Published:Updated:

“இரஞ்சித் சினிமாவிலிருந்து விலகி அரசியலுக்கு வந்து பேசட்டும்!”

“இரஞ்சித் சினிமாவிலிருந்து விலகி அரசியலுக்கு வந்து பேசட்டும்!”
பிரீமியம் ஸ்டோரி
News
“இரஞ்சித் சினிமாவிலிருந்து விலகி அரசியலுக்கு வந்து பேசட்டும்!”

தடதடக்கும் தலைவர்கள்

‘வரும் நாடாளுமன்றத் தேர்தலில், தமிழகத்தில் உள்ள தலித் கட்சிகள் எல்லாம் ஒன்றிணைந்து, ஏழு தனித் தொகுதிகளிலும் போட்டியிட வேண்டும்...’ என்று திரைப்பட இயக்குநர் பா.இரஞ்சித் பேசிய பேச்சு, தமிழக அரசியல் களத்தில் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. அவரது பேச்சுக்கு ஆதரவாகவும் எதிராகவும் பெரும் விவாதம் எழுந்துள்ளது. இரஞ்சித் பேச்சு குறித்து கட்சிகள் மற்றும் அமைப்புகளின் தலைவர்கள் சிலரிடம் கருத்து கேட்டோம்.

ஜான் பாண்டியன், (தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர்):

‘‘திரைப்பட இயக்குநரான பா.இரஞ்சித், மக்களுக்கு வேண்டிய நல்ல கருத்துகளைத் திரைப்படங்களின் மூலமாகவே எடுத்துச் சொல்வதுதான் நல்லது. மற்றபடி, இப்படி அவர் அரசியல் பேசுவது நல்லதல்ல. வேண்டுமானால், சினிமாத் துறையை விட்டுவிட்டு அரசியலுக்கு வந்து அவர் பேசட்டும். அவர் கூறுவதுபோல பட்டியலினத் தலைவர்கள் அனைவரும் ஒரே அணியாக இணைவதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டால், இங்குள்ள திராவிடக் கட்சிகளே அந்த முயற்சியை உடைத்தெறிந்து விடும். எனவே, ஒடுக்கப்பட்ட மக்கள் ஒன்றுசேர வேண்டும் என்ற அவரது கருத்து, நடைமுறை அரசியலில் சாத்தியமில்லாதது.’’

“இரஞ்சித் சினிமாவிலிருந்து விலகி அரசியலுக்கு வந்து பேசட்டும்!”

செ.கு.தமிழரசன், (இந்தியக் குடியரசுக் கட்சித் தலைவர்):

‘‘பா.இரஞ்சித் எழுப்பிய குரலானது, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்குரல். விளிம்புநிலை மக்களின் அழுகைக்கு ஆறுதலோ, தேறுதலோ இல்லாத இன்றைய சூழ்நிலையில், அவர் எழுப்பியிருக்கும் இந்தக் கோரிக்கை, பலத்த விவாதத்தை உருவாக்கியிருக்கிறது. அவரது இந்தக் கருத்தை, பட்டியல் சமூகத்து இளைஞர்களும் ஆதரிக்கிறார்கள். எனவே, அவரது குரல் யாருக்குச் சாதகம், யாருக்குப் பாதகம் என்ற தேர்தல் கூட்டணிக் கணக்கையெல்லாம் நாங்கள் பார்த்துக்கொண்டிருக்கத் தேவையில்லை.

தேர்தல் களத்தில், எத்தனையோ முறை சுயேச்சை வேட்பாளர்களும், பட்டியல் சமூக அமைப்பினரும்கூட வெற்றி பெற்றிருக்கிறார்கள். அதனால், பா.இரஞ்சித் கூறுகிறபடி பட்டியல் சமூகத் தலைவர்கள் ஒன்றிணைந்து தேர்தல் களத்தைச் சந்திக்கும்போது, வெற்றி சாத்தியப்படும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.’’

