Published:Updated:

``இதுதான் என் நிறம்...என் முகம்... சாதியை மறைக்க வேண்டியதில்லை!’’ - `சாய்ராட்’ நாகராஜ் மஞ்சுளே

"அடையாளத்தை மறைப்பதின் மூலம் எதையும் செய்ய முடியாது. ஆண்மயமான உலகமாக இருக்கிறது என்று பெண்கள் தங்களின் அடையாளத்தை மறைத்துக்கொண்டு வாழ்ந்தால், பெண்களின் சிக்கலை யார்தான் பேசுவது? அடையாளத்தைப் பற்றிப் பேசாமல், சமத்துவத்தைப் பற்றியும் நம்மால் பேசமுடியாது."

``இதுதான் என் நிறம்...என் முகம்... சாதியை மறைக்க வேண்டியதில்லை!’’ - `சாய்ராட்’ நாகராஜ் மஞ்சுளே
``இதுதான் என் நிறம்...என் முகம்... சாதியை மறைக்க வேண்டியதில்லை!’’ - `சாய்ராட்’ நாகராஜ் மஞ்சுளே

``கலையின் நோக்கம்

நம் ஆன்மாவின் அழுக்குகளை

சுத்தம் செய்வதுதான்"

-  பாப்லோ பிகாசோ

கலை மிக முக்கியத்துவம் வாய்ந்த ஆயுதம். மனிதகுல வரலாற்றின் ஒவ்வொரு காலகட்டத்திலும், ஒவ்வொரு வகையான கலை வடிவம் உயிர்ப்புடன் செயல்படும். அது அந்தக் காலகட்டத்தில் மக்களின் வாழ்க்கைமுறையை, பண்பாட்டை அடுத்த தலைமுறைக்குக் கடத்தி வந்திருப்பதை வரலாறு நெடுகிலும் பார்த்திருப்போம். இந்த நூற்றாண்டின் மிக முக்கியமான கலை வடிவமாக சினிமா தன்னை நிறுவியுள்ளது. சமூகத்தின் வேர் வரை அதன் தாக்கம் உள்ளது. அதை மக்களின் மேம்பாட்டுக்காகப் பயன்படுத்தியவர்களில் மிக முக்கியமானவராக இருப்பவர் நாகராஜ் மஞ்சுளே. சென்னைக்கு வந்திருந்த அவரைச் சந்தித்து உரையாடினோம்.  

ரீமேக் செய்யப்பட்ட `சாய்ராட்’ பற்றி உங்கள் கருத்து?

என்னுடைய திரைப்படம் சாய்ராட்தான். `சாய்ராட்’ எப்படியான படம் என்பதை சாய்ராட்டே நிரூபித்துவிட்டது. ஆனால், அதை மூலமாக வைத்துக்கொண்டு வெவ்வேறு வகையாகச் சிலர் கதை சொல்ல முற்பட்டால், அதற்கு நான் பொறுப்பாக முடியாது. இதில் சாதகமான விஷயம் என்னவென்றால், வழக்கமாக வேற்று மொழி திரைப்படங்களை மராட்டியில் ரீமேக் செய்வார்கள். ஆனால், சாய்ராட் அந்த வழக்கத்தை மாற்றி, மராட்டியப் படத்தை பாலிவுட் ரீமேக் செய்யும் நிர்பந்தத்தை உருவாக்கியிருக்கிறது. அந்த வகையில் மகிழ்ச்சி.

சாதியை வெளிப்படுத்துவது அடையாளச் சிக்கலை எதிர்கொள்வதற்கான வழி என நினைக்கிறீர்களா?

இதுதான் நான், இதுதான் என் நிறம், இதுதான் என் முகம், என் அனுபவம் அதை நான் மறைக்க விரும்பவில்லை. 

சிலருக்கு இதை வெளிப்படுத்துவதில் பிரச்னைகள் இருக்கலாம். அது, அவரவர்களுடைய அனுபவத்தையும், தன்னம்பிக்கையையும் பொறுத்தது. ஒதுக்கப்படுவோமோ என்னும் பயத்தில்தான் பலர் தங்கள் சாதியை மறைத்துக் கொள்கிறார்கள். சமூகம்தான் அதற்காகத் தலைகுனிய வேண்டும். ஒதுக்கப்படுபவர்கள் அல்ல. அடையாளத்தை மறைப்பதின் மூலம் எதையும் செய்ய முடியாது. ஆண்மயமான உலகமாக இருக்கிறது என்று பெண்கள் தங்களின் அடையாளத்தை மறைத்துக்கொண்டு வாழ்ந்தால், பெண்களின் சிக்கலை யார்தான் பேசுவது? அடையாளத்தைப் பற்றிப் பேசாமல், சமத்துவத்தைப் பற்றியும் நம்மால் பேசமுடியாது. எல்லோரும் சமமாகத்தானே வாழ்கிறார்கள் போன்ற போலித்தனம் மோசமானது. சாதியைப் பெருமையாக தூக்கித் திரிய வேண்டியதுமில்லை, சாதியை வெளிப்படுத்தத் தயங்கவும் வேண்டியதுமில்லை.

எனக்கு ஆரம்பத்தில் பயமிருந்தது. அதற்குப் பிறகு, `ஆமாம், நான் இந்தச் சாதிதான்’ என்று கோபம் வந்திருக்கிறது. தற்போது சமநிலைக்கு வந்திருக்கிறேன். நோயுற்றிருப்பதை ஏற்றுக்கொள்ளாமல், மருத்துவம் பார்க்க முடியாது. அதுபோலத்தான் இது. சாதிகள் மொத்தமாக ஒழிக்கப்படவேண்டியவை. ஏற்றத்தாழ்வு இருக்கிறது என்பதை எல்லோரும் ஒப்புக்கொள்ள வேண்டும். யார் சாதி பார்க்கிறார்கள் என்று கேள்விகேட்டு நடிக்கக் கூடாது.

`பாவ்ஸச்சா நிபந்த்’ என்னும் உங்களின் குறும்படம் வணிக ரீதியானது என்று விமர்சிக்கிறார்கள். உங்கள் கருத்து என்ன?

இதில் விமர்சனத்திற்கான காரணமென்னவென்று புரியவில்லை. சினிமா என்பது வணிகமும்தானே. பொதுவாகக் கலைப்படம், கமர்சியல் சினிமா என்று இரு வகையாகப் பிரிக்கிறார்கள். எந்த உள்ளடக்கமாக இருந்தாலும், அது பொருளீட்ட முடியுமென்றால் அது கமர்ஷியல் சினிமாதானே. புறக்கணிக்கப்படுபவர்களைப் பற்றியோ, பெண்களைப் பற்றியோ, விவசாயிகளின் சிக்கல்களைப் பற்றியோ பேசுகிறீர்கள் என்றாலும், அது ரசிகர்களை ரசனையையும், உணர்வையும் ஒருபடி மேலேற்ற வேண்டும். நான் அதைச் செய்கிறேன் என்று நம்புகிறேன்.

சாதி ஆணவப் படுகொலைகளை ஒழிப்பதற்கான தீர்வாக எதை முன் வைக்க விரும்புகிறீர்கள்?

சாதி மனித சமூகத்தைப் பீடித்திருக்கும் கொடிய நோய். அதை வேரோடு அகற்றுவதுதான் சரியான தீர்வாக இருக்கும். சாதி ஆணவப் படுகொலைகளை சட்டங்கள் மூலம் மட்டுமே தடுக்க முடியாது. மக்களின் மனநிலையில் ஏற்படும் மாற்றம்தான் சாதியை ஒழிக்கும் ஒரே ஆயுதம். அதைக் கலைகளின் வழியாக, உரையாடல்களின் வழியாக நாம்தான் சாத்தியப்படுத்த வேண்டும்.