பினாமிகள் பெயரில் புதுப்புது சினிமா தயாரிப்பு நிறுவனங்களை பல அரசியல் புள்ளிகள் தமிழகத்தில் நடத்திவருகின்றனர் என்ற தகவல் சமீபத்தில் வருமான வரித்துறைக்குச் சென்றிருக்கிறது. இதையொட்டி, தமிழ்ச் சினிமாத்துறையை நோக்கி வருமானவரித்துறையின் பார்வை திரும்பியிருக்கிறது. சினிமா மற்றும் அரசியலின் பல முக்கியப் புள்ளிகளையும் பதைபதைக்க வைத்திருக்கிறது இந்தத் தகவல்.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSசில தினங்களுக்கு முன்பு சினிமா தயாரிப்பாளர் ஒருவர் “தமிழ் சினிமாவில் ஒரு சுனாமி உருவாகப் போகிறது. சுவாரசியமான காட்சிகள் காணக் கிடைக்கலாம்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். அவர் பதிவிட்டதுபோன்றே அரசு உயர் அதிகாரிகளுக்கு நெருக்கமான அரசியல் விமர்சகர்கள் சிலரும் பதிவிட்டனர். ஆனால், அதற்குப் பிறகு அதைப் பற்றிய பேச்சுகள் சமூகவலைதளத்தில் இல்லை. ஆனால், இந்த விவகாரம் சினிமா வட்டாரத்தில் பகீர் கிளப்பியிருக்கிறது.

இதுகுறித்து கோலிவுட்டின் விஷயமறிந்த மூத்த தயாரிப்பாளர் ஒருவரிடம் விசாரித்தபோது “ சமீபத்தில் தயாரிப்பாளர் ஒருவர் வீட்டில் நடந்த ரெய்டுக்கு விரைவில் ரியாக்ஷன் இருக்கப்போகிறது. பலரும் மறைமுகமாக இதைத்தான் குறிப்பிட்டிருக்கின்றனர். அங்கு கிடைத்த ஆவணங்கள் குறித்த வருமான வரித்துறை ரகசியமாக விசாரணையைத் தொடங்கியிருக்கிறது." என்றார். கடந்த சில தினங்ளுக்கு முன்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் தரப்பிலும் இந்தப் பேச்சு தீவிரமாக எழுந்திருக்கிறது. இதுகுறித்து வருமான வரித்துறை தரப்பில் விசாரித்தபோது “வருமானவரியை முறையாகச் செலுத்தாதவர்கள் குறித்து ஆண்டுதோறும் வருமானவரித்துறை ஒரு கணக்கெடுப்பை நடத்தும். அதில் குறிப்பிட்ட சிலரை மட்டும் தொடர்ந்து கண்காணிப்பில் வைத்திருப்போம். அந்த நபர்களால் கறுப்புப் பணம் சந்தையில் அதிகம் புழங்குவதற்கான வாய்ப்புகள் இருக்கும் என்பதால் `மானிட்டரி அக்கவுன்ட்' என்கிற அடிப்படையில் அவற்றைக் கண்காணிப்போம்.

தமிழ் சினிமாவில் கறுப்புப் பணம் அதிகமாக புழங்குவதாக எங்களுக்கு ஏற்கெனவே நிறைய புகார்கள் வந்துகொண்டிருந்தன. அதன் தொடர்ச்சியாகவே பிரபல மதுரை பைனான்சியருக்குச் சொந்தமான இடங்களில் வருமானவரித்துறை சோதனை நடந்தது. அரசியல் புள்ளிகளின் பணத்தை அவர் முதலீடு செய்கிறார் என்கிற குற்றச்சாட்டு காரணமாகத்தான் அந்த ரெய்டை நடத்தினோம். அந்த ரெய்டில் கைப்பற்றிய ஆவணங்களைப் பார்த்தபோது, பல தயாரிப்பாளர்கள் அவரிடம் பணம் வாங்கியிருப்பது தெரியவந்தது. ஆனால், பணம் வாங்கிய தயாரிப்பாளர்கள் வருமானத்தில் அந்த கணக்குகள் பலவும் காட்டப்படவில்லை என்பது தெரியவந்தது. பல முன்னணி தயாரிப்பு நிறுவனங்களின் பெயர்களும் அதில் இடம் பெற்றிருந்ததுதான் அதிர்ச்சியாக இருந்தது. இதைத்தொடர்ந்து தமிழ் சினிமா தயாரிப்பு நிறுவனங்களை கண்காணிக்கத் தொடங்கினோம்” என்கிறார்கள்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
சமீபத்தில் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சிலருக்கு வருமானவரித்துறை மூலம் சம்மன் அனுப்பப்பட்டிருக்கிறது. இதற்கு பின்னணியிலும் பலமான காரணங்கள் சொல்லப்படுகிறது. “தயாரிப்பாளர்கள் படத்தயாரிப்புக்கான பணத்தை முன்பு பைனான்சியர்களிடம் வாங்கிவந்தனர். ஆனால், தற்போது புதுப்புது நிறுவனங்கள் படத்தயாரிப்புகளில் ஈடுபடுகின்றன. இதற்கு பின்புலமாக அரசியல் புள்ளிகள் பலரும் இருக்கிறார்கள்.குறிப்பாக கடந்த ஆட்சியில் முக்கிய அமைச்சர்களாக இருந்த மூவரின் வாரிசுகள் சினிமா துறைக்குள் கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை முதலீடு செய்துள்ளனர். அவர்களிள் பினாமிகள் புதிய திரைப்பட நிறுவனங்களைத் தொடங்கி, அதன்மூலம் குறைந்த முதலீட்டில் படங்களைத் தயார்செய்து, கறுப்புப் பணத்தை வெள்ளையாக்கும் வேலையைச் செய்துவந்துள்ளார்கள்.

பத்திற்கும் மேற்பட்ட சினிமா நிறுவனங்கள் இப்படி பினாமி நிறுவனங்களாகச் செயல்படுவது தெரியவந்திருக்கிறது. கேரளாவிலிருந்தும் சில முதலீடுகள் தமிழ் சினிமாவுக்குள் இப்படி வந்திருக்கிறது. இந்த விவரங்களை எல்லாம் சேகரித்திருக்கிறோம். மேலும், தமிழ் சினிமாவிற்கு பைனான்ஸ் செய்யும் பணியை சில அரசியல் புள்ளிகள் சத்தமில்லாமல் செய்ய தொடங்கியிருக்கிறார்கள். திரைத்துறைக்குள் விரைவில் நடக்கபோகும் மாஸ் ரெய்டுக்கு பிறகு இந்த விவரங்கள் எல்லாம் வெளிச்சத்திற்கு வரும்." என்கிறார்கள்.

மேலும், "வருமான வரித்துறையினர் நடத்திவரும் இந்த விசாரணைப்படலம் குறித்து ஓரளவு திரைத்துறையினர் காதுகளுக்கும் தகவல் எட்டியிருக்கிறது. குறிப்பாக சமீபத்தில் சொந்தப் படம் தயாரிக்கத் தொடங்கிய சீனியர் நடிகை, நகைச்சுவைப் படங்களுக்குப் பெயர்போன நடிகர் உள்ளிட்டவர்கள் படத்தயாரிப்பு நிறுவனங்களை தொடங்கியதற்குப் பின்னால், அரசியல் பெரும் புள்ளியின் அனுகூலம் இருந்ததை வருமான வரித்துறை கண்டுபிடித்துள்ளனர்.மேலும், சில நடிகர்களின் மேலாளர்களாக இருந்தவர்கள் திடீரென தயாரிப்பாளர்களாக மாறியதற்குப் பின்னாலும் இந்த பினாமி பண முதலீடுதான் காரணமாக இருக்கும் என்றும் வருமான வரித்துறை நினைப்பதால், கோலிவுட்டை குறிவைத்து விரைவில் வருமான வரித்துறையின் நடவடிக்கை வேகம் எடுக்க போகிறது" எனச் சொல்கிறார்கள்.