Published:Updated:

`நீங்கள் நிலவுக்குச் செல்லுங்கள்!' - அடூர் கோபாலகிருஷ்ணனைச் சீண்டும் பா.ஜ.க

பி.ஆண்டனிராஜ்

'மலையாள திரைப்பட உலகின் முன்னணி இயக்குநரான அடூர் கோபாலகிருஷ்ணனுக்கு 'ஜெய் ஸ்ரீராம்' கோஷம் பிடிக்கவில்லை என்றால், அவர் இந்த பூமியை விட்டு வெளியேறி, நிலாவுக்குச் சென்று வாழட்டும்' என கேரள மாநில பா.ஜ.க மூத்த தலைவர் கடுமையாகச் சாடியுள்ளார்.

அடூர் கோபாலகிருஷ்ணன்
அடூர் கோபாலகிருஷ்ணன்

நாட்டின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 49 பேர் கையெழுத்திட்ட கடிதம் ஒன்றை பிரதமர் மோடிக்கு அனுப்பினார்கள். அதில், `நாட்டில் சகிப்புத்தன்மை குறைந்துகொண்டேவருகிறது. சிறுபான்மை சமூகத்தினர் மற்றும் தலித்துகள்மீது தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. இத்தகைய தாக்குதல்களைக் கண்டித்து நாடாளுமன்றத்தில் உரையாற்றினீர்கள். ஆனாலும், நாடு முழுவதும் ‘ஜெய் ஸ்ரீராம்’ கோஷத்தைச் சொல்ல வலியுறுத்தி தாக்குதல்கள் நடக்கின்றன. அவற்றைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனக் குறிப்பிட்டிருந்தனர். அந்தக் கடிதத்தில் அடூர் கோபாலகிருஷ்ணனும் கையெழுத்திட்டுள்ளார்.

கேரள பா.ஜ.க மூத்த தலைவர் கோபாலகிருஷ்ணன்
கேரள பா.ஜ.க மூத்த தலைவர் கோபாலகிருஷ்ணன்

இந்த விவகாரம், பாரதிய ஜனதா கட்சியினரைக் கோபமடைய வைத்துள்ளது. அதனால், கேரள மாநில பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரான பி.கோபாலகிருஷ்ணன், தனது ஃபேஸ்புக் பக்கத்தில் அடூர் கோபாலகிருஷணனைக் கடுமையாக விமர்சித்துப் பதிவிட்டுள்ளார். அதில், ``'ஜெய் ஸ்ரீராம்' என்ற முழக்கத்தை முன்வைப்பதற்காகவே நாட்டு மக்கள் பாரதிய ஜனதா கட்சியை ஆட்சியில் அமர வைத்திருக்கிறார்கள். இந்தியாவில் இந்தக் கோஷத்தை எழுப்பாமல் வேறு எங்கு சென்று எழுப்பமுடியும்?

ஜெய் ஸ்ரீராம் கோஷத்துக்கு எதிராக அடூர் கோபாலகிருஷ்ணன் குரல் எழுப்புவதற்குக் காரணம், மத்திய அரசிடம் இருந்து விருது எதையும் எதிர்பார்த்தா?
பி.கோபாலகிருஷ்ணன், கேரள பா.ஜ.க மூத்த தலைவர்

ஜெய் ஸ்ரீராம் கோஷம் எழுப்பியவர்களை மம்தா அரசு சிறையில் அடைத்தபோதும் சரண கோஷம் எழுப்பியோரை பினராயி விஜயன் அரசு கைதுசெய்தபோதும் மௌனவிரதம் இருந்துவிட்டு, இப்போது குரல் எழுப்புவதற்குக் காரணம், மத்திய அரசிடம் இருந்து விருது எதையும் எதிர்பாரத்தா? இந்தக் கோஷம் அடூர் கோபாலகிருஷ்ணனுக்குப் பிடிக்கவில்லை என்றால், ஸ்ரீஹரிகோட்டவுக்குச் சென்று நிலாவுக்குச் செல்வதற்கான டிக்கெட்டை பதிவுசெய்துகொள்ளலாம். அவசியம் ஏற்பட்டால், அவரது வீட்டின் முன்பாகச் சென்று 'ஜெய் ஸ்ரீராம்' கோஷத்தை எழுப்புவோம்’ எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்தப் பிரச்னை மலையாளத் திரை உலகை மட்டும் அல்லாமல் அரசியல் வட்டாரத்திலும் பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. அடூர் கோபாலகிருஷ்ணனுக்கு ஆதரவாக கேரள காங்கிரஸ் கட்சி குரல் எழுப்பியிருக்கிறது. இந்த நிலையில், தன்னைப் பற்றிய சர்ச்சை குறித்துப் பேசிய அடூர் கோபாலகிஷ்ணன், ``சந்திரயான் - 3 திட்டம் செயல்படுத்தப்படுமானால், அதில் எனக்கு டிக்கெட் கொடுத்தால் சந்தோஷமாக நிலவுக்குச் செல்லத் தயாராக இருக்கிறேன். பாரதிய ஜனதாவின் காவிமயக் கொள்கையை எதிர்ப்பவர்களை இதுவரையிலும் பாகிஸ்தானுக்குச் செல்லுமாறு தெரிவித்தார்கள். இப்போது பாகிஸ்தான் நிறைந்துவிட்டதால், நிலாவுக்குச் செல்லச் சொல்கிறார்கள்.

அடூர் கோபாலகிருஷ்ணன்
அடூர் கோபாலகிருஷ்ணன்

இரண்டாவது முறையாக மோடி பிரதமரான பின்னர், கடவுள் ராமனின் பெயரால் வன்முறையில் ஈடுபடும் கும்பல்கள் அதிகரித்துவிட்டன. ஜெய் ஸ்ரீராம் கோஷமிடுவதை நான் விமர்சிக்கவில்லை. ஆனால், அதை வலுக்கட்டாயமாக உச்சரிக்கச் சொல்வதைத்தான் எதிர்க்கிறேன். அதைத் தடுக்க வலியுறுத்தியே பிரதமருக்குக் கடிதம் அனுப்பினோம். ஜெய் ஸ்ரீராம் என்கிற பெயரால் ஆத்திரத்தைத்தூண்டி சிறுபான்மை மக்களுக்கு எதிரான வன்முறையில் ஈடுபடுவதைக் கண்டிக்க வேண்டியது அனைவரின் கடமை’’ என்று தெரிவித்தார். சபரிமலை விவகாரம் ஓய்ந்துள்ள நிலையில், 'ஜெய் ஸ்ரீராம்' விவகாரம் கேரளாவில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.