Published:Updated:

ஹனிமூன் சபதம்..! - விஜய் #Classics

Actor Vijay interview about his Marriage and Honeymoon plans
பிரீமியம் ஸ்டோரி
Actor Vijay interview about his Marriage and Honeymoon plans

“கல்யாணம்கிறது எல்லாரோட வாழ்க்கையிலும் ஓர் அம்சம்தான்“ - விஜய்

ஹனிமூன் சபதம்..! - விஜய் #Classics

“கல்யாணம்கிறது எல்லாரோட வாழ்க்கையிலும் ஓர் அம்சம்தான்“ - விஜய்

Published:Updated:
Actor Vijay interview about his Marriage and Honeymoon plans
பிரீமியம் ஸ்டோரி
Actor Vijay interview about his Marriage and Honeymoon plans

 ஒரு மிடில் கிளாஸ் இளைஞனின் தனி அறை போலத்தான் இருக்கிறது விஜய்யின் பெட்ரூம். ஒரு சின்னக் கட்டில் தலைமாட்டில் ரஜினியுடன் சேர்ந்து சிரிக்கிற படம். குட்டி பீரோ, சில புத்தகங்கள், ஆடைகள், அறுபது சேனல்கள் . எடுக்கிற கலர் டி.வி. அப்புறம்... அதற்கு மேல் விஜய் - சங்கீதா என்று எம்பிராய்டரி பண்ணப்பட்ட இரண்டு கரடி பொம்மைகள். "கீதா பிரசெண்ட் பண்னது" என்று லேசாக வெட்கப்படுகிறார்.

பக்கத்திலேயே தாஜ்மஹால் மினியேச்சருக்குள் ஒரு நைட் லேம்ப் ஒளிர்கிறது. "இதுவும் லண்டன்லேர்ந்து கீதா அனுப்பிச்சதுதான்" - மறுபடியும் வெட்கம். கடந்த இரண்டு வருடங்களாக காதல். இதோ வருகிற ஆகஸ்ட் மாதம் விஜய்க்குத் திருமணம்! அவரிடம் பேசியதிலிருந்து....

Actor Vijay interview about his Marriage and Honeymoon plans
Actor Vijay interview about his Marriage and Honeymoon plans

 " 'லவ் டுடே , 'பூவே உனக்காக', 'காதலுக்கு மரியாதை'னு வெரைடியான படங்கள் பண்னியிருக்கீங்க. அதுல உங்களுக்குப் பிடிச்ச காதல் எது?"

"எனக்கு மட்டும்னு இல்லை. தமிழ்நாட்டுக்கே பிடிச்சது ' காதலுக்கு மரியாதை' தான். ஒரு பொண்ணும் பையனும் 'உலகமே வேணாம்'னு ஒதுக்கித் தள்ளிட்டு எவ்வளவு சுவாரஸ்யமா லவ் பண்ணாலும்கூட நடைமுறையில அதுக்கு மதிப்பில்லாமப் போயிடும். அம்மா - அப்பா சம்மதத்தோட விருப்பமான பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கறதுதான் பெரிய அதிர்ஷ்டம். அதுதான் நல்லதும். குடும்பம், காதல் இரண்டுமே முக்கியம். எந்த ஒன்றுக்காகவும் இன்னொண்ணை இழக்கக் கூடாது. அதனால காதலுக்கு மரியாதைதான் கரெக்ட்!" 

"'உங்களைக் கவர்ந்த காதல் ஜோடி யார்?"

"என் அம்மா - அப்பாதான். இருபத்தஞ்சு வருஷ வாழ்க்கைக்குப் பிறகும் இன்னும் புதுசா லவ் பண்றாங்க. இப்போ சமீபத்தில் எங்க அம்மா ஒரு மாசம் ஃபாரின் டூர் போயிட்டாங்க. இங்கே வீட்ல எங்க அப்பா தனியா வெள்ளைத்தாடி வளர்த்துட்டு ஃபீல் பண்ண ஆரம்பிச்சிட்டார். 'ஏம்ப்பா?'னு நான் கேட்டேன். 'இல்லடா. கல்யாணமானதுலேர்ந்து அவ என்னைவிட்டுத் தனியாப் போனதே இல்லை. இப்போ அவளைப் பிரிஞ்சு இருக்க முடியலைடா'ங்கறார். நான் உடனே அம்மாக்கு போன் போட்டுப் பேசி அவங்களை வரவெச்சேன். அப்புறம் தான் இவர் தாடியே எடுத்தார். யோசிச்சுப் பார்த்தா... தமிழ் சினிமாவுல நாங்க பண்ற லவ்வையெல்லாம் இவங்க காதல் தூக்கிச் சாப்பிட்டுடும் போல."

'' முதல் காதல்னு ஏதாவது இருக்கா உங்ககிட்டே?''

"சின்ன வயசுலேர்ந்துனு யோசிச்சுப் பார்த்தா நாலைஞ்சு பொண்ணுங்களைக் கடந்துதான் எல்லோரும் வந்திருப்போம். ஸ்கூல்ல படிக்கும் போது ஒரு பொண்ணு. காலேஜ் டைம்ல ஒரு பொண்ணு. ஒரு இங்கிலீஷ் டீச்சர். இப்படி ஏதாவது இருக்கும். ஆனா அதெல்லாம ஜஸ்ட் லைக் தட் ஒரு ஈர்ப்பு. அவ்வளவுதான். படிப்பு முடிஞ்சதும் அவங்க ஞாபகங்கள் எல்லாம் மெள்ள நம்ம மேப்லேர்ந்து மறைஞ்சு போயிடும். சில நேரம் பேர் கூட மறந்து போயிடும். அதைத் தவிர சீரியலா யாரையும் லவ் பண்ணினது இல்லை. என் நண்பர்கள் வட்டத்தில் சிலர் அப்படி லவ் பண்ணியிருக்காங்க. ஒரே ஒருத்தன் மட்டும் நாலு வருஷமா லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கப் போறான். போன மாசம்தான் அவங்க வீட்ல க்ளைமாக்ஸ் நடந்து கல்யாணத்துக்கு ஓகே சொன்னாங்க..."

Actor Vijay interview about his Marriage and Honeymoon plans
Actor Vijay interview about his Marriage and Honeymoon plans

"வரப்போற பொண்ணு எப்படி இருக்கணும்னு யோசிச்சதுண்டா?"

"நான் கொஞ்சம் ரிசர்வ்டு டைப். அதனால வர்ற பொண்ணாவது உம்முனு இல்லாமக் கொஞ்சம் கலகலப்பா இருக்கணும். என்னை ஜாஸ்தி கேள்வி கேட்டு இம்சை பண்ணக்கூடாது. என்னை விடப் படிச்சவளா இருக்கணும். வீட்டுக்கு ஃபிரெண்ட்ஸ் வரும்போது உபசரிக்கணும். கொஞ்சம் விட்டுப்பிடிக்கற ஆளா இருக்கணும். சின்ன பிரச்னைனாலும் எதிர்பார்ட்டிதான் முதல்ல ஸாரி கேட்கணும்னு பிடிவாதம் பிடிக்கிற ஆளு நான். அட்ஜஸ்ட் பண்ணிக்கற ஆளா இருக்கணும். முக்கியமா நல்லா தோசை போடத் தெரிஞ்சிருக்கணும். ஏன்னா. என்னை ஒரு துப்பாக்கியைக் காட்டிப் பயமுறுத்தறதை விட ஒரு தோசையைக் காட்டி ஈஸியா வழிக்கு கொண்டு வந்துடலாம். அந்த அளவுக்கு நான் தோசை பைத்தியம். அப்புறம்... என்னோட ரசிகையா இருக்கணும். மொத்தத்துல எனக்கு ஒரு நல்ல கேர்ள் ஃபிரெண்டா இருக்கணும்."

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

"இதுல சங்கீதாவுக்கு எவ்வளவு மார்க்?"

"நூத்துக்கு நூறு. 'அழகான, அமைதியான'னு சொல்லிட்டே போகலாம். தோசை மேட்டர்ல மட்டும்தான் கொஞ்சம் உதைக்குது. இப்போ சமையல் கத்துட்டிருக்கிறதா தகவல்."

'சங்கீதா பற்றிச் சொல்லுங்களேன்."

"என்னோட ரசிகை. பூர்வீகம் இலங்கை. இப்போ லண்டன்ல இருக்காங்க. மெடிக்கல் சயின்ஸ் படிக்கறாங்க. ஒரு தடவை என்னைப் பார்க்க குடும்பத்தோட எங்க வீட்டுக்கு வந்திருந்தாங்க. போட்டோ எடுத்துட்டு, ஆட்டோகிராப் வாங்கிட்டுப் போற வழக்கமான ஒரு சம்பவம்தான் அது. எங்க வீட்ல லஞ்ச் டைம்ல யார் வந்தாலும் சாப்பிடாம வெளியே போக முடியாது. அப்படி ஒரு நேரத்துல அவங்க வர... எல்லாரும் உட்கார்ந்து சாப்பிட்டோம்.

இப்படியே மெள்ள ஒரு நட்பு வளர்ந்து... எங்க அம்மாவுக்கு சங்கீதாவையும் அந்தக் குடும்பத்தையும் பிடிச்சுப்போச்சு. ஒரு நாள் என்கிட்டே சங்கீதா பற்றி கல்யாணப் பேச்சை அம்மாதான் ஆரம்பிச்சாங்க. முதல்ல கொஞ்சம் யோசிச்சேன். அப்புறம் டபுள் ஓகே சொன்னேன். அவங்க அடுத்த வேலைகளைப் பார்க்க ஆரம்பிக்க... நானும் சங்கீதாவும் லவ் பண்ண ஆரம்பிச்சிட்டோம். ம்... அழகான பொண்ணு. பக்கத்துல நான் நின்னா பிளாக் அண்ட் ஒயிட் மாதிரி இருக்கும். அப்படி ஒரு கலர். படிச்ச பொண்ணு. ரொம்ப பணிவு. எப்பவும் சிரிக்கிற முகம்... அப்படி இப்படினு நான் யோசிச்ச பொண்ணு மாதிரியே இருக்கறதால சந்தோஷம்."

"கல்யாணம் நிச்சயம் பண்ணிய பிறகு உங்க 'வுட்பி'யோட அவுட்டிங் போனதுண்டா?"

"அதை ஏன் கேக்கறீங்க... எங்கே போனாலும் ஆறேழு பேர் பாதுகாப்புக்கு கூட வந்துடுறாங்க. லண்டன்ல அவங்க பேரண்ட்ஸ், இங்கே என் பேரண்ட்ஸ், இன்னும் ஒரு சினிமா கூட தனியா போனதில்லைங்க. ஒரு வசதி என்னன்னா... எவ்ளோ நேரம் வேணும்னாலும் பேசலாம். இருக்கவே இருக்கு... ரெண்டு பேரும் பிறந்து வளர்ந்த இருபத்தஞ்சு வருஷக் கதை, அப்புறம் லண்டன் குளிர், கிரிக்கெட் மாட்ச்னு 'ஸ்வீட் நத்திங்ஸ்' பேசிட்டே இருக்கலாமே..."

"கிரீட்டிங்ஸ் அனுப்பறது, லெட்டர் எழுதறது, கிஃப்ட்ஸ் கொடுக்கறதுனு?"

"அதெல்லாம் போர். நான் நாலு வரி எழுதறதை விட எதுவானாலும் போன்ல பேசிடற ஆளு. கீதாதான் நிறைய கார்ட்ஸ் அனுப்புவா. நேர்ல பார்க்கிறப்போ தாஜ்மஹால், டெடினு ஏதாவது பொம்மை தருவா. ஒரு வருஷமா நான் டிரஸ் எடுக்கறதே இல்லை. எல்லா டிரஸ்ஸும் மேடம் எடுத்துத் தர்றதுதான். அடடா... நாமளும் ஏதாவது தரனுமேனு ஊர்ல இருக்கற எல்லா கலர்களிலும் சுடிதார்கள் எடுத்துக் கொடுத்தேன். அவ்வளவுதான்."

Actor Vijay interview about his Marriage and Honeymoon plans
Actor Vijay interview about his Marriage and Honeymoon plans

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

"ஹனிமூன் எங்கே?"

"ஸ்விஸ்ல கிரிண்டில்வேர்ல்டுனு ஒரு இடம் இருக்கு. அங்கே கேபிள்கார் ஓட்டல்னு... எங்கே பார்த்தாலும் இரண்டு பேர் உட்கார்ற மாதிரி டபுள் ஸீட்ஸ் மட்டும்தான் இருக்கும். காதல் ஜோடிகளுக்காகவே ஸ்பெஷலா டிஸைன் பண்ணியிருக்காங்க. எங்கே பார்த்தாலும் ஜோடி ஜோடியா போய்ட்டிருப்பாங்க. சின்ன வயசுல அங்கே டூர் போயிருந்தோம். அம்மா, அப்பா ஒரு கார்ல ஏறிட்டாங்க. பிரிட்டோ அங்கிள், ராணி அக்கா ஒரு கார்ல... நான் மட்டும் துணைக்கு யாருமே இல்லாம தனியா உட்கார்ந்திருந்தேன். 'நமக்கும் ஒரு நாள் கல்யாணம் ஆகும். அப்போ ஹனிமூன் இங்கேதான்டா'னு அப்ப ஒரு சபதம் எடுத்தேன். அதை நிறைவேற்றணுமே."

"எல்லாம் சரி... இப்படி ஒரு இளம் ஹீரோ திடீர்னு கல்யாணம் பண்ணிட்டுப் போனா... ரசிகைகளிடம் உங்க 'சார்ம்' போயிடுமேனு கவலைப்படறதில்லையா?"

"யாருக்கும் தெரியாம திருட்டுத் தனமா ஓடிப்போய் கல்யாணம் பண்ணா, அப்படிக் கவலைப்படறதுல ஒரு நியாயம் இருக்கு. தவிர கல்யாணம்கிறது எல்லாரோட வாழ்க்கையிலும் ஓர் அம்சம்தானே!"

"காதல் எப்படியிருக்கு...?"

"இப்போதான் கவிதைகள் படிக்க ஆரம்பிச்சிருக்கேன். 'அண்ணாந்து இமை திறந்த விழிகளின்மேல் வாங்குகிற மழைதான் காதல். அதன் சுகம் கொடுமையானது'னு படிக்கிறப்போ சிரிப்பு வருது. ராத்திரி தனியா படுத்துட்டு இந்த தாஜ்மஹால் நைட் லேம்ப் ஸ்விட்ச்சை ஆன், ஆஃப்னு மாறி மாறிப்போட்டு விளையாடறேன். எப்பவாவது இந்த டெடி பொம்மைகளோட தனியா பேசறேன். நிச்சயம் பண்ணப்போ, போட்ட மோதிரம். இதோ கைவிரல்ல இருக்கே... இதையே பார்த்துட்டு ஏதாவது யோசனையில இருப்பேன்... மத்தபடி இப்பவும் நான் நார்மலாத் தான் இருக்கேன்."

- ரா. கண்ணன், செல்லா

படங்கள்: கே. ராஜசேகரன்

(14.2.1999 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...)
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism