புதுடில்லியில் நடிகர் திலகம் எப்போது பரிசு வாங்கச் சென்றாலும், அவருடைய பெயர் சபையில் அறிவிக்கப்படும் போது சிறிது சலசலப்பு ஏற்படும்! காரணம், விழுப்புரம் சின்னையா கணேசன் என்று இவர் தன் பெயரை வைத்துக் கொண்டிருப்பதுதான்! தன்னுடைய பெயருடன், தான் பிறந்த மண்ணின் பெயரையும் முன்னால் சேர்த்துக் கொண்டிருக்கும் இவரைக் கண்டு, “இவர் ஒப்பற்ற நடிகர் மட்டுமல்ல, 'உயர்ந்த மனிதரு’ங்கூட” என்று எல்லோரும் பாராட்டுவதில் வியப்பே இல்லை! தான் பிறந்த மண்ணின் வாசனையை இந்தியாவில் மட்டுமென்ன, அகில உலகமெங்கும் புகழ் பரப்பி விட்டு வந்தவராயிற்றே! ‘நடிகர் திலக’த்தை சிறிது நேரம் மறந்து விட்டு, 'விழுப்புரம் சின்னையா கணேசன்' என்ற நினைப்புடனே, அவரை ஒரு படப்பிடிப்பின் நடுவில் சந்தித்தோம்.

"தாங்கள் பிறந்த மண்ணின் பெருமையைப் பற்றி ஏதாவது கூற முடியுமா...?”
ஏதோ சிறிது நேரம் சிந்தனை வயப்பட்ட அவர், ‘ஹாம்...’ என்று பெருமூச்சு விட்டுக் கொண்டே ஆரம்பித்தார். “என் ஊரைப் பத்திக் கேட்கும்போது எனக்கு என்ன சொல்வது என்றே தெரியலை. ஏனென்றால் நான் அந்த ஊரில் பிறந்தேனே தவிர, வாழக் கொடுத்து வைக்கலை. 1928-ம் வருஷம் அக்டோபர் மாதம் 1-ந் தேதி நான் பிறந்தேன். நான் பிறந்த சமயத்திலே எங்க வீட்டு நிலைமையே ரொம்ப மோசமாயிருந்தது. நான் பிறந்த அரை மணி நேரத்தில் என் அப்பா சின்னையா மன்றாயர் சுதந்திரப் போராட்டத்திலே கலந்து கொண்டு நெல்லிக்குப்பம் ஜெயிலுக்குப் போயிட்டார். என் தாத்தா சின்னசாமி காளிங்கராயர் அப்போ ரெயில்வே எஞ்சினியரா இருந்தாரு. அவரும் இந்த சமயத்திலேதான் ரிடையர்டு ஆனாரு. குடும்பம் தனித் தனியா பிரிஞ்சு போக வேண்டிய நிலைமை எங்களுக்கு வந்தது. விதி எங்களை விழுப்புரத்திலே வாழவிடாம உடனே துரத்தி, திருச்சியிலே கொண்டு போய் விட்டது. அதற்கப்புறம் திருச்சியிலும், தஞ்சாவூரிலேயும் மாறி மாறி வாழ்ந்தோம். இவ்வளவுதான் எனக்கும் விழுப்புரத்துக்கும் உள்ள தொடர்பு...” என்று ஒரே மூச்சில் கூறி முடித்தார் கணேசன். “கூல் ட்ரிங்க்ஸ் ஏதாவது சாப்பிடறீங்களா...?” என்று அவர் எங்களைக் கேட்டார். ஒரே மூச்சில் அவர் பேசி முடித்ததற்கு நாங்கள் அவரைக் கேட்டிருக்க வேண்டும்!
“எங்களுக்கு ஒரு நடிகர் திலகத்தைக் கொடுத்த பாக்கியத்தைப் பெற்ற தெரு எது என்று தெரிஞ்சுக்கலாமா?"
“ஓ! தாராளமா... பெருமாள் கோயில் தெருன்னு நினைக்கிறேன். கொஞ்சம் இருங்க... டெலிபோன்லே ‘மம்மி’யைக் கேட்டு ‘கன்பர்ம்’ பண்ணிடறேன்..” என்று பக்கத்தில் இருந்த ஒருவரிடம் டெலிபோன் செய்யச் சொல்லி அனுப்புகிறார்.
"நீங்க அதுக்கப்புறம் விழுப்புரத்துக்குப் போக வேண்டிய சந்தர்ப்பமே வரலையா...?”
“நானே சொல்லணும்னு நினைச்சேன். நீங்களே அதுக்குள்ளே கேட்டுடீங்க. விழுப்புரத்தைப் பொறுத்த வரை ஒரு மறக்க முடியாத நிகழ்ச்சி எனக்கு நடந்திருக்கு. ஒரு அஞ்சாறு வருஷத்துக்கு முன்னாடி விழுப்புரம் நகர சபையிலே எனக்கு ஒரு வரவேற்பு கொடுத்தார்கள். அந்த நிகழ்ச்சியிலே நான் எதிர்பாராத இரண்டு சம்பவங்கள் நடந்தன. ஒண்ணு, அந்த நகர சபையைச் சேர்ந்தவங்க எனக்கு ஒரு பிரசண்ட் பண்ணாங்க. அது என்னன்னு பார்த்த போது, என் உடலெங்கும் இனம் புரியாத ஒரு வித உணர்ச்சி பெருக்கெடுத் தோடியது. அந்த பரிசைக் கொடுத்த அவர்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே எனக்குப் புரியலை. காரணம், அவங்க கொடுத்தது ஒரு அரிய பரிசு. அந்த பரிசு என்ன தெரியுமா? நான் விழுப்புரத்திலே பிறந்தபோது நகர சபை அலுவலகத்தில் எழுதப்பட்ட விவரங்கள் அடங்கிய ஜனன குறிப்பை ‘பிரேம்’ செய்து கொடுத்திருந்தார்கள்!...” இடையில், “சார் நீங்க சொன்ன தெரு கரெக்டாம்... அம்மா சொன்னாங்க...” என்று பெருமாள் கோயில் வழி உறுதி செய்தார் போன் செய்யப் போனவர். நடிகர் திலகத்தின் ஞாபக சக்தியை யாராவது சோதனை செய்து வெல்ல முடியுமா என்ன?

“அந்த இன்னொரு நிகழ்ச்சி என்னன்னு தெரிஞ்சுக்கலாமா...?”
“அந்த இரண்டாவது நிகழ்ச்சியைப் பத்தி சொல்லும்போது இப்பக் கூட அந்த வயதான கிழவரின் முகம் ஞாபகத்துக்கு வருது. நகர சபை விழாவிலே என் ஜனன குறிப்பைக் கொடுத்தாங்கன்னு சொன்னேனில்ல... அப்போ ஒரு வயசான கிழவர் என் முன்னாடி வந்து நின்னாரு. 'தம்பி, என்னை உங்களுக்குத் தெரியாது. ஆனா உங்களை எனக்குத் தெரியும்’னு புதிர் போட்டார். நான் சிறிது நேரம் திகைத்துப் போய் விட்டேன். கடைசியில் அவர் யார் என்று கூறியதும் நான் வியப்பில் வாயடைத்துப் போய் விட்டேன். அந்த முதியவரை வணங்குவதா, அல்லது பாராட்டுவதா - என்ன செய்வது என்றே. எனக்கு அப்போது தோன்றவில்லை. அவரை அப்படியே கட்டி அனைத்துக் கொண்டேன். பெரியவரின் கண்களில் கண்ணீர் பெருகியது. பின்னே இருக்காதா! நான் பிறந்த போது என்னுடைய பிறந்த தேதி, நேரம் இதையெல்லாம் விழுப்புரம் நகர சபை அலுவலகத்திலே அப்போ குறிச்சு வைச்ச பியூன்தான் அந்த முதியவர்... நான் என் ஜென்மத்திலே நெனைக்கலை, இப்படி ஒரு சந்திப்பு நிகழும்னு... என்னைப் பொறுத்த வரைக்கும் என் வாழ்க்கையிலே இது ஒரு மறக்க முடியாத அனுபவம்...”என்று கரகரத்த குரலில் கூறினார் கணேசன்.
“அந்தப் பெரியவருக்கு ஏதாவது உதவி செய்திருப்பீர்கள் என்று நினைக்கிறோம்...!”
“ஹாம்... அதெல்லாம் எதுக்குங்க எழுதணும்...?” என்று தன்னடக்கத்தோடு அவர் கூறினாலும், ‘கர்ணன் கணேசன்’ என்று தமிழக மக்களால் புகழப்படுபவராயிற்றே, செய்யாமலா இருந்திருப்பார்!
“அண்மையில் காஞ்சிப் பெரியவாளை சந்தித்துப் பேசினீர்களாமே?”
“ஆமாம்... சிறிது நேரம் அவருடன் பேசிக் கொண்டிருந்தது என் மனத்துக்கு மிகவும் நிம்மதியையும், சாந்தியையும் அளித்தது...!”
- சுந்தரம்.