Published:Updated:

கமல்ஹாசனின் ஓராண்டு அரசியல் பயணம்... சாதித்தது என்ன?

கமல்ஹாசனின் ஓராண்டு அரசியல் பயணம்... சாதித்தது என்ன?
கமல்ஹாசனின் ஓராண்டு அரசியல் பயணம்... சாதித்தது என்ன?

அவருடைய பூடகமான மொழியில் அவருடைய சொல் விளையாட்டுகளில் போய்ச் சேர வேண்டிய கருத்து சிக்கி நின்றுவிடுகிறது. அது அனைவரையும் போய்ச் சேர மறுக்கிறது.

டிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் கட்சி ஆரம்பித்து இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்துவிட்டது. கடந்த பிப்ரவரி மாதம் 21-ம் தேதி மதுரையிலுள்ள ஒத்தக்கடையில் பிரமாண்டமான நிகழ்வாக தன் கட்சித் தொடக்க விழாவை நிகழ்த்தி அரசியல் பிரவேசம் செய்தார், கமல்.

மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் வீட்டில் ஆரம்பித்த அவருடைய அரசியல் பயணம் வருகிற நாடாளுமன்றத் தேர்தலுக்கு அவரை ஆயத்தமாக்கியிருக்கிறது. இந்த ஒரு வருடத்தில் அவரின் செயல்பாடுகள் எப்படியிருந்தன?

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை இழந்தபிறகு தமிழகத்தில் நடக்கும் அரசியல் தத்தளிப்புகள், அதிகாரத்துக்கான மோதல்கள், இந்த வெற்றிடத்தைப் பயன்படுத்தத் துடிக்கும் சந்தர்ப்பவாதிகள், பதவியைக் காப்பாற்றிக்கொள்ள அமைச்சர்கள் ஆடிய ஆடுபுலி ஆட்டங்கள், கலைப் பணியில் மூழ்கிக் கிடந்தவர்கள் பலர் திடீரெனக் கட்சிப் பணியில் காட்டுகிற ஆவேசங்கள் எனப் பல சம்பங்கள் அவர் இறப்பையொட்டித் தொடர்ந்து அரங்கேறின. அதில் ஒன்றாகத்தான் கமல்ஹாசனின் அரசியல் வருகையையும் பார்க்க முடியும்.

ஆளுங்கட்சியின் மீதான விமர்சனங்களை ட்விட்டரில் தொடங்கிய கமல், பின்னர் முழு அரசியல்வாதியாகவே களமிறங்கினார்.  அதன்பிறகு அவர் மக்களைத் தொடர்ந்து சந்தித்து வருகிறார். கிராமசபைக் கூட்டங்கள் நடத்தி அவர்களின் குறைகளைக் கேட்டறிகிறார். மக்கள் தேவைகளை அடிப்படையிலிருந்து புரிந்துகொண்டால் மட்டுமே அவர்களுக்கான தலைவனாக இருக்க முடியும் என்று உணர்ந்து செயல்பட்டு வருகிறார் கமல். இனி, அரசியலுக்கு வர விரும்புபவர்களுக்குக் கமலின் ஆரம்பகாலச் செயல்பாடுகளும் ஒரு முன்னுதாரணம் என்பதில் சந்தேகமில்லை.

ஒரு கட்சியை, இயக்கத்தை முன்னிறுத்துகிற இடத்திற்கு வந்துவிட்ட பிறகு, கமலின் அரசியல் செயல்பாடு அடுத்து என்னவாக இருக்கும் எனக் காத்துக்கொண்டிருந்தவர்களுக்கு பிக் பாஸ் இல்லத்தில் உள்ளவர்களின் பஞ்சாயத்தைத் தீர்த்துவைப்பவராக அவர் தொலைக்காட்சியில் தோன்றியது வியப்புக்கும் விமர்சனத்துக்கும் உரியதே.

மக்கள் நீதி மய்யம் ஒருவருடம் நிறைவடைந்திருக்கிற இந்த நிலையில், மக்களிடம் அக்கட்சி எந்த அளவு வரவேற்பைப் பெற்றிருக்கிறது. கமலின் கருத்துகளின் தாக்கம் என்ன மாதிரியான கிளர்ச்சியை உண்டு பண்ணியிருக்கிறது என அலசிப் பார்த்தால், பெரிதாக ஒன்றுமில்லை. கட்சி ஆரம்பித்த ஒரு வருடத்தில் இதை எதிர்பார்க்கக் கூடாதுதான். ஆனால், மக்கள் செல்வாக்குடைய அதுவும் தமிழின் முன்னணி நடிகர் தொடங்கிய அரசியல் கட்சி அதிக விளம்பரம் இல்லாமலேயே மக்களைச் சென்றடையக் கூடியது அல்லவா? 

எங்கோ ஒரு தடை இருக்கிறதென்றால், அதற்கு முக்கியக் காரணம் கமலின் பேச்சையும் சொல்லலாம். அவருடைய பூடகமான மொழியில் அவரின் சொல் விளையாட்டுகளில் போய்ச் சேரவேண்டிய கருத்து சிக்கி நின்றுவிடுகிறது. அது, அனைவரையும் போய்ச் சேர மறுக்கிறது. தி.மு.க-வையும், அ.தி.மு.க-வையும் நேரடியாக விமர்சிக்கும் கமல், ஏன் பி.ஜே.பி-யை அதுபோல விமர்சிக்கத் தயங்குகிறார் என்கிற கேள்வியும் மக்களிடையே எழுகையில், கமலின் அரசியல் கொள்கை என்னவாக இருக்குமென யூகிக்க முடியாததும் ஒரு காரணம்.

கமல் கட்சி ஆரம்பித்ததும் தன்னுடன் இணைந்து பயணிப்பதற்குச் சிலரைத் தேர்ந்தெடுத்தார். பாரதி கிருஷ்ணகுமார், ஸ்ரீப்ரியா, கு.ஞானசம்பந்தன், விவசாய சங்கத் தலைவர் பாண்டியன், கவிஞர் சினேகன் என இருந்தார்கள். அவர்களின் செயல்பாடுகள் என்ன,  மக்களுக்கான அரசியலில் இறங்கி வேலை செய்வதென்பது ஒரு தொடர் செயல்பாடு. அந்தச் சிந்தனை கமல்ஹாசனிடம் மட்டுமே வெளிப்படுகிறதே தவிர, அவருடன் இணைந்து பணிபுரிபவர்களிடம் இதைக் காண முடியவில்லை. 

நட்சத்திர அந்தஸ்து உள்ளவர்கள் அரசியலில் இறங்கினால் முன்புபோல மக்கள் ஆதரிப்பார்களா... மாட்டார்களா... என்பதற்கு, மற்ற நட்சத்திரங்களுக்குக் கமல் ஒரு சிறந்த பரிசோதனை முயற்சியாகக்கூட இருக்கலாம். இது, பரிசோதனை அல்ல... வெற்றிதான் என மாற்றிக்காட்டக் கமலின் செயல்பாடுகள் அடுத்தடுத்து என்னவாக இருக்குமெனக் காத்துக்கொண்டிருக்கிறார்கள் தமிழக மக்கள்.

அடுத்த கட்டுரைக்கு