Published:Updated:

தயாரிப்பாளர் சங்கத் தேர்தலே நடக்கக்கூடாது! - ஐசரி கணேஷ் விருப்பம்

ஐசரி கணேஷ்
பிரீமியம் ஸ்டோரி
News
ஐசரி கணேஷ்

விஜயகாந்த் சார். ஏன்னா, அவர்தான் கடன் முழுவதையும் அடைச்சார். சங்கத்தைக் கடனில்லாம வெச்சார். சொன்னதைச் செஞ்சு காட்டினார்.

சினிமா ஷூட்டிங்கை மீண்டும் தொடங்குவதற்கான சமிக்ஞைகள் தெரிவதால் கொஞ்சம் உற்சாகமாகியிருக்கிறது சினிமாத்துறை.

இதற்கிடையே விரைவில் தயாரிப்பாளர் சங்கத்தேர்தல், நடந்து முடிந்த நடிகர் சங்கத்தேர்தல் ரத்து, அதற்கு எதிரான வழக்கு என மீண்டும் பல பஞ்சாயத்துகள் பரபரப்பாகியிருக்கின்றன. தயாரிப்பாளர் தேர்தலில் விஷால், ‘மீண்டும் அதே பழைய அணியோடு களமிறங்குவேன்’ என அறிவித்திருக்கும் நிலையில், நடிகர் சங்கத்தேர்தலில் விஷாலை எதிர்த்துக் களமிறங்கிய ஐசரி கணேஷிடம் பேசினோம்.

‘‘சினிமா இண்டஸ்ட்ரியோட நிலைமை எப்படியிருக்கு?’’

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

‘‘நிலைமை ரொம்ப மோசமா இருக்கு. எப்போ சரியாகப்போகுதுன்னே தெரியல. எனக்கே இவ்வளவு கஷ்டம்னா, மத்த சின்னத் தயாரிப்பாளர்களுக்கு எவ்ளோ சுமையிருக்கும்னு நினைக்குபோதே கஷ்டமா இருக்கு. ‘மூக்குத்தி அம்மன்’, ‘சுமோ’, ‘ஜோஷ்வா இமைபோல் காக்கா’ன்னு எனக்கே மூணு படங்கள் ரிலீஸுக்கு ரெடியா இருக்கு. எப்போ நிலைமை சரியாகி தியேட்டர்களெல்லாம் திறந்து இந்தப் படங்களெல்லாம் ரிலீஸாகும்னு தெரியல. தியேட்டர் திறந்தாலும் எவ்வளவு மக்கள் வருவாங்கனும் தெரியல. தியேட்டர்லயும் சமூக இடைவெளியை ஃபாலோ பண்ணணும்னு சொல்றாங்க. கொஞ்சம் பொறுத்திருந்துதான் பார்க்கணும்.’’

‘‘ஓ.டி.டி-ல நேரடியா படங்கள் ரிலீஸாக ஆரம்பிச்சிருக்கு... உங்களுடைய படங்களில் எதுவும் ஓ.டி.டி ரிலீஸுக்குப் பேச்சுவார்த்தைல இருக்கா?’’

‘‘என் கைல இருக்குற எந்தப் படத்தையும் நேரடி ஓ.டி.டி ரிலீஸுக்குத் தர ஐடியா எனக்கு இல்ல. ஏன்னா, எல்லாமே பெரிய பட்ஜெட் படங்கள். தியேட்டர்கள் திறக்கலாம்னு அறிவிப்பு வந்ததுமே ‘மூக்குத்தி அம்மன்’ ரிலீஸாகிடும். இது ரொம்பப் பெரிய படம். நிறைய பேர் இதை எதிர்பார்த்துட்டு இருக்காங்க. ஏன்னா, 15 வருஷம் கழிச்சு அம்மன் படம் ரிலீஸாகுது. அதுவும், அம்மனா நயன்தாரா நடிச்சிருக்கிறதால பலரும் காத்திட்டிருக்காங்க. ஆர்.ஜே.பாலாஜி டைரக்‌ஷன் பண்ணி நடிச்சுமிருக்கார். படம் சூப்பரா வந்திருக்கு.’’

‘‘ஓ.டி.டி நேரடி ரிலீஸ் சினிமாவின் எதிர்காலத்துக்கு நல்லதா?’’

‘‘நிச்சயமா. பெரிய பட்ஜெட் படங்களை தியேட்டர்ல ரிலீஸ் பண்ணாம நேரடியா யாரும் ஓ.டி.டி-க்குக் கொடுக்கப்போறதில்ல. சின்னப் பட்ஜெட் படங்களைத்தான் ஓ.டி.டி-க்குக் கொடுக்கப்போறாங்க. அதனால தாராளமா நேரடி ஓ.டி.டி ரிலீஸ் பண்ணலாம். இனிமேல் கதை கேட்குறப்போ, ஓ.டி.டி பிளாட்பாரத்துக்குத் தனியா படங்கள் எடுக்கவே நான் கதை கேட்கலாம்னு முடிவு பண்ணியிருக்கேன். வெப்சீரிஸ் தயாரிக்குற ஐடியாவும் இருக்கு.’’

