Published:Updated:

``எம்.ஜி.ஆரையும் கலைஞரையும் கலங்கச் செய்த பாட்டு!" - எல்.ஆர்.ஈஸ்வரி கிளாசிக் பேட்டி @1969

L.R.Eshwari
News
L.R.Eshwari ( Vikatan Archives )

பாடகி எல்.ஆர்.ஈஸ்வரியைப் பற்றி இந்த விஷயங்களெல்லாம் உங்களுக்கு தெரியுமா..? 1969ல் எல்.ஆர்.ஈஸ்வரி ஆனந்த விகடனுக்கு அளித்தப் பேட்டியிலிருந்து...

``எம்.ஜி.ஆரையும் கலைஞரையும் கலங்கச் செய்த பாட்டு!" - எல்.ஆர்.ஈஸ்வரி கிளாசிக் பேட்டி @1969

பாடகி எல்.ஆர்.ஈஸ்வரியைப் பற்றி இந்த விஷயங்களெல்லாம் உங்களுக்கு தெரியுமா..? 1969ல் எல்.ஆர்.ஈஸ்வரி ஆனந்த விகடனுக்கு அளித்தப் பேட்டியிலிருந்து...

Published:Updated:
L.R.Eshwari
News
L.R.Eshwari ( Vikatan Archives )

பத்து ஆண்டுகளுக்கு முன் எழும்பூர் பிரஸிடென்ஸி பெண்கள் உயர் நிலைப் பள்ளியில் பெற்றோர்கள் தினம் கொண்டாடினால், அப்போது மாணவி ஈஸ்வரியின் குரலைக் கேட்காமல் இருக்க முடியாது. 

பெண்கள் ஏதாவது நாடகம் போடுவார்கள். நாடகத்தின் இடைவேளையில் எல். ஆர். ஈஸ்வரி தனது மெல்லிய, குழைந்த குரலில் பாடுவார். ஈஸ்வரியின் குரலைக் கேட்ட பல ஆசிரியைகளும் பொதுமக்களும் வியந்தனர். அதில் ஒருவர் ஏ. பி. நாகராஜன். அப்போது அவர் எடுத்துக் கொண்டிருந்த ‘வடிவுக்கு வளைகாப்பு’ என்ற படத்தில் ஒரு பாட்டில் ‘ஹம்மிங்’கிற்கு சந்தர்ப்பம் கொடுத்தார். கொடுத்த பணியை பிர மாதமாகச் செய்ததைக் கண்டு ஆச்சரியப்பட்டு, ஏ. பி. என்னும், கே. வி. மகாதேவனும் சேர்ந்து ‘நல்ல இடத்து சம்பந்தம்' என்ற படத்தில் 'அவரே தான் இவரு... இவரே தான் அவரு' என்ற பாட்டைப் பாட வைத்தனர்.

L.R.Eshwari
L.R.Eshwari
Vikatan Archives

ஈஸ்வரி பாடிய முதல் பாட்டு இது தான்!

“விளக்கை துடைச்சி, எண்ணெய் ஊற்றி ஏற்றி வைத்தார்கள் ஏ. பி. என்னும், கே. வி. எம்மும்! இப்போ அந்த விளக்கு தொடர்ந்து எரிய பாதுகாத்து வருகிறார் எம். எஸ். விஸ்வநாதன்” என்று தன்னை முன்னுக்கு கொண்டு வந்த மூன்று பேருக்கும் நாஸூக்காக நன்றி தெரிவித்தார் எல். ஆர். ஈஸ்வரி.

“நீங்கள் இதுவரை எத்தனை பாட்டுக்கள் பாடியிருக்கிறீர்கள்...?”

“சொல்ல மாட்டேங்க...! சொன்னா திருஷ்டி பட்டுடுமாம்... எங்கம்மா சொல்றாங்க... !”

“சரி! எத்தனை படங்களில் பாடியிருக்கிறீர்கள்? அதையாவது சொல்லலாம் அல்லவா?”

“மன்னிச்சுக்குங்க...! சொல்லக் கூடாதுன்னு சொல்லியிருக்காங்க...!”

“உங்க சொந்த ஊர்?”

“மதுரை! ஆனால் வளர்த்த ஊர், வளர்ந்த ஊர் சென்னைதான்!”

“சினிமாவில் ஆங்கிலப் பாணியில் பல பாட்டுக்களைப் பாடுகிறீர்களே, அதை யாரிடமாவது கற்றுக் கொண்டீர்களா?”

