`திருப்பதி குடும்பம்' என்று ஊரே மரியாதையோடு அழைக்கும் ஒரு கூட்டுக் குடும்பத்தின் சுகதுக்கங்களில் படம் பார்ப்பவர்களையும் பங்குபெறச் செய்திருக்கிறார் அறிமுக டைரக்டர் லிங்குசாமி. அத்தனை இயல்பு!
டெல்லி கணேஷ் - ஸ்ரீவித்யா தம்பதியின் மூத்த மகன் மம்மூட்டி, பெரிய தம்பி முரளியுடன் மாடாக உழைத்து அடுத்த இரண்டு தம்பிகளை (அப்பாஸ், ஸ்யாம் கணேஷ்) படிக்கவைத்து முன்னுக்குக் கொண்டு வரும் ஓர் உதாரண அண்ணன்!
பொறுமை மிக்க மூத்த மருமகளாகவும் பொறுப்புமிக்க அண்ணியாகவும் வருகிற தேவயானி பாந்தம்.

முரளிக்கு மனைவியாக வரும் ரம்பா இதில் கவர்ச்சி எதுவுமின்றி சுளீர் - பளீர் மருமகளாக! அண்ணனுக்கு தன் கணவன் அளவுக்கு அதிகமாக அடிபணிவதைப் பொறுக்க முடியாமல், குடும்பத்தில் தேவயானி பெறும் கூடுதல் முக்கியத்துவத்தையும் ஜீரணிக்க முடியாமல் ரம்பா கூட்டணியைக் கலைக்கும் முயற்சிகளில் ஈடுபடுவதும், பின்னால் தவறு உணர்ந்து திருந்துவதுமாக அபா`ரம்பா'!
அப்பாஸ் காதலிக்கும் ஸ்நேகாவின் பணக்கார அப்பா விஜயகுமார், தம்பிக்காகப் பெண் கேட்டுச் செல்லும் மம்மூட்டியை மனம் நோக அடித்துத் திருப்பி அனுப்புவது. சினிமாக்களில் நிறையவே ருசித்துப் பழக்கமாகிவிட்ட பழங்கஞ்சி!
அதேபோல், அப்பாஸின் வாழ்க்கையே முக்கியம் என்று கருதி விஜயகுமாரின் வீட்டோடு மாப்பிள்ளை நிபந்தனைக்கு உடன்பட்டு நிச்சயதார்த்தத்துக்கு மம்மூட்டி சம்மதிப்பதும், உண்மை தெரிந்ததும் அப்பாஸ் காதலைத் துறக்கத் தயாராவதும் கூட ரொம்பவே எதிர்பார்க்கக்கூடிய திருப்பம்தான்!
ஆனால், அந்த அர்த்த ராத்திரியில் காதலன் வீடு தேடி ஸ்நேகா ஓடி வந்துவிட... தொடரும் காட்சிகளில் மம்மூட்டியின் சிறப்பு அறிந்து விஜயகுமார் இறங்கி வரும் உச்சகட்டக் காட்சிகள் உணர்ச்சிமயம்.
அண்ணனுக்குப் போட்டியாக முரளி இன்னொரு மளிகைக் கடை திறப்பது, வீடு கொந்தளிப்பது, உதவாக்கரை மைத்துனருக்காகவே அந்த கடை என்பது தெரிந்து அடங்குவது என்று எல்லாமே படத்தின் நீளத்தை உணர வைக்கும் கட்டங்கள்!
திருப்பதி குடும்பத்தைப் போலவே மெகா ஸ்டார் மம்மூட்டிதான் மொத்தப் படத்தையும் தனது நடிப்பாற்றலால் தூக்கி நிறுத்துகிறார். சின்னச் சின்ன அசைவுகளில்கூட சிலிர்ப்பூட்டுகிறார்.``மக்கள் ரெண்டு பேர்கிட்டதான் தராசு கொடுத்திருக்காங்க. ஒருத்தர் நீதிபதி, மற்றொருத்தர் நம்மளைப்போல வியாபாரி" - பிருந்தா சாரதியின் மின்னல் தெறிக்கும் வசனத்துக்கு இந்தத் துளி, பதம்!
உணர்ச்சிப் பிழம்பாக, ஸ்ரீவித்யா, உளறுவாய் அப்பாவாக டெல்லிகணேஷ் என்று பாத்திரம் அறிந்து நடிப்பைக் கொட்டி இருக்கிறார்கள். `வானத்தைப் போல' உயர்ந்த பாசப் பிணைப்பு கொண்ட ஒரு கதைக்கு ஆழ்ந்து அனுபவித்து ரசித்துப் பார்க்கிற மாதிரி திரைக்கதை அமைத்த அறிமுக இயக்குனர் லிங்குசாமி ஜெயித்திருக்கிறார்... கம்பீரமாக!

- விகடன் விமரிசனக் குழு