Published:Updated:

`காஷ்மீருக்கு இது புதிதல்ல!' - பாலிவுட் நடிகை சாய்ரா வசிம் விலகல் பின்னணி

ஐஷ்வர்யா

”பாலிவுட் நடிகை சய்ராவுக்கு சில இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் மிரட்டல் விடுக்கப்பட்டது. ஆனால் இதுபற்றி வெளியே பேசுவதற்கு அவர்களது குடும்பத்தினர் அச்சப்படுகிறார்கள்” - ஜம்மூ காஷ்மீர் மக்கள் உரிமைக் குரல்

நடிகை சய்ரா வசிம்
நடிகை சய்ரா வசிம்

’நான் சினிமாவில் நடப்பது எனது இமானுக்கு எதிரானதாக இருக்கிறது. அதனால் இந்தத் துறையில் இருந்து விலகிக் கொள்கிறேன். இந்தத் துறையில் நான் பொருந்திப் போனாலும் இது எனக்கான துறையல்ல. அதனால் இனிமேல் நான் நடிக்கப்போவதில்லை’, ஆமீர்கான் நடிப்பில் வெளியான டங்கல் படத்தின் முக்கியக் கதாப்பாத்திரங்களில் ஒருவராக நடித்த நடிகை சய்ரா வசிம் அண்மையில் தனது சமூகவலைத்தளப் பக்கத்தில் பதிவு செய்திருந்த இந்த சர்ச்சையான முடிவுக்கு சமூகத்தின் பல தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன.

ஆமீர் கானுடன் பாலிவுட் நடிகை சய்ரா வசிம்
ஆமீர் கானுடன் பாலிவுட் நடிகை சய்ரா வசிம்

குறிப்பாக பாலிவுட் வட்டாரங்கள் அவரது இந்த முடிவுக்குக் கொந்தளித்துள்ளன. ’சினிமாவிலிருந்து விலகுவதென்றால் அமைதியாக விலகிக் கொள்ளட்டுமே தனது இந்தக் குறுகிய சிந்தனையைப் பதிவு செய்துவிட்டு ஏன் விலக வேண்டும்?” என நடிகை ரவீனா டாண்டன் கூறியுள்ளார்.

சய்ரா வசிம் காஷ்மீரைச் சேர்ந்தவர். காஷ்மீரின் கலைத்துறையைச் சேர்ந்த பெண்கள் இப்படி விலகிக் கொள்வது இது முதல்முறை இல்லை. இந்த வரிசையில் சய்ரா நான்காவது நபர். 2013 காஷ்மீரில் முதன்முதலில் உருவான பெண்கள் இசைக்குழுவைச் சேர்ந்த மூன்று பேரும் இப்படிதான் திடீரெனத் தங்கள் குழுவைக் கலைத்தார்கள். டிசம்பர் 2012ல் உருவாக்கப்பட்ட அந்தக் குழு எடுத்த எடுப்பிலேயே பல பரிசுகளை வென்றது பலரது கவனத்தை ஈர்த்தது. ஆனால் வலைத்தளங்களில் அவர்களைக் குறித்து அவதூறு பரப்பப்பட்டது. உச்சக்கட்டமாக அவர்களது மதகுரு ஒருவர் அந்த மூன்று பெண்களுக்கு எதிராக ’ஃபத்துவா’ பிறப்பித்தார்.

பிரியங்கா மற்றும் ஃபர்ஹானுடன் சய்ரா
பிரியங்கா மற்றும் ஃபர்ஹானுடன் சய்ரா

அதனால் அந்தக் குழுவையே கலைத்தார்கள். மூன்று ஆண்டுகள் கடந்த நிலையில் நடிகை சய்ரா காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹபூபா முப்தியைச் சந்தித்த சில நாட்களில் அவர் இவ்வாறு ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய ஜம்மு காஷ்மீர் மக்கள் உரிமைக் குரல் அமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்கள்,``சய்ராவுக்கு சில இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் மிரட்டல் விடுக்கப்பட்டது. ஆனால் இதுபற்றி வெளியே பேசுவதற்கு அவர்களது குடும்பத்தினர் அச்சப்படுகிறார்கள். ஜம்முவில் இருக்கும் பெண்களுக்கு இதுமாதிரியான அச்சுறுத்தல்கள் தொடர்ந்துகொண்டிருக்கிறது” என்றனர். இந்த கருத்து பற்றிக் கேட்க சய்ரா வசிமைத் தொடர்பு கொண்டோம். அவர் அழைப்பை ஏற்கவில்லை.