Published:Updated:

நடிகர் பிரகாஷ் ராஜ் அரசியல் களத்தில் குதிப்பதற்குக் காரணம் என்ன?

முன்னாள் முதல்வர்களான மு.கருணாநிதி, ஜெ.ஜெயலலிதா ஆகியோரின் மரணத்துக்குப் பிறகு தமிழகத்தில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதோடு, எண்ணற்ற மாற்றங்களும் அரங்கேறிவருகின்றன.

நடிகர் பிரகாஷ் ராஜ் அரசியல் களத்தில் குதிப்பதற்குக் காரணம் என்ன?
நடிகர் பிரகாஷ் ராஜ் அரசியல் களத்தில் குதிப்பதற்குக் காரணம் என்ன?

``இப்போதிருக்கும் பெரிய அசுரன் பி.ஜே.பிதான். அவர்களை வீழ்த்துவதுதான் என் லட்சியம்" என்று கடந்த மே மாதம் கர்நாடகத் தேர்தலின்போது சொல்லியிருந்த நடிகர் பிரகாஷ் ராஜ், இப்போது அதற்கான களத்திலேயே இறங்கிவிட்டார். 

இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் வரவிருக்கிறது. இதையொட்டி, தேசியக் கட்சிகள், மாநிலக் கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகின்றன. மத்தியில் ஆளும் பி.ஜே.பி-யை வீழ்த்துவதற்காக காங்கிரஸ் கட்சி, பல முக்கியக் கட்சிகளுடன் கூட்டணி அமைத்துவருகிறது. இதுதவிர, மூன்றாவது அணி அமைக்கவும் சில கட்சிகள் முயற்சி செய்து வருகின்றன. பி.ஜே.பி-யும் கூட்டணிக்கான பேச்சுவார்த்தைக்குத் தயாராகிவருகிறது. சமீபத்தில் கூட்டணி குறித்துப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ``தமிழகத்தில் கூட்டணிக்கான கதவுகள் திறந்தே இருக்கின்றன. கூட்டணியைப் பொறுத்தவரை வாஜ்பாய் காட்டிய வழியை பி.ஜே.பி. பின்பற்றும். கூட்டணி அமைப்பது குறித்து திறந்த மனதுடன் இருக்கிறோம். மக்களுடன் அமைக்கப்படும் கூட்டணியே வெற்றிபெறும்" என்றார். இப்படி, அனைத்துக் கட்சிகளும் கூட்டணி பற்றிய வேலைகளில் இருக்கும்சூழலில், தமிழகம் மட்டுமல்லாது, பிற மாநிலங்களிலும் நடிகர்கள் அரசியலில் குதிக்க ஆரம்பித்துள்ளனர். 

முன்னாள் முதல்வர்களான மு.கருணாநிதி, ஜெ.ஜெயலலிதா ஆகியோரின் மரணத்துக்குப் பிறகு தமிழகத்தில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதோடு, எண்ணற்ற மாற்றங்களும் அரங்கேறிவருகின்றன. இந்தச் சூழ்நிலையில்தான் நடிகர்கள் ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் அரசியல் களத்தில் குதித்து, அதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். ரஜினிகாந்த், இன்னும் கட்சியே ஆரம்பிக்காதபோதும், தன்னுடைய ரசிகர்களை அதற்கான வேலைகளில் ஆயத்தப்படுத்தி வருகிறார். கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கட்சி ஒன்றையும் ஆரம்பித்து, ஒவ்வோர் ஊராய்ச் சென்று மக்களைச் சந்தித்துவருகிறார். இந்த நிலையில், நடிகர் பிரகாஷ் ராஜும் அரசியல் களத்தில் குதித்திருப்பது கர்நாடக மாநிலத்தில் புயலைக் கிளப்பியிருக்கிறது. 

இதுகுறித்து கடந்த புத்தாண்டு தினத்தில் அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ``புதிய மாற்றத்துக்கான நேரம் இது. அதிக பொறுப்புகள் கூடியுள்ளன. உங்கள் அனைவரின் ஆதரவுடன் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட உள்ளேன். தொகுதி விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும். நாடாளுமன்றத்திலும் மக்களுக்கான அரசு வேண்டும்" எனப் பதிவிட்டிருந்தார். இதற்கான களத்திலும் அவர் தற்போது குதித்துள்ளார். அவருடைய அரசியல் பயணத்துக்கு கமல்ஹாசன் உட்பட, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், குஜராத்தைச் சேர்ந்த ஜிக்னேஷ் மேவானி ஆகியோரும் வாழ்த்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

பிரகாஷ் ராஜ் அரசியல் களத்தில் குதிப்பதற்கு, கவுரி லங்கேஷ் படுகொலையே காரணம் என்று சொல்லப்படுகிறது. இதுகுறித்து ஒருமுறை அவரே, ``எழுத்தாளர் கவுரி லங்கேஷின் மரணம் என்னை மாற்றியதென்றால், ஆம்... கவுரி மரணம்தான் என்னை மாற்றியது. மாற்றியது என்பதைவிட என்னை உலுக்கியது. அவர், கேள்வி கேட்டுக்கொண்டே இருந்தார். அவரின் குரல் அடங்கியபோது, அது என்னைக் குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கியது. நாம் எல்லோரும் அவரைத் தனியாகப் போராட வைத்துவிட்டோம்" என்றார். 

``இந்த உறுத்தல்தான் அவரை, பி.ஜே.பி அரசை எதிர்க்கச் செய்தது. அதற்காகவே, அந்த அரசை எதிர்த்து தொடர்ந்து குரல்கொடுத்ததோடு, கர்நாடகத் தேர்தலில் எதிர்ப் பிரசாரமும் செய்தார்" என்கின்றனர், அவருடைய ஆதரவாளர்கள். இதுகுறித்து ஒருமுறை பேசிய பிரகாஷ் ராஜ், ``இப்போது நான் பேச ஆரம்பித்துள்ளேன். ஆனால், என் குரலை இப்போது நிறுத்தப் பார்க்கிறார்கள். இதைச் செய்வது வேறு யாருமல்ல... பி.ஜே.பி. மட்டும்தான்" என்றார், தைரியமாக. 

``அந்தத் தைரியம்தான் அவரை, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் முழு அரசியல்வாதியாக ஆக்கப்போகிறது" என்கின்றனர், அவரது ரசிகர்கள். அவருடைய அரசியல் பிரவேச அறிவிப்புக்குப் பதிலளித்த அவரது ரசிகர்கள், ``உங்களை நாடாளுமன்ற உறுப்பினராகப் பார்க்கக் காத்திருக்கிறோம்" என்று பதிவிட்டனர். இதைத் தொடர்ந்து அரசியல் ஆளுமைகளைச் சந்தித்துவருகிறார், பிரகாஷ் ராஜ். இந்த நிலையில் சமீபத்தில் அவர் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலைச் சந்தித்து ஆலோசனை நடத்தியது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்படுகிறது. இதேபோல், கமல்ஹாசனும் மக்கள் நீதி மய்யம் ஆரம்பிப்பதற்கு முன்னால், பல அரசியல் ஆளுமைகளைச் சந்தித்தது குறிப்பிடத்தக்கது. 

நாடாளுவதற்கு இன்னொரு நடிகர் தயாராகிவிட்டார்.