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

‘‘டிவி சீரியல் ஷூட்டிங்குக்கு அனுமதி கிடைச்சிடுச்சு... சினிமா ஷூட்டிங் எப்போதுன்னு தகவல் எதுவும் உண்டா?’’

‘`டிவி ஷூட்டிங்குக்கு அனுமதி கொடுத்திருக்கும் அரசை நிச்சயமா பாராட்டணும். ஏன்னா, டெலிசீரியல் பண்றவங்கெல்லாம் ஊரடங்கால ரொம்ப கஷ்டத்துல இருந்தாங்க. இந்த நேரத்துல இவங்களோட பிரச்னையாவது தீர்ந்துச்சேன்னு நிம்மதியா இருக்கு. அதேமாதிரி தென்னிந்திய நடிகர் சங்கக் கலைஞர்களும் ரொம்ப கஷ்டத்துல இருக்காங்க. ஷூட்டிங் ஆரம்பிச்சாதான் அவங்க வெளியே வரமுடியும். சின்னத்திரை ஷூட்டிங் எந்தப் பிரச்னையும் இல்லாம நடந்துட்டா, சின்ன பட்ஜெட் படங்களின் ஷூட்டிங்கும் விரைவில் தொடங்குவதற்கான வாய்ப்பிருக்கு.’’

‘‘நடிகர் சங்கத் தேர்தல் மீண்டும் நடக்குமா?’’

‘`எப்போ தேர்தல் நடந்தாலும் விஷால் அணியை எதிர்த்துப் போட்டியிட நான் ரெடியா இருக்கேன். விஷால் அணியின் செயல்பாடுகள் எதுவும் சரியில்ல. சொன்னது எதையும் சரியா செய்யல. அவங்களால செய்யவும் முடியல. அதனாலதான் நான் எதிர்த்து நின்னேன். விஷாலை எதிர்த்து நிற்க என்னோட சங்கர்தாஸ் அணியோடு இப்பவும் ரெடியா இருக்கேன். தேர்தல் நடத்த நீதிமன்றம் உத்தரவு கொடுத்தும், தோல்வி பயத்துல விஷால் அணி ஸ்டே வாங்கியிருக்காங்க. நடிகர் சங்கக் கட்டடத்தை சீக்கீரம் கட்டி முடிக்கணும்; அதுல வர்ற வருமானம் ஏழைகளுக்குப் போய்ச் சேரணும்கிறதுதான் என்னோட ஒரே குறிக்கோள். இதுல கட்ட இருக்குற கல்யாண மண்டபத்துக்கு நன்கொடை கொடுத்திருந்தேன். 300 பேர் உட்காரக்கூடிய சின்ன மண்டபத்தைக் கட்டக்கூடிய மொத்தச் செலவும் என்னுடையது. இந்த மண்டபத்துக்கு எங்க அப்பா பேர் வைக்கச் சொல்லிக் கேட்டிருந்தேன். இதைப் பொதுகுழுவிலும் ஏத்துக்கிட்டாங்க.’’

ஐசரி கணேஷ்
ஐசரி கணேஷ்

‘‘விஷாலைக் கடுமையாக எதிர்க்கும் நீங்கள், அந்த அணியின் தலைவர் நாசரை எதிர்ப்பதில்லையே?’’

‘‘நாசர் சார் மாதிரியான நல்ல மனிதரைப் பார்க்கவே முடியாது. பாவம், விஷாலை வெச்சுக்கிட்டு அவரால செயல்படவே முடியல. இதைப்பற்றி நேரடியாவே நான் அவர்கிட்ட பலமுறை பேசியிருக்கேன். இப்போ, எல்லாம் அவரையும் மீறிப் போயிடுச்சு. எனக்கும் அவருக்கும் எந்தப் பிரச்னையும் இல்ல.’’

‘‘உங்களைப் பொறுத்தவரை நடிகர் சங்கத் தலைவர்களில் சிறப்பாகப் பணியாற்றியவர் யார்?’’

‘‘விஜயகாந்த் சார். ஏன்னா, அவர்தான் கடன் முழுவதையும் அடைச்சார். சங்கத்தைக் கடனில்லாம வெச்சார். சொன்னதைச் செஞ்சு காட்டினார்.’’

‘‘தயாரிப்பாளர் சங்கத்தேர்தல்ல பல அணிகள் போட்டியிடுதே... எப்படிப் பார்க்குறீங்க?’’

‘‘தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் செப்டம்பர் 30-க்குள் நடக்கணும்னு நீதிமன்றம் சொல்லியிருக்கு. மூன்று அணிகள் தேர்தல்ல நிக்குறாங்க. என்னைப் பொறுத்தவரைக்கும் தேர்தலே நடக்கக் கூடாது. இந்த மூணு அணியும் ஒண்ணாச் சேர்ந்து பேசி, தேர்தல் இல்லாம சங்கத்தை நடத்தணும். அப்போதான் நல்லது நடக்கும். இந்தத் தேர்தல்லயும் என்னை நிக்கச் சொல்லிக் கேட்டாங்க. நான் மறுத்துட்டேன். ஏன்னா, நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கம் ரெண்டுமே வேற வேற. ரெண்டுலயும் கால் வெச்சுதான் விஷால் மாட்டிக்கிட்டார். அந்தத் தப்பை நான் செய்ய விரும்பல.’’