“இல்லிங்க! மூணு வருஷம் பி. எஸ். ராஜன் ஐயங்கார் என்பவரிடம் முறைப்படி கர்நாடக சங்கீதம் தான் கத்துக்கிட்டேன்...!"

L.R.Eshwari
L.R.Eshwari
Vikatan Archives

"ஆமாம்! டாக்டராகணும் என்று நினைத்துப் படித்து, சிலர் வக்கீலாவது கிடையாதா? அது போல கர்நாடக சங்கீதம் கற்றுக் கொண்டு'கம் செப்டம்பர்’ பாணியில் பாடுகிறீர்கள்- அப்படித்தானே!"

ஒரு முறை ‘களுக்' என்று சிரித்து விட்டு “எந்தப் பாட்டு பாடுவதாக இருந்தாலும் அஸ்திவாரம் வேண்டும்! கர்நாடக சங்கீதம் கொஞ்சம் தெரிந்து வைத்திருந்தால் மற்ற பாணிகள் சுலபமாக வந்து விடும்...!" என்றார்.

“உங்கள் குடும்பத்தில் எல்லோரும் பாடுவார்களா?”

“ஒ...! ராஜராவ் பத்தர்ன்னு கேள்விப்பட்டிருப்பீங்களே! அவர்தான் என் தாத்தா. அவர் மைக் இல்லாமல் கணீர்ன்னு பாடுவாராம். நான் மைக் இல்லாமல் பாடினா எதிரில் இருப்பவருக்கு கூட கேட்காது! எங்கப்பா தேவராஜ், எங்கம்மா நிர்மலா, என் சகோதரி அஞ்சலி, என் சகோதரிகள் எல்லாரும் பாடுவாங்க! 'வாடியம்மா வாடி!’ அந்த பலிஞ்சடுகுடு பாட்டு பாடி என் சகோதரி அஞ்சலி நல்ல பேர் வாங்கிட்டா!”

“இப்போ அவங்க பாடறது இல்லையா?”

“கல்யாணமாகி நெய்வேலிக்குப் போயிட்டா! எப்போவாவது இங்கே வந்தா பாடுவா...! இப்போ கூட ‘நம் நாடு’ படத்திலே குட்டி பத்மினிக்காகப் பாடியிருக்கா...!”

L.R.Eshwari
L.R.Eshwari
Vikatan Archives

“நீங்கள் சினிமாவில் பாடுவதைத் தவிர தனியே சினிமாப் பாட்டு கச்சேரிகளும் செய்வது உண்டு; இல்லையா?”

“உண்டு! நானே ஒரு இசைக்குழு வெச்சிருக்கேன். கல்யாணங்களுக்கு, விழாக்களுக்குப் போய் பாடுவேன்...”

“அப்போ ரசிகர்கள் சீட்டு எழுதிக் கேட்கும் எல்லா பாட்டையும் பாடுவீங்க இல்லையா...?”

“சீட்டிலே எழுதுவதாவது...! பல இடத்திலே ரூபாய் நோட்டுலேயே ‘இந்தப் பாட்டைப் பாடுங்க... அந்தப் பாட்டைப் பாடுங்க‘ன்னு எழுதி அனுப்புவாங்க...! சமீபத்தில் குடும்ப கோணத்திலே ஒரு கல்யாணத்துக்குப் போய் பாடினேன்! அப்போ பல வட நாட்டுக்காரங்க வந்திருந்தாங்க. என் பாட்டைக் கேட்டு ஒவ்வொருத்தரா மேடைக்கு வந்து ரூபாய் நோட்டுக்களா கொடுத்தாங்க! அன்னைக்கு எனக்கு பல நூறு ரூபாய்கள் வந்து சேர்ந்தன! இப்படியும் பல ரசிகர்கள் ஊக்கப்படுத்துவாங்க. எல்லாம் வருஷம் ஆரம்பத்தில் என் பிறந்த நாளைக் கேட்டார். நானும் ‘டிசம்பர் எட்டாம் தேதி’ என்று சொன்னேன். பிறகு போன வருஷக் கடைசியில் ரோமிலிருந்து எனக்கு ஒரு தபால் வந்தது. பிரித்துப் பார்த்தால்......! போப் ஆண்டவர் என்பிறந்த நாளுக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்தார். அதைப் பார்த்ததும் என் உள்ளமே குளிர்ந்தது!” என்று சொல்லி பக்கத்தில் ‘பிரேம்’ போட்டு பத்திரமாக வைத்திருந்த வாழ்த்துச் செய்தியைக் காட்டினார்.

“தமிழைத் தவிர வேறு மொழி படங்களில் பாடுவது உண்டா?”

“தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிப் படங்களில் பாடுகிறேன். இது தவிர கொங்கிணி, துளு, துர்க்கி, மராட்டி, ஹிந்தி, ஒரியா... ஆக பத்து மொழிகளில் பாடி இருக்கிறேன்......!" என்றார் பெருமையாக

“படங்களில் ஏன் தோன்றுவது கிடையாது?”

“ஓ... நான்கு கில்லாடிகள் என்ற படத்தில் நான் பாடுவதையே பட மெடுத்திருக்கிறார்கள். அந்தப் படத்தில்தான் நான் நேரே தோன்றியிருக்கிறேன்!”

“சினிமாப் பாடல்களையும், பக்திப் பாடல்களையும் தவிர வேறு ஏதாவது பாடியிருக்கிறீர்களா?”

“அண்ணாவைப்பற்றி ‘எதையும் தாங்கும் இதயம்' என்றும், ‘கம்பன் சிலையருகே என்றும் இரண்டு பாட்டுப் பாடி, ரிக்கார்டு கொடுத்திருக்கிறேன்...! ஒரு சமயம் சிறு சேமிப்பு விழாவில் அண்ணாவைப்பற்றி நான் இந்தப் பாட்டைப் பாடியப்போது, கலைஞர் மு.கருணாநிதியும், எம். ஜி. ஆரும் அந்தப் பாட்டைக் கேட்டு அழுது விட்டார்கள். எனக்கே என்னவோ போலிருந்தது. ஓர் ஆர்வத்தில் பாடிய அந்த பாட்டு அப்படி எல்லோரையும் கலக்கி விடும் என்று நான் நினைக்கவே இல்லை. பிறகு அப்படிப் பாடியதற்காக நானும் வருந்தினேன்...!"

L.R.Eshwari
L.R.Eshwari
Vikatan Archives

“நீங்கள் பாடியதில் உங்களுக்குப் பிடித்தது ‘எலந்தம் பழம்' பாட்டா?”

“ஊஹாம்! அது எனக்கு அவ்வளவா பிடிக்காது! ஏன்னா கஷ்டப்படாம ரொம்ப ஈஸியா பாடின பாட்டு! எனக்கு பிடிச்ச பாட்டு ‘நீ’ படத்தில் ‘எனக்கு வந்த இந்த மயக்கம் ‘என்ற பாட்டும், சிவந்த மண்ணில் ‘பட்டத்து ராணி...’ என்னும் பாட்டும்தான்! பட்டத்து ராணி’ பாட்டைப் பாட நான் ரொம்ப கஷ்டப்பட்டேன். கேவல்...ஹம்மிங்... பாட்டு... மூன்றையும் நானே கொடுத்திருக்கேன். சுமார் நூறு வாத்தியங்கள் கூட ஒலித்தன.

அந்தப் பாட்டைக் கேட்ட லதாமங்கேஷ்கர் சிவந்த மண் ஹிந்தி படத்தில் பாடும்போது “கேவல்... ஹம்மிங்’ எல்லாம் நான் கொடுக்க முடியாது! பாட்டு மட்டும் பாடறேன்' என்று சொல்லி என் பாட்டை ரொம்ப பாராட்டினார்களாம்!”

“இப்போ படங்களில் நடிக்கும் நடிகைகளே பாட ஆரம்பித்து விட்டார்களே. உதாரணமா மனோரமா... ஜெயலலிதா...!"

“அதை நான் ரொம்ப வரவேற்கிறேன்.....! மனோரமாவின் சொல் உச்சரிப்பு எனக்கு ரொம்ப பிடிக்கும்..!"

“சரி! உங்கள் தங்கைக்கு கூடி திருமணமாகி விட்டது! உங்களுக்கு எப்போது திருமணம்?''

''நான்தான் சங்கீதத்தையே திருமணம் செய்து கொண்டு விட்டேனே!” என்றார் எல். ஆர். ஈஸ்வரி நகைச்சுவையாக!

- பாலா

(போப் ஆண்டவர் வாழ்த்திய எல்.ஆர்.ஈஸ்வரி! என்ற தலைப்பில் 05.10.1969 தேதியில் ஆனந்த விகடன் இதழிலிருந்து...)