Published:Updated:

“அவர் கேட்டிருக்கலாம்... நானும் சொல்லியிருக்கலாம்!”

“அவர் கேட்டிருக்கலாம்... நானும் சொல்லியிருக்கலாம்!”
பிரீமியம் ஸ்டோரி
“அவர் கேட்டிருக்கலாம்... நானும் சொல்லியிருக்கலாம்!”

கருணாநிதி பற்றி குஷ்பு

“அவர் கேட்டிருக்கலாம்... நானும் சொல்லியிருக்கலாம்!”

கருணாநிதி பற்றி குஷ்பு

Published:Updated:
“அவர் கேட்டிருக்கலாம்... நானும் சொல்லியிருக்கலாம்!”
பிரீமியம் ஸ்டோரி
“அவர் கேட்டிருக்கலாம்... நானும் சொல்லியிருக்கலாம்!”

‘‘கலைஞர் எனக்கு அப்பாவாகத்தான் பழக்கம். அவரை நான் 1991-ம் ஆண்டுதான் முதல் முறையாகப் பார்த்தேன். ‘சின்னதம்பி’க்கு அடுத்த படம் ஷூட்டிங், சென்னையிலிருந்து ஈரோடுக்கு ரயில்ல போயிட்டிருக்கோம். டைரக்டர் பி.வாசு சார் என்கிட்ட வந்து, ‘பக்கத்து கம்பார்ட்மென்ட்ல கலைஞர் இருக்காரு. நீ அவரைப் பார்த்திருக்கியா?’னு கேட்டார். ‘இல்ல’னு சொன்னதும், கலைஞர் ஐயாகிட்ட அழைச்சிட்டுப் போய் என்னை அறிமுகப்படுத்தி வெச்சாங்க!” - அத்தனை நினைவாக கருணாநிதியை முதன்முதலில் சந்தித்த அனுபவத்தைச் சொல்கிறார் குஷ்பு.

‘‘அதுக்குப் பிறகு, நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்க நிகழ்ச்சிகள்ல அவரை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு. முதல்வரா இருந்தபோதும் சரி, இல்லாதபோதும் சரி... அவரை ரொம்ப எளிதாகப் பார்க்க முடியும். ஒரு முதல்வருக்கான அடிப்படை பாதுகாப்பு வசதிகளைத் தாண்டி, எந்தச் சுவரையும் தன்னைச் சுற்றி அவர் அமைச்சுக்கல. அது அவருக்குத் தேவைப்படவும் இல்ல. என்னை மற்றவர்கள் ‘குஷ்பு’னு கூப்பிடுவாங்க. கலைஞர் மட்டும் குஷ்...‘பூ’ என்று மென்மையா கூப்பிடுவார். 

“அவர் கேட்டிருக்கலாம்... நானும் சொல்லியிருக்கலாம்!”

நான் சின்னத்திரைக்கு வந்த நேரம். சின்னத்திரைக் கலைஞர்களுக்கு அரசு முறையான அங்கீகாரத்தைத் தரணும்னு அவரிடம் கேட்டோம். அடுத்த வருடமே சின்னத்திரையை மாநில விருதுகள் பட்டியலில் சேர்த்தார். அப்போ நான் நடித்து ஜெயா டி.வி-யில் வந்த ‘கல்கி’ தொடரையும், ‘ஜாக்பாட்’ நிகழ்ச்சியையும் கலைஞர் தவறாமல் பார்த்து வந்தார். ‘ஜாக்பாட்’ நிகழ்ச்சியைப் பற்றி என்னிடம் பேசுவார். இல்லைனா ‘கல்கி’ கதையைப் பேசுவார். சின்னத்திரைக்கான முதல் மாநில விருதுகள்ல எனக்குச் சிறந்த நடிகைக்காக விருது கிடைச்சது. அந்த விருதுக்குப் பரிந்துரை செய்தபோது, ‘அந்த நாடகம் ஜெயா டி.வி-யில் வருது. அதுக்கெப்படி தர முடியும்’னு கூட இருந்தவங்க கேட்டிருக்காங்க. அதுக்குக் கலைஞர், ‘கலையைக் கலையாக மட்டும் பாருங்க, அரசியல் சேர்க்காதீங்க’னு சொல்லி யிருக்கார். அந்த இடத்துல வேற யாராவது இருந்திருந்தா, எனக்கு அந்த விருது கிடைச்சிருக்காது’’ என்று நினைவுகளை அசைபோடுகிறார் குஷ்பு.

