Published:Updated:

`புதிய இந்தியாவுக்கு வாழ்த்துகள்!' - ட்விட்டரை விட்டு வெளியேறிய அனுராக் காஷ்யப்

தினேஷ் ராமையா

குடும்பத்தினருக்கு வந்த கொலை மிரட்டல்களை அடுத்து தனது ட்விட்டர் கணக்கை டெலீட் செய்துவிட்டு அதிலிருந்து வெளியேறுவதாக இயக்குநரும் நடிகருமான அனுராக் காஷ்யப் அறிவித்திருக்கிறார்.

Anurag Kashyap
Anurag Kashyap

கும்பல் வன்முறைகளைத் தடுத்து நிறுத்தக்கோரி பிரதமர் மோடிக்கு, திரைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்கள் கடிதம் ஒன்றை கடந்த ஜூலை 23ம் ம்தேதி எழுதியிருந்தனர். இந்த விவகாரம் பெரும் விவாதத்துக்குள்ளானது. அதையடுத்து, சர்வதேச அரங்கில் நமது நாட்டை சிறுமைப்படுத்தும் முயற்சி இது எனக் கூறி கங்கணா ரணாவத் உள்ளிட்ட பிரபலங்கள் அந்தக் கடிதத்துக்கு பதில் கொடுத்திருந்தனர்.

Anurag Kashyap Tweet
Anurag Kashyap Tweet

ஜூலை 23ம் தேதி பிரதமருக்கு அனுப்பப்பட்டிருந்த கடிதத்தில் பாலிவுட் இயக்குநரும் நடிகருமான அனுராக் காஷ்யப்பும் கையெழுத்திட்டிருந்தார்.

Vikatan

இதனால், ட்விட்டரில் அவரை டேக் செய்து கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. மேலும், அவரது குடும்பத்தினருக்கும் மிரட்டல்கள் வரத்தொடங்கின. இதுதொடர்பாக அவர் போலீஸில் புகார் அளித்திருந்தார். இதுதொடர்பாக ட்விட்டரில் கடைசியாக சில பதிவுகளை இட்ட அவர், `உங்கள் பெற்றோர்களுக்கு போன்கால்கள் மூலம் கொலைமிரட்டல் வருவது மற்றும் உங்கள் மகள் ஆன்லைன் ட்ரோல்களுக்கு இலக்காவது ஆகியவை குறித்து யாரும் பேச நினைக்கமாட்டார்கள். இதற்கு எந்த ஒரு காரணமும் இருக்கப் போவதில்லை. குண்டர்களே ஆளப்போகிறார்கள். இந்த புதிய இந்தியாவில் இருக்கும் அனைவருக்கும் வாழ்த்துகள். நீங்கள் நன்றாக இருப்பீர்கள் என நான் நம்புகிறேன்'' என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Anurag Kashyap Tweet
Anurag Kashyap Tweet

மற்றொரு பதிவில், `நீங்கள் அனைவரும் மகிழ்ச்சியாகவும் வெற்றிகரமாகவும் இருக்க வாழ்த்துகிறேன். ட்விட்டரை விட்டு நான் வெளியேற இருப்பதால் இதுதான், எனது கடைசி ட்வீட்டாக இருக்கும். மனதில் நினைப்பதை அச்ச உணர்வின்றி பேச அனுமதிக்கப்படாதபோது, பேசாமலே இருக்கப்போகிறேன். விடைபெறுகிறேன்'' என்று பதிவிட்டிருக்கிறார். இதையடுத்து, இந்த ட்வீட்களின் ஸ்க்ரீன்ஷாட்டுகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. `நீங்கள், ட்விட்டருக்குத் திரும்ப வேண்டும்' என அவரது ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.