Published:Updated:

`ஈ.பி.எஸ் கனவில்கூட நினைத்திருக்கமாட்டார்.. ஆனால், அற்புதம் நடந்தது.. நாளை..!’- கமல் விழாவில் ரஜினி

ரஜினி
ரஜினி

`நடிப்பு, பாட்டு, எழுத்து, ஒரே படத்தில் 10 கதாபாத்திரத்தில் நடிப்பது என 60 வருடமாக திரையுலகத்தில் ஒரு தனி சாம்ராஜ்ஜியத்தையே நடத்தியவர் கமல். அதனால்தான் அவர் உலக நாயகன்’- ரஜினி

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும் நடிகருமான கமல்ஹாசனின் 65வது பிறந்தநாள் விழாவை நேற்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில், கமல்ஹாசனின் 60 ஆண்டுக்கால திரைப்பயணத்தைச் சிறப்பிக்கும் விதமாக `உங்கள் நான்' என்னும் `கமல் 60' நிகழ்ச்சி நடந்தது.

கமல்
கமல்

ரஜினிகாந்த், இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், பிரபு, வடிவேலு, விஜய் சேதுபதி, கார்த்தி, விக்ரம் பிரபு என திரையுலக நட்சத்திரங்கள் பலர் இந்த விழாவில் கலந்துகொண்டனர்.

விழாவில் பேசிய இசைஞானி இளையராஜா, ``கமல் இன்னும் 60 ஆண்டுகள் திரையுலகில் இருக்க வேண்டும்" எனக் கூறினார். பின்னர் பேசிய நடிகர் விஜய்யின் தந்தை இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், ``ஒருகட்டத்தில் ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என நினைத்துக்கொண்டிருந்தேன்.

கமல் - ரஹ்மான் - இளையராஜா
கமல் - ரஹ்மான் - இளையராஜா

அந்த நேரத்தில் கமல் துணிச்சலோடு அரசியலில் இறங்கினார். அரசியலில் இறங்குவது சாதாரண விஷயம் கிடையாது. நிச்சயமாக கமல் அரசியலில் விஸ்வரூபமெடுப்பார். கமலைப்போல் ரஜினியும் அரசியலுக்கு வர வேண்டும். தயவுசெய்து எங்களை ஏமாற்றிவிடாதீர்கள் ரஜினி.

இங்கு சிலர் தமிழன் இல்லை என்று பேசுகிறார்கள். தமிழகத்தின் தண்ணீரை குடித்துவிட்டாலே அவர் தமிழர்தான். நீங்கள் இருவரும் அரசியலில் இணைந்து பயணித்து தமிழகத்தில் நல்லாட்சி அமைக்க வேண்டும். இருவரும் முதலில் அரசியலுக்கு இறங்கி பிறகு அடுத்த தம்பிகளுக்கும் அரசியல் வாய்ப்பை வழங்க வேண்டும். அரசியலில் அடுத்த தலைமுறைக்கு மூத்தவர்கள் வழிவிட வேண்டும்” என்று கூறி அதிர வைத்தார்.

கமல் - விஜய் சேதுபதி
கமல் - விஜய் சேதுபதி

நிகழ்ச்சியில் பேசிய கமல், தனது திரைப் பயணத்தில் முக்கியமானவர்களை குறிப்பிட்டார். ``எனது 60 வருட திரைப் பயணத்தில் முக்கியமானவர்கள் பலர் உள்ளனர். அதில் கே.பாலசந்தர், ரஜினிகாந்த், கருணாநிதி, எம்.ஜி.ஆர், சந்தானபாரதி, ஷங்கர், சுஜாதா, அனந்து, ஜெமினி, கிரேசி மோகன், நாகேஷ், வி.கே.ராமசாமி, ஸ்ருதிஹாசன், அக்ஷராஹாசன், அம்மா, அப்பா, தமிழர்கள் என பலர் உள்ளனர். இவர்கள் எல்லோரும் என் வளர்ச்சியில் முக்கியமானவர்கள்” என்றார் நெகிழ்ச்சியோடு.

தொடர்ந்து ரசிகர்களின் உற்சாகக் குரல்களுக்கு இடையே பேச ஆரம்பித்த நடிகர் ரஜினிகாந்த், ``என் நண்பர் கமல்ஹாசனுக்கு வாழ்த்துகள். அவர் நடிப்பு, பாட்டு, எழுத்து, ஒரே படத்தில் 10 கதாபாத்திரத்தில் நடிப்பது என 60 வருடமாக திரையுலகத்தில் ஒரு தனி சாம்ராஜ்ஜியத்தையே நடத்தியவர். அதனால்தான் அவர் உலக நாயகன். இந்த உயரத்தை கமல் பிடிக்க கொடுத்த உழைப்பு, செய்த தியாகங்கள் அபாரமானது.

கமல் - ரஜினி
கமல் - ரஜினி

அவர் ஒரு ஜீனியஸ். அவர் சொல்ல நினைப்பதை அவரது சினிமாக்கள் மூலம் மக்களுக்கு கற்றுக்கொடுத்திருக்கிறார். அவர் பேசுவது புரியாது என பலர் சொல்லுவார்கள். தூங்குபவர்களை எழுப்பலாம்... தூங்குவதைப் போல் நடிப்பவர்களை எழுப்ப முடியாது.

கமலுக்கும் எனக்குமான நட்பை யாராலும் உடைக்க முடியாது. எங்கள் இருவரின் கருத்துகளில் வேறுபாடு இருக்கலாம். சித்தாந்தங்களில் வேறுபாடு இருக்கலாம். ஆனால், எங்கள் நட்பில் மாற்றம் வந்ததில்லை. நான் அரசியலுக்கு வந்த பிறகும் நாங்கள் சண்டை போட்டுக்கொள்ளமாட்டோம் இந்த மேடையிலே பேசிய பலரும் அரசியல் குறித்துப் பேசினார்கள்.

கமல் ரஜினி
கமல் ரஜினி

எல்லோர் வாழ்க்கையிலும் அற்புதங்கள் நிகழும். இரண்டு ஆண்டுகள் முன்னர் தமிழகத்தின் முதல்வர் ஆவேன் என எடப்பாடி பழனிசாமி கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார். ஆனால், அவர் முதல்வரானார். அதுக்கு அப்புறம் கூட இந்த அரசாங்க 20 நாள் தாங்காது, 2 மாசம் தாங்காது என்று சொன்னார்கள். அற்புதம் நடந்தது... இன்று வரையிலும் ஆட்சி கவிழாமல் தொடர்கிறது. நேற்றும் அற்புதம் நடந்தது. இன்றும் அற்புதம் அதிசயம் நடக்கிறது... நாளையும்...... அற்புதம் நிகழும்” என்றார் அதிரடியாக!

அடுத்த கட்டுரைக்கு