‘‘என்மீதான கேஸ் ஒண்ணு கோர்ட்ல இருந்தது. 2010-லதான் அது முடிஞ்சது. அதன்பிறகு ஒருநாள் கோபாலபுரம் வீட்டுக்கு போன் பண்ணி, ‘தலைவரைப் பார்க்கணும்’னு சொன்னேன். தலைவர் உள்பட எல்லோரும் இதை ஒரு பொதுவான சந்திப்புனுதான்னு நினைச்சாங்க. தலைவர்கிட்ட நான் அரசியலுக்கு வரப்போற விஷயத்தைச் சொன்னேன். அவர், ‘என் கட்சிக்கு வந்திடு’னு கூப்பிடலை. ‘உன் கொள்கைகளுக்கு எந்தக் கட்சி சரியா இருக்கும்னு தோணுதோ, அந்தக் கட்சியைத் தேர்ந்தெடு. அரசியலுக்கு நிறைய நேரம் ஒதுக்கணும். குடும்பத்தைப் பார்த்துக்க முடியாது. பல கஷ்டங்கள் இருக்கும். உன்னால முடியுமா?’னு கேட்டார். ‘நான் எல்லாத்தையும்  பேலன்ஸ் பன்ணிடுவேன்பா. நான் தி.மு.க-வுல சேர்ந்துக்கிறேன்’னு சொன்னேன். சிரிச்சுக்கிட்டே, ‘நீ அங்கேதானே (அ.தி.மு.க) நெருக்கமா இருக்க’னு சொன்னார். ‘அப்பா... நான் ஜெயா டி.வி-யில நிகழ்ச்சி நடத்தறேன். அவ்ளோதான். கனவுலகூட நான் அ.தி.மு.க-வுல சேரணும்னு நினைக்கல’னு சொன்னேன்.

பிறகு, ‘என் பிறந்தநாளப்போ நீ கட்சியில இணையறதை நான் அதிகாரபூர்வமா அறிவிக்கிறேன். அதுவரை அமைதியா இரு’ன்னு தலைவர் சொன்னார். அவர் பேச்சைக் கேட்டுக்கிட்டேன். திடீர்னு ஒருநாள் கோபாலபுரத்துல இருந்து போன். ‘என் பிறந்தநாளுக்கு இன்னும் ஒரு மாதம் இருக்கு. அதுக்குள்ள இந்தச் செய்தி பரவிடும். உனக்கு அங்கே பிரச்னை ஆகிடும்’னு சொல்லி, உடனே கட்சியில இணைஞ்சுக்க சொன்னார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“அவர் கேட்டிருக்கலாம்... நானும் சொல்லியிருக்கலாம்!”

அப்போ, தலைவர் முதல்வரா இருந்தார். நான் கட்சியில இணையற அன்னைக்கு, பல அமைச்சர்கள், மாவட்ட நிர்வாகிகள்னு அனைவரையும் கூட்டியிருந்தார் தலைவர். அந்த நிகழ்வுல ஒரு சுவாரஸ்யம் நடந்துச்சு. கட்சியில் இணைந்த படிவத்தைத் தலைவர்கிட்ட கொடுத்தபோது, ‘500 ரூபாய் கொடு’ என்றார். கட்சில சேரும்போது காசு கொடுக்கணும்னு எனக்குத் தெரியாது. அப்போ, எனக்காக ஸ்டாலின்தான் அந்த 500 ரூபாயைக் கொடுத்தார்.

பிறகு, தலைவரோட பிறந்தநாள் சிறப்புக் கூட்டம் திருவான்மியூர்ல நடந்துச்சு. அந்தக் கூட்டத்துல தலைவர் என்னை 45 நிமிடங்கள் பேசச் சொல்லிட்டார். எனக்கான முதல் மேடையே இவ்வளவு பெருசா அமையும்னு நான் எதிர்பார்க்கலை. தவிர, கலைஞர்கிட்ட பலரும் ‘இது தப்பான முடிவு’னு சொல்லியிருந்தாங்க. அதனால, கலைஞரோட பெயரைக் காப்பாத்தணும்னு திடமா இருந்தேன். ஜூன் 3-ம் தேதிக்கு முந்தைய நாள், தலைவர் எனக்கு போன் செஞ்சார். ‘நீ நாளைக்கு மேடையில பேசும்போது, 100-க்கு இரண்டு பேர்தான் நீ நல்லா பேசணும்னு நினைப்பாங்க. மீதி இருக்கிற 98 பேர் உன்னைக் கிழிச்சு குப்பையில போடக் காத்துக்கிட்டு இருப்பாங்க. நீ நல்லா பேசணும்னு நினைக்கிற அந்த ரெண்டுபேர்ல நானும் ஒருத்தன்’னு சொன்னார்.

பிறந்தநாள் விழா மேடையில பேராசிரியர் அன்பழகன், ஸ்டாலின், துரைமுருகன்... இப்படிப் பல தி.மு.க ஜாம்பவான்கள் இருந்தாங்க. நானும் 45 நிமிடங்களுக்குப் பேசிட்டு வந்துட்டேன். அடுத்தநாள் காலையில கோபாலபுரம் வரச்சொல்லி, எனக்கு ஒரு பூங்கொத்தைக் கொடுத்து, கூடவே ஒரு தங்கச் சங்கிலியைப் பரிசா கொடுத்தார். அதை நான் இன்னும் பத்திரமா வெச்சிருக்கேன்.

தலைவருக்கு எப்பவும் பேச்சுத் துணைக்கு யாராவது கூட இருக்கணும். அப்படி நான் அவர்கிட்ட நிறையப் பேசியிருக்கேன். எல்லோரும் ரொம்பப் பணிவா, பயந்து பேசுறமாதிரி நான் அவர்கிட்ட பழகலை. அவர் எனக்கு அப்பா. ஒரு நல்ல நண்பர். எனக்கு சரி எனப் பட்டதை சரி என்று சொல்வேன், தப்புனு பட்டாலும் சொல்லிடுவேன். என்னோட இந்தச் சுபாவம் அவருக்கு ரொம்பப் பிடிக்கும்.

“அவர் கேட்டிருக்கலாம்... நானும் சொல்லியிருக்கலாம்!”

தி.மு.க-வுல இருந்து நான் விலகுனதுக்குக் காரணம் ஸ்டாலின்னு நிறையப் பேர் நினைக்கிறாங்க. ஆனா, அது உண்மையில்லை. தி.மு.க-வில் சிலரின் ஈகோ எனக்குப் பிடிக்காம இருந்தது. தலைவரை வாரம் ஒருமுறையாவது சந்திக்கிற நபர் நான். அப்படித்தான் அன்னைக்கு அவர் வீட்டுல சந்திச்சேன். எப்போவும் சொல்றமாதிரி, ‘எனக்கு காபி, அவங்களுக்கு ஒரு டீ சூடா கொடுங்க’னு சொன்னார் தலைவர். ‘நீ ஏதோ முடிவு எடுக்கப்போறேன்னு எனக்குத் தோணுது’னு அவரே கண்டுபிடிச்சுட்டார். அதுக்கப்புறம் நாங்க அதைப் பத்தி பேசிக்கல. அது, 2014 பொதுத் தேர்தல் நேரம். நான் பிரசாரத்துக்குப் போவேனா, மாட்டேனானு பலருக்கும் சந்தேகம். ஆனா, அந்தத் தேர்தலுக்கு மொத்தமா 32 நாள்கள் பிரசாரம் செஞ்சேன். தி.மு.க-வுல இருந்து விலகணும்னு முன்னாடியே முடிவு பண்ணிட்டேன். ஆனா, அப்போ விலகுனா, ‘எம்.பி சீட் கேட்டாங்க, கொடுக்கலைன்னதும் விலகிட்டாங்க’னு சொல்வாங்க. நான் அப்படிப் பண்ணலை. 2014 தேர்தல் முடிவுகள் வந்தபிறகு, அறிவாலயத்துக்கு என் விலகல் கடிதத்தை அனுப்பி வெச்சேன். ‘தலைவர் எங்களைத் திட்டுவார்’னு அங்கே இருந்த யாரும் அந்தக் கடிதத்தை வாங்கிக்கலை. பிறகு கடிதத்தை கோபாலபுரத்துக்கு அனுப்பி வெச்சேன். ‘இந்த லெட்டரை நான் வாங்குனா தலைவர் திட்டுவார், நீங்களே வந்து கொடுத்துடுங்க’னு சண்முகநாதன் சொன்னார். அப்போ, அவரை நேர்ல சந்திக்கிற தைரியம் எனக்கு இல்லை. ஒருவேளை அவர் அந்த விலகல் கடிதத்தைக் கிழிச்சுப் போட்டுட்டு, ‘எதுக்கு இப்போ இதெல்லாம்’னு கேட்டார்னா என்னால ஒண்ணும் பேசமுடியாது, இல்லையா?’’ என்றார் குஷ்பு.

குஷ்புவிடம், ‘‘கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அவர் பேசி நாம் கேட்கவில்லை. அவரிடம் பலமுறை பேசியுள்ள நீங்கள், இந்த இடைப்பட்ட காலத்தில் அவரைப் பார்க்கும்போது, ‘இவரிடம் இதைப் பேசியிருக்கலாம். இவர் என்னிடம் இதைப் பேசியிருக்கலாம்’ என நினைக்கும் விஷயம் எது?’’ என்றோம்.

‘‘நான் ஏன் கட்சியை விட்டு விலகினேன்னு அவர்கிட்ட சொல்லியிருக்கலாம். அப்பாவும் என்கிட்ட ‘எதுக்காக நீ கட்சியை விட்டுப் போன’னு கேட்டிருக்கலாம்னு இப்போ நினைக்கிறேன். நேரம் யாருக்கும் காத்திருக்கிறது இல்ல. அவர் மறுபடியும் எழுந்துவந்து, ‘என் உயிரினும் மேலான உடன்பிறப்புகளே’னு சொல்றதைக் கேட்டுச் சந்தோஷப்படக் காத்திருக்கிற லட்சோப லட்சம் தமிழக மக்களில் நானும் ஒருத்தி!’’

கண்களில் கசியும் ஈரத்துடன் நெகிழ்வாக முடிக்கிறார் குஷ்பு.  

- எம்.குணா                                     
 படங்கள்: கே.கார்த்திகேயன், கே.ஜெரோம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism