Published:Updated:

சுஷாந்த் புகைப்படத்துடன் 30,000 மாஸ்க்குகள்... அரசியல் ஆதாயம் தேட நினைக்கிறதா பா.ஜ.க?

சுஷாந்த் சிங்
சுஷாந்த் சிங்

``பேனர்கள் மட்டுமல்ல, சுஷாந்தின் புகைப்படம் கொண்ட 30,000 ஸ்டிக்கர்களையும், 30,000 மாஸ்க்குகளையும் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யவிருக்கிறோம்.'' - பீகார் மாநில பா.ஜ.க.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பீகார் மாநிலத்தில் தேர்தல் வேலைகள் களைகட்டத் தொடங்கிவிட்டன. அக்டோபர் மாதத்தில் அங்கு தேர்தல் நடப்பதாக இருந்தது. ஆனால், கொரோனாநோய்த் தொற்று பரவிவரும் இந்தச் சூழலில் தேர்தல் தள்ளிவைக்கப்படலாம் என்ற செய்திகளும் வலம்வருகின்றன. தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லையென்றாலும், கூட்டணிப் பேச்சுவார்த்தைகள், பிரசார பேனர்கள், போஸ்டர்கள் என பீகாரின் அனைத்துப் பகுதிகளிலும் தேர்தல் நெடி அடிக்கத் தொடங்கிவிட்டது.

இந்த நேரத்தில் பா.ஜ.க மீது சில குற்றச்சாட்டுகளைப் பீகார் மாநில எதிர்க்கட்சியினரும், அரசியல் நோக்கர்கள் சிலரும் முன்வைக்கிறார்கள். `சுஷாந்தின் சொந்த மாநிலமான பீகாரில் ஆட்சியைப் பிடிப்பதற்குத்தான், சுஷாந்த் சிங் ராஜ்புத் மரண வழக்கில் பா.ஜ.க தீவிரம் காட்டுகிறது' என்பதுதான் அந்தக் குற்றச்சாட்டு. `சுஷாந்த் மரண வழக்கில், பா.ஜ.க ஆதாயம் தேடுவது உண்மையா?’ என்பதை விரிவாக அலசுகிறது இந்தக் கட்டுரை.

சுஷாந்த் சிங் ராஜ்புத்
சுஷாந்த் சிங் ராஜ்புத்

முதலில், சுஷாந்த் வழக்கில் இதுவரை நடந்தவற்றைப் பார்த்துவிடுவோம்.

இதுவரை சுஷாந்த் வழக்கில் நடந்தது என்ன?

கடந்த ஜூன் 14-ம் தேதி, பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், மும்பை பாந்த்ரா பகுதியிலுள்ள தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். தற்கொலைக் குறிப்பு எதுவும் சம்பவ இடத்தில் கிடைக்கவில்லை என்பதால், மன அழுத்தம் அல்லது தொழில் போட்டி காரணமாக சுஷாந்த் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்கிற கோணத்தில் மும்பை காவல்துறை விசாரணையைத் தொடங்கியது. அதற்கடுத்த நாளே ``பாலிவுட்டில் வாரிசு முன்னுரிமை அரசியல் (Nepotism) ஆதிக்கம் இருக்கிறது. அதனால்தான் சுஷாந்த் இந்த முடிவுக்குத் தள்ளப்பட்டிருக்க வேண்டும்'' என்று குற்றம்சாட்டினார் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத். இதைத் தொடர்ந்து சமூக ஊடகங்கள் முழுவதும் நெப்போடிசம் குறித்த விவாதங்கள் அரங்கேறின.

கங்கனா - சுஷாந்த்
கங்கனா - சுஷாந்த்

சுஷாந்த்தின் அக்கம்பக்க வீட்டினர், உறவினர்கள், நண்பர்கள் எனப் பலரையும் விசாரணை செய்தது மும்பைக் காவல்துறை. அதன் பிறகு ஜூன் 18-ம் தேதி சுஷாந்தின் தோழி ரியா சக்ரபோர்த்தியை ஒன்பது மணி நேரத்துக்கும் மேலாக மும்பை காவல்துறை விசாரணை செய்தது. அந்த விசாரணையில், தான் சுஷாந்தோடு இணைந்து வாழ்ந்துவந்ததாகவும், அவர் இறப்பதற்கு நான்கு நாள்களுக்கு முன்னர் ஏற்பட்ட வாக்குவாதத்தால் பிரிந்ததாகவும் குறிப்பிட்டார் ரியா. ஜூலை 9-ம் தேதி, பா.ஜ.க தலைவர் சுப்ரமணியன் சுவாமி, இந்த வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து பிரதமருக்குக் கடிதம் எழுதியிருந்தார். ஜூலை 26-ல் அந்தக் கடிதம் ஏற்கப்பட்டது.

சுப்ரமணியன் சுவாமி
சுப்ரமணியன் சுவாமி

இதையடுத்து, ஜூலை 28-ம் தேதி, சுஷாந்தின் தந்தை கே.கே.சிங் தனது மகனின் வங்கிக் கணக்கு விவரங்களை ரியா நிர்வகித்து ஏராளமான நிதியை மாற்றிக்கொண்டதாக ரியா உள்ளிட்ட அவர் குடும்பத்தினர்மீது பீகார் மாநிலம், பாட்னா காவல் நிலையத்தில் புகாரளித்தார். மேலும், சுஷாந்த் தற்கொலைக்கு அவரின் தோழி ரியாதான் காரணம் என்றும் அந்தப் புகாரில் குறிப்பிட்டிருந்தார் கே.கே.சிங். அந்தப் புகாரின் அடிப்படையில் ரியாமீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. அதன் பிறகு சமூக வலைதளங்களில் ரியாவைக் கைது செய்ய வேண்டும் என்பது போன்ற கருத்துகள் பரவத் தொடங்கின.

சுஷாந்த் வழக்கு தொடர்பான விசாரணைக்காக மும்பை வந்த பீகார் மாநில ஐ.பி.எஸ் அதிகாரி வினய் திவாரி, `கொரோனா தடுப்பு நடவடிக்கை’ எனக் கூறப்பட்டு மும்பையில் தனிமைப்படுத்தப்பட்டார். இந்த நடவடிக்கைக்கு பீகார் மாநில முதல்வர் நிதீஷ் குமார் கடும் கண்டனம் தெரிவித்ததோடு, `இந்த வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்ற வேண்டும்’ என்று பரிந்துரை செய்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதைத் தொடர்ந்து சுஷாந்த் வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்ற உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம். ரியாமீது பணப் பரிவர்த்தனை தொடர்பான புகார்கள் எழுந்ததையடுத்து, அமலாக்கத்துறை ரியாவின் வாட்ஸ்அப் உரையாடல்களை ஆய்வு செய்தது. அப்போது ரியாவுக்கு போதைப் பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இது குறித்து போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸார் ரியாமீது வழக்கு பதிவு செய்தனர்.

சுஷாந்த் - ரியா
சுஷாந்த் - ரியா
சுஷாந்த் வழக்கு: `உண்மையை நோக்கிய முதல் படி!’ - சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம்

கடந்த செப்டம்பர் 4-ம் தேதி போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் நடிகை ரியாவின் சகோதரர் ஷோவிக் மற்றும் சுஷாந்த் சிங் இல்லத்தின் பராமரிப்பாளர் சாமுவேல் மிரண்டா ஆகிய இருவரிடமும் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணைக்குப் பிறகு இருவரும் கைது செய்யப்பட்டனர். அதைத் தொடர்ந்து செப்டம்பர் 6-ம் தேதி போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் விசாரணை செய்யப்பட்டார் நடிகை ரியா. மூன்ரு நாள் விசாரணைக்குப் பிறகு ரியாவும் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

ரியாவின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதால், செப்டம்பர் 22-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில்வைத்து விசாரிக்கப்படவிருக்கிறார் அவர். போதைப் பொருள் சம்பந்தமான வழக்கில் கைதாகியிருக்கும் ரியாவிடம், சி.பி.ஐ தொடர்ந்து சுஷாந்த் மரண வழக்கு தொடர்பான விசாரணைகளையும் மேற்கொள்ளும் என்று சொல்லப்படுகிறது.

சுஷாந்த் வழக்கில் பா.ஜ.க-வின் ஈடுபாடு!

சரி, இப்போது பா.ஜ.க இந்த வழக்கில் ஆதாயம் தேடுவதாக எழுந்திருக்கும் குற்றச்சாட்டு குறித்து அலசுவோம்...

சுஷாந்த் சிங் ராஜ்புத், தோனியின் பயோபிக்கில் நடித்தவர். இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்களுள் முக்கியமானவர் தோனி. தோனிக்கு நாடு முழுவதும் ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். தோனியை இமிடேட் செய்தது, அவரது ஷாட்களை அச்சு அசலாக அடித்துக் காட்டியது என சுஷாந்த் சிங், `எம்.எஸ்.தோனி UNTOLD STORY' படத்தில் தோனியாகவே வாழ்ந்திருப்பார். இந்தப் படத்துக்குப் பிறகு இந்தியா முழுக்கவே சுஷாந்துக்கான ரசிகர்கள் அதிகரித்தனர். கடந்த ஜூன் மாதத்தில் அவர் இறந்துவிட்டார் என்ற செய்தி இந்தியா முழுவதுமே பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தயது. ஒரு வாரத்துக்கும் மேலாக சமூக வலைதளங்களில் எங்கும் சுஷாந்தே நிறைந்திருந்தார்.

சுஷாந்த் சிங் ராஜ்புத்
சுஷாந்த் சிங் ராஜ்புத்

`சுஷாந்த்மீதான அனுதாபத்தைப் பயன்படுத்திக்கொண்டு, இந்த வழக்கில் தீவிரம்காட்டி, சுஷாந்தின் ஆதரவாளர்களைத் தங்கள் பக்கம் இழுப்பதற்கான வேலையை பா.ஜ.க எப்போதோ தொடங்கிவிட்டது' என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். `சுஷாந்த் மரண வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்ற வேண்டும்’ என பா.ஜ.க-வின் மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி கடிதம் எழுதியதே இதற்கு ஆரம்பப்புள்ளி என்று சொல்லப்படுகிறது. ஆனால், அதற்கு முன்பாகவே இந்த வேலையைத் தொடங்கியிருக்கிறது பா.ஜ.க-வின் பீகார் மாநில கலை மற்றும் கலாசார அணி.

சுஷாந்த் பேனர்
சுஷாந்த் பேனர்
Twitter

கடந்த இரு தினங்களுக்கு முன்னர் `சுஷாந்துக்காக இந்த உலகமே இணைந்துள்ளது' என்ற வாசகத்தோடு பீகார் மாநிலம் பாட்னாவில் வைக்கப்பட்ட ஒரு பேனர் சமூக வலைதளங்களில் வைரலானது. அந்த பேனர் குறித்து ஏ.என்.ஐ செய்தி ஊடகத்துக்குப் பேட்டியளித்திருந்தார் பீகார் மாநில பா.ஜ.க-வின் கலை மற்றும் கலாசார அணியின் தலைவர் வருண்குமார் சிங். அந்தப் பேட்டியில்...

பேனர்கள் மட்டுமல்ல, சுஷாந்த்தின் புகைப்படம்கொண்ட 30,000 ஸ்டிக்கர்களையும், 30,000 மாஸ்க்குகளையும் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யவிருக்கிறோம். இதில் எந்தவோர் அரசியலும் இல்லை. சுஷாந்துக்கு நீதி கிடைக்க வேண்டுமென்பதற்காகத்தான் செய்கிறோம். சுஷாந்த் வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்றக் கோரி நாங்கள் மத்திய அமைச்சர்களுக்குக் கடிதம் எழுதினோம். இது தொடர்பான வேலைகளை நாங்கள் ஜூன் 16-ம் தேதியே தொடங்கிவிட்டோம்.
வருண்குமார் சிங்

சுஷாந்துக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக இது தொடர்பான பணிகளை ஜூன் 16-ம் தேதி, அதாவது அவர் இறந்த இரண்டு நாள்களிலேயே பீகார் மாநில பா.ஜ.க நிர்வாகிகள் தொடங்கிவிட்டதாக வருண்குமார் சிங் தெரிவிக்கிறார். `இதில் அரசியல் இல்லை’ என்று அவர் சொன்னாலும், `வரவிருக்கும் பீகார் மாநிலத் தேர்தலில் சுஷாந்த் ரசிகர்களைத் தங்கள் கூட்டணிக்கு ஆதரவாக மாற்றத்தான் இந்த நடவடிக்கைகள்' என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். இன்னும் ஓரிரு தினங்களில் பீகார் மாநில பா.ஜ.க ஐ.டி விங்கிலிருந்து சுஷாந்தின் வாழ்க்கைப் போராட்டங்கள் குறித்த வீடியோ ஒன்றும் வெளியிடப்படவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுஷாந்த் வழக்கில் ஆதாயம் தேடும் ஐக்கிய ஜனதா தளம்?

`பா.ஜ.க மட்டுமல்ல அதன் கூட்டணிக் கட்சியும், தற்போது பீகாரில் ஆளும் கட்சியுமான ஐக்கிய ஜனதா தளமும் இந்த விவகாரத்தைக் கையிலெடுத்து, அதை வாக்குகளாக மாற்றும் வேலையைச் செய்துகொண்டிருக்கிறது’ என்கிறார்கள் பீகாரைச் சேர்ந்த எதிர்க்கட்சித் தலைவர்கள் சிலர். ``மும்பையில் நடந்த நடிகர் சுஷாந்த்தின் தற்கொலைக்கு பீகார் மாநிலம், பாட்னா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டவுடன் முதல்வர் நித்திஷ் குமாரே தலையிட்டு காவல்துறை அதிகாரிகளை மும்பைக்கு அனுப்பிவைத்தார். அதுமட்டுமல்லாமல், இந்த வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்ற வேண்டுமென்ற கோரிக்கையையும் அவரே முன்வைத்தார்'' என்கிறார்கள் எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள்.

 பீகார் முதல்வர்
பீகார் முதல்வர்

``ஜி.டி.பி சரிவு, வறுமை, வெளி மாநிலத்தில் வேலை செய்து கொரோனா காரணமாக பீகார் திரும்பிய தொழிலாளர்களுக்கு வேலையின்மை, பீகார் மாநிலத்தின் பாதிப் பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருப்பது என்று பல பிரச்னைகள் பீகார் மாநிலத்தில் உள்ளன. இவை அனைத்துக்கும் அரசிடம் பதில் இல்லை. எனவே, சுஷாந்த் வழக்கைக் கொண்டு அனுதாப ஓட்டுகளைச் சம்பாதிக்க நினைக்கின்றனர். மேலும், சுஷாந்த் ஒரு பீகாரி என்பதால், அவருக்கு நீதி கிடைத்தால் `பீகாரிகளுக்கு பிரச்னை என்றால், இந்த அரசு தோள் கொடுக்கும்' என்பதைப் பீகார் மக்கள் மனதில் பதியவைத்து, அதன் மூலம் வாக்குகள் சேகரிக்கலாம் என்பதற்காகவும் இந்த வழக்கில் பா.ஜ.க மற்றும் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய இரண்டு கட்சிகளுமே ஆர்வம் காட்டுகின்றன'' என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

மேலும், ``பீகாரில், ராஜ்புத் சமூகத்தின் வாக்கு வங்கி ஐந்து சதவிகிதம். எனவே, சுஷாந்த் சிங் ராஜ்புத் வழக்கில் தீவிரம் காட்டினால், அந்தச் சமூகத்தின் வாக்குகள் கணிசமாகக் கிடைக்கும் என்பதும் இதற்கு ஒரு காரணம்'' என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

பீகார் மாநில காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள், ``சுஷாந்த் பீகாரின் சொத்து. அவர் குடும்பத்தினருக்காக நாங்களும் வருந்துகிறோம். அதேநேரத்தில் சுஷாந்த் வழக்கில் பா.ஜ.க அரசியல் செய்வது கொஞ்சம்கூடச் சரியில்லை'' என்று பா.ஜ.க-வை நொந்துகொள்கிறார்கள்.

சுஷாந்த் வழக்கில் சிவசேனாவுக்குத் தொடர்பா?

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் சுஷாந்த் மரண வழக்கில், மகாராஷ்டிர மாநில முதல்வர் உத்தவ் தாக்கரேயின் மகனும், அமைச்சருமான ஆதித்யா தாக்கரேவுக்கு தொடர்பிருப்பதாகச் செய்திகளும் வலம்வந்தன. இது குறித்து அந்தச் சமயத்தில் விளக்கமளித்திருந்தார் ஆதித்யா தாக்கரே.

எனது அரசியல் வளர்ச்சிப் பிடிக்காத சிலர் இது போன்ற குற்றச்சாட்டைச் சுமத்துகின்றனர். பா.ஜ.க-வைச் சேர்ந்த எதிர்க்கட்சியினர் மோசமான அரசியல் செய்கின்றனர். நான் எந்த சினிமா பிரபலத்துடனும் இதுவரை தனிப்பட்ட முறையில் தொடர்பு வைத்திருந்ததே இல்லை.
ஆதித்யா தாக்கரே
ஆதித்யா தாக்கரே
ஆதித்யா தாக்கரே

இந்தப் புகாரை அடுத்து, `நாங்கள் ஆட்சியில் இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாமல் பா.ஜ.க-வைச் சேர்ந்தவர்கள் ஆதித்யா தாக்கரே மீது வீண்பழி சுமத்துகிறார்கள்' என்று சிவசேனா நிர்வாகிகள் கொந்தளித்தனர்.

பீகார் தேர்தல் மற்றும் கடந்த ஆண்டு மகாராஷ்டிராவில் தங்களை வீழ்த்தி ஆட்சியைப் பிடித்த சிவசேனாவைப் பழி வாங்குவது என இரண்டு விஷயங்களை மனதில் வைத்துக்கொண்டுதான் பா.ஜ.க., சுஷாந்த் வழக்கைக் கையிலெடுத்திருப்பதாகச் சொல்லப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து, அரசியல் நோக்கர்கள் மேலும் சில கருத்துகளை முன்வைக்கிறார்கள்.

மும்பை
மும்பை

``இந்தியாவின் வர்த்தகத் தலைநகரான மும்பை நகரம் அமைந்திருக்கும் மகாராஷ்டிராவில் எப்படியாவது ஆட்சியமைத்துவிடலாம் என்றிருந்த பா.ஜ.க-வுக்கு அதிர்ச்சி கொடுத்தது சிவசேனா. எனவே, சுஷாந்த் மரண வழக்கைக் கொண்டு சிவசேனாவைப் பழி தீர்க்க வாய்ப்பிருக்கிறதா என்பது குறித்து பா.ஜ.க ஆராய்ச்சி செய்திருக்க வாய்ப்பிருக்கிறது. அதனால்தான் மும்பை காவல்துறை வசமிருந்த இந்த வழக்கை தங்கள் கைக்கு, அதாவது சி.பி.ஐ கைக்கு மாற்றிக் கொண்டது மத்தியில் ஆளும் பா.ஜ.க. சுஷாந்த் சிங் தொடர்பான மூன்று வழக்குகளும் இப்போது மத்திய அரசின் வசமே உள்ளன. சுஷாந்த் மரணம் தொடர்பான வழக்கு சி.பி.ஐ கையிலும், பண பரிவர்த்தைகள் தொடர்பான வழக்கு அமலாக்கத்துறை கையிலும், போதைப் பொருள் தொடர்பான வழக்கு போதைப் பொருள் தடுப்புப் பிரிவுத் துறை கையிலும் உள்ளன. எனவே, இதில் பா.ஜ.க அரசியல் லாபம் தேடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டு என்றே சொல்லலாம். இதில் வேடிக்கை என்னவென்றால், பா.ஜ.க-வைச் சேர்ந்தவர்கள் `சுஷாந்துக்கு நீதி வேண்டும்’ என்ற கோரிக்கையையும் ஹேஷ்டேக்கையும் டிரெண்ட் செய்து சமூக வலைத்தளங்களில் போர்க்கொடி தூக்கியிருக்கிறார்கள். சுஷாந்த் மரணம் தொடர்பான வழக்குகள் அனைத்தும் மோடி தலைமையிலான மத்திய அரசின் வசமே உள்ளன. அப்படியிருக்கையில் நீதி வேண்டுமென்ற கோரிக்கையை யாரிடம் முன்வைத்துப் போராடுகிறார்கள் என்பதுதான் புரியவில்லை.'' என்கிறார்கள் அவர்கள்.

சுஷாந்த் வழக்கில் கங்கனா!

இப்படியாக அரசியல் விளையாட்டுகள் ஒருபுறமிருக்க, சுஷாந்த் வழக்கில் ஆரம்பத்திலிருந்தே பாலிவுட்டைச் சேர்ந்தவர்களைக் குற்றம்சாட்டி வருகிறார் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத். மேலும், சுஷாந்த் வழக்கு குறித்து வெளிப்படையாகப் பேசுவதால் தனக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது எனவும், தனக்கு மத்திய அரசு பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார் கங்கனா. அவர் கேட்டுக்கொண்டதையடுத்து அவருக்கு ஆயுதமேந்திய 11 அதிகாரிகள்கொண்ட Y+ பிரிவு பாதுகாப்பு வழங்கியுள்ளது மத்திய அரசு. தனக்குப் பாதுகாப்பு வழங்கியதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு நன்றி தெரிவித்தார் கங்கனா.

சுஷாந்த் வழக்கில் தொடர்ந்து பாலிவுட் நட்சத்திரங்கள்மீது குற்றம்சாட்டி வந்த கங்கனா, ஒருகட்டத்தில் சிவசேனா கட்சியைச் சேர்ந்தவர்களோடு நேரடியாகவே வார்த்தைப் போரில் ஈடுபட்டார். மும்பை காவல்துறை குறித்து கங்கனா குற்றச்சாட்டு வைக்கவே சிவசேனாவைச் சேர்ந்தவர்கள் கொதித்தெழுந்தனர். ``மும்பை காவல்துறை குறித்த அவரின் ஒப்பீட்டுக்குப் பின்னர், அவருக்கு இங்கு வசிக்க உரிமை இல்லை'' என்று மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் கூறினார். அதுமட்டுமல்லாமல் மும்பையை `மினி பாகிஸ்தான்' என்றும் கங்கனா குறிப்பிட்டார். இதையடுத்து `கங்கனா மும்பை வர வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்' என சிவசேனா நிர்வாகிகள் எச்சரிக்கை விடுக்க, `நான் செப்டம்பர் 9-ம் தேதி நிச்சயம் மும்பை வருவேன். முடிந்தால் தடுத்துப் பாருங்கள்' என்றார் கங்கனா. அதேபோல நேற்று தனது சொந்த ஊரான மணாலியிலிருந்து ஒய் ப்ளஸ் பாதுகாப்புப் படையோடு மும்பை வந்தடைந்துவிட்டார் கங்கனா.

மகாராஷ்டிரா அரசின் எச்சரிக்கை... அமித் ஷாவுக்கு நன்றி!  Y+ பாதுகாப்பில் கங்கனா?

``கங்கனா, மும்பையில் போதைப் பொருள் சகஜமாகக் கிடைக்கிறது என்று குற்றம்சாட்டுகிறார். பின்னர் சிவசேனா கட்சியை எதிர்த்துப் பேசுகிறார். அடுத்த சில நாள்களில் அவருக்கு ஒய் ப்ளஸ் பாதுகாப்பு வழங்குகிறது மத்திய அரசு. அதற்காக அமித் ஷாவுக்கு நன்றி தெரிவிக்கிறார் கங்கனா. இதற்கிடையில் மும்பை மாநகராட்சி, கங்கனாவின் மும்பை வீடு, விதிமுறைகளை மீறிக் கட்டப்பட்டுள்ளதாகச் சொல்லி அதன் ஒரு பகுதியை இடித்துத் தள்ளுகிறது. அதையடுத்து கங்கனா மாநகராட்சிக்கு எதிராக மும்பை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்கிறார்.

வீட்டின் மீதமுள்ள பகுதியை இடிக்கத் தடைவிதித்து மும்பை மாநகராட்சியை கங்கனாவின் மனுவுக்குப் பதில் சொல்ல அழைத்திருக்கிறது உயர் நீதிமன்றம். கங்கனாவின் ஒவ்வோர் அசைவுக்கும் பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள் உட்பட பல்வேறு பா.ஜ.க நிர்வாகிகளும் ஆதரவு தெரிவிக்கின்றனர். இந்த நிகழ்வுகளையெல்லாம் இணைத்துப் பார்க்கும்போது மகாராஷ்டிராவில் சிவசேனாவின் பலத்தை அசைத்துப் பார்க்க கங்கனாவை பா.ஜ.க பயன்படுத்திக்கொள்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது'' என்பது போன்ற கருத்துகளும் நெட்டிசன்களால் பரலாகப் பதிவு செய்யப்பட்டுவருகின்றன.

சுஷாந்த் சிங்
சுஷாந்த் சிங்
அரசியல் கட்சிகள் இந்த வழக்கை வைத்து பல வகை அரசியல் விளையாட்டுகளில் ஈடுபட்டிருந்தாலும், சுஷாந்தின் ரசிகர்கள் அனைவரும் சுஷாந்துக்கு என்ன நடந்தது என்பதைத் தெரிந்துகொள்ளவும், அவருக்கான நீதி விரைவில் கிடைக்க வேண்டுமெனவும் ஆவலோடு காத்திருக்கிறார்கள் என்பதுதான் நிதர்சன உண்மை!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு