Published:Updated:

`ஓட்டுக்காக நாடக கலைஞர்களிடம் சிலர் அரசியல் செய்கிறார்கள்!’ - வேலூரில் நாசர் வேதனை

`நாடகக் கலைஞர்களை ஊக்கப்படுத்தும் வகையில், தமிழக அரசு நாடக விழாக்களை நடத்த வேண்டும்’ என்றார், நடிகர் நாசர்.

நாசர்
நாசர்

வேலூர் மாவட்ட நடிகர் சங்கத்தின் 18-ம் ஆண்டு விழா மற்றும் நாடக நாட்டுப்புறக் கலைஞர்களின் மாநாடு, குடியாத்தம் திருவள்ளுவர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. விழாவுக்கு அரசு வழக்கறிஞர் கே.எம்.பூபதி தலைமை தாங்கினார். குடியாத்தம் தி.மு.க எம்.எல்.ஏ காத்தவராயன் நாடக கலைஞர்களுக்கு சான்றிதழ் வழங்கினார்.

வேலூர் மாவட்ட நடிகர் சங்கத்தின் 18-ம் ஆண்டு விழா
வேலூர் மாவட்ட நடிகர் சங்கத்தின் 18-ம் ஆண்டு விழா

சிறப்பு அழைப்பாளராக நடிகர் நாசர் கலந்துகொண்டு கலைஞர்களைக் கௌரவித்துப் பேசினார். அவர் பேசுகையில், ``தமிழக அரசு நாடக கலைஞர்களை ஊக்கப்படுத்தும் வகையில் நாடக விழாக்களை நடத்த வேண்டும். அந்தந்தப் பகுதியில் நாடக அரங்குகளை அமைக்க வேண்டும்.

ஓட்டுக்காக நாடகக் கலைஞர்களிடம் சிலர் அரசியல் செய்வது வேதனையாக உள்ளது. நாடக நடிகர்களின் ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளன. பேருந்து வசதிகளெல்லாம் செய்யப்பட்டுள்ளன. இன்னும் சிறப்பாக செய்ய வேண்டுமென்று தமிழக அரசிடம் எதிர்பார்க்கிறோம்.

வேலூர் மாவட்ட நடிகர் சங்கத்தின் 18-ம் ஆண்டு விழா
வேலூர் மாவட்ட நடிகர் சங்கத்தின் 18-ம் ஆண்டு விழா

ஒரு கலைஞன் இன்னொரு இடத்தில் கையேந்தி நிற்பதைவிடச் சுயமரியாதையுடன் அந்தக் கலையைச் சார்ந்திருப்பதுதான் எங்களுடைய நோக்கம். கலையைச் செழுமையாக்கி அதன் மூலம் உங்கள் வாழ்வு வளமாக்கப்பட வேண்டும். தற்காலிக நிவாரணங்களை நம்பி மோசம் போய்விடாதீர்கள்.

கலை என்பது அரசியலைத் தாண்டியது. கடவுளுக்கு உகந்தது. ஒற்றுமையுடன் முன்னேறிச் செல்லுங்கள். பிளவுகளை ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள். நாடகக் கலையைச் செழுமையாக்க எதிர்காலத்தில் திட்டம் வகுத்தால் கலைஞர்கள் ஆதரவு தர வேண்டும்’’ என்றார்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

அப்போது நிருபர்கள் சிலர், `குடியுரிமைச் சட்டத் திருத்தத்துக்கு எதிராக தி.மு.க நடத்துகிற பேரணியில் நடிகர் சங்கமும் கலந்துகொள்கிறதா?’ என்று கேள்வி எழுப்பியதற்கு, `விருப்பம் உள்ள நடிகர்கள் தனித்தனியாக கலந்துகொள்வார்கள்’ என்று பதிலளித்தார்.