அரசியல்
அலசல்
Published:Updated:

கழுகார் பதில்கள்! - தமிழகத்தில் மட்டும் ஏன் ரெய்டு?

கழுகார் பதில்கள்! - தமிழகத்தில் மட்டும் ஏன் ரெய்டு?
பிரீமியம் ஸ்டோரி
News
கழுகார் பதில்கள்! - தமிழகத்தில் மட்டும் ஏன் ரெய்டு?

கழுகார் பதில்கள்! - தமிழகத்தில் மட்டும் ஏன் ரெய்டு?

@இ.முத்துக்குமார், கிருஷ்ணாபுரம்.

முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளதா?

நிச்சயமாக. சமீபத்திய பெருமழையைக் காரணம் காட்டி, 142 அடிக்குக் கீழாக நீர்மட்டத்தைக் குறைக்கவேண்டும் என்று கேரளா எழுப்பிய கோரிக்கையைப் பரிசீலிக்கச் சொல்லி உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது. ஆனால், தமிழக அரசு ஏற்கவில்லை. ‘இதில் அரசியல் ஒளிந்திருக்கிறது. இதை வைத்தே எதிர்காலத்தில் அணையின் நீர்மட்டத்தை நிரந்தரமாகக் குறைத்துவிடுவார்கள். தமிழகத்துக்குத் தண்ணீர் கிடைக்காமல் போய்விடும்’ என்று விவசாயிகள், அரசியல் தலைவர்கள் என பலரும் குரல் கொடுத்தனர். தமிழக அரசும் இதில் உறுதியாக நின்றது. அணையின் உறுதித்தன்மை, மீண்டும் ஒரு தடவை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதைவிட மிக உயரமான இடுக்கி அணைமீது சேட்டன்களுக்கு ஒரு பயமும் இல்லையாம் - கண்டுகொள்வோம்.

கழுகார் பதில்கள்! - தமிழகத்தில் மட்டும் ஏன் ரெய்டு?

பி.மணி, வெள்ளக்கோவில்.

தமிழகத்தில் மட்டும் ஏன் அதிக அளவில் வருமானவரி சோதனைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது?


‘வள’மான தமிழகம்... ‘வலிமை’யான பாரதம்.

ச.பாரதிராஜா, குரும்பகரம்.

மக்கள் செல்வாக்கு இல்லாத ஹெச்.ராஜா, சுப்பிரமணியன் சுவாமி போன்றோருக்கு பி.ஜே.பி முக்கியத்துவம் கொடுத்து வைத்திருக்கிறதே?


அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!

@கே.டி.திலீபன், விழுப்புரம்.

கருணாநிதி நினைவேந்தல் நிகழ்ச்சியில் பி.ஜே.பி முக்கியத் தலைவர் பங்கேற்கிறார் என்றால், வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க 23, ரஜினி 12, பி.ஜே.பி 5 என்று தொகுதி பங்கீடு உறுதியாகிவிடும்தானே?


நீங்கள் விழுப்புரத்தில் இருக்க வேண்டிய ஆளே இல்லை. ஆனாலும், பி.ஜே.பி-யை மிகவும் குறைத்து மதிப்பிடுகிறீர்கள்.

@சி.கார்த்திகேயன், சாத்தூர்.

‘கோலமாவு கோகிலா’வுக்கு இவ்வளவு பில்ட்அப் தந்திருக்க வேண்டுமா?


சினிமா என்பது ஒரு பிசினஸ். பணம் போட்டுப் பணம் எடுக்கிறார்கள். பில்ட்அப் இல்லாமல் படம் ஓடிய காலமெல்லாம் மலையேறிவிட்டது. ஒரு காலத்தில் 100-வது நாள் வரை படம் ஓடினால் மட்டும்தான் கொண்டாடுவார்கள். இப்போதெல்லாம் பூஜை, டீஸர், போஸ்டர் என ஒவ்வொன்றையுமே கொண்டாடுகிறார்கள். இப்படியெல்லாம் பில்ட்அப் கொடுக்காவிட்டால், ரசிகர்களை தியேட்டருக்கு ஈர்க்க முடியுமா? அதுசரி, ‘கோலமாவு கோகிலா’வை மட்டும் குறிவைத்து ஏன் கேட்கிறீர்கள்?

கழுகார் பதில்கள்! - தமிழகத்தில் மட்டும் ஏன் ரெய்டு?

@சாந்தி மணாளன், கருவூர்.

வழக்குகள் போகும் திசையைப் பார்த்தால், ப.சிதம்பரம் குடும்பத்தினர்,  மாறன் சகோதரர்கள், கனிமொழி, ஆ.ராசா என அனைவரும் திகார் ஜெயிலுக்குள்தான் இருப்பார்கள் போலிருக்கிறதே?


சட்டம் ஓர் இருட்டறை. வழக்கறிஞர்களின் வாதம்தான் ஒளிவிளக்கு.

என்.முருகேஷ், மங்கைநல்லூர்.


விதிகளை மீறிச் செயல்படும் அரசியல் கட்சிகளின் பதிவை ரத்துசெய்யும் அதிகாரம் இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கு இருக்கிறதா?

நிச்சயமாக இருக்கிறது. ஆனால், அதையெல்லாம் பயன்படுத்திய வரலாறுதான் இல்லை.

@சு.துரைகுமார், மகாதானபுரம், கரூர்.  

கேரளாவுக்கு உதவ நினைக்கும் அண்டை நாடுகளின் நிதியைப் பெற மத்திய அரசு மறுப்பது ஏன்?


வளர்ந்துவரும் நாடு என்கிற நிலையில் இருக்கிறது, இந்தியா. இப்படிப்பட்ட உதவிகளை ஏற்றால், ஏழை நாடு என்பதுபோன்ற தோற்றம் தொற்றிக்கொள்ளும். அதனால், வெளிநாட்டு உதவிகளை ஏற்பதில்லை என 2004-ல் சுனாமி தாக்கியபோது மத்தியில் ஆட்சி புரிந்த காங்கிரஸ் அரசு முடிவு எடுத்தது. அதற்குப் பிறகு, பேரிடர்க் காலங்களில் வெளிநாட்டு நிதியுதவிகளை இந்தியா ஏற்கவில்லை. மாறாக, வெளிநாடுகளுக்கு உதவும் நாடாகவும் உருவெடுத்துள்ளது. அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளுக்கு இப்படி உதவி செய்யப்பட்டுள்ளது. அதையே தானும் பின்பற்றுவதாகக் கூறியுள்ளது தற்போது மத்தியில் ஆளும் பி.ஜே.பி அரசு. நல்ல விஷயமே.

கழுகார் பதில்கள்! - தமிழகத்தில் மட்டும் ஏன் ரெய்டு?

@சந்துரு, சென்னை-44.

உள்ளாட்சித் தேர்தல்கள் தேவைதானா. குடிநீர் இணைப்பு தொடங்கி அனைத்துக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்குக் கப்பம் கட்டுவதிலிருந்து இப்போது விடுதலை கிடைத்திருக்கிறதே?


ஒருவிதத்தில் நீங்கள் சொல்வது உண்மைதான். ஆனால், அதிகாரிகள் மட்டும் கையைக் கட்டிக் கொண்டுவிட்டார்களா என்ன? முன்பு மக்கள் பிரதிநிதிக்குக் கொடுத்ததை, இப்போது அதிகார வர்க்கத்துக்குக் கொடுக்க வேண்டியிருக்கிறது. அதற்காக, மக்கள் பிரதிநிதிகள் மட்டுமே லஞ்சம் வாங்குவதுபோன்ற தோற்றத்தை உருவாக்கப் பார்க்கிறீர்களே! பல சமயங்களில் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குக் கூடத்தான் பணம் தந்து காரியத்தைச் சாதிக்க வேண்டியிருக் கிறது. அதற்காக அந்தத் தேர்தல்களும் எதற்கு என்று கேட்பீர்கள் போலிருக்கிறது.

ச.ஆதிமூலம், பெருமாள்தேவன்பட்டி.

நாடாளுமன்ற மேலவையின் அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்படும் அளவுக்கு பிரதமர் மோடியின் பேச்சு அமைந்தது சரிதானா?


யாகாவா ராயினும் நா காக்க!

ஆர்.ராகவி, தெற்கு வாட்டாக்குடி.

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்ற மக்கள் செல்வாக்கு மிக்க தலைவர்களை எதிர்த்து கருணாநிதி அரசியல் செய்தார். ஆனால், மு.க.ஸ்டாலினுக்கு அந்தக் கஷ்டம் இல்லைதானே!

கருணாநிதி பெருநில மன்னர்களுடன் மோதினார். ஸ்டாலினோ, குறுநில மன்னர்களுடன் மோத வேண்டிய நிர்பந்தத்துக்கு ஆளாகி நிற்கிறார். கருணாநிதியின் எதிரிகள் முகத்துக்கு நேரே நின்றனர். ஸ்டாலினுக்கோ மூலைக்கு மூலை நிற்கிறார்கள்; முகம் காட்டியும், காட்டாமலும் நிற்கிறார்கள். சொல்லப்போனால், மிகமிகக் கஷ்டமான சூழலில் இருப்பவர் ஸ்டாலின்தான்.

 கேள்விகள் அனுப்ப  வேண்டிய முகவரி: 
கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன்,  757, அண்ணா சாலை,
சென்னை- 600 002
kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!