Published:Updated:

`அரசியல்வாதிகள் மட்டும்தாம் குற்றவாளிகளா?' - `சர்கார்’ விஜய்க்கு ஒரு கடிதம்!

நீங்கள் உண்மையில் முதலமைச்சர் ஆகிவிட்டால், `சர்கார்' திரைப்படத்தில் பேசிய அரசியலை, நிஜ வாழ்க்கையிலும் நிகழ்த்திவிடுவீர்கள் என்ற பயம் தோன்றுகிறது.

`அரசியல்வாதிகள் மட்டும்தாம் குற்றவாளிகளா?' - `சர்கார்’ விஜய்க்கு ஒரு கடிதம்!
`அரசியல்வாதிகள் மட்டும்தாம் குற்றவாளிகளா?' - `சர்கார்’ விஜய்க்கு ஒரு கடிதம்!

`தளபதி' விஜய் அவர்களுக்கு,

வணக்கம். ஒவ்வொருமுறை உங்கள் திரைப்படம் வெளியாகும்போதும், சர்ச்சைகளும், பல்வேறு தரப்புகளிலிருந்து அரசியல் அழுத்தங்களும் வருவது வாடிக்கையாகிவிட்டது. எனினும் மனம் தளராமல் தொடர்ந்து அரசியல் கருத்துகளை பொதுச் சமூகத்தின்முன் உங்கள் திரைப்படங்களில் பேசி வருகிறீர்கள். நீங்கள் பேசும் கருத்து உங்களுடையதா, அந்தப் படத்தின் இயக்குநருடையதா என்று தெரியாத ரசிகர்களுக்கு, உங்கள் குரலில் வெளிவரும் கருத்துகளுக்கு விசில் அடித்து, ஆர்ப்பரிப்பது மட்டுமே கொண்டாட்டம்.

எனக்கு இன்றும் நினைவிருக்கிறது. 5 ஆண்டுகளுக்கு முன், 'தலைவா' திரைப்படம் ரிலீஸ் தேதியன்று அரசியல் காரணங்களால் வெளியாகாமல் தாமதமானபோது, அந்தப் படத்தின் கெட்டப்பைப் போல, வெள்ளைச் சட்டையும், நீல நிற ஜீன்ஸ் பேண்டும் அணிந்தபடி உங்கள் ரசிகர்களாகிய நாங்கள், பக்கத்து மாநிலங்களுக்குச் சென்று, உங்கள் படத்தைப் பார்த்துவிட்டு வந்தோம். 

ஒவ்வொருமுறை உங்களைப் போன்ற பெரிய நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகும்போதும், டிக்கெட் விலையை நீங்கள் அறிவீர்களா? அது நீங்கள் ஒவ்வொரு படத்திலும் பேசும் அரசியலுக்கு அப்படியே நேரெதிரானது.  

படம் வெளியாவதற்கு முன்பிருந்தே, உங்கள் படத்திற்காக எதிர்பார்க்கத் தொடங்கிவிடுவோம். ஒவ்வொரு படமும் ரிலீஸ் ஆவதற்கு முந்தைய இரவில் மறுநாள் உங்களைப் பெரிய திரையில் காணும் ஆவலில் தூக்கத்தை இழந்து காத்திருப்போம். ஆனால் திரையில் உங்கள் மாஸ் என்ட்ரீயைக் கண்டவுடன் அத்தனை களைப்பும் பறந்துபோகும் அளவுக்கு விசில் அடிப்போம்; உங்கள் பாடல்களுக்கு தியேட்டர்களில் ஆடி மகிழ்வோம். அவ்வளவு கொண்டாட்டங்களுக்குப் பிறகும், நீங்கள் படங்களில் பேசும் அரசியல் கருத்துகள் உண்மையில் மாற்றத்தைக் கொண்டு வருமாறு இல்லாமல், அந்த நேரத்தில் எதைப் பற்றி பேசினால் படம் வெற்றிபெறுமோ, அதைப் பற்றி மட்டுமே பேசுவதாக இருக்கும். 

`சர்கார்' இசை வெளியீட்டுவிழா மிகப் பிரமாண்டமாக, உங்கள் அரசியல் வருகையை அறிவிப்பது போன்ற தோற்றத்துடன், ஓர் அரசியல் மாநாட்டுக்கான அத்தனை அம்சங்களோடும் நடந்தது. `முதலமைச்சர் ஆனா நடிக்க மாட்டேன்!' என்று பேசி எங்களை மகிழ்வித்தீர்கள். ஆனால், நீங்கள் உண்மையில் முதலமைச்சர் ஆகிவிட்டால், `சர்கார்' திரைப்படத்தில் பேசிய அரசியலை, நிஜ வாழ்க்கையிலும் நிகழ்த்திவிடுவீர்கள் என்ற பயம் தோன்றுகிறது. 

அதிக மதிப்பெண் பெற்றும் ,'நீட்' தேர்வில் தேர்ச்சியடைய முடியாமல், தனக்கு நிகழ்ந்தது அநீதி என்று போராடி, இறுதியாக உயிரை மாய்த்துக் கொண்டாள் நம் அனிதா. அவள் இறந்து சில நாட்களில், எந்தவித அறிவிப்பும் இல்லாமல், தன் குடும்பத்தில் ஏற்பட்ட இழப்பைப் போல அனிதாவின் வீட்டிற்குச் சென்று அந்தத் துக்கத்தில் பங்குகொண்டீர்கள். 

தமிழக இளைஞர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகப் போராட்டம் நடத்திய போதும், அந்தப் போராட்டத்தில் மக்களோடு மக்களாக அமர்ந்து, உங்கள் தார்மிக ஆதரவை வழங்கினீர்கள். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் வீடுகளுக்குச் சென்று, அந்த மக்களின் துயரத்துக்கு ஆறுதல் கூறினீர்கள். `இவர்தான் விஜய்' என்று நாங்கள் நினைத்துக் கொண்டோம். ஆனால் `சர்கார்' எங்கள் நம்பிக்கைகளைப் பொய்யாக்கி இருக்கிறது. 

'இலவசங்கள் அரசியல்வாதிகளால் அளிக்கப்படும் பிச்சை!' என்று பாடம் நடத்துகிறது 'சர்கார்'. பல தலைமுறைகளாக கல்வி மறுக்கப்பட்டு வந்த மக்களுக்கு, மக்களில் இருந்தே உருவான திராவிட இயக்கங்களால் எங்கள் தந்தைகளுக்கு கல்வி கிடைத்தது. இன்றும் பள்ளிக்கூடங்களில் சத்துணவு அளிக்கப்படும் ஒரே காரணத்திற்காக கல்விக்கூடங்களுக்குச் செல்லும் குழந்தைகள் ஏராளம்.

சில ஆண்டுகளுக்கு முன்பு, நீங்கள் நடித்த 'திருப்பாச்சி' படத்தில் உங்கள் தங்கையாக மல்லிகா நடித்திருப்பார். ஒவ்வொரு முறையும் வீட்டுவேலை செய்து, உடலை வருத்திக் கொள்ளும் தங்கைக்கு, நகரத்தில் மாப்பிள்ளை கிடைத்தால் அவள் வேலைச்சுமை குறைய தேவையான மிக்சி, கிரைண்டர் முதலானவை இருக்கும் என்று பாசத்தை வெளிப்படுத்தி இருப்பீர்கள்.

நகரங்களிலும், பண வசதியுள்ளவர்களிடமும் மட்டுமே இருந்த சமையல் பொருட்கள் அரசுத் திட்டங்கள் மூலமாக எங்கள் வீடுகளைத் தேடி வந்தன. இலவச தொலைக்காட்சிகள் எங்களை வெளியுலகத்தோடு இணைத்தன. பெண்களுக்கான இலவச மிதிவண்டிகள் கிராமப்புறப் பெண்களுக்கு சுதந்திரத்தை அளித்தன. இலவச பஸ் பாஸ் மட்டுமே எங்களைப் போன்ற ஒரு தலைமுறையை பேருந்துகளில் கட்டணமின்றிப் பள்ளிக்கு அழைத்துச் சென்றன. 

'சர்கார்' படத்தில் 'சுந்தர் ராமசாமி' என்ற 1,800 கோடி ரூபாய் பணப்பரிவர்த்தன செய்யும் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக, கோடிக்கணக்கில் சம்பளம் பெறும் முதலாளியாக நடித்து, ஏழை மக்கள் மீதான உங்களின் கரிசனத்தை வெளிப்படுத்தி இருக்கிறீர்கள். சுந்தர் ராமசாமி போன்ற ஒரு கார்ப்பரேட் முதலாளிகளிடம் 1,800 கோடி ரூபாய்க்கும் மேல் பணம் கொட்டிக்கிடப்பதால்தான், உலகம் முழுவதும் ஏழைகள் தோன்றுகிறார்கள்; கார்ப்பரேட் முதலாளிகளின் லாபத்திற்கான போட்டியில், மக்கள் தங்களுக்குள் அடித்துக் கொள்கிறார்கள்; கடன் வாங்குகிறார்கள்; அதைத் திருப்பிச் செலுத்த முடியாமல் தங்களையே தீயில் கொளுத்திக் கொள்கிறார்கள். 

'நம்ம பசி தீர்ந்த பிறகு சாப்பிடும் அடுத்த ஒரு இட்லி இன்னொருவருடையது' என்று இதே இயக்குநருடன் இதற்கு முன் இணைந்த 'கத்தி' திரைப்படத்தில் கம்யூனிசம் பேசிய நீங்கள், இந்தப் படத்தில் கார்ப்பரேட் முதலாளியாக நடித்ததைத் தவறு என்று நாங்கள் கூறமாட்டோம். ஆனால், கார்ப்பரேட் முதலாளிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் தொடர்பே இல்லாதது போன்ற இமேஜை உருவாக்க முயன்றிருக்கிறது உங்களின் 'சர்கார்'.

'சர்கார்' படத்தில் உங்களால் எந்தவித விமர்சனங்களுக்கும் உள்ளாகாத தேசியக் கட்சிகளுக்கு கார்ப்பரேட் நிறுவனங்கள், 2012 முதல் 2016 வரை அளித்த நிதி பற்றிய விவரங்களைப் பாருங்கள். சிறியதும், பெரியதுமாக 2,987 கார்ப்பரேட் நிறுவனங்களிடம் 706 கோடி ரூபாயை நிதியாகப் பெற்றுள்ளது மத்தியில் ஆளும் பி.ஜே.பி. 167 கார்ப்பரேட் நிறுவனங்களிடம் 198 கோடி ரூபாயை நிதியாகப் பெற்றுள்ளது காங்கிரஸ். நிச்சயம் தமிழக கட்சிகளும் நிதி பெற்று வருகின்றன.  இப்படியான நிதிகளே, பிற்காலத்தில் ஸ்டெர்லைட், மீத்தேன், ஹைட்ரோ கார்பன் எனச் சாதாரண மக்கள் முன் பிரச்னைகளாக உருமாறி நிற்கின்றன. 

‘சர்கார்’ படத்தில் அரசியலைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் பார்த்தாலும் ஏகப்பட்ட லாஜிக் மீறல்கள் தென்படுகின்றன. அமெரிக்க நிறுவனத்தில் சி.இ.ஓ பதவியில் இடம்பெற வேண்டுமானால், அமெரிக்க குடியுரிமை பெற வேண்டும் என்பது விதி. இந்திய குடியுரிமையை இழந்தால் தான் அமெரிக்க குடியுரிமை கிடைக்கும். அப்புறம் எப்படி சுந்தர் ராமசாமியால் வாக்கு செலுத்த முடியும்?

‘துப்பாக்கி’ படம் ஒற்றுமையாக வாழும் மக்களிடையே, ’முஸ்லிம்கள் ஸ்லீப்பர் செல்களாக, தீவிரவாதத்திற்கு தயாராக இருப்பார்கள்’ என்ற கருத்தைப் பரப்பியது. ‘கத்தி’யில் கோலா கம்பெனிகளை எதிர்த்து நீங்கள் பேசினாலும், தமிழகத்தில் கோலாவுக்கு விளம்பரம் நடித்து பட்டிதொட்டியெங்கும் சேர்த்ததில் உங்களுக்கு பங்கு இருக்கிறது. ‘மெர்சல்’ படத்தில் அரசு இலவச சேவைகளைச் செய்ய வேண்டும் என்று பேசினீர்கள்; ‘சர்கார்’ அந்த கருத்தையே எதிர்த்துப் பேசுகிறது.

ஒவ்வொரு படத்திலும் பிரஸ் மீட் வைத்து அரசியல் பேசும் நீங்கள், நிஜ வாழ்க்கையில் மக்கள் பிரச்சினைகளை எப்படி பிரஸ் மீட்களில் பேசுவீர்கள் என்று நினைத்துப் பார்க்க முடியவில்லை. அனிதா வீட்டிற்கு சென்று ஆறுதலாக பேசினாலும், ‘சர்கார்’ சுந்தர் ராமசாமிக்கு மெரிட்டில் தேர்ச்சியடைந்து, உலகின் நம்பர் ஒன் நாட்டின், நம்பர் ஒன் கம்பெனியின் நம்பர் ஒன் பதவியில் இருப்பது தான் பெருமையாக இருக்கிறது. இதில் எது உண்மையான விஜய் என்பதில் சந்தேகம் எழுகிறது.    

"நெருக்கடி ஏற்பட்டால் தானாக அடிப்பட்டு, நொந்து நூலாகி ஒருவன் வருவான்; அவன் லீடரா மாறுவான். அவனுக்குக் கீழ் நடக்கும் பாருங்க ஒரு சர்கார்!" என்று நீங்கள் ஆடியோ லாஞ்சின்போது பேசியது போலத்தான், அரை நூற்றாண்டிற்கு முன் தமிழ்நாட்டில் திராவிட இயக்கங்கள் தோன்றின. அந்த இயக்கங்களால் பிற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் தமிழ்நாட்டின் வளர்ச்சி வியக்கத்தக்கதாக இருக்கின்றது. பிற்காலத்தில் வந்தவர்கள் மீது மக்களுக்கு விமர்சனங்கள் இருக்கலாம்; அதிருப்தி இருக்கலாம். ஆனால், அதற்காகச் சமூக நீதியையோ, வளர்ச்சித் திட்டங்களையோ குறைசொல்வது ஏற்புடையதாகாது. 

தமிழகத்தை ஆட்சி செய்த கட்சிகள் மீது முன்வைக்கப் பல விமர்சனங்கள் இருக்கின்றன. 'மெர்சல்', 'சர்கார்' ஆகிய இரண்டு படங்களிலும் தொடர்ந்து ஹவுசிங் போர்டு பகுதி சாமான்ய மக்களிடம் பாசத்தைக் காட்டுவதுபோல நடித்துள்ளீர்கள். சென்னையில் இருந்து பல கிலோமீட்டர் தொலைவில் கண்ணகி நகருக்கும், பெரும்பாக்கத்திற்கும் 'இலவச வீடுகள்' அளித்து, நகரப் பகுதியில் இருந்து விரட்டியடிக்கப்படும் மக்களைப் பற்றி பேசியிருக்கலாம். 

அரசு தரும் இலவச சத்துணவு பெறுகையில், சத்துணவுப் பணியாளர் தாழ்த்தப்பட்டவர் என்பதற்காக உணவு உண்ண மறுத்து, குழந்தைகள் மனதில் சாதியை விதைப்பதை எதிர்க்கலாம். இந்தியாவின் பிரச்சினைகளில் ஊழலைவிட சாதி மிகவும் கொடியது. மணல் கொள்ளை, இயற்கை வளங்கள் சுரண்டல் எனப் பல பிரச்சினைகள் இருக்கின்றன.

சுந்தர் ராமசாமி, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் இருக்கும் 49 பி பிரிவைப் பயன்படுத்த நீதிமன்றத்திற்குச் சென்று, சட்டத்திலேயே தீர்வு காண்பவர். தமிழ்நாட்டில் அரைநூற்றாண்டுக்கு முன் ஈரோட்டைச் சேர்ந்த ஒரு பெரியவரான ராமசாமி இருந்தார்; அவர் சட்டம் இயற்றிய பின்பும், சட்டத்தை மீறி போராடி சமூகநீதி பெற்றுத் தந்தார். அவரைப் பின்பற்றுவர்களையும், பின்பற்றுபவர்களாகச் சொல்லிக் கொள்பவர்களையும்தான் இந்த மண் ஆட்சியாளர்களாக புனித ஜார்ஜ் கோட்டையில் அமர்த்தியிருக்கிறது. 

'சர்கார்' மீது அ.தி.மு.க, அ.ம.மு.க கட்சிகள் கடும் எதிர்ப்பைப் பதிவுசெய்து வருகின்றன. பல காட்சிகளும் நீக்கப்பட்டுள்ளன; இவை எங்களைக் காயப்படுத்தினாலும், சில ரசிகர்கள் அரசு தந்த விலையில்லா பொருட்களை உடைப்பது போல சமூக வலைத்தளங்களில் பதிவுசெய்து வருவது, முட்டாள்தனத்தின் உச்சமாகத் தெரிகிறது. ‘சர்கார்’ படத்தில் நீங்கள் சொன்ன கருத்துகள் அந்த அப்பாவி ரசிகர்களுக்கு இப்படிச் செய்ய ஊக்கமளித்திருக்கின்றன. 

நீங்கள் முதலமைச்சராக விரும்பினால், அந்த அப்பாவி ரசிகன் நிச்சயம் உங்களுக்கு உதவுவான். ஆனால் ‘சர்கார்’ படத்தில் பேசிய அதே அரசியலைப் பேசும் அரசியல்வாதியாக இல்லாமல் அந்த ரசிகனை மேம்படுத்துவதில் தான் இருக்கிறது உங்கள் எதிர்காலம். 

இப்படிக்கு,

உங்கள் நெஞ்சில் குடியிருக்கும் கோடிக்கணக்கான ரசிகர்களில் ஒருவன்.