அரசியல்
அலசல்
சமூகம்
Published:Updated:

ரஜினியின் 30 ஆண்டு அரசியல்! - குட்டிக்கதை முதல் கூட்டணி வரை!

ரஜினியின் 30 ஆண்டு அரசியல்! - குட்டிக்கதை முதல் கூட்டணி வரை!
பிரீமியம் ஸ்டோரி
News
ரஜினியின் 30 ஆண்டு அரசியல்! - குட்டிக்கதை முதல் கூட்டணி வரை!

ரஜினியின் 30 ஆண்டு அரசியல்! - குட்டிக்கதை முதல் கூட்டணி வரை!

ரஜினியின் 30 ஆண்டு அரசியல்! - குட்டிக்கதை முதல் கூட்டணி வரை!

‘‘ஒரு சாமியாரிடம் குறும்புக்கார இளைஞன் ஒருவன், அவரை மடக்குவதாக நினைத்து, ‘என் கைக்குள் ஒரு பட்டாம்பூச்சி இருக்கிறது. அது, உயிருடன் இருக்கிறதா... இல்லையா எனச் சொல்லுங்கள்’ என்று கேள்வி எழுப்பினான். செத்துவிட்டது என்று சொன்னால், பட்டாம்பூச்சியைப் பறக்கவிட்டு விடுவான். உயிருடன் இருக்கிறது என்றால், கசக்கிக் கொன்றுவிடுவான். யோசித்த சாமியார், ‘எல்லாம் உன் கையில்தான் இருக்கிறது’ என்றார். இளைஞன் கப்சிப். அதுமாதிரி நல்லாட்சி தருவதும் தராததும் ஆட்சியாளர்கள் கையில்தான் இருக்கிறது. அவர்கள் நல்லாட்சி கொடுப்பார்கள் என்கிற நம்பிக்கையோடுதான் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும்.’’ - 1989-ம் வருடம் மதுரையில் பெப்ஸி குளிர்பான அறிமுக விழாவில், நடிகர் ரஜினிகாந்த் சொன்ன இந்தக் குட்டிக்கதைதான், அவர் பேசிய முதல் அரசியல் பேச்சு. முப்பது ஆண்டுகள் ஓடிவிட்டன. அரசியல் என்னும் மெகா மாரத்தான் ஓட்டத்தில் எவ்வளவு தூரம் கடந்திருக்கிறார் ரஜினி? 

1984 - 1996 காலகட்டத்தில் திருச்சி நாடாளுமன்ற எம்.பி தொகுதியில் நான்கு முறை ஜெயித்தவர் அடைக்கலராஜ். ரஜினியின் நீண்டகால நண்பரும், காங்கிரஸ் புள்ளியுமான அடைக்கலராஜுக்கு ஆதரவாக ஒட்டுப்போடச் சொல்லி, திருச்சி வாக்காளர்களுக்குக் கடிதம் எழுதிக்கொடுப்பார் ரஜினி. அதை அடைக்கலராஜ் நோட்டீஸ், போஸ்டர் போட்டு மக்களின் கவனத்தை ஈர்ப்பார். இப்படித்தான் ரஜினி, அரசியலில் மெள்ள மெள்ளத் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார். இப்படிக் கணக்குப் போட்டால்... ரஜினி அரசியலுக்கு வந்து 30 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால், அவர் தனது புதுக் கட்சியை அதிகாரபூர்வமாக அறிவித்தது 2017, டிசம்பர் 31-ம் தேதிதான்.

இந்த 14 மாதங்களில், ரஜினி மக்கள் மன்றம் சுறுசுறுப்பாக இயங்குகிறது. ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில் பூத் கமிட்டிகள் அமைக்கும் அசைன்மென்ட் இலக்கு 68,000. தற்போதைக்கு 50,000 பூத் கமிட்டிகள் ரெடி. ஒரு பூத் கமிட்டிக்கு 30 உறுப்பினர்கள். சுமார் ஒன்றரை கோடி உறுப்பினர்கள், ரஜினியின் கம்ப்யூட்டரில் பதிவாகியுள்ளனர். சமூக வலைதளங்களில் ரஜினியை விமர்சிப்பவர்களுக்குச் சுடச்சுட பதிலடி கொடுத்துவருகிறது மன்றத்தின் ஐ.டி பிரிவு. ரஜினி பெயரில் டி.வி சேனல் ஆரம்பிக்க விண்ணப்பித்திருக்கிறார்கள். இளைஞர் அணி, மகளிர் அணி.. என எட்டு அணிகள் உருவாக்கப்பட்டு, மாவட்ட அளவில் செயல்பட்டுவருகின்றன. இவ்வளவு நடந்தும், ரஜினி அரசியலுக்கு வருவாரா அல்லது தேர்தல் நேரத்தில் வாய்ஸ் மட்டும்தான் தருவாரா என்ற கேள்விக்கு மட்டும் தெளிவான விடையில்லை.

ரஜினியின் 30 ஆண்டு அரசியல்! - குட்டிக்கதை முதல் கூட்டணி வரை!

1996-ல் ‘பாட்ஷா’ படத்தைத் தயாரித்தவர் ஆர்.எம்.வீரப்பன். ரஜினியின் அரசியல் குரு என்றே இவரைச் சொல்லலாம். ஜெயலலிதா அமைச்சரவையிலும் அமைச்சராக இருந்தவர் ஆர்.எம்.வீ. ஜெயலலிதா ஆட்சி நடந்தபோதுதான், ‘பாட்ஷா’ பட 100-வது நாள் வெற்றிவிழா நடந்தது. மேடையில் பேசிய ரஜினி, சினிமா இயக்குநர் மணிரத்னம் வீட்டில் வெடிகுண்டு வீசப்பட்டதைக் கண்டித்து குரல் கொடுத்தார். அது, ஜெயலலிதாவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியதால், அமைச்சரவையில் இருந்து ஆர்.எம்.வீ-யைக் கழற்றிவிட்டார். தன்னால்தான், அவருக்குப் பதவிபோனதாக வருத்தப்பட்ட ரஜினி, அவரை நேரில் சந்தித்துப் பேசினார். இது, ஆர்.எம்.வீ-யை ஆதரித்த அ.தி.மு.க. பிரமுகர்களுக்கு உற்சாகத்தைக் கொடுத்தது. தற்போது அ.தி.மு.க-வில் இருக்கும் சென்னை மாநகர முன்னாள் மேயர் சைதை துரைசாமி, அ.ம.மு.க வடசென்னை மாவட்டச் செயலாளர் வெற்றிவேல், தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தென்சென்னை மாவட்டத் தலைவர் கராத்தே தியாகராஜன், தி.மு.க-வின் ஜெகத்ரட்சகன் போன்ற சிலர், அப்போது ஆர்.எம்.வீ அணியில் இருந்தார்கள். ஆர்.எம்.வீ., ஏ.சி. சண்முகம் இருவரும் தனித்தனியாக அரசியல் கட்சிகளை நடத்திவருகிறார்கள். தி.மு.க-வில் இருந்து நீக்கப்பட்ட மு.க.அழகிரியுடன் அடிக்கடி பேசி வருகிறார், ரஜினி. தமிழக மக்களின் அரசியல் ‘பல்ஸ்’ தெரிந்த மேலும் பலர், வெவ்வேறு கட்சியில் இருக்கிறார்கள். இவர்களில் பலரும் ரஜினி முகாமுக்குத் தாவ வாய்ப்புகள் உண்டு. இது, ரஜினிக்கு நன்றாகவே தெரியும்.

கிருஷ்ணகிரி மாவட்ட ரஜினி மக்கள் மன்றச் செயலாளர் மதியழகன், தி.மு.க-வுக்குத் தாவிவிட்டார். வடசென்னையின் துடிப்பான மன்றத்து இளைஞர் மதன், பெருங்கூட்டத்துடன் அ.தி.மு.க-வுக்குத் தாவிவிட்டார். இப்படியே போனால் ரஜினியின் காலம் கடந்த அரசியல் நடவடிக்கை பலன் தருமா? அவரை நம்பி வந்தவர்கள் நட்டாற்றில் நிற்க வேண்டியதுதானா? என்கிற கேள்விகள் எழுகின்றன. ரஜினி அரசியலை உற்றுநோக்கும் அரசியல் விமர்சகர்கள் என்ன சொல்கிறார்கள்...

“அ.தி.மு.க-வில் ஜெயலலிதாவுக்குப் பிறகு தலைமையிடம் காலியாக இருக்கிறது. அந்தக் கட்சிக்கென்று லட்சக்கணக்கான தொண்டர்கள் இருக்கிறார்கள்.

அந்தக் கட்சியில் யார் தலைமை ஏற்பது என்பதில் பல்வேறு குளறுபடிகள். ஜெயலலிதாவுக்கு ஸ்லோ பாய்சன் தரப்பட்டதா என்கிற சந்தேகம் கட்சியின் பலர்மீது பொதுமக்களுக்கு இருக்கிறது. அந்தக் கட்சியின் முக்கியத் தலைவர்கள் இன்றும் ரஜினியுடன் தொடர்பில் இருக்கிறார்கள். ரஜினியின் மக்கள் மன்றத்தில் பெருங்கூட்டம் இருக்கிறது. இந்தத் தரப்பினரையும், அ.தி.மு.க தரப்பினரையும் ஒருங்கிணைத்து அரசியல் முடிச்சுப்போட பி.ஜே.பி. முயற்சி செய்கிறது. ரஜினியை அ.தி.மு.க-வின் முக்கியப் பொறுப்பில் அமரவைப்பதற்குக் காய் நகர்த்தும் வேலையில் இறங்கியதும் தனிக்கதை. அதன் ஒருகட்டம்தான்... ஏ.சி.சண்முகம் கல்லூரியில் எம்.ஜி.ஆர் சிலையை ரஜினி திறந்துவைத்தது.

ரஜினியின் 30 ஆண்டு அரசியல்! - குட்டிக்கதை முதல் கூட்டணி வரை!

அ.தி.மு.க-வையும், ரஜினியையும் மையமாக வலம்வரும் சீனியர் ஐ.பி. (மத்திய உளவுத்துறை) அதிகாரியிடம் இதற்கான பூர்வாங்கப் பணியைச் செய்யும்படி டெல்லி பி.ஜே.பி மேலிடம் ஒப்படைத்திருப்பதாகவும் பேச்சு இருக்கிறது.  இந்த வேலை பாக்கியிருப்பதால், அரசியல் கட்சி அறிவிப்பை ரஜினி தள்ளிப்போட்டு வருகிறார்” என்றவர்களிடம், இடைமறித்து, ‘‘ ‘ஐந்து மாநிலத் தேர்தல் முடிவு பிரதமர் மோடிக்குப் பின்னடைவு’ என்று ரஜினி கருத்து சொல்லியிருக்கிறாரே... அப்படியானால், பி.ஜே.பி-க்கும் அவருக்கும் உறவு சரியில்லை என்றுதானே அர்த்தம்” என்று கேட்டோம். ‘‘டெல்லி பி.ஜே.பி அரசியலில் ரஜினி ஆதரிப்பது மத்தியத் தரைவழிப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தரப்பைத்தான். ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அடுத்த பிரதமர் சாய்ஸ் என்று கூறப்படும் நிதின் கட்கரியை, கடந்த காலங்களில் பலமுறை ரஜினி சந்தித்துள்ளார். பி.ஜே.பி-யில் நிதின் கட்கரிக்குச் செல்வாக்குக் கூடும்போது, இங்கே ரஜினி அரசியல் பிரவேசம் நடக்கும். பொறுத்திருந்து பாருங்கள்’’ என்கின்றனர்.

‘‘நடிகர் ரஜினிகாந்த், அரசியலில் நுழைவது மக்களுக்குச் சேவையாற்றவே தவிர, பணம் சம்பாதிக்க அல்ல என்று என்னிடம் பலமுறை கூறியுள்ளார். கோதாவரி மற்றும் காவிரி நதிகளை இணைப்பது, ஊழலற்ற வெளிப்படையான ஆட்சி தருவது உள்ளிட்டவை அவரது உறுதிமொழிகளில் முக்கிய இடம் பிடிக்கும்’’ என்கிறார் காந்திய மக்கள் இயக்க நிறுவனர் தமிழருவி மணியன்.

தற்போது தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தென்சென்னை மாவட்டத் தலைவராக இருக்கும் கராத்தே தியாகராஜன், கடந்த பல ஆண்டுகளாக ரஜினியின் அரசியல் பயணத்தில் உடன் இருப்பவர். ‘‘தமிழகத்தின் ஜாம்பவான் கட்சிகளான அ.தி.மு.க., தி.மு.க இரண்டையும் கண்களில் விரலைவிட்டு ஆட்டியவர் ரஜினிகாந்த். இதற்கு உதாரணமாக, பல்வேறு அரசியல் நிகழ்வுகளை என்னால் சொல்லமுடியும். 1991-1996 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில், முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் கொடுங்கோல் ஆட்சியை, அடுத்துவந்த தேர்தலில் தொடரவிடக் கூடாது என்று, ரஜினி சபதமே செய்தார். அடுத்த தேர்தல், 1996-ல் வந்தது. மத்தியில் காங்கிரஸ் தலைமையில் பிரதமராக இருந்தவர் நரசிம்ம ராவ். தமிழகத் தேர்தலில் காங்கிரஸுடன் ஜெயலலிதா கூட்டணி அமைக்க முடிவாகியிருந்த நேரம். அப்போது ரஜினிகாந்த் டெல்லிக்குப் போய் நரசிம்ம ராவைச் சந்தித்துப் பேசினார். ஆனால், இவர் சொன்னது எடுபடவில்லை. ரஜினியின் எண்ணத்தையே அப்போதைய காங்கிரஸ் தலைவர் மூப்பனார், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் போன்ற பலரும் ஆதரித்தனர். ஆனால், காங்கிரஸ் மேலிடம் ஏற்றுக்கொள்ளாததால், த.மா.கா என்கிற பெயரில் புதிய கட்சி உருவானது. அப்போது ரஜினி, அமெரிக்காவுக்குப் போயிருந்தார். அவர் வந்தபோது, விமான நிலையத்தில் நானும் வேறு சிலரும் சந்தித்து இங்குள்ள நிலவரத்தை எடுத்துச் சொன்னோம். ‘டெல்லியை விலைகொடுத்து வாங்கலாம். தமிழக மக்களை வாங்கமுடியாது’ என்று மீடியாக்களிடம் ரஜினி சொன்னார்.

ரஜினியின் 30 ஆண்டு அரசியல்! - குட்டிக்கதை முதல் கூட்டணி வரை!

அந்தத் தேர்தலில், தி.மு.க - த.மா.கா  கூட்டணி அமோகமாக ஜெயித்தது. காங்கிரஸ் - அ.தி.மு.க கூட்டணி பரிதாபகரமாகத் தோற்றது. 1998-ல் நாடாளுமன்றத்துக்கான தேர்தல் வந்தது. அந்த நேரத்தில், கோவை குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தது. அந்தப் பரபரப்பில் தி.மு.க., த.மா.கா. தொண்டர்கள் சோர்ந்துபோனார்கள். தேர்தலுக்கு முந்தைய நாள் இரவுதான் வெளிநாட்டிலிருந்து  வந்தார் ரஜினிகாந்த். விடிந்தால் தேர்தல். விமான நிலையத்தில் ரஜினியை வரவேற்று விவரங்களை எடுத்துச் சொன்னோம். ‘ஜெயலலிதாவுக்குப் பணவெறி இருந்துச்சு. இப்போது பழிவெறி வருது’ என்று ஆக்ரோஷமாகப் பேசினார். அதன் பிறகுதான், சோர்ந்துகிடந்த தொண்டர்கள் எழுந்து தேர்தல் வேலையில் இறங்கினார்கள். அந்தத் தேர்தலில் இந்தக் கூட்டணி 10 சீட்டுகள்வரை ஜெயித்தது. அதன்பிறகு, 2004-ல் தேர்தலில் தி.மு.க., காங்கிரஸ், சி.பி.ஐ., சி.பி.எம் இவர்களுடன் பா.ம.க கூட்டுவைத்து மெகா கூட்டணியாகத் தேர்தலைச் சந்தித்தன. ‘பாபா’ பட விவகாரம் தொடர்பாக, பா.ம.க - போட்டியிட்ட தொகுதிகளில் அந்தக் கட்சியை ஜெயிக்கவிடக் கூடாது என்கிற முனைப்புடன் ரஜினி வாய்ஸ் கொடுத்தார். அங்கெல்லாம் எதிர் வேட்பாளர்களை ஆதரித்தார். ஜெயலலிதாகூட ரஜினியின் ஆதரவை ஏற்றுக்கொள்ளவில்லை. பலமான கூட்டணி அமைந்ததால், மெகா கூட்டணிதான் ஜெயித்தன.

2014-ல் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு நீதிமன்றத்தில் நீதிபதி அளித்த தண்டனையில் சிறைச்சாலை சென்றுவிட்டு ஜெயலலிதா போயஸ்கார்டன் வீட்டுக்குத் திரும்பினார். அப்போது அவருக்கு வாழ்த்துக் கடிதம் எழுதினார் ரஜினி. அதை அப்படியே அ.தி.முக லெட்டர்பேடில் அதிகாரபூர்வமாக வெளியிட்டனர். பிறகு, ஜெயா டி.வி தொடர்புடைய விழா ஒன்றில் ஜெயலலிதா மேடையில் ரஜினி இருந்தார். அதில் பேசும்போது, கருணாநிதியைப் புகழ்ந்து பேசினார். இதுதான் ரஜினியின் ஸ்டைல். கருணாநிதி மறைவுக்குப் பிறகு, முரசொலியில் ரஜினியின் அரசியல் நிலைப்பாட்டை விமர்சித்து ஒரு கட்டுரை வெளியானது. அது ஏகப்பட்ட சர்ச்சையை உண்டாக்கியதால், கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலினே வருத்தம் தெரிவித்திருந்தார். தமிழக மக்களுக்கு ஏதாவது பிரச்னை என்றால், கொதித்துவிடுவார். இதுதான் ரஜினியின் அரசியல் பாணி’’  என்கிறார்.

ரஜினியைப் பொறுத்தவரையில், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் குதிக்கும் எண்ணம் இல்லை. இதை அவரே தெளிவுபடுத்திவிட்டார். ‘‘காலத்தின் கட்டாயத்தால், தமிழக அரசியலில் மாற்றம் ஏற்பட்டு, சட்டமன்றத் தேர்தலும் இணைந்தே 2019-ம் ஆண்டு மே மாதம் வந்தால்... ரஜினியின் பங்களிப்பு நிச்சயமாக இருக்கும். அ.தி.மு.க கூட்டணியில் ரஜினி என்பதெல்லாம் வடிகட்டின பொய்!’’ என்கிறார்கள் ரஜினி மக்கள் மன்றத்தினர்.

ரஜினியின் 30 ஆண்டு அரசியல்! - குட்டிக்கதை முதல் கூட்டணி வரை!

சுமார் 23 வருடங்களுக்குப் பிறகு, கடந்த மாதம் 19-ம் தேதி சென்னை கோடம்பாக்கத்தில் ரஜினியைப் பற்றி அவரது அரசியல் குரு என்று வர்ணிக்கப்படும் ஆர்.எம்.வீ பேசிய பேச்சுதான் அனைவரையும் மீண்டும் யோசிக்கவைத்துள்ளது. “ஒருகாலத்தில் ரஜினி என்னோடு சேர்ந்து அரசியல் கட்சி ஆரம்பிக்கப் போகிறார் என்றெல்லாம் கூறினார்கள். அப்போது அவரை அரசியலுக்குள் வரவிடாமல், தடுத்தவர்களும் இருக்கிறார்கள். ரஜினிகாந்த் மிகச் சிறந்த நடிகர். பொதுமக்களின் நன்மைக்காகப் பாடுபடுபவர். ஆனால், ஒரு நிலையான அரசியல் கட்சியை நடத்துவது அவரால் முடியுமா என்றால், எனக்குச் சந்தேகம்தான். ஏனென்றால், நான் பல நேரம் அவரோடு விவாதித்திருக்கிறேன். அவர் மிகச்சிறந்த மனிதர்; சிந்தனையாளர்; ஆன்மிக உணர்வு மிகுந்தவர். எதிர்பாராத வகையில் இயற்கையாகவே தமிழகத்துக்குக் கிடைத்த மாபெரும் நடிகர். அவரது அரசியல் நிலைமைகளைப் பற்றிக் கூற நான் தயாராக இல்லை’’ என்றார் அவர்.

“மிக விரைவில் கட்சிக்குப் புத்துயிர் கொடுத்து, களத்தில் இறங்கப்போகிறார் ரஜினி” என்று இன்னமும் உற்சாகம் இழக்காமல் ஆர்ப்பரித்துக்கொண்டிருக்கிறார்கள் ரஜினியின் ரசிகர்கள். முப்பது ஆண்டுகளாகிவிட்டன. ரஜினியின் மெளனம் கலையுமா? பொறுத்திருந்து பார்ப்போம்.

- ஆர்.பி
படங்கள்: சு.குமரேசன், வி.ஸ்ரீனிவாசுலு
ஓவியம்: பிரேம் டாவின்ஸி