நூற்றாண்டை நெருங்கும் விகடன் பாரம்பர்யத்தின் பெருமைமிகு தடங்களில் ஒன்று, ‘விகடன் மாணவப் பத்திரிகையாளர் திட்டம்’. இந்த ஆண்டு, இந்தியா முழுவதிலும் இருந்து 52 ஸ்மார்ட் பத்திரிகையாளர்களைப் பல கட்டத் தேர்வுகளுக்குப் பிறகு இத்திட்டத்துக்காகத் தேர்வாகியுள்ளனர்.

தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவப் பத்திரிகையாளர்களுக்கான இரண்டு நாள் கூட்டுப் பயிற்சி முகாம், சென்னையில் 'ஆனந்த விகடன்' அலுவலகத்தில் இன்றும் நாளையும் நடைபெறுகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSமுதல் நாள் நிகழ்வின் சிறப்பு அமர்வில் 'ஜெய் பீம்' திரைப்படத்தின் இயக்குநரும், விகடன் முன்னாள் மாணவப் பத்திரிகையாளருமான த.செ.ஞானவேல் கலந்துகொண்டு மாணவப் பத்திரிகையாகளிடம் உரையாற்றினார். 'ஒரு செய்தி எப்படி சினிமா ஆனது?' என்ற தலைப்பில் அமைந்த அவரது உரை, ‘செய்தியின் கோணம்', ‘ஒரு செய்தி கலைப்படைப்பாக எப்படி மாறுகிறது’ என்ற இரண்டு விஷயங்களை முதன்மைப்படுத்தி அமைந்தது.

"விகடனின் மாணவப் பத்திரிகையாளராகப் பயிற்சி பெறுவதென்பது, கல்லூரிப் படிப்புடன் கூடுதலாக ஒரு டிகிரியைப் படிப்பதைப் போன்றது. நான் மாநிலக் கல்லூரியில் படிக்கும்போது, மாணவப் பத்திரிகையாளர் திட்டத்தில் பயிற்சி பெற்றேன். அப்போது கல்லூரியின் முதல்வர்களே கல்வி அமைச்சரைச் சந்திப்பதற்கு பல்வேறு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். ஆனால், என்னுடைய மாணவப் பத்திரிகையாளர் அடையாள அட்டையைக் கொண்டு நான் நேராகத் தலைமைச் செயலகத்தில் கல்வி அமைச்சரின் அறைக்கே சென்றுவிட்டேன். அவரிடம் நிறைய கேள்விகள் கேட்டேன், அவரும் பதிலளிக்க அது ஜூனியர் விகடனில் வெளியானது. கேள்விகளை உரத்துக் கேட்பதற்கு உங்களுக்குக் கிடைத்த களம் இது!” என்று மாணவப் பத்திரியாளராக தன்னுடைய அனுபவத்தைப் பகிர்ந்த ஞானவேல், மாணவப் பத்திரிகையாளராக இருப்பதன் முக்கியத்துவத்தைக் கவனப்படுத்தினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
முதலில், செய்திக்குக் கோணம் முக்கியம். ஒரு செய்தியை என்ன கோணத்தில் வழங்க வேண்டும் என்பதைக் கண்டறிய வேண்டும். கோணம் இல்லாமல் செய்தி இல்லை. செய்தியின் கோணம் என்ன என்பதைக் கண்டறிந்து, அதன் தகவல்களைத் தொகுத்து, அதிலிருந்து உருவாகும் பார்வையோடு செய்தியை வழங்க வேண்டும்.என்று செய்தி வழங்கலின் அடிப்படை பற்றிப் பேசிய ஞானவேல், செய்தி எப்படி கலைப் படைப்பாக மாறுகிறது என்று பேசத் தொடங்கியபோது, மாணவர்களின் கவனம் மேலும் கூர்மையடைந்தது.
"ஒரு செய்தி, எப்படி சினிமாவாக மாறுகிறது என்பதைவிட, இன்னும் பெரிய அளவில் அது எப்படி ஒரு கலைப் படைப்பாக மாறுகிறது? அதற்குக் காரணம் செய்திக்குள் புதைந்திருக்கும் உணர்வு. செய்திக்குள் உறைந்திருக்கும் உணர்வுகளை நீங்கள் அடையாளம் காணும்போது, அது ஒரு கலைப்படைப்பாகப் பரிணமிக்கும் நிலையை நோக்கி நகரும். அது திரைப்படமாகத் தான் வெளிப்பட வேண்டும் என்றில்லை. ஓவியம், எழுத்து, சிற்பம் என கலையின் எந்த வடிவங்களிலும் அது வெளிப்படலாம்.

பழங்குடியின மக்கள் மீது பதியப்படும் பொய்வழக்குகள் பற்றிய அறிக்கை ஒன்றை, நான் பத்திரிகையாளராக இருந்தபோது படிக்க நேர்ந்தது. பிறகு, பேராசிரியர் கல்யாணியைப் பேட்டி எடுத்தபோது, இப்பிரச்னை குறித்து மேலும் ஆழமாக அறிந்துகொள்ள முடிந்தது. இப்படியாக, பழங்குடிகள் சந்திக்கும் பல்வேறு பிரச்னைகள் பற்றிய பார்வையை நான் வந்தடைந்தேன். பொதுமக்களைப் போல், இந்தத் துயரங்களைப் பார்த்து வேதனைப்படும் இடத்தில் நாம் இல்லை. இதுபோன்ற செய்திகளின் பின்னுள்ள துயரத்தை, உணர்வுகளைப் பின்தொடர்ந்து அதைக் கலைப்படைப்பாக உருவாக்கும் பொறுப்பு பத்திரிகையாளர்கள், கலைஞர்களுக்கு இருக்கிறது,” என்று செய்தியிலிருந்து கலை பிறக்கும் கதையைப் பகிர்ந்தார்.
தொடர்ந்து மாணவர்களுடன் கலந்துரையாடிய ஞானவேல், அவர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்துப் பேசினார்.