பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

“எனக்கு நீதான் கொள்ளி வைக்கணும்!” - சிவாஜியிடம் சொன்ன எம்.ஜி.ஆர்.

“எனக்கு நீதான் கொள்ளி வைக்கணும்!” - சிவாஜியிடம் சொன்ன எம்.ஜி.ஆர்.
பிரீமியம் ஸ்டோரி
News
“எனக்கு நீதான் கொள்ளி வைக்கணும்!” - சிவாஜியிடம் சொன்ன எம்.ஜி.ஆர்.

எம்.குணா

“அப்பாவின் பிறந்தநாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என்ற அறிவிப்பு எங்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. அதற்குக் காரணமான முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம், செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, சட்டமன்றத்தில் இதுகுறித்துக் குரல் எழுப்பிய அண்ணன் ஸ்டாலின், சட்டமன்ற உறுப்பினர் சகோதரர் வாகை சந்திரசேகர் உள்ளிட்ட அனைவருக்கும் அப்பாவின் ரசிகர்களுக்கும் மற்ற கட்சித் தலைவர்களுக்கும் எங்கள் குடும்பத்தின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.” யார் பெயரையும் விட்டுவிடக்கூடாது என்ற தவிப்பு தெரிகிறது பிரபுவின் பேச்சில். மகிழ்ச்சி பொங்கிப் பெருக, நடிகர் திலகம் குறித்த நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார் பிரபு.

“சென்னை மெரினா கடற்கரையில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கான மாடலே அப்பாதான். அந்தச் சிலையை உருவாக்குவதற்கான செலவையும் அப்பாவே பெருமையோடு ஏற்றுக்கொண்டார். காந்திஜி, நேருஜி, பெரியார், இந்திரா காந்தி என  தலைவர்களின் சிலைகளை தன் சொந்தச் செலவிலேயே அப்பா அமைத்துத்தந்தார். போர் நிதி திரட்ட அப்போதைய இந்தியப் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி சென்னை வந்திருந்தார். அப்போது என் அம்மா கமலாம்மாள் தான் அணிந்திருந்த தங்கச்சங்கிலிகள், வளையல்கள் அத்தனையையும் உடனடியாகக் கழற்றிக் கொடுத்தார். மேலும், அப்பா தனது தங்கப் பேனாவைக் கொடுத்தார். தவிர, தனி ஆளாகச் சென்று 17 லட்சம் ரூபாயை வசூலித்துக் கொடுத்தார். இவைதவிர, காமராஜர் முதல்வராக இருந்தபோது ஒரு லட்ச ரூபாய் நன்கொடையை மதிய உணவுத் திட்டத்துக்கு வழங்கினார்.

“எனக்கு நீதான் கொள்ளி வைக்கணும்!” - சிவாஜியிடம் சொன்ன எம்.ஜி.ஆர்.

இப்படி அப்பா செய்த உதவிகள் ஏராளம். இதையெல்லாம் எதற்காகச் சொல்கிறேன் என்றால், ‘அப்பா யாருக்கும் உதவி செய்ததே இல்லை’ என்கிற பொய்யான தோற்றத்தைச் சிலர் உருவாக்கி வைத்திருக்கிறார்கள். இது, அவர்களுக்கான விளக்கம்.

“அப்பாவுக்கு எம்.ஜி.ஆர்., கலைஞர் உடனான உறவில் ஏதாவது முரண் இருந்ததா?” என்றதும், அவசரமாக மறுத்த பிரபு, “உங்களுக்கு ஓர் உண்மையைச் சொல்கிறேன். ‘எம்.ஜி.ஆர்., கலைஞர்’ என்று என்னையறியாமல் அவர்களின் பெயர்களைச் சொல்லி எங்களுக்குள் பேசிவிட்டால், அப்பாவுக்குக் கோபம் வந்துவிடும். ‘இதென்ன புதுப்பழக்கம், பெரியப்பான்னு சொல்லு’ என்று தலையில் தட்டுவார். இதேபோல முத்துராமன், நாகேஷ் போன்ற சீனியர்களை 'மாமான்னு கூப்பிடு’ என்று சொல்லித்தருவார்.

பெரியப்பா கலைஞர், பெரியப்பா எம்.ஜி.ஆர், அப்பா ஆகிய மூவருக்கும் அரசியல் குறித்த பார்வைகள் வேறுபடலாம். ஆனால், அந்த வேறுபாடு அவர்களின் தனிப்பட்ட நட்பைப் பாதித்ததே இல்லை. மூன்றுபேரும் ஓரிடத்தில் சேர்ந்துவிட்டாலே அந்த இடமே கலகலப்பாகிவிடும்.

நான் பெங்களூரில் பிஷப் கார்டன் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது ஒருமுறை அங்குள்ள உட்லண்ட்ஸ் ஹோட்டலில் சாப்பிடப்போயிருந்தேன். அப்போது அந்த ஹோட்டலில் பெரியப்பா கலைஞர் தங்கி இருப்பதாகச் சொல்ல, அவரை நேரில் சந்தித்தேன். ‘பிரபு, நீ இங்கே எப்படி' என்று கேட்டார். 'பெரியப்பா, நான் இங்கேதான் படிக்கிறேன்' என்றேன். அப்போது பெரியப்பா தான் எழுதிய 'தென்பாண்டிச்சிங்கம்' புத்தகத்தில், ‘என் அன்பு மகன் பிரபுவுக்கு, பெரியப்பா' என்று கையெழுத்திட்டுக் கொடுத்தார். அதை இன்றுவரை பொக்கிஷமாக வைத்திருக்கிறேன்.

“எனக்கு நீதான் கொள்ளி வைக்கணும்!” - சிவாஜியிடம் சொன்ன எம்.ஜி.ஆர்.

பெரியப்பா கலைஞரின் பவளவிழாப் பிறந்தநாளை, தமிழ் சினிமா சார்பில் பிரமாண்டமாகக் கொண்டாடினோம். அது, நீண்டகால இடைவெளிக்குப்பிறகு அப்பாவும் கலைஞர் பெரியப்பாவும் சந்தித்துக்கொண்ட நிகழ்ச்சி. அப்போது, 'கலைஞர் அவர்களே, உங்களுக்குப் பரிசு கொடுப்பதற்கு என்னிடம் எதுவுமில்லை. வேண்டுமானால் என் ஆயுளில் இரண்டு வருஷத்தை உங்களுக்குத் தருகிறேன். என் மனைவி கோபித்துக்கொள்ள மாட்டாள். ஏனென்றால் தன் அண்ணனுக்கு நான் கொடுப்பதைப் பார்த்து சந்தோஷம்தான் அடைவாள்' என்று அப்பா பேசியபோது பெரியப்பா கலைஞர் கண்கலங்கி அழுதார். அந்த நட்பின் அடையாளமாக சென்னைக் கடற்கரையில் அப்பாவின் சிலையை அமைத்தார் கலைஞர். அவரை நான் சந்திக்கும்போதெல்லாம், 'யோவ், உன் அப்பா நடிச்ச படம் டிவியிலே வந்துடுச்சுன்னா நான் ஸ்கிரீன்கிட்ட போய் அவரோட கன்னத்தைச் செல்லமாக் கிள்ளி முத்தம் கொடுப்பேன்யா' என்று சொல்லிவிட்டு என் கன்னத்தையும் பாசமாகக் கிள்ளி முத்தம் கொடுத்தார். நான் நெகிழ்ந்துவிட்டேன்.

இதேபோல்தான் பெரியப்பா எம்.ஜி.ஆருடனும் அப்பாவுக்கு நெருங்கிய நட்பு உண்டு. சென்னை தேவி தியேட்டரில் ‘உலகம் சுற்றும் வாலிபன்' படத்தின் ஸ்பெஷல் பிரிமியர். அப்பாவுக்கும் அழைப்பு வந்திருந்தது. நான் பெரியப்பாவின் தீவிர ரசிகன் என்பதால் தனக்குப் பதிலாக அப்பா என்னை அனுப்பிவைத்தார். தேவி தியேட்டருக்குள் இருந்தவர்களை ஒவ்வொருவராகப் பார்த்துக்கொண்டே வந்த பெரியப்பாவிடம் யாரோ, 'சிவாஜி மகன் பிரபு வந்திருக்கிறார்’ என்று சொல்லியிருக்கிறார்கள். என்னிடம் வந்த பெரியப்பா, என் கன்னத்தில் அழுத்தமான முத்தம் கொடுத்து எனக்கு அதிர்ச்சியளித்தார். சுற்றி இருந்தவர்கள் அனைவரும் ஆச்சர்யப்பட்டனர்.

