Published:Updated:

"கிராம மக்களால் இன்றளவும் விரும்பப்படும் எம்.ஜி.ஆர். பாடல்" - நினைவுதினச் சிறப்புப் பகிர்வு

"கிராம மக்களால் இன்றளவும் விரும்பப்படும் எம்.ஜி.ஆர். பாடல்" - நினைவுதினச் சிறப்புப் பகிர்வு
"கிராம மக்களால் இன்றளவும் விரும்பப்படும் எம்.ஜி.ஆர். பாடல்" - நினைவுதினச் சிறப்புப் பகிர்வு

"கிராம மக்களால் இன்றளவும் விரும்பப்படும் எம்.ஜி.ஆர். பாடல்" - நினைவுதினச் சிறப்புப் பகிர்வு

``னுஷனை மனுஷன் சாப்பிடுறாண்டா தம்பிப் பயலே... இது மாறுவதெப்போ, தீருவதெப்போ நம்ம கவலே...'' போன்ற மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் சமூகக் கருத்துள்ள பாடல்கள், இன்றுவரை தமிழகத்தின் கிராமங்களில் தொடர்ந்து ஒலித்துக்கொண்டிருக்கின்றன. அந்தக் கிராமத்து மனிதர்களுக்கு அ.தி.மு.க, அ.ம.மு.க, ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் அணி என எந்தக் கவலைகளும் கிடையாது. அந்த மக்களின் மனதில் என்றென்றும் நீங்காமல் நிறைந்திருக்கும் ஒரே தலைவர் எம்.ஜி.ஆர் மட்டும்தான். அவரின் 31-ம் ஆண்டு நினைவு தினம் இன்று...

அரசியல் பாடல்களின் நாயகன் எம்.ஜி.ஆர் எனலாம். தற்போதெல்லாம் படம் வெளியான வார இறுதிக்குள், படத்தின் பாடல்கள் காணாமல் போய்விடுகின்ற சூழலில், எம்.ஜி.ஆர் படத்தின் எண்ணற்ற பாடல்கள் அரை நூற்றாண்டுக்கும் மேலாக இப்போதும் உயிர்ப்புடன் உள்ளன. தன் படங்களில் இடம்பெறும் பாடல்களையெல்லாம், அவருடைய அரசியல்வாழ்வில் அவரின் கட்சித் தொண்டர்களாய் மாறிய ரசிகர்களுக்காகக் கவனமாக எடுத்து செதுக்கிக் கொடுத்துள்ளார்.

`மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும், அது முடிந்த பின்னாலும் என் பேச்சிருக்கும்‘ என்ற பாடலில் இடம் பெற்ற அந்த மூன்றெழுத்தின் விடையாக,  பாடலில் இடம்பெறும் வார்த்தை, `கடமை’. இது, எம்.ஜி.ஆர் தன் தலைவராக ஏற்றுக்கொண்ட பேரறிஞர் அண்ணா அதிகம் பயன்படுத்தும் வார்த்தை. அதேபோல,  வேறு சில மறைமுக அர்த்தங்களும் இருப்பதாகப் பாடல் வெளியானபோது சொல்லப்பட்டன.  அண்ணாதான் தி.மு.க, அண்ணா, எம்.ஜி.ஆர் போன்ற மூன்றெழுத்துச் சொற்கள் அவை. இவை எல்லாம் அரசியல் அரங்கில் எம்.ஜி.ஆரின் செல்வாக்கை உயர்த்தின.

அரசியல் சார்ந்த பல  திரைப்படப் பாடல்களை எம்.ஜி.ஆருக்காக எழுதியதன்மூலம் அவரோடு மிகவும் நெருக்கமானவர் கவிஞர் வாலி.

`கொடுத்த தெல்லாம் கொடுத்தான்

அவன் யாருக்காகக் கொடுத்தான்

ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை

ஊருக்காகக் கொடுத்தான்’ என்னும் `படகோட்டி’ படத்தில் இடம்பெற்ற பாடல்போன்று எம்.ஜி.ஆருக்காகவே எழுதிய பாடல் வரிகள், அரசியல் அரங்கில் ஒலித்து, எம்.ஜி.ஆரின் புகழை உயர்த்தியது. இத்தகைய பாடல்கள்மூலம் எம்.ஜி.ஆரை, வறுமையின் பிடியில் சிக்கித் தவித்த ஏழை-எளிய மக்களின் தலைவனாக்கியது. எம்.ஜி.ஆரை தங்களை கைதூக்கிவிட வந்த தலைவனாகப் பார்க்கத் தொடங்கினர் அந்த மக்கள்.

1967-ம் ஆண்டு தி.மு.க முதன்முதலாக ஆட்சியைப் பிடித்தது. கிட்டத்தட்ட அதே ஆண்டு வெளியான எம்.ஜி.ஆரின் முக்கியமான படம், `விவசாயி’. இது, அவரை விவசாயிகளின் தலைவனாக்கியது. அவரின் சிறந்த பாடல்களை யார் பட்டியலிட்டாலும் அதில் இடம் பெறக்கூடிய பாடல்களில் ஒன்று

``கடவுள் என்னும் முதலாளி,

கண்டெடுத்த தொழிலாளி, விவசாயி'' என்னும் பாடல். கிராமப்புறங்களில் இன்னும் இந்தப் பாடல் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. திருவிழாக்கள், அரசியல் கூட்டங்கள் என எம்.ஜி.ஆரின் பாடல்கள் ஒலிக்காத கிராமங்களே இல்லை என்ற அளவுக்கு அவர் அடித்தட்டு மக்களிடையே புகழ்பெற்றிருந்தார். இந்தப் பாடலின் காட்சி அமைப்பு முழுவதும் டிராக்டர் ஓட்டியபடியே ஒரு விவசாயி பாடுவதுபோல அமைக்கப்பட்டிருக்கும்.

அந்தப் பாடலில்,

``பறக்க வேணும் எங்கும் ஒரே சின்னக் கொடி - அது,

பஞ்சம் இல்லையெனும் அன்னக்கொடி... ⁠’ என்ற வரிகள் வரும்போது, அப்போது எம்.ஜி.ஆர் சார்ந்திருந்த தி.மு.க-வின் கறுப்பு, சிவப்புக் கொடி திரையில் காண்பிக்கப்படும்.

`திருடாதே’ படத்தில் இடம்பிடித்த எம்.ஜி.ஆரின்

``திருடாதே... பாப்பா திருடாதே...

திருடாதே... பாப்பா திருடாதே...

வறுமை நிலைக்குப் பயந்துவிடாதே

திறமை இருக்கு மறந்துவிடாதே..."

போன்ற பாடல்கள் அவரை குழந்தைகள் மத்தியில் பிரபலமாக்கியது. இன்றைக்கும் தமிழ்த் திரைப்படங்களில் குழந்தைகளுக்கு அறிவுரை சொல்வது போன்ற பாடல்கள் மிகவும் குறைவாகவே இடம்பெறுகின்றன. அதில், முதன்மையானது இந்தப் பாடல்.

எம்.ஜி.ஆரின் ரசிகர்களுக்காக முழுக்க முழுக்க உருவாக்கப்பட்டது, 'எங்க வீட்டுப் பிள்ளை' திரைப்படம்.

அந்தப் படத்தில் இடம்பெறும்

`நான் ஆணையிட்டால் ….

அது நடந்துவிட்டால் …

இங்கு ஏழைகள் வேதனைப் பட மாட்டார்’

என்ற பாடல் எம்.ஜி.ஆரை தமிழகத்தின் முதல்வராக வழிவகுத்தது எனலாம். அவர் முதல்வரான பின்னர் கொண்டுவந்த பள்ளிக் குழந்தைகளுக்கான சத்துணவுத் திட்டம், ஏழை எளிய குழந்தைகளின் வாழ்வை மேம்படுத்தியது. அதேபோல, மானுட விடுதலையையும் மீனவ மக்களிடம் செல்வாக்கையும் பெற்ற மற்றொரு பாடல்

``கோடி மக்கள் சேர்ந்து வாழ வேண்டும் விடுதலை

கோயில் போல நாடு காண வேண்டும் விடுதலை

அச்சமின்றி ஆடிப்பாட வேண்டும் விடுதலை

அடிமை வாழும் பூமி எங்கும் வேண்டும் விடுதலை”. 

இந்தப் பாடல்தான் எம்.ஜி.ஆர் தி.மு.க-விலிருந்து வெளியேற்றப்பட்ட பிறகு, அவர் தொடங்கிய அ.தி.மு.க கட்சிக் கொடியைக் கடலோர கிராமங்களுக்கெல்லாம் கொண்டுசேர்க்க பெரிதும் உதவியது என்று கூறலாம். 

இன்று  திடீரென, `அரசியலுக்கு வருகிறோம்' எனச் சொல்லும் நடிகர்கள் பலர், எம்.ஜி.ஆரிடமிருந்து கற்றுக்கொள்ளவேண்டிய அரசியல் பாடங்கள் இவை. பாடல்களை அரசியலுக்காகவும் சமூகக் கருத்துகளை வெளிப்படுத்துவதற்காகவும் பயன்படுத்திய அதே எம்.ஜி.ஆர் உருவாக்கிய அ.தி.மு.க-வின் நாடாளுமன்ற உறுப்பினர்தான், `காஷ்மீர்... பியூட்டிஃபுல் காஷ்மீர்...’ என நாடாளுமன்ற விவாதத்தின்போது பாட்டுப்பாடி நகைச்சுவைக்கு ஆளாகியுள்ளார். `தமிழகத்தில் அரசியல் தலைவர்களுக்கான வெற்றிடங்கள் இருக்கின்றன' எனச் சொல்லப்பட்டுவரும் நிலையில், எம்.ஜி.ஆரின் அரசியல் வாரிசாகக் கருதப்பட்டு, அவருக்குப் பின் அ.தி.மு.க-வை தன் கட்டுப்பாட்டில் கட்டுக்கோப்பாக வைத்திருந்த, ``மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அமைத்துக்கொடுத்த ஆட்சியை சிறப்பாக நடத்துகின்றோம்” என்று இப்போதைய ஆட்சியாளர்கள் சூளுரைத்துக்கொண்டிருக்கும் சூழலில், எம்.ஜி.ஆரின் இந்தப் பாடல் வரிகள், தற்போதைய சூழலுக்கு ஏற்றதாக அமையும்.

``சிலர் ஆசைக்கும் தேவைக்கும் வாழ்வுக்கும் வசதிக்கும்

ஊரார் கால் பிடிப்பார்..ஒரு மானமில்லை, அதில் ஈனமில்லை

அவர் எப்போதும் வால் பிடிப்பார்.

`எதிர் காலம் வரும் என் கடமை வரும்.

இந்தக் கூட்டத்தின் ஆட்டத்தை ஒழிப்பேன்'

பொது நீதியிலே புதுப் பாதையிலே

வரும் நல்லோர் முகத்திலே விழிப்பேன்

வரும் நல்லோர் முகத்திலே விழிப்பேன்”

அடுத்த கட்டுரைக்கு