Published:Updated:

`காந்தியின் கொள்கை; சீன அதிபர் சந்திப்பு; நிறைய செல்ஃபிகள்’ - பிரதமரைச் சந்தித்த பாலிவுட் பிரபலங்கள்

மகாத்மா காந்தியின் பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக நடந்த நிகழ்ச்சியில் பல்வேறு பாலிவுட் பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

மோடி - திரை பிரபலங்கள் சந்திப்பு
மோடி - திரை பிரபலங்கள் சந்திப்பு ( Twitter/@narendramodi )

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக நேற்று டெல்லியில் பிரதமர் மோடி, பாலிவுட் பிரபலங்களுடன் கலந்துரையாடினார். பிரதமர் இல்லத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் பாலிவுட்டின் முன்னணி நடிகர்களான ஷாருக் கான், அமீர் கான், நடிகைகள் கங்கனா ரனாவத், சோனம் கபூர், இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி, ராஜ்குமார் சந்தோஷி, அஸ்வினி ஐயர் திவாரி, தயாரிப்பாளர்கள் போனி கபூர், எக்டா கபூர், ஜெயந்திலால் காடா போன்ற பல பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

மோடி - திரை பிரபலங்கள் சந்திப்பு
மோடி - திரை பிரபலங்கள் சந்திப்பு
Twitter/@narendramodi

இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “படைப்பாற்றல் சக்தி என்பது மிகவும் அளப்பரியது, அது நமது தேசத்தின் நலனுக்காகப் பயன்படுத்தப்படுவது அவசியம். அந்த வகையில் நமது தேச தந்தை மகாத்மா காந்தியடிகளின் போதனைகளைப் பரப்பும் விஷயத்தில் திரைப்படமும் தொலைக்காட்சிகளும் சிறப்பான முறையில் செயல்பட்டு வருகின்றன.

1947 -ம் ஆண்டு வரையிலான நாட்டின் சுதந்திரப் போராட்ட எழுச்சியையும் அதன் பிறகு நாடு அடைந்த வளர்ச்சியையும் திரைத்துறை எடுத்துரைக்க வேண்டும். உங்கள் படைப்பு முயற்சிகளை உறுதிப்படுத்த அரசாங்கத்தின் தரப்பிலிருந்து உதவுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்” என்று பேசினார்.

அமீர் கான் - மோடி
அமீர் கான் - மோடி
Twitter/@narendramodi

பின்னர், தான் மாமல்லபுரத்தில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்தது பற்றியும், அதிபர் ‘டங்கல்’ போன்ற இந்திய சினிமாவின் சிறப்பை தன்னிடம் கூறியது பற்றியும் திரை பிரபலங்களிடம் பகிர்ந்துகொண்டார் மோடி.

`என் நண்பர்' அஜித்; `அற்புதம்' விஜய்... தமிழ்ப் படம்! - ஷாருக் கான் ஷேரிங்ஸ்

இவரையடுத்து பேசிய நடிகர் அமீர் கான், “தேச தந்தை மகாத்மா காந்தியின் பிறந்தநாளை வெகு சிறப்பாகக் கொண்டாடவேண்டும் என்று இந்த முயற்சியை மேற்கொண்ட பிரதமரை முதலில் பாராட்ட விரும்புகிறேன். படைப்பாற்றல் கொண்ட நாம் செய்யக்கூடியவை ஏராளம். நாங்கள் இன்னும் அதிகமான, தரமான திரைப்படங்களைத் தருவோம் எனப் பிரதமருக்கு உறுதியளிக்கிறேன்” எனப் பேசினார்.

மோடி - திரை பிரபலங்கள் சந்திப்பு
மோடி - திரை பிரபலங்கள் சந்திப்பு
Twitter/@narendramodi

``இது போன்ற விஷயங்களை (மகாத்மா காந்தியின் பிறந்தாள்) கொண்டாட எங்கள் அனைவரையும் அழைத்த பிரதமருக்கு நன்றிகள். மகாத்மா காந்தியை இந்தியாவிற்கும் உலகிற்கும் மீண்டும் அறிமுகப்படுத்தவேண்டும் என நினைக்கிறேன்” என்று கூறினார் நடிகர் ஷாருக் கான்.

பின்னர், இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைத்து பிரபலங்களும் பிரதமருடன் நின்று குரூப் போட்டோ எடுத்துக்கொண்டனர். இதையடுத்து அனைவரும் தனித்தனியாக பிரதமருடன் செல்ஃபிகளையும் எடுத்துக்கொண்டனர்.

மோடி - திரை பிரபலங்கள் சந்திப்பு
மோடி - திரை பிரபலங்கள் சந்திப்பு

நேற்று நடந்த இந்த நிகழ்ச்சியின் புகைப்படங்களை அனைத்து பிரபலங்களும் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளனர். நேற்று முதல் இந்தப் புகைப்படங்கள்தான் அரசியல் மற்றும் சினிமா வட்டாரத்தின் வைரல்.