Published:Updated:

மதுரைத் தெருக்களின் வழியே - 10: சங்கம் வைத்துத் தமிழை வளர்த்த மதுரையில் சினிமா வந்த கதை தெரியுமா?

மதுரை சினிமா

திரைப்படம் ஒரு கலை வடிவம் என்ற புரிதல் இல்லாமல் அதில் இடம்பெறுகிற சம்பவங்களை நிஜம் என்று நம்புகிற மதுரைக்கார்கள் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் அதிகம்.

மதுரைத் தெருக்களின் வழியே - 10: சங்கம் வைத்துத் தமிழை வளர்த்த மதுரையில் சினிமா வந்த கதை தெரியுமா?

திரைப்படம் ஒரு கலை வடிவம் என்ற புரிதல் இல்லாமல் அதில் இடம்பெறுகிற சம்பவங்களை நிஜம் என்று நம்புகிற மதுரைக்கார்கள் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் அதிகம்.

Published:Updated:
மதுரை சினிமா
சித்திரை மாதம் கொளுத்துகிற வெயிலில் அந்தப் பெரிய கட்டடம் விரைத்து நிற்கின்றது. சுற்றிலும் பெரிய காம்பவுண்டுச் சுவர். கவுன்ட்டரில் நுழைந்து, சிறிய பொந்திற்குள் காசைத் திணித்து, நுழைவுச்சீட்டை வாங்கி, வாயிலில் நிற்பவரிடம் தந்து, மறுபாதியைச் சட்டைப் பைக்குள் பத்திரப்படுத்தி மங்கலான இருளுக்குள் நுழைந்து, இருக்கையைத் தேடி உட்கார்கிறேன். கிசுகிசுப்பான தொனியில் பேச்சுகள். காத்திருத்தல் காரணமாக 'எப்போ' என்ற மனதில் பரபரப்பு; உடலில் மெல்லிய உஷ்ணம் பரவுகிறது. எதிரே பரந்த வெண்திரை. திடீரென மின்சார மணியின் ஒலி. ஆங்காங்கே கைதட்டல். விசிலொலி காதைப் பிளக்கிறது. எல்லோருடைய கண்களும் வெண்திரையில் உறைந்துள்ளன.

வானத்திலிருந்து பூமிக்கு வரவிருக்கும் தேவனைப் பார்ப்பது போன்ற ஆவலில் கவனம் முழுக்க ஒருமுகப்படும்போது, திரையரங்க விளக்குகள் முழுக்க அணைகின்றன. ஏதோ நடக்கப் போகிறதென்ற புதிராக நகரும் கணங்களுக்கிடையில், ஒளிர்ந்திடும் திரை அதியற்புதமாக எல்லோருக்குள்ளும் புனைவுகளை உருவாக்குகின்றது. எங்குமான பேரிருள் சூழ்ந்துள்ளவேளையில், ஒளியின் வழியே புனையப்படும் கதையுலகு, உடன் வந்துள்ள எல்லோரையும் மறக்கடிக்கிறது. நானும் திரைப்புனைவுமென ஒரு புள்ளியில் இணைந்து மெய் மறந்து போகிறேன். வெப்பம் தகிக்கும் தட்பவெட்பநிலைகூட உறுத்தாத சூழலில் மனமெங்கும் பட்டாம் பூச்சிகள் பறக்கின்றன. இடைவேளையில்தான் கால்கள் தரையில் பரவுகின்றன. அறுபது நிமிடங்கள் வேறு ஏதோ மாயவுலகில் பயணித்த நினைவு. திரைப்படத்தின் மாயக் கரத்தின் பிடியில் இருந்து வெளியேறிய உணர்வு, உடலெங்கும் பரவுகிறது.

மதுரை விக்டோரியா எட்வர்டு மன்றம்
மதுரை விக்டோரியா எட்வர்டு மன்றம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சங்கக் காலத்திலிருந்து தமிழ் மொழியின் தலைநகரமாகவும் ஆண்டு முழுவதும் திருவிழா கொண்டாடப்படுகிற நகரமாகவும் விளங்குகிற மதுரை நகரின் இன்னொரு முகம் திரைப்படத்துடன் தொடர்புடையது. செயற்கைக்கோள் தொலைக்காட்சி அறிமுகமாவதற்கு முன்னர் மதுரை என்றால் திரைப்படங்களும் தியேட்டர்களும் எனது நினைவுக்கு வருகின்றன. எழுபதுகளில் மதுரையில் பெரும்பாலான இளைஞர்களும் நடுத்தர வயதினரும் சினிமா ரசிகர்கள் அல்லது பைத்தியங்கள். அன்றைய காலகட்டத்தில் எப்பொழுதும் சினிமா பற்றிய நினைவுடன் திரைப்பட நடிகர்களைக் கொண்டாடுகிற மனநிலையுடன் பலர் இருந்தனர்.

திரைப்படம் ஒரு கலை வடிவம் என்ற புரிதல் இல்லாமல் அதில் இடம்பெறுகிற சம்பவங்களை நிஜம் என்று நம்புகிற மதுரைக்கார்கள் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் அதிகம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

திரைப்படத்தில் நடிக்கிற நடிக்கிற நடிகர், நடிகையர்களை எல்லோரையும் போல மனிதர்கள் என்று கருதாமல், அவர்கள்மீது பலருக்கும் அளவற்ற நேசமும் காதலும் இருக்கிறது. திரையரங்கில் வெண்திரையில் கதாநாயகனாகத் தோன்றுகின்ற நடிகரின் பிம்பம்மீது இளைஞர்களான ரசிகர்களுக்கு ஏன் இவ்வளவு வெறி என்பது இப்போதும் புலப்படவில்லை. கதாநாயகியாக நடிக்கிற நடிகைகள்மீது அளவற்ற காதலுடன் தத்தளிக்கிற சராசரி ரசிகரின் மனோபாவம் பாலியல் வறட்சியின் இன்னொரு வெளிப்பாடு என்றே தோன்றுகிறது.

கருணாநிதி - எம்.ஜி.ஆர்
கருணாநிதி - எம்.ஜி.ஆர்

திரைப்படத்தைப் பார்த்துவிட்டு, அது சித்திரிக்கிற காட்சிகளுக்குள் மூழ்குகிற மனப்பான்மை உளவியல் ரீதியில் ஆய்விற்குரியது. திரைப்படங்களில் நல்லவராக மட்டுமே தோன்றுகிற எம்.ஜி.ஆர். மீது கட்டமைக்கப்பட்ட பிம்பம், அரசியல்ரீதியில் அவருக்கு வெற்றியைத் தந்தது. சாகச நாயகனாகத் திரையில் மின்னிய எம்.ஜி.ஆருக்கு மதுரையில் ரசிகர்கள் அதிகம். அ.தி.மு.க.கட்சி மதுரையில் செல்வாக்குடன் விளங்கியதற்கு அவருடைய திரைப்படங்கள் முக்கியக் காரணம். கலைஞர் கருணாநிதியின் கதை - வசனத்தில் உருவான திரைப்படங்கள் அவருடைய ஆளுமை உருவாக்கத்தில் செல்வாக்குச் செலுத்தின.

எழுபதுகளில் தினமும் மூன்று காட்சிகளும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நான்கு காட்சிகளும் திரையிடப்பட்ட திரைப்படங்கள் மதுரை மக்களுக்குப் பொழுதைப் போக்கிட உதவின. மகா சிவராத்திரி, சித்திரைத் திருவிழாவில் வைகை ஆற்றில் அழகர் குதிரை வாகனத்தில் இறங்குகிற நாள் போன்ற விசேஷ நாள்களில் நள்ளிரவுக் காட்சி அதிகாலை ஒரு மணிக்குத் தொடங்கியது. மக்கள் கூட்டம் திரையங்குகளை எப்பொழுதும் மொய்த்தது. சென்னை மாதிரி மெரினா கடற்கரை மதுரையில் இருந்திருந்தால் மதுரைக்காரர்கள் இவ்வளவு சினிமா பித்துப் பிடித்து அலைந்திருக்க மாட்டார்கள் என்று நண்பர்களுக்குள் கேலியாகப் பேசிக்கொள்வோம்.

சங்கரதாஸ் சுவாமிகள்
சங்கரதாஸ் சுவாமிகள்

சங்கம் வைத்துத் தமிழை வளர்த்த மதுரையில் கலையும் இலக்கியமும் செழித்தோங்கியிருக்க வேண்டும். பண்டைக்காலத்தில் தமிழ்ச் சங்கம் நிறுவிய சூழல் பற்றிய இறையனார் களவியல் உரையைப் புனைவு என்று ஒதுக்கிட இயலாது. ஜைன சமயத் துறவியரின் சங்கத்துக்கு மாற்றாகப் பிற்காலத்தில் சைவ சமயத்தினர் தமிழ்ச் சங்கத்தைப் புனைவாகக் கட்டமைத்தனர். வரலாற்று ரீதியில் இலக்கியத்துடன் பல்வேறு நிகழ்த்துக் கலைகளும் மதுரையில் சிறப்புடன் விளங்கியிருக்க வாய்ப்புண்டு. இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் மதுரை நகரில் சங்கரதாஸ் சுவாமிகளின் நாடகங்கள், கரகாட்டம், ராஜா ராணி ஆட்டம், குறவன் குறத்தி ஆட்டம், லாவணி போன்ற நிகழ்த்துக் கலைகள் நிகழ்த்தப்பட்டன. அவை, பெரிதும் கோயில்களைச் சார்ந்து நடத்தப்பட்டன. மதுரை மண்ணுக்குரிய நிகழ்த்துக் கலை மரபு பெரிய அளவில் ஏன் இல்லை என்ற கேள்வி தோன்றுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கி.பி. 1333-ம் ஆண்டில் மதுரையில் டில்லி சுல்தான்களின் ஆட்சி ஏற்பட்டது; அலாவுதீன் கில்ஜியின் படைத்தளபதியான மாலிக்காபூர் அதிகாரத்தைக் கைப்பற்றினார். அதற்குப் பின்னர் தெலுங்கு பேசும் நாயக்கர், பாரசீகம், உருது பேசும் நவாபுகள், ஆங்கிலேயர் போன்றோரின் ஆட்சி மதுரையில் நிலவியபோது தமிழ் மொழியும் பாரம்பரியமான கலைகளும் புறந்தள்ளப்பட்டன. நாயக்கர் ஆட்சியில் வைதிக சனாதனம் மேலாதிக்கம் பெற்றது; சம்ஸ்கிருதமும் தெலுங்கும் முன்னிலைப்படுத்தப்பட்டன. தமிழ் மொழி தன்னைத் தக்க வைத்துக்கொள்ள பெரும்பாடுகள் பட்டது. தமிழ் நிகழ்த்துக் கலைகள் ஆட்சியாளர்களின் ஆதரவின்றி கைவிடப்பட்டதால் அவை காலப்போக்கில் அழிந்திருக்க வேண்டும். சிலப்பதிகாரம் காப்பியத்தில் அரங்கேற்றுக் காதையில் குறிப்பிடப்படும் சில ஆட்டக் கலைகள் இன்றைக்கும் கேரளாவில் நிகழ்த்தப்படுகின்றன. பண்பாட்டுரீதியில் ஒருவிதமான வெற்றிடம் நிலவியது.

மதுரை இம்பீரியல் டாக்கீஸின் விளம்பரம்
மதுரை இம்பீரியல் டாக்கீஸின் விளம்பரம்

இத்தகு சூழலில் 1940களில் அறிமுகமான திரைப்படம், மதுரை மக்களைக் கவர்ந்தது. ஒளியில் ஒளிர்ந்திட்ட பிம்பங்கள் அடங்கிய மௌனப் படங்களும் பின்னர் திரையிடப்பட்ட பேசும் படங்களும் மதுரைக்காரர்கள் வாழ்க்கையுடன் ஒன்றிப் போயின. எப்பொழுதாவது கோயில் திருவிழாவில் நடத்தப்பட்ட நிகழ்த்துக்கலைகள்தவிர வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் இல்லாத சூழலில் திரைப்படத்தின் சிறகுகள், மதுரை நகரமெங்கும் பற்றிப் படர்ந்தன. நவீன அறிவியல் கண்டுபிடிப்பான திரைப்படம் மதுரை மக்களின் அன்றாட வாழ்க்கையுடன் பிரிக்க முடியாதவாறு இணைந்தது தற்செயலானது அல்ல.

ஐம்பதுகளின் தொடக்கத்தில் மதுரை திருநகர் பகுதியில் சித்ரகலா மூவிடோன் என்ற திரைப்படம் தயாரிக்கிற ஸ்டூடியோ தொடங்கப்பட்டது. அந்த ஸ்டூடியோ இருந்ததன் எச்சமாக வளைவு ஒன்று இப்போதும் இருக்கிறது. எண்பதுகளில்கூட சித்ரகலா என்ற பெயர் அந்த வளைவில் இருந்தது. இப்பொழுது ஸ்டூடியோவின் பெயர் அழிக்கப்பட்டு வேறு பெயர் எழுதப்பட்டுள்ளது. அப்பொழுது, நாடகங்கள் பிரபலமாக இருந்த காலம். எனவே பல நாடகங்கள் திரைப்படமாக உருமாறின. சிங்களத் திரைப்படங்கள் தயாரிப்பதில் முன்னோடியான மதுரையைச் சார்ந்த எஸ். எம். நாயகம் என்ற சுந்தரம் மதுரநாயகம், மதுரையில் ஸ்ரீ முருகன் நவகலா லிமிடெட் என்ற திரைப்பட நிறுவனத்தையும் திருநகர் பகுதியில் சித்ரகலா மூவிடோன் என்ற ஸ்டூடியோவையும் துவக்கினார். அவர் தாய்நாடு, பரமகுரு போன்ற தமிழ்த் திரைப்படங்களைத் தயாரித்தார். 1946-ம் ஆண்டு குமரகுரு என்ற தமிழ்த் திரைப்படம் வெளியானது.

இந்தியா சுதந்திரமடைந்த 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி டி.எஸ்.மணியின் இயக்கத்தில் 'தாய் நாடு' என்ற தமிழ்த் திரைப்படத்தை நாயகம் வெளியிட்டார். ஜோதி சின்ஹா இயக்கிய முதலாவது சிங்களப் பேசும் படமான ’கடவுனு பொறந்துவ’ படத்தை நாயகம் தயாரித்தார். அந்தப் படம் மதுரை சித்ரகலா ஸ்டூடியோவில் தயாரானது. சிங்களப் படத்தில் இந்திய நடிகர், நடிகைகள் நடித்தனர்.
மதுரையின் சிந்தாமணி திரையரங்கம்
மதுரையின் சிந்தாமணி திரையரங்கம்

இரண்டாயிரமாண்டு வரலாற்றுப் பழைமையான மதுரை நகரத் தெருக்கள் சிறுவனாக இருந்த எனக்குப் பரிச்சயமானது திரைப்படக் கொட்டகைகள் மூலம்தான். மதுரை கீழ வாசல் அருகிலுள்ள லட்சுமிபுரம் 6வது தெருவில் இருந்த எங்கள் அக்கா வீட்டுக்குப் பள்ளிக்கூட விடுமுறையில் செல்வதற்குப் பெரிதும் ஆர்வமாக இருக்கும். சித்திரைத் திருவிழாவைக் காணவும் மீனாட்சி அம்மன் கோயில், நாயக்கர் மஹால் போன்ற இடங்களைச் சுற்றிப் பார்த்திடவும் பேரார்வம்.

எல்லாவற்றையும்விட அண்மையில் வெளியாகியிருக்கிற புதிய திரைப்படங்களைப் பார்க்கிற விருப்பம் பாடாய்ப்படுத்தும். மதுரையில் வெளியாகிற புதிய திரைப்படம், மதுரையில் இருந்து 12 கி.மீ. தொலைவிலுள்ள எங்கள் கிராமமான சமயநல்லூர், திருமகள் தியேட்டரில் திரையிடப்படுவதற்கு ஒரு வருடம் ஆகும். லட்சுமிபுரம் ஆறாவது தெருவின் முனையில் சிந்தாமணி திரையரங்கு இருந்தது. பரந்துபட்ட மதுரை நகரம் ஓவ்வொரு திரையரங்கின் மூலம் எனது நினைவுக்குள் பதிவாகியது. மீனாட்சி தியேட்டர் எனில் தெற்குவாசல், கல்பனா தியேட்டர் எனில் சிம்மக்கல், சென்ட்ரல் தியேட்டர் எனில் மீனாட்சி அம்மன் கோயிலின் மேற்குக் கோபுரம், தினமணி தியேட்டர் எனில் முனிச்சாலை... பக்தி இலக்கியத்தில் இடம் பெற்றுள்ள பாடல் பெற்ற திருத்தலங்கள் போலத் திரைப்பட அரங்குகள் நகரமெங்கும் பரவியிருந்தன.

தூங்காத நகரமாக அறியப்பட்டிருந்த மதுரை நகரின் கண்கள்போல திரையரங்குகள் ஒளிர்ந்து கொண்டிருந்தன. திரையரங்குகளைச் சினிமாக் கொட்டகை என்று குறிப்பிடும் வழக்கம் இருந்தது. தேவி திரையரங்கைத் தேவி டாக்கீஸ் என்று குறிப்பிடப்பட்டதில் இருந்து பேசும் படம் திரையிடப்படுகிற அரங்கு என அறிய முடிகிறது. ஒலி இல்லாத மௌனப் படங்களைக் கிராமத்தினர் 'ஊமைப் படங்கள்' என்று குறிப்பிட்டனர்.

மதுரை சென்ட்ரல் திரையரங்கம்
மதுரை சென்ட்ரல் திரையரங்கம்

கடந்த நூற்றாண்டின் முற்பகுதியில் தமிழ்நாட்டில் திரைப்படம் அறிமுகமானபோது தமிழரின் மனங்கள் எவ்வாறு எதிர்வினையாற்றின என்பது முக்கியமான கேள்வி. அறுபதுகளில் திரைப்படம் பார்ப்பது கெட்ட வழக்கம், பாதகங்களில் ஒன்று என்பது போன்ற பொதுப்புத்தி நிலவியது. அதிலும் குழந்தைகளும், இளம் பெண்களும் திரைப்படம் பார்க்கவே கூடாது என்பதில் பெரியவர்கள் உறுதியாக இருந்தனர். திரைப்படம் பார்ப்பது குடும்பப் பெண்களுக்கும் கௌரவமானவர்களுக்கும் ஏற்றதல்ல என்ற பொதுப்புத்தி நிலவியது.

என்றாலும் கொட்டகைகள், மக்கள் வெள்ளத்தில் நிரம்பி வழிந்தன. ஒளிக்கற்றைகள் மூலம் உருவாக்கப்பட்ட மாய பிம்பங்கள் எல்லோரையும் கவர்ந்து இழுத்தன; ஏதோவொரு மாயவிளைவைப் பார்வையாளரின் மனதில் அவை ஏற்படுத்தின. என்றாலும் திரையரங்குப் பக்கம் திரும்பிப் பார்க்காத பெரியவர்கள் எழுபதுகளில்கூட கணிசமாக இருக்கவே செய்தனர்.

அடுத்த வாரம் மதுரையில் ரசிகர் மன்றங்கள் உருவான வரலாற்றைக் குறித்து பார்ப்போம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism