Published:Updated:

‘துப்பாக்கி’ தூக்கிய ‘தளபதி’! - அலறும் அ.தி.மு.க., அதிரும் அரசியல் களம்

‘துப்பாக்கி’ தூக்கிய ‘தளபதி’! - அலறும் அ.தி.மு.க., அதிரும் அரசியல் களம்
பிரீமியம் ஸ்டோரி
News
‘துப்பாக்கி’ தூக்கிய ‘தளபதி’! - அலறும் அ.தி.மு.க., அதிரும் அரசியல் களம்

படங்கள்: வி.ராஜேஷ், ஈ.ஜெ.நந்தகுமார், வி.ஸ்ரீனிவாசுலு, வி.நரேஷ்குமார்

“உசுப்பேத்துறவன்கிட்ட உம்முனும், கடுப்பேத்துறவன்கிட்ட கம்முனும் இருந்துட்டா வாழ்க்கை ஜம்முன்னு இருக்கும்” என்று சர்க்கார் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசினார் விஜய். அவர் பேசியதுபோலவே ‘சர்கார்’ மூலம் ஆளும் கட்சியை உசுப்பேத்திவிட்டு, இப்போது ‘கம்’மென்று வேடிக்கை பார்க்கிறார் விஜய்!

‘துப்பாக்கி’ தூக்கிய ‘தளபதி’! - அலறும் அ.தி.மு.க., அதிரும் அரசியல் களம்

கமல், ரஜினி அரசியலுக்கு வந்த பின்பு விஜய்யும் விரைவில் அரசியலுக்குள் வந்துவிடுவார் என்ற எதிர்பார்ப்பு தமிழகத்தில் இருக்கிறது. கட்சி தொடங்குவதற்கு முன்னோட்டமாக, தன் ரசிகர் மன்றத்தை ‘விஜய் மக்கள் இயக்க’மாக மாற்றிய விஜய்க்கு, முன்பு ‘தலைவா’ ரிலீஸ் செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. அதனால் அரசியல் ஆசையைத் தள்ளிவைத்தார். இப்போது, ‘சர்கார்’ படத்தின் மூலம் தனது ‘சர்கார்’ ஆசையை வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளார் விஜய். இதுதான் அ.தி.மு.க முகாமில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. “ ‘சர்கார்’ படத்தில் சில காட்சிகள் எங்களது கட்சியையும், அரசுத் திட்டங்களையும் கேலி செய்வதாக உள்ளது. ஜெயலலிதாவின் இயற்பெயரை வில்லியாக நடிக்கும் வரலட்சுமிக்கு வைத்து, ஜெயலலிதாவின் மீதிருந்த பகைக்குப் பழிதீர்த்துக்கொண்டுள்ளார் விஜய்” என்று கொந்தளிக்கிறார்கள் அ.தி.மு.க-வினர். குறிப்பாக, படத்தில் இடம்பெற்றுள்ள நான்கு விஷயங்கள் தங்களைக் காயப்படுத்துவதாகப் பொங்குகிறார்கள் அவர்கள். அந்த நான்கு விஷயங்கள் இவைதான்...

ஒன்று: படத்தில் முதல்வரின் மகளாகவும் வில்லியாகவும் வரும் வரலட்சுமியின் பெயர் கோமளவள்ளி. தேர்தலில் வெற்றி பெறவேண்டும் என்பதற்காக, ஒரு கட்சியின் தலைவராக இருக்கும் அப்பாவையே கொலைசெய்யும் கதாபாத்திரம் இது. ‘இந்தச் சம்பவம் யாரைச் சுட்டிக்காட்டுகிறது?’ என்ற கேள்வியை எழுப்புகிறார்கள் அ.தி.மு.க-வினர். இரண்டு: ஒருகாட்சியில் இலவசமாகக் கொடுக்கப்பட்ட மிக்ஸி, கிரைன்டர்கள் குப்பையில் வீசப்படுகின்றன. இதை, ‘அம்மா அரசால் கொடுக்கப்பட்ட இலவசப் பொருள்களைக் கேவலப்படுத்து கிறார்கள்’ என்கிறார்கள். மூன்று: ‘பழ.கருப்பையா, ராதாரவி கதாபாத்திரங்கள் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்தை வம்பிழுப்பதுபோல உள்ளது’ என்று குற்றம்சாட்டுகிறார்கள். நான்கு: பழ.கருப்பையாவின் கட்சியின் பெயர் அ.இ.ம.மு.க. ‘இந்தப் பெயர், அ.இ.அ.தி.மு.க போலவே உள்ளது’ என்கிறார்கள்.

