Published:Updated:

கமல் 60: சினிமாவும் அரசியலும் கமலுக்கு வேறுவேறல்ல!

கமல்ஹாசன்
பிரீமியம் ஸ்டோரி
கமல்ஹாசன்

திரையுலகில் பெருமைக்குரிய வகையில் 60 ஆண்டுகள் பயணித்து வந்திருக்கும் கமல்ஹாசன், கொண்டாடப்படப் வேண்டிய கலைஞன்.

கமல் 60: சினிமாவும் அரசியலும் கமலுக்கு வேறுவேறல்ல!

திரையுலகில் பெருமைக்குரிய வகையில் 60 ஆண்டுகள் பயணித்து வந்திருக்கும் கமல்ஹாசன், கொண்டாடப்படப் வேண்டிய கலைஞன்.

Published:Updated:
கமல்ஹாசன்
பிரீமியம் ஸ்டோரி
கமல்ஹாசன்

`அரசியலும் வன்முறையும் ஒப்பந்தம் செய்துகொண்டு அக்னி சாட்சியாக ஜோடி சேர்ந்துவிட்டன. அதன் சந்ததிகள், நாடெங்கும் ஊழல் தீ வளர்த்து அதில் நேர்மையை ஊற்றி யாகம் செய்கின்றன’ - பின்னணிக் குரலோடு தொடங்கும் ‘குருதிப்புனல்’.

`ஜனங்களுக்கு ஞாபகசக்தியே கிடையாது. உனக்கும் எனக்கும் மட்டும்தான் அந்த வியாதி. பிரக்ஞை இல்லாத இந்த ஆட்டுமந்தை, ஆட்டுப்பால் குடிக்கிற இந்தத் தாத்தா பின்னாடி போய்க்கிட்டிருக்கு. தாத்தா பக்ரீத் கொண்டாட போய்க்கிட்டிருக்கார் எனத் தெரியாது இந்த மட மந்தைக்கு. பிரஜைகள் நாட்டு நடப்பை நாடகமா பார்க்கிறாங்க. இந்த நாடகம் பார்க்கிறதுக்கு விமர்சகர்களுக்கு அனுமதி கிடையாது’ - ‘ஹேராம்’ படத்தில் காந்தியைக் கொல்ல வேண்டும் எனக் கொதித்துக்கொண்டிருக்கும் ஒரு மதவாதப் பாத்திரம் பேசும் வசனம் இது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த வசனங்களுக்குச் சொந்தக்காரர் கமல்ஹாசன். ட்விட்டரில், மேடைப்பேச்சுகளில் அவர் சுற்றிவளைத்துப் பேசுகிறார் என்ற விமர்சனம் உண்டு. ஆனால், அவரது சினிமா வசனங்கள் கூர்மையானவை. குறிப்பாக, அரசியல் வசனங்கள். காந்தியின்மீது பெரும் ஈடுபாடுகொண்ட கமல்ஹாசனிடம் காந்தி அளவுக்கு முரண்களும் சர்ச்சைகளும் உண்டு. அதற்கு அவரது சினிமாக்களும் அதன் வெளிப்பாட்டுக் கருத்துகளுமே ஆதாரங்கள். ஆயினும், சினிமா எனும் ஊடகத்தை, அது கருத்தியல் வெளிப்பாடுக்கான பிரமாண்ட களம் எனும் உண்மையை, மிக ஆழமாகப் புரிந்துகொண்டு நுட்பமாக இயங்கும் முக்கியமான கலைஞன் கமல்ஹாசன். கமல் நடித்து சிறப்பாக உருவான பல படங்களை ‘இந்தப் படத்தை அவரே இயக்கியிருக்கக்கூடும்’ என, பார்வையாளர்கள் சந்தேகப்படுவதுண்டு. இது சினிமா குறித்த அவரின் அறிவுக்கு மக்கள் வழங்கிய வெகுமதி.

கமல் 60: சினிமாவும் அரசியலும் கமலுக்கு வேறுவேறல்ல!

திரைக்கு வெளியேயும் தொடர்ச்சியாக அரசியல் பேசிவந்தவர் கமல் என்ற அடிப்படையில், அவரது படங்கள் மிகுந்த கவனத்துக்குரியவையா கின்றன. நாத்திகம், பாலியல் குறித்த வெளிப்படையான பேச்சு, படத் தலைப்புகள், சென்சார் சர்ச்சைகள், காட்சிகள் மற்றும் வசனங்களில் வெளிப்படும் அரசியல் கருத்துகள் மீதான வழக்குகள் என சினிமா போலவே விறுவிறுப்பானது கமல்ஹாசனின் யதார்த்த வாழ்க்கையும்.

‘அவள் அப்படித்தான்’, ‘வறுமையின் நிறம் சிவப்பு’, ‘உன்னால் முடியும் தம்பி’, ‘நாயகன்’, ‘சத்யா’, ‘தேவர்மகன்’, ‘மகாநதி’, ‘ஹேராம்’, ‘குருதிப்புனல்’, ‘இந்தியன்’, ‘அன்பே சிவம்’, ‘விருமாண்டி’, ‘உன்னைப்போல் ஒருவன்’, ‘தசாவதாரம்’, ‘விஸ்வரூபம் 1 & 2’ என நீளும் பட்டியலில், மேலோட்டமாகவும் ஆழமாகவும் அரசியல் பேசிய பல படங்கள் உண்டு. இவற்றில், ஆரம்பகாலப் படங்கள் இயக்குநர்களின் படங்களாகவே பார்க்கப்பட்டன. ‘தேவர்மகன்’, ‘மகாநதி’, ‘ஹேராம்’, ‘குருதிப்புனல்’ போன்ற படங்களின் வழியாக மிக அழுத்தமான திரைக்கதையாளராகவும் வசனகர்த்தாவாகவும் வெளிப்பட்டார் கமல்ஹாசன்.

உண்மையில் கமலின் விஸ்வரூபம் என்பது ‘ஹேராம்’ படம்தான். வன்முறைக்கு எதிரான கருத்துகளை தொடர்ச்சியாக படங்களில் அவர் பேசத் தொடங்கியதும் அங்கிருந்துதான். காந்தி, அந்தப் படத்தின் வழியாக கமல்ஹாசனை ஆக்கிரமித்துக்கொண்டார். பிறகான எல்லா படங்களிலும் காந்தி வசனமாகவோ புகைப்படமாகவோ எப்போதும் தொடர்கிறார். ‘ஹேராம்’ படத்துக்கு முந்தைய ‘மகாநதி’யும் அந்த வகையில் முக்கியமானது. அறமும் சத்தியமும் போதிக்கப்பட்டு வளர்க்கப்படும் ஒருவன், நவீன சமூகத்தின் யதார்த்தத்தில் எப்படி வாழ்விழந்து போகிறான் என்பதன் ஆதங்கமே ‘மகாநதி’.

கமல் 60: சினிமாவும் அரசியலும் கமலுக்கு வேறுவேறல்ல!

கமல் கண்டறிந்த, காந்தியின் போதனைக்கும் இன்றைய யதார்த்த வாழ்வுக்கும் இடையிலான ஊசலாட்டம் குறித்த கமலின் சிந்தனை என்று அந்தப் படத்தைக் குறிப்பிடலாம். ஹிட்லரின் ஜெர்மனியில், காந்தியின் அகிம்சை என்னவாகியிருக்கும் என்ற உண்மையின் மிக எளிய வடிவம்தான் ‘மகாநதி’. ஹிட்லர் என்பது நபர் அல்ல... சூழல். ‘உன்னைப்போல் ஒருவன்’ படத்தில், தீவிரவாதிகளைக் கொல்லும்படி கமல் சொல்லும் ஒரு காட்சியில், துப்பாக்கியை விரல்கொண்டு சுழற்றியபடியே, `உங்களுக்கு காந்தியைப் பற்றி என்ன தெரியும்?’ எனக் கேட்பார். அதுவரை படத்தில் துப்பாக்கி காட்டப்படுவதில்லை. காந்தியின் பெயர் உச்சரிக்கப்படும்போது கையில் துப்பாக்கி இருக்கும் முரண் வழியாக, தீவிரவாதத்துக்கு எதிராக வன்முறையையே முரண்தீர்வாக வைக்கிறார் கமல்ஹாசன். குறியீட்டு வகையில் முக்கியமான காட்சி அது. குருதிப்புனலில் `தூக்குத்தண்டனை இன்னும் நம்ம சட்டத்தில் இருக்கு!’ என்று ஒரு ‘போராளியை’ மிரட்டும் போலீஸ் கமல், ‘விருமாண்டி’யில் கைதியாக மரணதண்டனைக்கு எதிராகப் பேசுவார்.

‘அன்பே சிவம்’, பொதுவுடமை அரசியல் பேசிய படம். அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு எதிரான பல வசனங்கள் அந்தப் படத்தில் உண்டு. விஸ்வரூபத்திலோ அமெரிக்காவை இஸ்லாமிய தீவிரவாதத்திலிருந்து காப்பாற்றும் இந்திய ராணுவ ஏஜென்டாக வெளிப்படுவார். தசாவதாரமோ கேயாஸ் தியரி, சர்வதேச அரசியல், மதங்கள், விதி, விஞ்ஞானம் என கலவையாகப் பேசிய படம். நீங்கள் நம்புவதே உங்கள் உண்மை என்ற உத்தியில் எடுக்கப்பட்ட படம் அது.

நான் முன்பே குறிப்பிட்டதுபோல் காந்தி அளவுக்கு அவரது சிஷ்யரான கமலும் முரண்பாடுகள் கொண்டவரே. முரணும்கூட கருத்தியலில் முக்கியமானதும் தவிர்க்க முடியாததுமான அம்சமே. அந்த வகையில் கமல் திரைப்படங்களின் வழியாக பேசிய கருத்தியல்கள் விரிவாக ஆராயப்பட வேண்டியவை. கமல் எனும் சினிமா மற்றும் அரசியல் ஆளுமையைப் புரிந்துகொள்ளவும், அவர் மீதான பார்வையைத் துல்லியப்படுத்திக்கொள்ளவும் அவரது படங்களை மீள்பார்வைக்கு உட்படுத்தலாம்.

சிலரைப்போல், `சினிமாவில் நான் பேசிய வசனங்களோடும் கருத்துகளோடும் என் யதார்த்த வாழ்க்கையைத் தொடர்புபடுத்தாதீர்கள்’ என்று சொல்பவரல்ல கமல்ஹாசன்!