அரசியல்
அலசல்
சமூகம்
Published:Updated:

எல்லோரும் எம்.ஜி.ஆர் ஆகிவிட முடியாது!

எல்லோரும் எம்.ஜி.ஆர் ஆகிவிட முடியாது!
பிரீமியம் ஸ்டோரி
News
எல்லோரும் எம்.ஜி.ஆர் ஆகிவிட முடியாது!

மு.தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ., பொதுச்செயலாளர், மனிதநேய ஜனநாயக கட்சி

எல்லோரும் எம்.ஜி.ஆர் ஆகிவிட முடியாது!

குழம்பிய குட்டையாகி இருக்கிறது, இன்றைய தமிழக அரசியல் சூழல். முன்னாள் முதல்வர்களான கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரின் மறைவு, தமிழக அரசியலில் வெற்றிடங்களை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் தமிழக அரசியலைக் கடந்து, தேசிய அரசியலையும் தீர்மானிக்கும் சக்திகளாகத் திகழ்ந்தனர். இப்போதைய அரசியலில் போர்க்கருவிகளாக இருக்கவேண்டிய அவர்கள், நம்மிடையே இல்லாதது வேதனையளிக்கிறது.

‘அவர்கள் இல்லை என்றால், அரசியலே இல்லையா...’ என்று கேட்கலாம். காலம் புதியவைகளைப் பிரசவிக்கக்கூடியது. அதன் வழியான மாற்றங்கள் தவிர்க்க முடியாதவை. அரசியல் என்பதே நிகழ்வுகளின் விளையாட்டு. அது, பழையவர்களை வலிமைப்படுத்தும்; புதியவர்களை அறிமுகப்படுத்தும்; சிலரைப் புரட்டிப் போடும். இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், அ.ம.மு.க துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், பா.ம.க இளைஞரணி தலைவர் மருத்துவர் அன்புமணி,

எல்லோரும் எம்.ஜி.ஆர் ஆகிவிட முடியாது!

ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் போன்ற ஆளுமைகள் களமாடுகிறார்கள். தத்துவங்களை முன்வைத்துச் செயல்படும் இடதுசாரி தோழர்களும் செங்கொடிகளோடு அணிவகுக்கிறார்கள். சினிமா பிரபலங்களும் கண்சிமிட்டுகிறார்கள். இவர்களில் எதிர்கால அரசியல் தலைமை யார் என்பது, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தெளிவாகிவிடும். இதில், முதல் இரண்டு இடங்களைப் பெறும் கட்சிகள்தான், தமிழக அரசியலின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும். அதன் தலைவர்கள் தனிப்பெரும் சக்திகளாக உருவெடுப்பார்கள். இதில் மூன்றாவது இடம் பெறுபவர்களும், முதல் இரு கட்சிகளின் தலைமையைச் சுற்றிவரும் சூழலே உருவாகும்.

மூன்றாம் அணிமீதான நம்பிக்கை, மக்கள் நலக் கூட்டணியோடு முடிந்துவிட்டது. அவர்கள் நீண்ட எதிர்பார்ப்பின் வடிவமாகத் திரண்டார்கள். செல்வாக்குமிக்க கட்சிகள், ஆளுமைமிக்க தலைவர்கள் ஒன்றுபட்டு அவர்கள் பலம்காட்டியும்கூட, அவர்களை மக்கள் ஆதரிக்காததும், சில தொகுதிகளில்கூட வெற்றிகளை வழங்காததும் ஏன் என்பது ஆய்வுக்குரியது. அதுபோல், ‘கோடம்பாக்கம்’ அரசியலையும் தமிழக மக்கள் ஆதரிக்கவில்லை. எல்லோரும் எம்.ஜி.ஆர் ஆக முடியாது என்பதையும் நிகழ்கால அரசியல் களம் உணர்த்திவருகிறது. அவர்களால் அவர்களது ரசிகர்களை மட்டுமே ஈர்க்க முடியும்.

எல்லோரும் எம்.ஜி.ஆர் ஆகிவிட முடியாது!

திராவிடம், சமூகநீதி, கம்யூனிஸம், மதச்சார்பின்மை, தமிழ்த் தேசியம், மாநிலத் தன்னாட்சி போன்ற தமிழக அரசியலோடு தொடர்புடைய தத்துவங்களின்மீது இளைய தலைமுறை அக்கறைகாட்டும் புதிய சூழல், இருள்கவ்வும் அரசியலில் வெளிச்சம் தருகிறது. அரசியல்வாதிகள் மீதான வெறுப்பில், ‘நோட்டா’வை நாடும் மக்களையும், சமூக இணையதளங்களில் எல்லாவற்றையும் விமர்சிக்க வேண்டும் என்று நினைக்கும் இளைய தலைமுறை யினரையும் ஒழுங்குப்படுத்தி, அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டுவது காலத்தின் அவசியமாகும்.

எல்லோரும் எம்.ஜி.ஆர் ஆகிவிட முடியாது!

கடந்த ஈராண்டுகளாகத் தமிழகத்தில் மண்ணுரிமை போராட்ட அரசியல், வலிமைபெற்று வருகிறது. மீத்தேன் - ஹைட்ரோ கார்பன், ஸ்டெர்லைட் ஆலை விவகாரம், நியூட்ரினோ திட்டம் ஆகிய பிரச்னைகள் அனைத்துத் தரப்பு மக்களையும் கிளர்ந்தெழச் செய்கிறது. அதுபோல் மாணவர்கள், இளைஞர்கள் இடையே, விவசாயிகள்மீது பரிவு ஏற்பட்டிருக்கிறது. மொத்தத்தில் இங்கே, ஒரு விழிப்பு உணர்வு அரசியல் உருவாகி வருவதை எல்லா அரசியல் தலைவர்களும் உற்றுநோக்குகிறார்கள். சமூக இணையதளங்களில் தரமான அரசியலுக்கும் - தரகு அரசியலுக்கும் உள்ள இடைவெளி மக்களால் அலசப்படுகிறது. அதுபோல் மாற்றங்கள் அரசியல்வாதிகளிடம் ஏற்பட வேண்டும் என்பதுபோல, பொது மக்களிடமிருந்தும் சம அளவில் உருவாக வேண்டும். இதைத்தான் சிங்கப்பூரில் லீக் வான் யூ-வும், மலேஷியாவில் மகாதீர் முகம்மதுவும் எதிர்பார்த்துச்  செயல் பட்டார்கள். இருவருமே வெற்றிபெற்றார்கள். இதைத்தான் பேரறிஞர் அண்ணா, ‘வீடு எப்படியோ, அப்படித்தான் நாடும்’ என்றார்.

மக்களிடம் ஓர் அரசியல் சோர்வு ஏற்பட்டுள்ளதை அரசியல் தலைமைகள் உணரவேண்டும். அதைப்போக்கிட அரசியலில் ஒரு மறுமலர்ச்சி தேவைப்படுகிறது. புத்தாக்கச் சிந்தனைகள் விதைக்கப்படவேண்டியிருக்கிறது. அந்த வகையில், தத்துவங்களை உள்வாங்கி, தொலைநோக்குடன் சிந்திக்கக்கூடிய, ஒரு சமூகநீதி ஆளுமையே தமிழகத்தை ஆள வேண்டும். மக்கள் அதைத்தான் எதிர்பார்க்கிறார்கள்!

தொகுப்பு : த.கதிரவன்