Published:Updated:

`அந்த விருதாவது ஞாபகமிருக்கிறதா சார்?’ -அமைச்சர் ஜெயக்குமாரை கலாய்த்த நடிகர் சித்தார்த்

``நடிகர் சித்தார்த் எந்தப் படத்தில் நடித்திருக்கிறார்.. விளம்பரத்துக்காகச் சிலர் கேள்விகள் கேட்பார்கள். அவர்களையெல்லாம் பெரிய ஆளாக்க நான் விரும்பவில்லை” என்றார் அமைச்சர் ஜெயக்குமார்.

சித்தார்த்
சித்தார்த்

சமூகத்தில் தாக்கம் ஏற்படுத்தக் கூடிய விஷயங்களைக் கவனித்து, அதற்கேற்ப ட்விட்டரில் கருத்துகளைப் பதிவு செய்வது நடிகர் சித்தார்த்தின் வழக்கம். `` இன்றைய மோசமான உலகில் நமது கருத்துகளை வெளிப்படுத்த வேண்டியது அவசியமான ஒன்றாகும்” என்பது அவரின் தனிப்பட்ட கருத்து.

கறுப்பு பண விவகாரம் முதல் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா வரையில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் தொடர்ந்து அவர் விமர்சனம் செய்து வருகிறார்.

சித்தார்த்
சித்தார்த்

அண்மையில், நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்திய குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்த அ.தி.மு.க அரசை விமர்சித்துப் பதிவிட்ட சித்தார்த், `எடப்பாடி பழனிசாமி எனது மாநிலத்துக்கும் மக்களுக்கும் பிரதிநிதி என்று சொல்வதையே வெட்கக்கேடாக உணர்கிறேன். நீங்கள் இவற்றுக்கெல்லாம் பதில் சொல்லியே ஆக வேண்டும். அதுவரை உங்களின் தற்காலிகப் பதவியை அனுபவித்துக் கொள்ளுங்கள்' எனக் கூறியிருந்தார்.

நடிகர் சித்தார்த்தின் இந்தப் பதிவு அ.தி.மு.க வட்டாரத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, ``நடிகர் சித்தார்த் எந்தப் படத்தில் நடித்திருக்கிறார்.. விளம்பரத்துக்காகச் சிலர் கேள்விகள் கேட்பார்கள். அவர்களையெல்லாம் பெரிய ஆளாக்க நான் விரும்பவில்லை” என்றார்.

அமைச்சர் ஜெயக்குமார்
அமைச்சர் ஜெயக்குமார்

அமைச்சரின் பதிலுக்கு நடிகர் சித்தார்த் ட்விட்டரில் பதில் கொடுத்துள்ளார். அவர் தனது பதிவில், `என்னை யாரென்று அவர் கேட்கிறார். பரவாயில்லை. 2014-ம் ஆண்டுக்கான தமிழக அரசின் மிகச்சிறந்த நடிகருக்கான விருதை அவருடைய அரசுதான் எனக்கு அறிவித்தது.

2017-ம் ஆண்டு அறிவித்த இந்த விருது இன்னும் எனக்கு வழங்கப்படவில்லை. விளம்பரத்துக்காகப் பேச வேண்டிய அவசியம் எனக்கில்லை. நேர்மையாக உழைத்து என்னுடைய இடத்தை நான் பிடித்திருக்கிறேன்” என்று கூறியதோடு அமைச்சர் ஜெயக்குமார் பேசிய வீடியோவையும் பகிர்ந்திருக்கிறார்.