Published:Updated:

அரசியல் களத்தில் மக்களின் கருத்தைப் பிரதிபலிப்பது ரஜினியா, கமலா? - ஒரு விரிவான அலசல்

கமல் - ரஜினி
கமல் - ரஜினி

அரசியல் ஆசை இல்லாதிருந்தவரை தலைவா என்றும் கடவுள் நம்பிக்கை இல்லாதவரை ஆண்டவரே என்றும் இருவரை அழைத்த தமிழக மக்கள், இருவரில் யாரை முதல்வர் என்று அழைக்க விரும்புகிறார்கள்?

`கமல்- ரஜினி என இரண்டு தண்டவாளங்களின் வழிதான் கடந்த நாற்பது ஆண்டுக்காலமாக தமிழ்த்திரை உலக ரயில் ஜம்மென்று பவனி வருகிறது. ஆரம்பத்தில் நண்பராக, எதிரியாக நடித்து, ஒரு கட்டத்தில் இருவரும் இணைந்து நடிப்பதில்லை என்ற முடிவை எடுத்தனர். அதன்பிறகுதான் தமிழ்சினிமாவில் இரண்டு தனிப் பாதைகளும் உருவாகின. வயதில் தன்னைவிட இளையவர். ஆனால் நடிப்புத்துறையில் தன்னைவிட சீனியரான கமலைப் பிரிந்து ரஜினி தனி ராஜபாட்டையே நடத்தினார். மக்கள் ரசனைக்கேற்ப தன் கதைகளைத் தேர்ந்தெடுத்ததும், தனக்கென ஒரு பாணியை ஆரம்பித்திலே அமைத்துக்கொண்டதும் ஒரு காரணம். அதன்மூலம் மக்களை இன்னும் நெருங்கினார் ரஜினி. மற்றொருபுறம் கமலின் நடிப்பைப் பல இடங்களில் வெளிப்படையாகப் பாராட்டவும் செய்தார். தான் நடித்த திரைப்படங்களிலும் கூட ``ஆமா பெரிய கமல்ஹாசன்னு நெனைப்பு” என்று கமலின் நடிப்பைப் பாராட்டும் வசனங்களையும் உச்சரித்தார் ரஜினி.

ரஜினி கமல்
ரஜினி கமல்

நடிப்புத்துறையில் ரஜினிக்கு எப்படி கமல் சீனியரோ, அதேபோல் அரசியல் களத்திலும் சீனியராகிவிட்டார் கமல். இரண்டு வருடங்களுக்கு முன் அரசியலுக்கு உறுதியாய் வருவதாகச் சொன்னார் ரஜினி. ஆனால், அவரை முந்திக்கொண்டு அரசியல் கட்சியை ஆரம்பித்தார் கமல். அரசியலுக்கு வருவதாகச் சொன்ன ரஜினி இன்றுவரை கட்சி ஆரம்பிக்கவில்லை என்றாலும், பொது இடங்களில் கருத்து சொல்வது, கட்சி ஆரம்பிக்கும் பணிகளை பல்லாண்டுகளாகச் செய்துவருவது என்று இன்றுவரை ஆக்டிவ் அரசியலுக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறார் ரஜினி. இந்த இருவரின் அரசியல் அறிக்கைகள் என்ன சொல்கின்றன?

தமிழ் சினிமாவின் இரு துருவங்கள் என 40 ஆண்டுகளுக்கு மேலாக நம் திரைப்பசியை ஆற்றிக்கொண்டிருந்தவர்கள் தரையில் நம்மோடு பயணிக்க முடிவெடுத்த பின்பு அவர்கள் எடுக்கும் நிலைப்பாடுகளை அவர்களைக் கொண்டாடிய ரசிகனாக அலச வேண்டியிருக்கிறது. அரசியல் ஆசை இல்லாதிருந்தவரை தலைவா என்றும் கடவுள் நம்பிக்கை இல்லாதவரை ஆண்டவரே என்றும் இருவரை அழைத்த தமிழக மக்கள், இருவரில் யாரை முதல்வர் என்று அழைக்க விரும்புகிறார்கள்?

கமல் - ரஜினி
கமல் - ரஜினி

திரையில் தன்னை ஆட்டோக்காரராக, வேலைக்காரராக, குதிரைவண்டிக்காரராக, கூலித் தொழிலாளியாக, படிக்காதவராக, குடிசையில் வசிப்பவராக எப்போதும் மக்களுக்கு நெருக்கமான கதாபாத்திரங்களில் நடித்துத் தொண்ணூறுகளில் ஏகோபித்த மக்கள் ஆதரவைப் பெற்ற ஒரு கலைஞனாக உச்சம் சென்றார் ரஜினி. அது ஒருவகையில் எம்.ஜி.ஆர் பாணி என்றாலும் ஸ்டைல் எனும் தனித்தன்மை மூலம் அதிலும் தன்னை வேறுபடுத்திக் காட்டினார். ஆனால், அதன் பின்பு எம்.ஜி.ஆர் பொதுவாழ்க்கையில் செய்ததை ரஜினி பின்பற்றினாரா என்பதுதான் கேள்வி. இன்னொருபுறம் கமலின் பல திரைப்படங்கள் வெளியான சமயத்தில் வெகுஜன மக்களுக்குப் புரியவில்லை.

ஆனாலும், தொடர்ச்சியாக அதே தளத்திலேயே இயங்கிவந்தார். அறிவார்ந்தவர்களுக்கு (Intellectuals) மட்டுமே ஓரளவுக்குப் புரியக்கூடிய காட்சியமைப்புகளும் திரைக்கதையும் அவர் திரைப்படங்களில் இடம்பெற்று வந்தன. குணா, விருமாண்டி, ஹேராம், அன்பே சிவம் போல் பத்து வருடங்களுக்குப் பிறகு மக்கள் அப்டேட் ஆகி ஏற்றுக்கொண்ட படங்களும் ஏராளம் உண்டு. இதனால் தீர்க்கதரிசி என்ற பெயரும் பெற்றார். இப்படி சினிமாவில் இருந்தபோதும் பொதுவெளியில் எளிதில் ஒன்றமுடியாவர் என்று சொல்லபட்ட கமல்தான் இப்போது மக்களுக்கான கருத்துகளைப் பிரதிபலிக்கிறார். ஆனால் ரஜினியோ அரசியல் அறிவிப்புக்குப் பிறகு கமலுடன் தனது இடத்தை `செஸ்ஸில் யானையும் ராஜாவும் ஆரம்பத்திலிருந்து அவர்கள் இருந்த இடத்தை கேஸ்ட்லிங் செய்து' மாற்றிக்கொள்வதுபோல மாற்றிக்கொண்டது புரியாத புதிராகவே உள்ளது.

கமல் - ரஜினி
கமல் - ரஜினி

இதற்கு உதாரணமாக காலா படத்தின் டிரெய்லரையும், அதே நேரத்தில் தூத்துக்குடி பிரச்னையில் ரஜினியின் வார்த்தைகளையும் எடுத்துக்கொள்ளலாம். படத்திற்கும் அவருடைய கருத்துக்கும் இடையே அவ்வளவு முரண்பாடுகள் இருந்ததை, சாதாரண மனிதர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. அதே நேரம் கமலின் ட்வீட்களும், அறிக்கைகளும் மக்களுக்கு எளிதில் புரியாதவை என விமர்சிக்கப்பட்டுவந்தது. ஆனால், ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்கிற தனது கருத்தில் தீர்க்கமாக இருந்ததோடு சாமான்யர்களுக்கான கருத்தாவும் இருந்தது.

காஷ்மீர் விவகாரத்தில் ரஜினி ``இந்திய ஜனநாயகத்துக்குக் கிடைத்த வெற்றி” என்று அமித் ஷாவின் சாணக்கியத்தனத்தைக் குறிப்பிட்டு வாழ்த்தியிருந்தார். கமல் ``ஜனநாயகப் படுகொலை”என்றுகூறி எதிர்ப்பைப் பதிவு செய்திருந்தார். இப்படி பலவற்றில் இருவரும் இருவேறு நிலைப்பாட்டை எடுத்தனர்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையை இருவருமே ஆதரித்திருந்தாலும் சென்ட்ரிசத்தைக் கடைப்பிடிக்கும் கமல் அதை வாபஸ் வாங்கினார். ஆனால், ரஜினியோ ``ஹேட்ஸ் ஆஃப் மோடி, நியூ இந்தியா இஸ் பார்ன்" என்று பிரதமர் மோடியை டேக் செய்து ட்வீட் செய்ததை யாரும் மறக்கமுடியாது. வருடா வருடம் நவம்பர் 8 வந்தால் அதை எடுத்து தூசி தட்டுகிறார்கள் நெட்டிசன்கள். எல்லா சமூகப் பிரச்னைகளுக்கும் மக்களின் குரலாக நிற்க முயலாதவரான ரஜினி குடியுரிமை சட்டத் திருத்தத்திலும் அதையே கடைப்பிடித்திருக்கிறார்.

கமல் - ரஜினி
கமல் - ரஜினி

மோடிக்கு எதிராக ஸ்டாலின், மம்தா, மாயாவதி போன்ற மதச்சார்பற்ற கட்சிகளை ராகுல் காந்தி தலைமையில் கட்டமைக்கும் வேலைகளை சில மாநிலக் கட்சிகளின் தலைவர்கள் செய்துவந்தனர். அப்போது ரஜினி ``ஒருத்தர பத்துப் பேர் சேர்ந்து எதிர்த்தா யார் பலசாலி” என்று கேட்டு மறைமுகமாக மோடிக்கான ஆதரவையும் பி.ஜே.பி -பின்னால் நான் நிற்கின்றேன் என்று குறியீடாகவும் பேசினார். அதே நேரம் கமலோ நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் மக்கள் நீதி மய்யம் தனித்து நிற்கும் என்று துணிச்சலாக அறிவித்து அனைத்துத் தொகுதிகளிலும் வேட்பாளர்களையும் களத்தில் இறக்கினார். தேர்தல் பிரசாரங்களிலும் பாரபட்சம் பார்க்காமல் பி.ஜே.பியை விமர்சித்தார்.

``வன்முறை தவறு" என்று ட்விட்டர் மூலம் உரிமைக்காகப் போராடும் மாணவர்களுக்கு ஒழுக்க அறிவுரை வழங்கியவர், குடியுரிமை திருத்தச் சட்டத்தின் மீதான தன் நிலைப்பாடு என்ன என்று இன்றுவரை கூறாமலேயே இருக்கிறார். இதையெல்லாம் தாண்டி அந்த ட்வீட் குறித்து சில கேள்விகள் எழுகின்றன. பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு ஆங்கிலத்தில் ட்வீட் போட்டவர், ஏன் இதைத் தமிழில் மட்டும் போட்டார்? இந்த அறிவுரையெல்லாம் தமிழக மக்களுக்கு மட்டும்தானா? `வன்முறை' என நீங்கள் குறிப்பிட்டது என்ன வன்முறை, யார் செய்தது? என்று விளக்கமாகக் குறிப்பிட்டிருக்கலாமே? இதே நேரத்தில் கமல் தனது காட்டமான எதிர்ப்பைத் தெளிவாகத் தெரிவித்தார்.

கமல் - ரஜினி
கமல் - ரஜினி

மற்றொருபுறம் மாணவர்களின் போராட்ட களத்திற்கே சென்று ஆதரவு கொடுத்து ஸ்கோர் செய்கிறார் கமல். யார்பக்கம் மக்கள் சாய்வார்கள் என்கிற எதார்த்தத்தை ரஜினி புரிந்து கொள்வாரா? மக்கள் இதையெல்லாம் கவனிக்கிறார்கள் என்ற எண்ணம் இல்லையா? 1996 தேர்தலில் ஜெயலலிதாவை வீழ்த்த காரணமான குரல், போகப்போக வலுவிழந்து போனதால் வெறுத்துப் போய், தன் இருப்பைப் பதிவு செய்ய, தான் எது கூறினாலும் பரபரப்பாக வேண்டும் என்ற நோக்கத்தில் நெகட்டிவ் பப்ளிஸிட்டியை ரஜினி பயன்படுத்துகிறாரோ என்ற ஐயமும் எழுகிறது. இவ்வளவு விவகாரங்களிலும் ஒரு சார்பாக கருத்துகளைச் சொல்லிவிட்டு, திடீரென ``என்னை யாரும் காவிமயமாக்க முடியாது” என்று அவர்கூறுவது நம் காதில்... ``நான் ஏற்கெனவே காவிதான். எனக்கு எப்படி மறுபடியும் காவிசாயம் பூசமுடியும்?” என்பது போல் கேட்கிறது.

அஸ்ஸாமில் சட்டவிரோதக் குடியேறிகளுக்கான முகாம்... இரட்டை வேடம் போடுகிறதா காங்கிரஸ்?

வன்முறை ஆதரவு என்பதையும் உண்மையில் வன்முறை நடத்துவது யார் என்பதையும் ஒருபுறம் வைத்துவிட்டு, `தங்கள் திரைப்படங்களில் சண்டைக்காட்சிகள் வைப்பீர்களா, எங்களுள் ஒருவனாக, மக்கள் தலைவனாகத் திரைப்படங்களில் தோன்றியதெல்லாம் நடிப்பா கோபால்?' போன்ற கேள்விகளும் நம்மிடம் எழுகின்றன. திரைப்படத்தோடு நிகழ்காலத்தை ஒப்பிடுவது அர்த்தமில்லையென்றாலும், தமிழகத்தின் பாமரமக்கள் ரஜினி என்னும் மனிதரை திரைவழியாக மட்டுமே இதுவரை அறிந்திருக்கிறார்கள். சொல்லப்போனால் அதுமட்டுமே வெகுஜனமக்களுக்குப் பிடித்தும் இருக்கிறது. அதன்மூலம் அவர்களின் ஆதர்ச நாயகனின் மீதுள்ள எதிர்பார்ப்பை வெளிக்காட்டுகிற மக்களுக்குப் பதில் கூற வெளியே வாருங்கள் ரஜினி. வெளியே என்பது அனைத்திற்குள்ளும் இருந்துதான், அனைத்துச் சாயங்களுக்குள்ளும் இருந்துதான்.

கமல் - ரஜினி
கமல் - ரஜினி

தொண்ணூறுகளில் நீங்கள் குரல் கொடுத்தபோது இருந்த களம் வேறு. இப்போது தேர்தலில் நின்றால் வெறும் ரசிகர்கள் ஓட்டிலேயே முதல்வர் ஆகி விடலாம் என்று நீங்கள் நினைத்துவிடாதீர்கள் ரஜினி. ரசிகர்களே பலரும் உங்கள் அரசியல் நிலைப்பாடுகளில் முரண்படுகிறோம். இதே நிலை நீடித்தால் 234 தொகுதிகளில் நிறுத்த வேட்பாளர்கள் பற்றாக்குறை வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

முதல் நாள், முதல் காட்சியில் திரையில் சூப்பர்ஸ்டாரைக் காணும்போது எப்படி மயிர் சிலிர்க்குமோ அதுபோல நிஜத்திலும் வீட்டு கேட்டிற்கு முன் தோன்றி கருத்து கூறும் போதெல்லாம் கையின் ரோமங்களை உற்றுப்பார்த்து காத்திருக்கிறோம் அது சிலிர்க்குமென. ஆனால், உங்கள் கருத்துகளால், அதே கைகளை உங்களுக்கு எதிராக கோஷமிட உயர்த்திட வைத்துவிடவேண்டாம் அரசியல்வாதி `ரஜினிகாந்த்' அவர்களே.

- ஜான் ஜே ஆகாஷ்

அடுத்த கட்டுரைக்கு