்க. எதுவாக இருந்தாலும் எழுதிக் கொடுங்கள்'' எனச் சொல்லியிருக்கிறது சென்சார் போர்டு.

சாதி எதிர்ப்பு... அரசியல் பின்னணி... சென்சார் சிக்கல்...

அதாவது உதயநிதி நடிக்கும் 'நண்பேன்டா’ படம் ரிலீஸ் ஆகப் போகிறது. அதேநாளில் 'கொம்பன்’ ரிலீஸ் ஆகக் கூடாது என்பதால்தான், இப்படி தடுக்கிறார்கள் என்று நினைக்கிறார்களாம்.

இந்த விவகாரம் பற்றி படத்தின் தயாரிப்பாளர், இயக்குநரிடம் பேச முயற்சி செய்தோம். பேசுவதைத் தவிர்த்தனர்.

படத்தின் கதை என்ன?

கோவை சரளாவால் வளர்க்கப்பட்ட மகன் கார்த்தியும் ராஜ்கிரணால் வளர்க்கப்பட்ட லட்சுமி மேனனும் காதலிக்கிறார்கள். ராமநாதபுரம் மாவட்டம்தான் படத்தின் கதைக் களம். ஆப்ப நாட்டில் ஆடு வியாபாரம் செய்யும் கார்த்தி, அடிதடி பேர்வழி. எதற்கெடுத்தாலும் சண்டை போடுவது, வெட்டுவது என கார்த்தி மீது ஏகப்பட்ட வழக்குகள். தீப்பெட்டித் தொழிற்சாலையில் வேலை செய்யும் லட்சுமி மேனனை காதலித்து மணமுடிக்கிறார். ராஜ்கிரணுக்கும் கார்த்திக்கும் மோதல் ஏற்படுகிறது. ஆப்பநாடு, வல்லநாடு என 18 பட்டிக்கும் யார் தலைவன் ஆவது என்கிற பிரச்னையும் படத்தில் வருகிறது. இன்னொரு தரப்பு ஆப்ப நாட்டுக்குத் தலைவனாக வர முயற்சி செய்கிறது. இந்தப் போராட்டத்தில் லட்சுமி மேனனைக் கடத்துகிறார்கள். லட்சுமி மேனனை மீட்க ராஜ்கிரண், கார்த்தி இருவரும் ஒன்று சேர்ந்து போராடுகிறார்கள். இந்தப் போராட்டத்தில் ராஜ்கிரணை வெட்ட வந்தவர்களை வெட்டி வீசுகிறார் கார்த்தி. கடைசியில் மாமனாருக்கு மரியாதை செலுத்துவதோடு கதை முடிகிறது.

அரசியல் பின்னணி கொம்பனுக்கு எதிராகக் களமிறங்கியிருக்கும் கிருஷ்ணசாமி என்ன சொல்கிறார்?

''குறிப்​பிட்ட சமூகத்தினரை இழிவுபடுத்தி வசனங்​கள் வைத்திருக்கிறார்கள். பாடல் வரிகளும் வன்முறையைத் தூண்டும் வகையில் இருக்கின்றன. படம் வெளியானால் தென் மாவட்டங்களில் மீண்டும் சாதிய மோதல்கள் உருவாகும். 'கொம்பன்’ வீண் வம்பை விலைக்கு வாங்கும் முயற்சி'' என்கிறார்.

சென்னை மண்டல சென்ஸார் போர்டு அதிகாரி பக்கிரிசாமியிடம் பேசினோம். ''கிருஷ்ணசாமி ஏற்கெனவே மனுக் கொடுத்திருக்கிறார். அது உறுப்பினர்களுக்கு படித்துக் காட்டப்பட்டுவிட்டது. சென்சார் தொடர்பான சட்டமும் விதிகளும்தான் எங்களின் வேதப் புத்தகம். அதன் அடிப்படையில்தான் திரைப்படம் சென்சார் செய்யப்படுகிறது. தனிப்பட்ட விருப்புவெறுப்புக்கு எல்லாம் இதில் இடமில்லை. எனக்குக் கொம்பனும் ஒன்றுதான், அம்பனும் ஒன்றுதான்'' என்று முடித்துக்கொண்டார்.

கொம்பன் விவகாரத்தில் நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான், கிருஷ்ணசாமிக்கு எதிராகச் சீறியிருக்கிறார். '' 'கொம்பன்’ படம் நின்றுவிட்டால், அதன் பிறகு தென் மாவட்டத்தில் எந்தச் சாதிக் கலவரமோ கொலைகளோ நடக்காது; அப்படி நடந்தால் நானே பொறுப்பு என கிருஷ்ணசாமியால் உறுதி ஏற்க முடியுமா?'' என்று சீறியிருக்கிறார்.

படம் காட்டுவதற்கு எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன. சாதியும் சாதிப் பெருமையும்தானா கிடைத்தது? கலை என்பது மக்களின் மனவேறுபாடுகளை அகற்றி ஒருமுகப்படுத்தும் விஷயமாக இருக்க வேண்டுமே தவிர, விஷமாக மாறிவிடக் கூடாது!

எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி

''இது ஆரோக்கியமானது அல்ல!''

பேராசிரியர் அ.மார்க்ஸ்: கிராமங்களில் சாதி ஏற்றத்தாழ்வு இருக்கிறது என்பது யதார்த்தம். அதை சினிமாவில் எப்படிக் காட்டுகிறோம் என்பதுதான் கேள்வி. குறிப்பிட்ட மாவட்டம், குறிப்பிட்ட தெரு, குறிப்பிட்ட சாதி என்று சொல்ல வரும்போதுதான், குறிப்பிட்ட சாதியினருக்கான சென்சிட்டீவான பிரச்னைகளும் வெடிக்க ஆரம்பிக்கின்றன. ஒரு நாவலில் சொல்வதைவிட, அதிக விளைவை சினிமா ஏற்படுத்தும்.  அதிலும் பிரபலமான ஒரு நடிகர் அதைச் சொல்லும்போது மிகவும் பொறுப்புணர்வுடன் சொல்ல வேண்டியது அவசியம். ஒடுக்கப்பட்ட சாதியினரை சீண்டும் விதமாக அந்தப் படத்தில் காட்சிகள் இருந்தால் அது கண்டிக்கத் தக்கது.

சாதி எதிர்ப்பு... அரசியல் பின்னணி... சென்சார் சிக்கல்...

கவிஞர் மனுஷ்ய புத்திரன்: தமிழ் சினிமாக்கள் வட்டாரப் பண்பாட்டை சித்திரிக்கும் நோக்கில் சொல்லப்படும்போது அதில் சாதியக் கூறுகளைத் தவிர்க்க முடியாது. ஆனால், அது சமூகத்தில் பிரச்னையை உருவாக்குமா என்பது படம் வெளியான பின்புதான் தெரியும். 'ஒரு திரைப்படம் வெளியாகும் நேரத்தில் அதற்குத் தடை விதிக்க வேண்டும் என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. தொடர்ந்து இத்தகைய போக்கு நிலவுவது ஆரோக்கியமானது அல்ல. படம் சாதிய ஒடுக்குமுறையை ஆதரிப்பதாக இருந்தால் அதை நீதிமன்றம் மூலம் எதிர்கொள்ளலாம். இது கருத்துரிமைக்கு எதிரான செயல் என்றுதான் நான் பார்க்கிறேன்.

தமிழ்மகன்                        

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு