சினிமா
Published:Updated:

“ரஜினியை மட்டும்தான் மக்கள் முதல்வரா ஏத்துக்குவாங்க!” - தடாலடி தங்கர்

தங்கர்பச்சான்
பிரீமியம் ஸ்டோரி
News
தங்கர்பச்சான்

வருங்காலத்துல நடந்தாலும் நடக்கலாம். ஏன்னா விஜய்க்கு இப்ப ஒரு அரசியல் தெளிவு வந்திருக்கறதா நான் கருதறேன்.

ளிப்பதிவாளர், இயக்குநர், நடிகர், சிந்தனையாளர் என்று பலமுக தங்கர்பச்சான் ஒரு தடதடக்கும் ரயில். சினிமாவாகட்டும், சமூகமாகட்டும் மனதில் பட்டதை ‘பட்’டென உடைக்கும் துணிச்சல்காரர். அதேநேரம், காலம் கடந்த காதலைக்கூட உயிர்ப்புடன் திரையில் கடத்தும்போது, கண்களை ஈரமாக்கிவிடுவார். ‘அழகி’, ‘களவாடிய பொழுதுகள்’ தந்த தங்கர் பச்சானை ஊரடங்கு பொழுதில் சந்தித்தேன்.

“ஐந்தரை மாத ஊரடங்கு நாள்கள் எப்படி நகர்ந்தன?”

“பதின்மூன்று கதைகளை உருவாக்கியிருக்கேன். எல்லாமே அப்பப்ப நான் எழுதி, ‘பிறகு விரிவாக்கலாம்’னு தூக்கிப் போட்ட கதைகள். அற்புதமான கதைகளெல்லாம் கிடைச்சிருக்கு. இருபது வருஷமா வாங்கி சேர்த்து சேர்த்து வச்சிருந்த படங்களைப் பார்த்தேன். அதேபோல நிறைய புத்தகங்களை வாசிச்சேன்.

“ரஜினியை மட்டும்தான் மக்கள் முதல்வரா ஏத்துக்குவாங்க!” - தடாலடி தங்கர்

இன்னொரு முக்கியமான முயற்சியும் நடந்தது. அது தனிப்பட்ட தங்கர்பச்சனுக்கானதில்ல. என்னுடைய வேரான விவசாயத்துக்காகவும் அதுல ஈடுபட்டிருக்கறவங்களுக்காகவும். விவசாயப் பள்ளி ஒன்று நிறுவுகிற முயற்சி அது. விதைப்பு தொடங்கி சந்தைப்படுத்துதல் வரைக்குமான வேலைகளை ஒரு ஆறு மாசம் படிச்சிட்டுச் செய்யட்டுமேன்னுதான். ஆக மொத்தத்துல கடந்துபோன இந்த ஊரடங்கு நாள்கள் எனக்கு மிகவும் பயனுள்ளதா நகர்ந்துச்சுன்னுதான் சொல்வேன்.”

“ தங்கர் பச்சன் மாஸ் ஹீரோக்களை வைத்துப் படம் பண்ண மாட்டார்’னு ஒரு பிம்பம். அதை மாற்ற விரும்பலையா?”

“திரைப்படக் கல்லூரியில் சேருவதற்கு முன்னாடி வரை நான் தீவிரமான எம்.ஜி,.ஆர் ரசிகன். அங்க போய் உலக சினிமாக்களைப் பார்த்த பிறகுதான், நாம எந்த அளவு பின்தங்கியிருக்கோம்னு தெரிஞ்சது. இன்னைக்கும் அந்த சினிமாக்களுடன் ஒப்பிடறப்ப நாம 90 வருஷமாவது பின்னாடிதான் இருக்கோம். சினிமாவுல நுழையறப்பவே இந்த மாதிரியான புரிதலோடு வந்ததாலேயோ என்னவோ, கதாநாயகனைப் போற்றுகிற மாதிரியான கற்பனை எனக்குள்ள வரலை.

ஒளிப்பதிவு செய்தபோதும் சரி, இயக்கினபோதும் சரி, படங்களை நானேதான் தேர்ந்தெடுத்தேன். ஏன்னா, ‘உச்சநட்சத்திரம் நடிச்சாலும், புதுமுக நடிகர் நடிச்சாலும் கேமராவும் லைட்டும் ஒண்ணுதானே’ன்னு நினைக்கிறவன் நான். அதுக்காக மாஸ் ஹீரோவா, கண்ணை மூடிக்கிட்டு வேண்டாம்னு சொல்லணும்னு நினைக்கிற ஆளும் கிடையாது.

தம்பி விஜய் ‘ஒன்பது ரூபாய் நோட்டு’ பட நிகழ்ச்சியில் ‘அண்ணாகூட ஒரு படம் பண்ணணும்’னு விருப்பத்தைச் சொன்னார். ‘ஒரு வருடம் காத்திருக்க முடியுமா’ன்னு கேட்டார். ஆனா அது நடக்கலை. வருங்காலத்துல நடந்தாலும் நடக்கலாம். ஏன்னா விஜய்க்கு இப்ப ஒரு அரசியல் தெளிவு வந்திருக்கறதா நான் கருதறேன்.

“ரஜினியை மட்டும்தான் மக்கள் முதல்வரா ஏத்துக்குவாங்க!” - தடாலடி தங்கர்

ஆனா, கொரோனாவுக்குப் பிறகு கதாநாயகனை மையமா வெச்சு வருகிற படங்கள் குறையலாம்னு எனக்குத் தோணுது. முன்னாடி 450 பேருடன் அரங்கு நிறைந்து காட்சியளித்த தியேட்டர்களில் அடுத்த ரெண்டு வருஷத்துக்காவது 150 பேர் மட்டுமே பார்க்க முடியும்கிற நிலை உருவாகலாம். அப்ப படத்தின் பட்ஜெட் குறையும். ஆனா நம்ம கதாநாயகர்கள் மூணுல ஒரு பங்கு ஊதியத்தைக் குறைச்சுப்பாங்களா? முன்வர மாட்டாங்க. இன்னைக்கு இருக்கிற கதாநாயகர்கள்கிட்ட பேசவே முடியலையேங்க. ரஜினி அண்ணன்கிட்ட போன்ல பேசினாக்கூட ஒரு மணி நேரம் பேசுவார். அஜித் விஜய்யுமே மதிப்பு மரியாதை ரொம்பவே தெரிஞ்சவங்க. இவங்களுக்குப் பிறகு வந்த கதாநாயகர்கள் உயிர் வாழறதே பணம் சம்பாதிக்க மட்டும்தான்னு நினைச்சுட்டு சினிமாவுக்குள் வந்தவங்களா இருக்காங்க. அதனால நாம நம்ம வழியிலேயே போவோம்.”

“எந்தவொரு சமூகப் பிரச்னை என்றாலும் முதல் வரிசையில் இருப்பீங்க. ஆனா அண்மைக்காலமா ஒதுங்கியிருப்பதுபோலத் தெரியுதே?”

“கடைசியா ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகளுக்கு எதிரான மக்கள் போராட்டதை வெற்றிகரமா முன்னெடுத்து, அது வெற்றியும் பெற்றது எல்லாருக்கும் நினைவிருக்கலாம். ‘தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம்’ தொடங்கியதிலேயும் என் பங்களிப்பு இருந்தது.

“ரஜினியை மட்டும்தான் மக்கள் முதல்வரா ஏத்துக்குவாங்க!” - தடாலடி தங்கர்

ஒதுங்கியிருக்கறதா எப்படிச் சொல்றீங்க? ஊடகங்கள் முன்பு மாதிரி இல்லைங்கிறதால இப்ப அங்க பேசிப் பலனில்லை. ஊடகங்கள், தொலைக்காட்சிகளை நடத்தறவங்களுக்கு அரசியல் பின்னணி இருக்கறதால அவங்கவங்களுக்குச் சாதகமாப் பேசினா மட்டுமே அந்தப் பேச்சை வெளியிடுறாங்க. ஆனந்த விகடன் மேலயும் எனக்கு ஆதங்கம் இருக்கு. ஊடகங்கள் நடுநிலையுடன் செயல்படாதப்ப, சமூக வலைதளத்துலதான் பேசவேண்டி வருது. அங்க அவ்வப்போது தீவிரமான கருத்துகளை முன்வெச்சபடியே தான் இருக்கேன்.”

“நீட் தேர்வு, புதிய கல்விக்கொள்கை எனப் பல விஷயங்களில் தமிழ்நாடு வடக்கின் தாக்குதலுக்கு ஆளாகிறது என்கிற குரல் கேட்கிறது. தமிழ் உணர்வாளரா நீங்க என்ன சொல்றீங்க?”

“11வது வரைக்கும் நான் என் தாய்மொழியிலதான் படிச்சேன். துணிச்சலை, தன்னம்பிக்கையைத் தந்தது அந்தக் கல்விதான். அதனால இன்றைய சூழல்ல 12வது வரைக்கும் கட்டாயம் தாய்மொழியிலதான் கல்வி இருக்கணும். இந்த மூணு மொழி, நாலு மொழிக் கதையெல்லாம் இங்க வேண்டாம். ‘மூணு மொழி படிங்க’ன்னு இந்தி பேசறவங்ககிட்ட போய் தமிழையோ தெலுங்கையோ கத்துக்கச் சொல்லுங்க பார்க்கலாம். அவங்க அதுக்குத் தயாரா இல்லை. அப்புறம் நமக்கு மட்டும் எதுக்குங்க இந்தியும் சமஸ்கிருதமும்? இதெல்லாம் ஏமாத்து வேலை.

மண்பானை செஞ்சிட்டிருந்தவங்க, முடி வெட்டிட்டிருந் தவங்க, பறை அடிச்சிட்டிருந்தவங்க எல்லாருமே இப்பத்தான் கொஞ்சமா மேல எழுந்து வரத் தொடங்கியிருக்காங்க. அவங்களைத் திரும்பவும் `பழைய இடத்துக்கே போ’ன்னு சொல்றதை ஏத்துக்க முடியாது.

விநாயகரை நாம இங்க கும்பிடுறோம். ஆனா அவனுடைய தம்பி முருகனை வட இந்தியாவுல யாராச்சும் கும்பிடுறாங்களா?

மாணவர்களின் தகுதியைத் தீர்மானிக்க இந்தத் தேர்வுன்னு சொல்றீங்க, சரி... இந்தத் தகுதியை நிர்ணயிக்கிற உங்க தகுதி என்ன? எம்.எல்.ஏ, எம்.பி ஆகறதுக்கு ஒரு தகுதியை வரையறை செய்யுங்க. சீட் கொடுக்கிறதுக்கு முன்னாடி, சம்பந்தப்பட்டவங்களுடைய எண்ணம், திறமை வெளிப்படுகிற மாதிரி ஒரு தேர்வைக்கூட நடத்தி, அதுல தேறுகிறவங் களுக்கு சீட் கொடுங்க, தப்பில்லை.

“ரஜினியை மட்டும்தான் மக்கள் முதல்வரா ஏத்துக்குவாங்க!” - தடாலடி தங்கர்

குற்ற வழக்கு நிலுவையில் இருக்கிறவங்க நாடாளுமன்றத்திலேயே பாதிக்கும் மேல் இருக்காங்க. ஒரு தகுதித்தேர்வு நடத்தப்பட்டா இப்படிப்பட்ட ஆளுங்க உள்ளே வர முடியுமா? ஏன், பிரதமர், குடியரசுத் தலைவரையே மக்கள் நேரடியா வாக்களிச்சுத் தேர்ந்தெடுக்கிற நிலை வரட்டுமே. இந்த மாதிரியான சீர்திருத்தங்கள்தான் உடனடியாச் செய்யப்படணும். பல மொழிகள், பல இனங்கள், பன்முகக் கலாசாரம் கொண்ட நாட்டுல ‘ஒரே தேசம், ஒரே கொள்கை’ன்னு கொண்டு வரத் துடிக்கிறது ரொம்பத் தப்பு. அந்தக் காலத்துல யாரும் படிக்கலை, சின்னம் தேவைப்பட்டுச்சு. இப்பத்தான் `உயர்தரமான கல்வி தருகிறோம்’னு சொல்றீங்கல்ல, இன்னும் எதுக்கு சின்னம்? வேட்பாளரைப் பார்த்து வாக்களிக்கட்டும். அதேபோல `இவ்வளவு சதவிகிதம் வாக்கு பதிவானா மட்டுமே அந்தத் தேர்தல் செல்லும்’னு சொல்கிற சட்டமும் வேணும். இந்தச் சீர்திருத்தங்களை முதல்ல செஞ்சுட்டு அப்புறம் கல்வியைச் சீர்திருத்த வாங்கங்கிறதுதான் என்னுடைய தாழ்மையான கருத்து.”

“ஒ.டி.டி-யில் திரைப்படங்கள் வெளியாவது பற்றி என்ன நினைக்கிறீங்க?”

“ஆன்லைன்ல வெளியாகிற படங்கள் முப்பது சதவிகிதம் பேருக்கு மேல் சினிமா ரசிகர்களைப் போய்ச் சேராதுங்கிறதுதான் என்னுடைய கணிப்பு. ஏன்னா, நகரத்தை மட்டுமே வெச்சு படங்களின் வரவேற்பை, வெற்றியைத் தீர்மானிக்க முடியாது. ‘அமேசான்’, ‘நெட்ஃபிளிக்ஸ்’னெல்லாம் என் கிராமத்துல போய்ப் பேசினா ஒருத்தனுக்கும் ஒண்ணும் தெரியாது.”

“ `அழகி’ இரண்டாம் பாகம் எதிர்பார்க்கலாமா?”

“நான் எடுத்த ‘அழகி’யையே முழுசா உங்ககிட்ட காட்டலையே! படம் எப்படி வெளிவந்ததுன்னு நினைக்கறீங்க? பெரிய கொடுமையெல்லாம் நடந்தது. பார்த்துட்டு பார்த்துட்டு, ‘வேணாம்’னு போனவங்க எத்தனை பேரு! தயாரிப்பாளரே ‘நீ மட்டும் நல்லா இரு போ’ன்னு என்னைத் திட்டிட்டுல்ல போனார்! பிறகு மக்கள் உயிர் கொடுத்து வெளிவந்தது. இரண்டாம் பகுதி இருக்கத்தான் செய்யுது. ஆனா தீவிரமான கதை. அன்னைக்கு பாலுவா நடிச்ச பையனுக்கு இப்ப 24 வயசு. எடுக்கணும்னா அவனை வெச்சே எடுக்கலாம். பார்த்திபன் சார், தேவயானி, நந்திதா தாஸ் எல்லாரும் இருக்காங்கதான். ஆனாலும் ‘அழகி மாதிரி இருக்கும்னு எதிர்பார்த்து வந்தா, என்ன இது, தீவிரமான படமா இருக்கே’ன்னு மக்கள் ஏமாந்துடக் கூடாது. அதனாலதான் ’அழகி’யோடு நிறுத்திக்கலாமேன்னு தோணுது.”

“கந்த சஷ்டி சர்ச்சை, தடையை மீறி விநாயகர் சதுர்த்தி என்கிற இந்தச் சூழல்கள் பா.ஜ.க தமிழகத்தில் வளர்கிறது என்பதன் அடையாளமா?”

“ஊடகங்களில் அவங்களுக்குப் பேச இடம் கொடுக்கிறாங்க. அதனால பேசறாங்க. மத்தபடி வளர்ச்சியெல்லாம் இல்லைங்க. பல தொகுதிகளில் ‘நோட்டா’வுக்கும் குறைவாத்தானே ஓட்டு வாங்கினாங்க. இன்னொரு விஷயம் என்னன்னா இந்துக் கடவுள்கள் பாரதிய ஜனதாக் கட்சிக்கு மட்டுமே சொந்தமில்லை. அந்தக் கட்சி ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி இங்க இந்துக்கள் இல்லையா என்ன? கந்த சஷ்டிக் கவசம் பிரச்னை தேவையில்லாதது. நம்ம மக்களுக்கும் புரிதல் இருக்க மாட்டேங்குது. கந்தன், சஷ்டி ரெண்டு சொற்களுமே சமஸ்கிருதம். கவசம் மட்டுமே தமிழ். முருகன் தமிழ்க்கடவுள். அந்த முருகனுக்கே சமஸ்கிருதத்துல அர்ச்சனை செய்யறீங்க. அதுவே என் முருகனை அவமானப்படுத்தற செயல்தான்.

“ரஜினியை மட்டும்தான் மக்கள் முதல்வரா ஏத்துக்குவாங்க!” - தடாலடி தங்கர்

இன்னொரு கேள்வியும் இயல்பாவே எல்லாருக்கும் வரணும். விநாயகரை நாம இங்க கும்பிடுறோம். ஆனா அவனுடைய தம்பி முருகனை வட இந்தியாவுல யாராச்சும் கும்பிடுறாங்களா? அங்க எந்த ஊரிலாச்சும் முருகனுக்குக் கோயில் இருக்கா? இதையெல்லாம் நாம யோசிக்கணும்.”

“தமிழ்நாட்டில் 2021 தேர்தலில் முதல்வர் பதவிக்குப் பொருத்தமானவரா நீங்க யாரைப் பார்க்கறீங்க?”

“எனக்குத் தெரிஞ்சவரை, மக்களுக்கு இப்ப இருக்கிற பெரிய கட்சிகள் எதன்மீதும் நம்பிக்கையில்லை. திராவிடக் கட்சிகளின் ஆட்சி மாறணும்னு அவங்க நினைக்கிறது நூறு சதவிகிதம் உண்மை. புதுத் தலைமை கட்டாயம் உருவாகணும். ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்துட்டா அந்த இடத்தை நிரப்புவார்னு நான் கருதுறேன். தமிழ்நாட்டு மக்களுக்கு ஏதோ ஒண்ணு செய்யணும்னு நினைக்கிறார் அவர். பணம் சம்பாதிக்கக் கட்சி தொடங்கணும்னு நினைக்கலை. முதலமைச்சர் பதவிக்குக்கூட இன்னொருத்தரைத்தானே கைகாட்டப் போறதாச் சொல்றார். அதனால அவரைத் தமிழக மக்கள் ஏத்துக்கிடுவாங்கன்னு தோணுது!”