Published:Updated:

“அழைத்து அவமதித்தார்கள்!” - தேசியத் திரைப்பட விருது சர்ச்சை

“அழைத்து அவமதித்தார்கள்!” - தேசியத் திரைப்பட விருது சர்ச்சை
பிரீமியம் ஸ்டோரி
News
“அழைத்து அவமதித்தார்கள்!” - தேசியத் திரைப்பட விருது சர்ச்சை

“அழைத்து அவமதித்தார்கள்!” - தேசியத் திரைப்பட விருது சர்ச்சை

‘‘நாங்கள் மதிப்புமிக்க தேசிய விருதுக்குத் தேர்வு செய்யப் பட்டவர்கள். ஆனால், எங்களை அழைத்து அவமதித்தார்கள். முன்கூட்டியே ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நிகழ்ச்சியில், இரண்டு மணி நேரம் செலவிட்டு விருதுகளை ஜனாதிபதியால் வழங்க முடியவில்லை என்பது துரதிர்ஷ்டவசமானது. ஜனாதிபதியும், துணை ஜனாதிபதியும் அரசியலுக்கு அப்பாற்பட்டவர்கள். அவர்களின் கைகளால் விருது வாங்குவது பெருமை. அமைச்சர் என்பவர், ஓர் அரசியல் கட்சியின் பிரதிநிதி. அவர் கையால் விருது வழங்கும்போது, அதில் அரசியல் சேர்ந்துவிடுகிறது. அதனால்தான் எதிர்த்தோம்’’ என்கிறார், கௌஷிக் கங்குலி. இவரின் ‘நகர்கீர்தன்’ திரைப்படம் நான்கு விருதுகளை வென்றது.

சிறந்த ஆவணப்படத்துக்கு விருது வென்ற ஆர்.சி.சுரேஷ், ‘‘ஜனாதிபதியின் கைகளால் விருது தரப்படும் என ஏப்ரல் 18-ம் தேதியே எங்களுக்குக் கடிதம் அனுப்பினார்கள். 64 ஆண்டுகளாக இதுதான் நடைமுறை. ஜனாதிபதி எங்கள் கையில் விருது கொடுக்கும் அந்த ஒரு நிமிடக் காட்சியைக் காண்பதற்கு எங்கள் குடும்பத்தினர், நண்பர்கள் என எல்லோரும் டெல்லி வந்தார்கள். ஆனால், ஜனாதிபதியின் கைகளால் தராததால், அந்த விருதின் மதிப்பே போய்விட்டது’’ என்கிறார்.

“அழைத்து அவமதித்தார்கள்!” - தேசியத் திரைப்பட விருது சர்ச்சை

மே 3-ம் தேதி தேசியத் திரைப்பட விருது வழங்கும் விழா. ஜனாதிபதியின் கைகளால் விருதுபெறும் கனவுகளுடன் டெல்லி வந்த திரைப்படக் கலைஞர்கள் அனைவரும் அசோகா ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டனர். முதல் நாள் மாலையே, விருது நிகழ்ச்சி நடைபெறும் விக்ஞான் பவனுக்கு  அவர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். ஜனாதிபதி விருது வழங்குவதால் ‘எப்படி விருதைப் பெற்றுக்கொள்ள வேண்டும்’ என்கிற ஒத்திகை மாலை ஐந்து மணிக்கு நடந்தது. அப்போதுதான், ‘அவர்களுக்கு விருது வழங்கப்போவது ஜனாதிபதி அல்ல. மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சர் ஸ்மிரிதி இரானிதான்’ என்பது சொல்லப்பட்டது. அந்த திடீர் மாற்றத்தால் பலர் கோபமடைந்தனர். ‘‘ஜனாதிபதிதானே விருது வழங்குவார் என்று அழைத்தீர்கள். இப்படி ஏமாற்றினால் எப்படி..?’’ என்று முதலில் குரல் கொடுத்தவர்கள் மேற்கு வங்கக் கலைஞர்கள். கேரளா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா கலைஞர்களும் அவர்களுடன் ஒன்றுசேர, அந்த இடம் போராட்டக் களமானது.

துறை செயலாளரின் சமாதான முயற்சி கடைசிவரை பலன் தரவில்லை. முதலில், ‘ஜனாதிபதிக்கு உடல்நலக் குறைவு’ என்றும், பின்னர் ‘நேரமின்மை’ என்றும் சொல்லப்பட்டது. இதனைத் தொடர்ந்து இரவு ஏழு மணிக்கு அமைச்சர் ஸ்மிரிதியே நேரில் வந்தார். முதலில் அமைதியாகப் பேசியவர், பின்னர் ‘‘நான் மத்திய கேபினட் அமைச்சர். என்னிடம் விருது வாங்க ஏன் தயங்குகிறீர்கள்? வாங்காவிட்டால் அது ஜனாதிபதியை அவமதிக்கும் செயல். விருது வழங்கியபிறகு ஜனாதிபதியுடன் குரூப் புகைப்படம் எடுக்க ஏற்பாடு செய்கிறேன்’’ என்றார். யாரும் அதை ஏற்பதாக இல்லை.

அந்த முயற்சியும் தோல்வியடைந்தது. இரவு ஒன்பது மணிவரை அங்கேயே ஆலோசனை நடத்திய கலைஞர்கள், அமைச்சருக்கும், ஜனாதிபதிக்கும் மனு ஒன்றைத் தயார் செய்தனர். சுமார் 70 பேர் கையெழுத்திட்டு, அது இரு தரப்புக்கும் அனுப்பப்பட்டது. இதனிடையே அந்தந்த மாநில பி.ஜே.பி பிரமுகர்கள் தொலைபேசி மூலம் பஞ்சாயத்து செய்ய, இன்னும் பிரச்னை பெரிதானது. மறுநாள் பிற்பகல் இரண்டு மணி அளவில் அசோகா ஹோட்டலுக்கு அறிவிப்பு வந்தது. ‘நான்கு மணிக்கு பஸ் வரும். அனைவரும் விழாவுக்குத் தயாராகுங்கள்’ என்ற அந்த அறிவிப்பு, அவர்களின் கோபத்தை இன்னும் அதிகமாக்கியது. நடிகர் பகத் பாசில், நடிகை பார்வதி உள்ளிட்டோர் ஹோட்டலை காலி செய்துவிட்டு ஊருக்குச் செல்லத் தயாராகினர். ஆனால், பாடகர் ஜேசுதாஸ், இயக்குநர் ஜெயராஜ் உள்ளிட்ட சிலர், முதலில் எதிர்ப்புத் தெரிவித்துவிட்டு பிறகு விருது வாங்கச் சென்றுவிட, அவர்கள்மீது பலரின் கோபம் திரும்பியது. கடைசியில், சுமார் 60 கலைஞர்கள் விழாவைப் புறக்கணித்து ஹோட்டல் லாபியிலேயே உட்கார்ந்து எதிர்ப்பைக் காட்டினர்.

“அழைத்து அவமதித்தார்கள்!” - தேசியத் திரைப்பட விருது சர்ச்சை

விக்ஞான் பவனில், திட்டமிட்டதற்கு ஒரு மணி நேரம் முன்னதாகவே ஜனாதிபதி இல்லாமல் நிகழ்ச்சி தொடங்கி, அமைச்சர் ஸ்மிரிதி இரானியும், இணை அமைச்சர் ராஜ்யவர்தன் ரத்தோரும் விருதுகளை வழங்கத் தொடங்கினர். பல இருக்கைகள் காலியாகவே இருந்தன. பெயர்களை வாசித்தபோது பலர் விருது வாங்க வராததால், அரங்குக்கு வராத சுமார் 30 கலைஞர்களின் பெயர்களை அழைக்காமல் தவிர்த்தனர்.  ஒரு சிறிய இடைவேளைக்குப் பிறகு, காலியாகக் கிடந்த இருக்கைகளைப் பார்வையாளர் களாலும், அமைச்சக ஊழியர்களாலும் நிரப்பினர். அதன்பிறகு, மாலை 5.30 மணிக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வந்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், பாடகர் ஜேசுதாஸ் உள்ளிட்ட 11 பேருக்கு மட்டும் விருதுகளை வழங்கி முடித்தார்.

‘எல்லாப் பிரச்னைகளுக்கும் காரணம், அமைச்சர் ஸ்மிரிதி இரானிதான்’ என ஜனாதிபதி மாளிகை புகார் கூறுகிறது. ‘‘ராம்நாத் கோவிந்த் ஜனாதிபதியாகப் பொறுப்பேற்ற சில நாள்களிலேயே அனைத்து அமைச்சகங்களுக்கும் ஒரு தகவல் போனது. ‘எந்த நிகழ்ச்சியானாலும் அவரது உடல்நிலை காரணமாக ஒரு மணி நேரம்தான் செலவிட முடியும்’ எனத் தகவல் சொல்லப்பட்டது. ஏப்ரல் 13-ம் தேதி தேசியத் திரைப்பட விருது அறிவிப்பை வெளியிட்ட உடனேயே ‘ஜனாதிபதியால் இந்த நிகழ்ச்சியில் ஒரு மணி நேரம்தான் பங்கேற்க முடியும்’ என்று மீண்டும் நினைவூட்டப்பட்டது. இந்தத் தகவலை ஸ்மிரிதி இரானியின் அமைச்சகம் முறையாகக் கலைஞர்களுக்குச் சொல்ல வில்லை’’ என்கிறார்கள் ஜனாதிபதி மாளிகை அதிகாரிகள்.

இந்த விருதுப் பிரச்னை நாடு முழுவதும் சர்ச்சையானதால், அடுத்த ஆண்டு முதல் தாதா சாகேப் பால்கே விருதை மட்டும் ஜனாதிபதி வழங்குவது போலவும், மற்ற விருதுகளை மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சரே வழங்குவது போலவும் மாற்றியமைக்க மத்திய அரசு திட்டமிடுகிறது.

- டெல்லி பாலா