பெரியப்பா சிகிச்சைக்காக அமெரிக்காவில் ப்ருக்லீன் மருத்துவமனையில் இருந்தபோது அவரைப் பார்க்க அப்பா, அம்மா, அண்ணன் மூவரும் போயிருந்தார்கள். அப்போது அப்பாவின் கைககளை இறுகப்பற்றிய பெரியப்பா 'என் தம்பி நீ. நான் உன்னை நம்புறேன். எனக்கு ஏதாவது ஆச்சுன்னா நீதான் எனக்குக் கொள்ளி வைக்கணும். ஜானகியை பத்திரமா பார்த்துக்க வேண்டியதும் உன் பொறுப்பு' என்று சொல்லி அவர் அழ, 'உங்களுக்கு ஒண்ணும் ஆகாதண்ணே. உடம்பு நல்லாயிடும்' என்று அப்பா தேற்ற இருவரும் கட்டிப்பிடித்துக் கதறி அழுதிருக்கிறார்கள். அமெரிக்காவில் நடந்த இந்தச் சம்பவம் எத்தனை பேருக்குத் தெரியும்? பெரியப்பா கேட்டுக்கொண்ட ஒரே காரணத்துக்காக அவரது மறைவுக்குப் பிறகு நடந்த சட்டமன்றத் தேர்தலில் ஜானகி அம்மையாருடன் அப்பாவின் தமிழக முன்னேற்ற முன்னணிக் கட்சி கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது” என்று பழைய நினைவுகளில் மூழ்கினார் பிரபு.

“எனக்கு நீதான் கொள்ளி வைக்கணும்!” - சிவாஜியிடம் சொன்ன எம்.ஜி.ஆர்.

“இன்று கமல் அரசியலுக்கு வந்துவிட்டார். ரஜினி வரவிருக்கிறார். இருவரில் யாரை ஆதரிப்பீர்கள்” என்றதும், “இருவரையும்தான்.” பிரபுவிடம் இருந்து யோசிக்காமல் பதில் வருகிறது. “எங்கள் சிவாஜி ஃபிலிம்ஸின் முதல் படமான 'மன்னன்' படத்தில் நடித்துக்கொடுத்தார் ரஜினி அண்ணன். அது பெரிய ஹிட். அடுத்து 'சந்திரமுகி' படம், 806 நாள்கள் ஓடி கின்னஸ் சாதனை படைத்தது. இப்போதுகூட ரஜினி அண்ணன் எங்களுக்கு கால்ஷீட் கொடுத்தால் அவரது படத்தைத் தயாரிக்கத் தயாராக இருக்கிறோம்.

என்னைவிட, அண்ணன் ராம்குமாரைவிட அப்பாவின் மடியில் அதிகம் தவழ்ந்தவர் அண்ணன் கமல்தான். எங்களைவிட அப்பாவிடம் அதிகம் பேசியவர்கள் இவர்கள் இருவரும்தான். இருவருமே எங்களுக்கு இரு கண்கள் போன்றவர்கள். எங்கள் வீட்டில் எந்த விசேஷம் நடந்தாலும் அதனை முன்னின்று நடத்துவது, அப்பாவுக்குப்பிறகு எங்கள் குடும்பத்தினருக்கு ஆறுதலும் தைரியமுமாக இருப்பது இந்த இரு அண்ணன்கள்தான். அரசியலைப் பொறுத்தவரை அவர்கள் அழைத்தால் இருவரின் தொகுதிக்கும் சென்று பிரசாரம் செய்வேன்.”

“நாமும் அரசியலில் இறங்க வேண்டும் என்று நினைத்தது உண்டா?” என்றதும், சிரித்த பிரபு, “நான் அரசியலில் இறங்கவே மாட்டேன் என்று யாருக்கும் உத்தரவாதம் கொடுக்கவில்லை. தமிழக அரசியலில் என் அப்பாவுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம் என் மனதில் ஆறாத காயத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த வேதனைதான் என்னை அரசியலில் இறங்கவிடாமல் தடுத்துக்கொண்டிருக்கிறது. அன்றைய அரசியல் தலைவர்கள் எதிரும்புதிருமான கருத்துகளைக் கொண்டிருந்தாலும், தனிப்பட்ட முறையில் தங்களுக்குள் நட்பாக இருந்தனர். அந்த நட்பு, இன்றைய அரசியலுக்குத் தேவை என்பது என் கருத்து.”