Published:Updated:

இரணியன் - விகடன் விமர்சனம்

Iraniyan - Vikatanreview
பிரீமியம் ஸ்டோரி
Iraniyan - Vikatanreview

படத்தில் முரளி இரணியனாகவே வாழ்ந்திருக்கிறார்....

இரணியன் - விகடன் விமர்சனம்

படத்தில் முரளி இரணியனாகவே வாழ்ந்திருக்கிறார்....

Published:Updated:
Iraniyan - Vikatanreview
பிரீமியம் ஸ்டோரி
Iraniyan - Vikatanreview

இந்தியா சுதந்திரம் பெற்ற காலததில், கம்யூனிஸ சிந்தனைகளோடு போராட்டக்களத்தில் குதித்த வீர இளைஞன் இரணியன்.

படத்தின் அடிநாதம் இது என்றாலும், சினிமா ஃபார்முலாக்களுக்காக வளைந்து நெளிந்து, ஏகமாகவே கற்பனைப் பாதையில் பயணிக்கிறது கதை.

பட்டாளத்திலிருந்து திரும்பிவரும் இரணியன், தனது கிராம மக்கள் ‘ஆண்டே’ என்ற ஜமீனுக்கு அடிமைப்பட்டுக் கிடப்பதைப் பார்க்கிறான். அவர்களின் உரிமைக்காகப் போராட ஆரம்பித்து, பெற்றோரை இழந்து, காடுமேடுகளில் தலைமறைவாகத் திரிந்து, தனது லட்சியம் நிறைவேற இருந்த கடைசி நிமிடத்தில், தான் யாருக்காகப் போராடினானோ, அந்த மக்களாலேயே கொலை செய்யப்படும் பரிதாபம்தான் படம்.

பீரியட் ஃபிலிம் என்ற அங்கலட்சணங்கள் படத்துக்கு நிறையவே இருக்கின்றன. போலீஸாரின் உடைகளிலிருந்து கார், ஆள் -அம்பு விஷயங்களில் எல்லாமே ஐம்பதுகளின் ஜாடையைப் பார்த்துப் பார்த்து தான் சேர்த்திருக்கிறார்கள். ஆனாலும் சுவாரஸ்யத் தட்டுப்பாட்டால் படம் ஆங்காங்கே இழுக்கிறது.

Iraniyan - Vikatanreview
Iraniyan - Vikatanreview

கோபம் தெறிக்கும் பார்வையும் குரலுமாகத் துளியும் மிகையின்றி இரணியனாகவே வாழ்கிறார் முரளி. குதிரையிலேறித் துரத்தி ஜமீன் ஆட்களைத் துவம்சம் பண்ணும் போதும், தனது மக்களே தன்னைக் கல்லால் அடிக்கையில் சிலை மாதிரி நின்று தாங்கும்போதும் ஜொலிக்கிறார் முரளி.மீனா... கொஞ்சம் விலகி வெளியே போய்விட்டு, அடுத்த ரவுண்ட் வந்திருக்கிறார். இடைவெளியை நிரப்பிவிட்ட தாராள நடிகைகளுக்கு ஈடுகொடுக்க, இவரும் கொஞ்சம் ‘இறங்கி’யிருப்பது காலத்தின் கோலம். ஆனால், பாவம்... புதுப்பாணியில் நடிப்பைக் காட்டத்தான் கதை இடம் தராமல் ஏமாற்றிவிட்டது!

குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய நபர் ரகுவரன். ‘ஆண்டே’ என்ற அரசாங்கமே நடத்துகிறார். அதே பரிமாணங்கள்தான் என்றாலும் ரசிக்கும்படி இருக்கிறது. ஆனாலும் இழுத்து இழுத்து அவர் பேசுகையில், என்னதான் காததைத் தீட்டிக் கொண்டு கேட்டாலும் கொழகொழவெனச் சத்தம்தான் கேட்கிறதே தவிர, வார்த்தை புரியவில்லை!ஒரு கிராமமே புலம்பெயர்ந்து பஞ்சம் பிழைக்க வேறு இடம் நோக்கிப் போவது...

Iraniyan - Vikatanreview
Iraniyan - Vikatanreview

ஊரிலேயே பெரிய பரபரப்பை ஏற்படுத்தும் திருவிழா... கிராமத்தில் பெரும்பாலோர் செத்துக் கிடக்கும் காட்சிகள் போன்றவை கவனமெடுத்துக் கூட்டம் சேர்க்காததால், சோகம் குறைந்து சோகையாகத் தெரிகிறது.ஊர் நன்மைக்காகப் போராடுகிற இரணியன், ஊரோடு அனுசரித்து வாழாமல் சந்தன வீரப்பன் போலக் கூட்டாளிகளுடன் காட்டில் சுற்றிக் கொண்டிருக்கிறார்!

ஓர் உண்மைக் கதையை பரபரப்பு சேர்த்து கற்பனைக் கதையாகப் படம் பண்ணுவதில் உள்ள எல்லாவித நடைமுறைச் சிக்கல்களிலும் சிக்கி அல்லாடியிருக்கிறது இரணியன்!

- விகடன் விமர்சனக்குழு

(19.12.1999 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...)
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism