Published:Updated:

பிகில் திகில்!

விஜய்
பிரீமியம் ஸ்டோரி
விஜய்

வெறி ஏற்றிய விஜய்... தெறிக்கவிடும் அரசு!

பிகில் திகில்!

வெறி ஏற்றிய விஜய்... தெறிக்கவிடும் அரசு!

Published:Updated:
விஜய்
பிரீமியம் ஸ்டோரி
விஜய்

திரைப்படத்தை ‘ஹிட்’டடிக்கவைப்பதற்காக அரசியல் பேசுவது ஒரு ரகம். அரசியல்வாதிகளால் பேசப்படுவதால் படம் ‘ஹிட்’டடிப்பது இன்னொரு ரகம்.

‘ஒவ்வொரு படம் ரிலீஸாகும்போதும் அரசியல் பேசி படத்துக்கு புரமோஷன் கொடுப்பார் ரஜினி’ என்ற குற்றச்சாட்டு, நீண்டகாலமாகவே இருக்கிறது. அதே பாணியை நடிகர் விஜய்யும் சமீபகாலமாகக் கடைப்பிடிக்கிறார் என்ற பேச்சு கிளம்பிவிட்டது. இதனாலேயே அரசியல்வாதிகள் தொடங்கி மத்திய, மாநில அரசுகள் வரை எதிர்ப்பைச் சம்பாதித்துவருகிறது விஜய் தரப்பு!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பேசாதவர் பேசினார்!

பிகில் திகில்!

2017 தீபாவளிக்கு விஜய் நடிப்பில் ‘மெர்சல்’ கொடுத்த இயக்குநர் அட்லி, இந்த வருடம் ‘பிகில்’ தரப்போகிறார். பொதுவாகவே ஷூட்டிங் பிரேக்கில் விஜய் அதிகம் பேச மாட்டார். தனிப்பட்ட முறையில் தன்னைப் பற்றி யாராவது விமர்சனம் செய்தால்கூட, அதை கண்டு கொள்ளாமல் தவிர்த்து விடுவார். தவிர, அவர் ரொம்பவே ரிசர்வ் டைப். அப்படிப்பட்ட விஜய்யையே கொந்தளிக்க வைத்தவர், ஹெச்.ராஜா.

‘மெர்சல்’ படத்தில் ஜி.எஸ்.டி வரி குறித்து விஜய் வசனம் பேசுவதைப் பார்த்து வெகுண்டெழுந்த ஹெச்.ராஜா, ‘ஜோசப் விஜய்’ என்று தனிப்பட்ட ரீதியில் விஜய்யை விமர்சித்தார். விஜய் வழக்கம்போல் மெளனம் காப்பார் எனப் பலரும் நினைக்க... ‘‘ஆமாம், என் பெயர் ஜோசப் விஜய்தான். நான் ஒன்றும் மறுக்கவில்லையே’’ என்றார் தடாலடியாக. ஹெச்.ராஜா விமர்சனத்துக்குப் பிறகு தனது கடிதத்தில் ‘ஜோசப் விஜய்’ என பகிரங்கமாகவே அறிக்கை வெளியிட்டார். இதற்கெல்லாம் சிகரம் வைத்ததுபோல், சில வாரங்களுக்கு முன்பு திரைப்பட விழா ஒன்றில் கலந்துகொண்ட விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், ‘‘இந்தியாவில் இனிமேல் எல்லோரும் காவி வேட்டி கட்டிக்க வேண்டியதுதான்’’ என்று பேசினார்.

ரஜினிக்கு மட்டும் ‘ஓ.கே’

ந்தச் சூழ்நிலையில்தான் ‘பிகில்’ பட ஷூட்டிங்குக்கும் பல பிரச்னைகள் வந்தன. ‘பிகில்’, கால்பந்து விளையாட்டு வீராங்கனைகள் பற்றிய கதை. இதில், பயிற்சியாளர் வேடத்தில் விஜய் நடிக்கிறார். இந்தப் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியை பிரமாண்டமாகப் படமாக்கத் திட்டமிட்டது படக்குழு. டெல்லியில் உள்ள நேரு விளையாட்டு மைதானத்தில் அனுமதி வாங்கும் வேலையில் தயாரிப்பு நிர்வாகிகள் இறங்கினர். ஏற்கெனவே இதே மைதானத்தில்தான் ‘2.0’ படத்துக்கான ரஜினி, அக்‌ஷய்குமார் மோதும் க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சி படமாக்கப் பட்டது. அங்கு அனுமதி வாங்குவது, சாதாரண விஷயமல்ல. படப்பிடிப்பு நடத்துவதற்கு ஒரு வருடத்துக்கு முன்பே டெல்லி ஆட்சியரிடம் அனுமதி பெறவேண்டும். ‘2.0’ படத்துக்கான படப்பிடிப்பு இரண்டு மாதம் நடந்தது. அதற்கு அனுமதி கொடுப்பதற்கு முன்பாக, அகில இந்திய அளவில் நடக்கும் விளையாட்டுப் போட்டிகள் எந்தெந்தத் தேதிகளில் நடைபெறுகின்றன என்பதைப் பொறுத்து, அந்தத் தேதிகள் தவிர மற்ற நாள்களில் மட்டுமே ஷூட்டிங் நடத்த அனுமதி வழங்கினர். ஆனால், ‘பிகில்’ படத்துக்கு எவ்வளவோ முட்டிமோதியும் அனுமதி கிடைக்கவில்லையாம்.

பிகில் திகில்!

அதன் பிறகு சென்னையில் உள்ள எஸ்.எஸ்.என் கல்லூரி மைதானத்தில் விஜய், கால்பந்து விளையாட்டு வீராங்கனைகள் பங்குபெறும் காட்சியைப் படமாக்கினர். சென்னை அம்பத்தூர் அருகில் உள்ள இன்னொரு கல்லூரியின் மைதானத்திலும் செட் போட்டு படம் எடுக்கப்பட்டது. விஜய் நடிக்கும் காட்சிகளின் படப்பிடிப்பு, ஆகஸ்ட் 13-ம் தேதியுடன் நிறைவடைந்தது. இப்படியாக தீபாவளிக்கு ‘பிகில்’ ரிலீஸாக இருக்கும் நிலையில், படத்தை ரிலீஸ் செய்யவிடாமல் தடுப்பதற்கான வேலைகள் தொடங்கியிருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பான பேச்சு கிளம்பியிருக்கிறது.

இதற்கு, ‘பிகில்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் விஜய், ‘`எவனை எங்க உட்காரவெக்கணுமோ அவனை அங்கெங்க கரெக்டா உட்காரவெச்சீங்கன்னா, இந்த கோல்டு மெடல் எல்லாம் தானா வரும்’’ என்று ஒருமையில் அரசியல் ‘வெறி’கொண்டு பேசிய பேச்சுதான் காரணம் என்கின்றனர், அரசு தரப்பில் நடக்கும் உள்விவகாரங்களை அறிந்தவர்கள். குறிப்பாக, அந்த விழாவில் சுபஸ்ரீ மரணத்தைக் குறிப்பிட்டு, ‘‘யார்மீது கோபப்பட வேண்டுமோ அவர்கள்மீது கோபப்படாமல், யார் யார்மீதோ பழிபோடுகிறார்கள்’’ என்றும் அரசியல் காரம் ஏற்றியவர் இறுதியாக, ‘‘அரசியலில் புகுந்து விளையாடுங்கள். ஆனால், விளையாட்டில் அரசியல் வேண்டாம்” என்று கொந்தளித்தார்!

விஜய்யின் இந்தப் பேச்சில் கடுப்பான அமைச்சர் ஜெயக்குமார், ‘‘விஜய், வாய்க்கு வந்தபடி பேசுகிறார்’’ என்று பதிலடி கொடுத்தார். தொடர்ந்து அ.தி.மு.க கொள்கை பரப்புச் செயலாளர் வைகைச்செல்வனும், ‘‘தனது படத்தை ஓடவைக்கவே விஜய் விளம்பரம் தேடுகிறார்’’ என்றார்.

அ.தி.மு.க-வுக்கும் விஜய்க்கும் இடையிலான மோதல் புதிதல்ல. ஜெயலலிதா ஆட்சியில் விஜய் நடித்த ‘தலைவா’ திரைப்படம் ரிலீஸாவதற்கு முன்பு, அந்தப் படத்தின் தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின், சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள ஜெயின் கல்லூரி மைதானத்தில் விஜய்யின் பிறந்த நாளை பிரமாண்டமாகக் கொண்டாடத் திட்டமிட்டார். ‘கட்-அவுட்’களைப் பார்த்து ஜெயலலிதா கொந்தளித்ததால், விழா ரத்துசெய்யப்பட்டது. தவிர, படத் தலைப்பின் கீழ், ‘TIME TO LEAD’ என்று சப் டைட்டில் போட்டதும் ஜெயலலிதாவைக் கோபப்பட வைத்தது. தயாரிப்புத் தரப்பு தலைமைச் செயலகம் சென்று ஜெயலலிதாவைச் சந்தித்து ஒருவழியாக சமாதானம் செய்த பிறகே, படத்தை ரிலீஸ் செய்ய முடிந்தது.

ரசிகர்கள் மீது தாக்குதல்!

கடந்த ஆண்டு வெளியான ‘சர்கார்’ படத்திலும் பஞ்சாயத்து. அந்தப் படத்துக்கான ஆடியோ வெளியீட்டு விழாவை நடத்துவதற்கு நேரு உள்விளையாட்டு அரங்கம், கலைவாணர் அரங்கம் என எந்த அரசுக் கட்டடத்திலும் அனுமதி தரப்படவில்லை. இதனால் சாய்ராம் இன்ஜினீயரிங் கல்லூரிக்கு விழா மாற்றப்பட்டது. ‘சர்கார்’ ரிலீஸானதும் கட்-அவுட்களைக் கிழித்துப்போட்டது அ.தி.மு.க தரப்பு. `பிகில்’ ஆடியோ வெளியீட்டு விழாவில் விஜய் பேச்சில் கொந்தளித்த அரசு, விழாவுக்கு வந்திருந்த விஜய் ரசிகர்களை போலீஸை வைத்து தாக்குதல் நடத்தி, கோபத்தை வெளிக்காட்டியது. தொடர்ந்து சாய்ராம் கல்லூரிக்கும் நோட்டீஸ் பறந்துள்ளது.

அக்டோபர் 27-ம் தேதி தீபாவளி தினத்தில் ‘பிகில்’ ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பெரிய நடிகர்கள் படம் எதுவும் இல்லாததால், ‘இந்தத் தீபாவளி விஜய் தீபாவளிதான்’ என்று விஜய் ரசிகர்கள் கொண்டாட்டத்துக்குத் தயாராக இருக்கிறார்கள். இந்த நிலையில், சென்சாரில் படத்துக்குத் தடைபோட பா.ஜ.க அரசும் காத்திருப்பதாகத் தகவல் பரவியிருக்கிறது. இதை உறுதிப்படுத்தும்வகையில் அ.தி.மு.க சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டு, தற்போது பா.ஜ.க-வின் பிரசார பீரங்கிபோல வலம்வரும் எம்.பி-யான சசிகலா புஷ்பா, ‘பிகில்’ படத்தைப் புறக்கணிக்குமாறு பகிரங்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஆடியோ வெளியீட்டு விழா நடந்த சாய்ராம் கல்லூரிக்கு அரசு தரப்பில் நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டதை, மறைமுகமாக விஜய்க்கு விடுக்கப்பட்ட மிரட்டலாகத்தான் விஜய் ரசிகர் பட்டாளம் கருதுகிறது. அ.தி.மு.க-வும், ஏற்கெனவே விஜய்மீது கோபத்தில் இருந்த பா.ஜ.க-வும் கூட்டணி போட்டுக்கொண்டு இந்தப் படத்தை முடக்க நினைப்பதாக விஜய் ரசிகர்கள் வட்டாரத்தில் தகவல் பரவிவருகிறது. கல்லூரிக்கு நோட்டீஸ், சசிகலா புஷ்பா அறிக்கை இரண்டும் இதன் வெளிப்பாடு என்றே அவர்கள் கருதுகின்றனர். படத்தின் போஸ்டரில் இறைச்சி வெட்டும் மரக்கட்டையின் மீது விஜய் கால் வைத்திருப்பது போன்ற காட்சியைக் கண்டித்து வியாபாரிகள் சங்கத்தினர் நடத்திய போராட்டத்தின் பின்னணியிலும் ஆளுங்கட்சியின் தூண்டுதல் இருக்கிறது என்று விஜய் ரசிகர்கள் வெளிப்படையாகவே குற்றம்சாட்டுகின்றனர்.

கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த விஜய் ரசிகர் மன்ற நிர்வாகி ஒருவர் நம்மிடம், ‘‘ `பிகில் படத்தை இந்துக்களே புறக்கணியுங்கள்’ என்று சசிகலா புஷ்பா திடீரென அறிக்கை விட்டிருக்கிறார். பட விளம்பரத்தில் விஜய்யின் கழுத்தில் சிலுவை மாலை போட்டிருப்பது பி.ஜே.பி-க்கு எரிச்சலை உண்டாக்கியிருப்பதாகச் சொல்கின்றனர். விஜய், கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்தவர் என்றரீதியில் அவர் அறிக்கை விட்டிருப்பதைப் பார்க்கும்போது, இந்துக்கள், கிறிஸ்துவர் என்று பிளவை ஏற்படுத்தி படத்தை ஓடவிடாமல் செய்ய நடக்கும் முயற்சியாகவே கருதுகிறோம்’’ என்றார்.

பிகில் திகில்!

இவரைப்போலவே கொந்தளித்த ரசிகர் மன்ற நிர்வாகிகள் பலரும், அமைச்சர்களுக்கும் ஆளுங்கட்சிக்கும் மன்றம் சார்பில் பதிலடி தரவேண்டும் என்று விஜய்யிடம் கேட்டதற்கு ‘நோ’ சொல்லிவிட்டார் எனத் தெரிகிறது. தன்னிடம் பேசிய முக்கிய நிர்வாகிகளிடம், ‘‘நான் லண்டன் போயிருப்பதாக நினைக்க வேண்டாம். தமிழகத்தில் நடப்பதை கவனித்துக்கொண்டுதான் இருக்கிறேன். நீங்கள் அமைதியாக இருங்கள். நானே சந்திக்கிறேன்’’ என்று சொல்லியிருக்கிறார்.

அதேபோல அக்டோபர் 1 அன்று லண்டனில் இருந்து சென்னை திரும்பியதும், ரஜினியை போனில் தொடர்புகொண்டு பேசியதாகவும் ஒரு தகவல் ஓடுகிறது. ஏற்கெனவே, நடிகர் சூர்யா புதிய கல்விக்கொள்கையை விமர்சித்துப் பேசினார். அதற்கு, ‘காப்பான்’ ஆடியோ ரிலீஸ் விழாவில் ரஜினி தனது ஆதரவைத் தெரிவித்தார். அதேபோல், தற்போது ‘பிகில்’ பட ஆடியோ வெளியீட்டு விழாவில் ‘ஏன் அப்படிப் பேசினார்?’ என்று ரஜினியிடம் விளக்கியிருக்கிறதாம் விஜய் தரப்பு. அப்போது மத்திய, மாநில அரசுகள் தரப்பில் படத்துக்குத் தரப்படும் டார்ச்சர்கள் குறித்தும் சொல்லப்பட்டதாம். அதற்கு ரஜினி தரப்பில், ‘‘வேலைகளை கவனியுங்கள். பிறகு பார்க்கலாம்’’ என்று சொல்லப்பட்டதாம்.

அரசு கட்டுப்பாட்டில் ‘பிகில்’

தீபாவளிக்கு ‘பிகில்’ ரிலீஸாகும் நிலையில், ஆன்லைனில் மட்டுமே டிக்கெட் என்ற அறிவிப்பை வெளியிட்டு, தியேட்டர்கள் முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டில் தமிழக அரசு கொண்டுவர திட்டமிட்டிருக்கிறது. இதனால் தீபாவளி அன்று அதிக விலைக்கு டிக்கெட் விற்பது, நள்ளிரவு, அதிகாலைக் காட்சிகள் திரையிடுவது தடுக்கப்படலாம் என்றும் விஜய் ரசிகர்கள் இடையே கவலை எழுந்திருக்கிறது.

பிகில் திகில்!

விஜய் ரசிகர் மன்றத்தின் முக்கிய பிரமுகர் ஒருவரிடம் பேசினோம். ‘‘ `பிகில்’ ஒன்றும் அரசியல் படமல்ல; பெண்களுக்கு நம்பிக்கையூட்டுகிற படம். அதைத் தடுக்க நினைப்பது நியாயமில்லை. இந்த அரசியல் சலசலப்புகளுக்கு எல்லாம் விஜய் ஒருபோதும் அஞ்ச மாட்டார். கருணாநிதி, ஜெயலலிதா இருந்தபோது மரியாதை நிமித்தமாக அரசியல் கருத்துகளை அடக்கிவாசித்தார். இப்போது ஆட்சியில் இருப்பவர்களின் பவர் என்ன, விஜய் மக்கள் இயக்கத்தின் பவர் என்ன என்பதை எங்கள் தளபதி புரியவைப்பார். எங்களுக்கு தொடர்ந்து டார்ச்சர் தந்தால் பொறுக்க மாட்டோம். என்ன செய்வோம் என்பதை, பொறுத்திருந்து பாருங்கள்’’ என்று கொந்தளித்தார்.

பா.ஜ.க மாநில நிர்வாகி ஒருவரிடம் இதுபற்றிக் கேட்டதற்கு, ‘‘இன்னும் சென்சாருக்கே படம் செல்லவில்லை. அதற்குள் அலம்பல் பண்ணுகிறார்கள்’’ என்றார்.

செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜுவிடம், ‘‘ `பிகில்’ பட ரிலீஸுக்கு முட்டுக்கட்டை போடும் முயற்சியில் நீங்கள் இறங்கியிருப்பதாகச் சொல்கிறார்களே?’’ என்று கேட்டோம்.

‘‘அப்படியெல்லாம் ஒண்ணுமே கிடையாது. அவர் ஒரு கருத்தைத் தெரிவித்தார். அதற்கு பதில் சொன்னோம். அவ்வளவுதான். ‘மெர்சல்’ படத்துக்கு சிக்கல் வந்தபோதுகூட, படம் ரிலீஸாக நாங்கள் உதவினோம். ஒரே வரியில சொல்லணும்னா... படம் ஓடுறதுக்காக சீஃப் பப்ளிசிட்டி தேடுறாங்க’’ என்றார்.

ரிலீஸாகும் முன்பே ‘திகில்’ கிளப்புகிறது `பிகில்’!