சாத்தை பாக்கியராஜ், (மக்கள் தேசம் கட்சித் தலைவர்):

‘‘ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்துக்காகக் களத்தில் நின்று போராடுபவர்கள் நாங்கள். ஆனால், திரைத் துறையில் பணம் சம்பாதிக்கும் நோக்குடன் செயல்பட்டுக்கொண்டிருக்கும் பா.இரஞ்சித், குறிப்பிட்ட ஒரு சமூகத்தினரை மையப்படுத்தி அரசியலிலும் தலைவராக வளர்ந்துவிட முடியும் என்ற குறுகிய கண்ணோட்டத்தில் இருக்கிறார். படுகொலை செய்யப்பட்ட ராஜலட்சுமியின் தந்தை, எங்கள் கட்சியின் கிளைத் தலைவர். ‘குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கும்வரை ஓயமாட்டோம்’ என்ற உறுதியுடன், இன்றைக்கும் எங்கள் கட்சி சார்பாக நாங்கள் களத்தில் போராட்டம் நடத்திவருகிறோம். ஆனால், ரஞ்சித் போன்றவர்கள் இந்த விவகாரத்தையே வார்த்தைகளாக எடுத்துச்சொல்லி அரசியல் செய்ய நினைக்கிறார்கள்.’’ 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
“இரஞ்சித் சினிமாவிலிருந்து விலகி அரசியலுக்கு வந்து பேசட்டும்!”

ஆம்ஸ்ட்ராங், (பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர்):

‘‘பா.இரஞ்சித் கூறுவது தனி மனித அரசியலுக்கானது அல்ல... ஒட்டுமொத்தச் சமூகத்துக்கானது. ஆனால், ‘இந்த முயற்சி பட்டியல் சமூக மக்களைத் தனிமைப்படுத்திவிடும்’ என்று சிலர் கூறுகிறார்கள். இப்போதே அந்த மக்கள் தனிமைப்படுத்தப்பட்டுத்தானே கிடக்கிறார்கள்? நடைமுறை அரசியலில், ‘இது சாத்தியமற்றது’ என்கிறார்கள். உத்தரப் பிரதேசத்தில், மாயாவதி இதைச் சாத்தியப்படுத்தினார்தானே! தாழ்த்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள், சிறுபான்மையினர் மற்றும் பிராமணர்கள் என அனைவரின் ஓட்டுகளையும் வாங்கி மாயாவதி முதல்வர் ஆனது வரலாறு. ஆக, மக்கள் ஏற்றுக்கொள்ளும்படிச் சமத்துவம், மனிதநேயத்தை முன்வைத்துப் பரப்புரை செய்தால், தமிழகத்திலும் இது சாத்தியப்படும். வர்ணாசிரம தர்மத்தை இரண்டாயிரம் வருடங்களுக்கும் மேலாக ஏற்றுக்கொள்ளாத மக்கள்தான், தீண்டத் தகாதவர்களாகச் சித்திரிக்கப்பட்டுள்ளனர். எனவே, பட்டியல் சமூகத் தலைவர்கள் ஒன்றிணைய வேண்டும் என்ற குரலே, பி.ஜே.பி-க்கு எதிரானதுதான்.’’

புனித பாண்டியன், (‘தலித் முரசு’ இதழின் ஆசிரியர்):

‘‘பா.இரஞ்சித்தின் இந்தக் கருத்து அபத்தமானது. அவர் சொல்கிறபடியே தனித் தொகுதிகளில், பட்டியல் சமூகக் கட்சிகள் ஒன்றிணைந்து ஒரு வேட்பாளரை நிறுத்தி, தொகுதியில் உள்ள அந்தச் சமூக மக்கள் அனைவரும் வாக்களித்தாலும் அவரால் ஜெயிக்க முடியாது. இன்றையத் தேர்தல் அரசியலில், ஒரு சாதியை மட்டுமே முன்னிறுத்தி வெற்றி காண்பது முடியாத காரியம். அடுத்ததாக, தனித் தொகுதிகளைத் தவிர்த்து ஏனைய தொகுதிகளில் உள்ள பட்டியல் சமூக மக்கள் யாருக்கு வாக்களிப்பார்கள் என்ற கேள்விக்கு இவர்களிடம் பதில் இல்லை. உ.பி-யில் மாயாவதி இதைச் சாத்தியப்படுத்தினார் என்பது தவறான கருத்து. அவர், அங்குள்ள பட்டியல் சமூக இயக்கங்களுடன் கூட்டணி அமைத்து வெற்றி பெறவில்லை. பெரும்பான்மை மக்களின் ஆதரவுடன்தான் வெற்றியைச் சாத்தியப்படுத்தினார்.’’

- த.கதிரவன்