Published:Updated:

கொரோனா: தியேட்டர்களில் 100% இருக்கைகளுக்கு அனுமதி; பிரதீப் கவுர் அலர்ட்... கவனிக்குமா அரசு?

`திரையரங்குகளில் 100 சதவிகித இருக்கைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பது ஆபத்தை ஏற்படுத்தும்’ என்று பொது சுகாதார நிபுணர் பிரதீப் கவுர் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கொரோனா வைரஸ் பரவல் பாதுகாப்பு நடவடிக்கையாக, தமிழகத்திலுள்ள திரையரங்குகள் கடந்த மார்ச் மாதம் மூடப்பட்டன. பொது முடக்கத் தளர்வுகள் வழங்கப்படுவதை அடுத்து நவம்பர் 10-ம் தேதி முதல் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, 50 சதவிகிதப் பார்வையாளர்களுடன் மட்டும் திரையரங்குகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டது. இந்தக் கட்டுப்பாடு காரணமாகத் திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் பெரிய பட்ஜெட் படங்கள் எதுவும் வெளியாகவில்லை.

ஊரடங்கில் மூடப்பட்டிருந்த  திரையரங்கு
ஊரடங்கில் மூடப்பட்டிருந்த திரையரங்கு
ரா.ராம்குமார்

திரையரங்குகள் திறந்திருந்தாலும் பார்வையாளர்கள் வரத்துக் குறைவாக இருந்த காரணத்தால், 400-க்கும் அதிகமான திரையரங்குகள் மீண்டும் மூடப்பட்டன. தயாரிப்பாளர்கள், திரையரங்கு உரிமையாளர்கள், திரைத்துறையினர் தரப்பில் 100 சதவிகித இருக்கைக்கு அனுமதி வழங்கக் கோரி தொடர்ந்து வலியுறுத்தப்பட்டுவந்தது. இந்தநிலையில், கடந்த மாதம் நடிகர் விஜய் `மாஸ்டர்’ குழுவினருடன் தமிழக முதலமைச்சரை அவரின் இல்லத்தில் சந்தித்தார். திரைத்துறையினரின் சிரமத்தைச் சொல்லி, திரையரங்குகளில் 100 சதவிகித பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று முதல்வரிடம் கோரிக்கை வைத்தார்.

இதைத் தொடர்ந்து தமிழக அரசு திரையரங்குகளில் 100 சதவிகித இருக்கைகளுக்கு அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்திருக்கிறது. இந்த அறிவிப்பை அடுத்து திரைத்துறையினர் பலரும் முதலமைச்சருக்கு நன்றியைத் தெரிவித்துவருகின்றனர்.

நன்றிக் கடிதம்
நன்றிக் கடிதம்

அதேநேரத்தில், புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் இந்தியாவில் மட்டுமல்லாமல் தமிழகத்திலும் பரவிவரும் சூழலில், திரையரங்குகளுக்கு முழு அனுமதி வழங்கியிருப்பது வைரஸ் பரவலை அதிகரிக்கக்கூடும் என்ற விவாதம் எழுந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

திரையரங்குகளில் முழு அனுமதி வழங்கியது குறித்து பொது சுகாதார நிபுணர் டாக்டர் பிரதீப் கவுர், ``சமூக இடைவெளி இல்லாமல் மூடிய இடங்களில் கொரோனா வைரஸ் அதிவேகமாகப் பரவக்கூடும். அது போன்ற இடங்களைப் பொதுமக்கள் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இது 2021-ம் வருடம் என்று நாம் நினைக்கலாம். அது வைரஸுக்குத் தெரியாது. வைரஸ் தொடர்ந்து பரவிக்கொண்டேதான் இருக்கும்." என்று கூறியிருக்கிறார்.

மேலும், ``முகக்கவசங்களை அணியுங்கள், கைகளைக் கழுவுங்கள், தனி மனித இடைவெளியைக் கடைப்பிடியுங்கள், கூட்டங்களைத் தவிர்க்கவும். மூடிய மற்றும் கூட்டமாக இருக்கும் இடங்களில் குறைந்த காற்றோட்டமுள்ள இடங்களை முற்றிலுமாக தவிர்த்துக்கொள்ளுங்கள்" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

அனுமதி வழங்கியதை அடுத்து ரசிகர்கள் ஆர்வத்துடன் திரையரங்குகளுக்குச் செல்வார்கள். திரையரங்குக்கு யார் வந்தார்கள், யார் சென்றார்கள், யாரிலிருந்து யாருக்குத் தொற்று பரவியது என்று கான்டாக்ட் டிரேஸிங் செய்வது சிரமமாகிவிடும். தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் குறைந்திருக்கும் நேரத்தில் திரையரங்குகளில் ஒரு சூப்பர் ஸ்பிரெட்டர் மூலம் பலருக்குப் பரவக்கூடும் என்று மருத்துவ வல்லுநர்கள் பலரும் கருத்து தெரிவித்துவருகின்றனர்.

``சில நேரங்களில் 100-ஐ விட ஐம்பதே சிறந்தது. இது அவற்றில் ஒன்று" என்று நடிகர் அரவிந்த்சாமி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருக்கிறார்.

வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படிதான் 100 சதவிகித இருக்கைக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. இருந்தபோதிலும் திரையரங்குகள் முழுவதும் திறப்பது குறித்து வருவாய்த்துறையினருடன் கலந்து ஆலோசனை செய்து விரைவில் ஒரு முடிவு எடுக்கப்படும் என்று தமிழக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பொது சுகாதார வல்லுநரின் கருத்தைப் பரிசீலனை செய்து ஒரு நல்ல முடிவை எடுக்குமா தமிழக அரசு?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு