'உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும்மரணப் படுக்கையிலும் மறக்காது கண்மணியே...!’
இந்த வரிகள் காதலுக்கு மட்டும் இல்லை; நட்புக்கும் இந்த வரிகள் பொருத்தமாகத்தான் இருக்கும் என்பதைப் புரிய வைத்தனர் அந்த இருவர்.

''என் நண்பனே... உன்னை எதைச் சொல்லிப் பாராட்டுவது..! எந்தச் சம்பவத்தைச் சொன்னாலும் அதில் நானும் உடனிருப்பேனே... அப்படியானால் என்னை நானே பாராட்டிக்கொள்வதாகிவிடாதா?!'' என்று இயல்பான குரலில் பேச ஆரம்பித்த சிவாஜி. மெதுமெதுவாகக் குரலுயர்த்தி உணர்ச்சிகளின் விளிம்புக்குப் போய்விட்டார். கலைஞரின் பவளவிழா பாராட்டு விழா நடத்தக் கூடியிருந்த மொத்தக் கூட்டமும் திசை திரும்பி, இந்த நண்பர்கள் பக்கம் கவனமாகிவிட்டது.
''பாசமலர் படத்தில் அண்ணனாக அழவைத்த சிவாஜி, இந்த விழா மேடையில் ஒரு நண்பனாகத் தோன்றி எல்லோரையும் கண்கலங்க வைத்துவிட்டார்!'' என்றார் ஓர் இளம் இயக்குநர்.
எத்தனை பக்க வசனமென்றாலும், கணீர்க் குரலில் ஏற்ற இறக்கத்தோடு திக்கித் திணறாமல் பேசக்கூடிய நடிகர் திலகத்தால், அந்த மேடையில் சில வார்த்தைகளைத் தெளிவாக உச்சரிக்க முடியவில்லை.''மேடையேறிய கணம் முதல் அவர் தன்வசத்தில் இல்லை. அதிலும் மைக்கை நெருங்கி, 'தாயே... தமிழே’ என்று ஆரம்பித்தவுடன் முற்றாகத் தன் வசம் இழந்துவிட்டார் என்று தெரிந்தது. கலைஞருடனான ஒவ்வொரு சம்பவத்தையும் மனக் கண்ணில் கண்டு அசை போட்டு, அதன் பிறகே 'அதைச் சொல்லிப் பேசுவதா... இதைச் சொல்லி பாராட்டுவதா’ என்ற நிதானத்தில் பேசினார்'' என்றார் விழாவுக்கு வந்திருந்த மூத்த சினிமா பத்திரிகையாளர் ஒருவர்

சிவாஜியின் நிதானமெல்லாம் முற்றாக உடைந்துபோனது பேச்சின் கடைசி கட்டத்தில்தான்! 'அய்யா... இந்தப் பய பாரதிராஜா சொன்னான், எங்க ஆயுசுல எவ்வளவு வேணுமோ எழுதித் தரேன்னு! அவர்கள் இளைஞர்கள். என்னால அவ்வளவு முடியாது. நான் ரெண்டு வருஷம் தரேன்; எடுத்துக்கோ! அதுவரைக்கும் நான் இருப்பேனோ, மாட்டேனோ!’ என்றபோது சிவாஜிக்கு லேசாகக் குரல் உடைய, கடும் பிரயத்தனத்தோடு உணர்வுகளைக் கட்டுப்படுத்திக்கொண்டு மேடையில் உட்கார்ந்திருந்த கலைஞரின் கண்கள் கரையை உடைத்துக்கொண்டன. கண்ணாடித் திரைக்குப் பின்னால் கண்ணீர் பளபளக்கும் கண்களோடு, உதடுகள் கோணி, கட்டுப்படுத்தமுடியாத மனோநிலையில் சிக்கிய கலைஞரின் முகம், கலக்கத்தை வெளிச்சம் போட்டுக்காட்டியது.
பேச்சு முடிந்து திரும்பும்போது, சிவாஜி வரும் வழியெல்லாம் கண்ணீர் மல்க நின்றுகொண்டிருந்தார்கள் மேடையில் இருந்தவர்கள். தள்ளாடிய நடையோடு கலைஞரை நெருங்கிய சிவாஜி இரு கரங்களை விரித்துக்காட்ட, அதுவரை கட்டிக் காப்பாற்றப்பட்ட மேடை மரபுகள் அவர்களின் நட்புக்கு முன்னால் தவிடுபொடியாகின. கலைஞருக்குள் சிவாஜியும் சிவாஜிக்குள் கலைஞரும், பழைய கணேசனையும் கருணாநிதியையும் தேடும் வேகத்தில் ஆரத் தழுவிக்கொள்ள... அடுத்த சில கணங்கள் அரங்கிலிருந்த எல்லோரது முகத்திலும், பிரிந்திருந்த காதலர்கள் கட்டி அணைத்துக்கொள்ளும் க்ளைமாக்ஸ் காட்சியைப் பார்க்கும் பரவசம் தோன்றியது.
இருவரும் பிரிந்துவிட்ட பிறகும் கலைஞரின் கண்களில் கட்டுப்பாடில்லாமல் நீர் தான் ஒரு முதல்வர், ஒரு கட்சியின் தலைவர், தன் கரகரத்த குரல் கேட்பதற்காக கூட்டம் காத்திருக்கிறது, தன் முகத்தை திரைமுழுக்கக் காட்டிக் கொண்டு காமிரா உற்றுப் பார்க்கிறது...’ என்ற எந்த சிந்தனையும் இல்லாமல், 'என் நண்பன் பேசினதில் நான் நெகிழ்ந்துபோனேன்; கண்ணிலே தண்ணீர் வந்துடுச்சு. இதிலே என்ன இருக்கு வெட்கத்துக்கு!’ என்பவர்போல, கன்னத்தில் வழியும் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு, மேல்துண்டால் மூக்கை அழுந்தத் துடைத்தபடி மைக்கை நெருங்கினார்.
வழக்கமாகப் பேசுபவர்களே கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டுவிட்டால், குரல் கரகரப்பாகிவிடும். ''உணர்ச்சிமயமான இந்த விழாவிலே...'' என்ற கலைஞரின் குரலில் அன்று கொஞ்சம் கூடுதல் கரகரப்பு!
- சி.முருகேஷ்பாபு