சர்க்கார் சர்ச்சையில், முதன்முதலாகப் பொறியைப் பற்றவைத்தவர் செய்தித் துறை அமைச்சர் கடம்பூர் ராஜுதான். “அ.தி.மு.க ஆட்சியில் வழங்கப்பட்ட விலையில்லா மிக்ஸி உள்ளிட்டவற்றை தீயிட்டு எரிக்கும் காட்சி, படத்தில் இடம்பெற்றுள்ளது. ஏன்... தி.மு.க ஆட்சியில் வழங்கப்பட்ட டி.வி-யையும் எரிப்பதுபோலக் காட்ட வேண்டியதுதானே. வளர்ந்துவரும் நடிகர் விஜய்க்கு இது நல்லதல்ல. சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கவில்லை என்றால், அடுத்த நடவடிக்கை குறித்து யோசித்து முடிவுசெய்வோம்” என்றார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
‘துப்பாக்கி’ தூக்கிய ‘தளபதி’! - அலறும் அ.தி.மு.க., அதிரும் அரசியல் களம்

விஜய்யின் படம் சர்ச்சையில் சிக்குவது புதிதல்ல. ‘தலைவா’ ரிலீஸ் ஆவதற்கு பட்ட பாட்டை அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க மாட்டார்கள். இதே முருகதாஸ் - விஜய் கூட்டணியில் வெளியான ‘துப்பாக்கி’யிலும் சர்ச்சை நீதிமன்றம்வரை சென்றது. ‘துப்பாக்கி’ விவகாரத்தில் அப்போது தமிழக அரசுக்காக ஆஜரானவர் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் இன்பதுரை. அவர், “அரசியல் அமைப்புச் சட்டப்படி தனிநபரின் புகழுக்குக் களங்கம் விளைவிப்பது தவறு. அதேபோல், இறந்த ஒருவரின் புகழுக்குக் களங்கம் விளைக்கும் வகையில் எந்த நடவடிக்கையும் இருக்கக் கூடாது என்றும் அரசியல் அமைப்புச் சட்டம் கூறுகிறது. இது ‘சர்கார்’ படத்தில் அப்பட்டமாக மீறப்பட்டுள்ளது. ‘துப்பாக்கி’ படம் வெளியானபோது அம்மா அரசு சில சர்ச்சைக்குரிய காட்சிகளை நீதிமன்றம் மூலம் நீக்கியது. இதை மனதில் கொண்டு அம்மாவின் மீதிருந்த காழ்ப்பு உணர்ச்சியைக் கக்கியிருக்கிறார்கள். அம்மா உயிருடன் இருந்திருந்தால் இந்தத் துணிச்சல் வருமா? அ.தி.மு.க-வில் கடைசிவரை பதவி சுகத்தை அனுபவித்துவிட்டு, தி.மு.க-வுக்குத் தாவிய பழ.கருப்பையாவும் இதன் பின்னணியில் இருக்கிறார். இந்தப் படத்தின் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்காவிட்டால் நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுப்பதைத் தவிர வேறு வழியில்லை” என்கிறார். தமிழக அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயணனிடம் இதுகுறித்து ஆலோசனை செய்துள்ளார் சட்ட அமைச்சர் சண்முகம். அமைச்சர் ஜெயக்குமார், அன்பழகன் உள்ளிட்டவர்களும் சர்கார் படத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். மதுரையில் சர்கார்  வெளியான தியேட்டரை முற்றுகையிட்டார் ராஜன் செல்லப்பா.

‘துப்பாக்கி’ தூக்கிய ‘தளபதி’! - அலறும் அ.தி.மு.க., அதிரும் அரசியல் களம்

இன்னொரு பக்கம், “இந்தப் படத்தை ‘சன் பிக்சர்ஸ்’ தயாரித்துள்ளது. அதனாலேயே அ.தி.மு.க-வைத் தாக்கியிருக்கிறார்கள். இது தி.மு.க-வுக்கு ஆதரவான படம்” என்று சொல்கிறார்கள் அ.தி.மு.க-வினர். விஜய்க்கு நெருக்கமானவர்களோ, “அரசியலில் விஜய் இறங்குவது உறுதியாகிவிட்டது. அதனால்தான், ஆளும் கட்சியை நேரடியாக விமர்சிக்கும் காட்சிகளைத் துணிச்சலாக வைத்துள்ளார்” என்கிறார்கள். ஆளும் தரப்பு மட்டுமல்ல... ‘சர்கார்’ படக் காட்சிகள் மொத்த அரசியல் களத்திலும் தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கிறது. தி.மு.க கூட்டணிக் கட்சியினர், பி.ஜே.பி தரப்பினர், கமல், ரஜினி இவர்கள் அனைவருமே ‘விஜய் அரசியலில் இறங்கினால் சிதறும் தங்களது ஓட்டு வங்கியைச் சரிக்கட்ட என்ன செய்வது என்று திகைத்துப்போயிருக்கிறார்கள்.

இதுகுறித்து பேசும் ரஜினிக்கு நெருக்கமான வர்கள், “விஜய் அரசியலுக்கு வருவதால் எங்களுக்கு மறைமுகமாக சில பாதிப்புகள் இருக்கும்தான். குறிப்பாக, இளைஞர்கள் அவர் பின்னால் இருப்பது எங்களுக்கு மைனஸ். ஆனால், ரஜினிக்கு இருக்கும் செல்வாக்கை விஜய் உடைக்க முடியாது” என்கிறார்கள். கமல் தரப்பில், “விஜய் ரசிகர்களுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. படித்தவர் களும் மாற்றத்தை விரும்புபவர்களும் எங்களை ஆதரிப்பார்கள் ” என்கிறார்கள். “விஜய் அரசியலுக்கு வந்தால் தி.மு.க-வில் கணிசமான ஓட்டுகள் பிரியும். இதுபோன்ற நடிகர்களின் ரசிகர்கள் பலர் தி.மு.க-வில் பொறுப்பிலும் இருக்கிறார்கள். நடிகர்களே கட்சி ஆரம்பித்தால் அவர்கள் பின்னால் நிர்வாகிகள் சென்றுவிடுவார்கள் என்ற சந்தேகம் தி.மு.க-வுக்கு பலமாகவே உள்ளது” என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

விஜய் ரசிகர்களோ, ‘‘ஆட்சியாளர்களின் தவறான கொள்கைகளுக்கு எதிராக எங்கள் தளபதி துப்பாக்கியைப் போல சீற ஆரம்பித்திருக்கிறார். இதேபோல மற்ற கட்சிகளின் தவறுகளையும் கண்டிப்பாக விமர்சிப்பார்” என்கிறார்கள்.
அ.தி.மு.க தரப்பில் ஏற்கெனவே விஜய் அரசியலுக்கு வந்துவிடக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார்கள். அதை முன்வைத்தே இப்போதைய கொந்தளிப்புகள் வெளிப்படுகின்றன. இந்த விவகாரத்தில் இறுதி நிலவரமாக தயாரிப்பு தரப்பில் சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் சொல்கிறார்கள்.

நாட்டில் தீர்க்க வேண்டிய பிரச்னைகள் நிறைய இருக்கின்றன. இந்நிலையில், விஜய் பட விவகாரத்தில் மட்டுமே கவனம் செலுத்திக் கொண்டிருப்பது ஆட்சியாளர்களுக்கு அழகல்ல.

- அ.சையது அபுதாஹிர்

விஜய்க்கு செக் ரெடி!

‘ச
ர்கார்’ படத்தில் இவ்வளவு காட்டத்தை ஆளும் தரப்பே எதிர்பார்க்கவில்லை. இப்போது சட்டரீதியாக ‘சர்கார்’க்கு எப்படி செக் வைக்கலாம் என்று ஆளும் தரப்பில் ஆலோசித்துவருகிறார்கள். ‘சர்கார்’ ஓடிய திரையரங்குகளில் அ.தி.மு.க-வினர் போராட்டம், பேனர் கிழிப்பு என்று ஆவேசம் காட்டினார்கள். மதுரையில் மதியக் காட்சிகள் அவசரமாக ரத்துசெய்யப்பட்டன. இதையே சட்டம் - ஒழுங்கு பிரச்னையாகக் காட்டி படத்தைத் தடைசெய்யலாமா என்றும் ஒரு பேச்சு ஓடுகிறது. ஆனால், நீதித்துறை மூலம் தீர்வைத் தேடுவதுதான் சரியாக இருக்கும் என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் சொல்லியிருக்கிறார்கள். திரைப்படத்தில் ஊழல் ஒழிப்பு, நேர்மையான ஆட்சி என்று பேசும் விஜய்யின் பிம்பத்தை உடைப்பதற்கான வேலையையும் ஆளும் கட்சி கையில் எடுத்துள்ளது. விஜய்க்கு சொந்தமாக சென்னையின் மையப் பகுதியில் நான்கு மண்டபங்கள் உள்ளன. இந்த மண்டபங்களுக்கு முறையாக பார்க்கிங் வசதி இருக்கிறதா, வரிகள் முறையாக செலுத்தப்பட்டுள்ளனவா என்பதை விசாரிக்கச் சொல்லியிருக்கிறார்கள். விரைவில் விஜய்க்கு இதுகுறித்து நோட்டீஸ் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. விஜய்யின் சொத்துபட்டியலை கையில் எடுத்து, அதை பூதாகரப்படுத்தவும் ஒரு திட்டம் இருக்கிறது. விஜய்யின் மனைவி சங்கீதா இங்கிலாந்து பாஸ்போர்ட் வைத்திருந்தவர். அவர் இந்திய பாஸ்போர்ட் இப்போது வைத்துள்ளாரா, அல்லது இங்கிலாந்து பாஸ்போர்ட்டில் இருக்கிறாரா என்று கண்காணிக்க உத்தரவு பறந்துள்ளது.