Published:Updated:

ரஜினி - ஒரு நிருபரின் டயரியிலிருந்து...

Rajinikanth - A Reporter's Diary
பிரீமியம் ஸ்டோரி
Rajinikanth - A Reporter's Diary

பெயர் சிவாஜி ராவ்... அவர் இப்போ யார் தெரியுமா...?

ரஜினி - ஒரு நிருபரின் டயரியிலிருந்து...

பெயர் சிவாஜி ராவ்... அவர் இப்போ யார் தெரியுமா...?

Published:Updated:
Rajinikanth - A Reporter's Diary
பிரீமியம் ஸ்டோரி
Rajinikanth - A Reporter's Diary

டைரக்டர் திரு. பாலசந்தரைச் சந்திக்க முன்பு ஒரு முறை வாகினி ஸ்டூடியோவுக்குப் போனேன். அப்போது அவர் `மூன்று முடிச்சு' படமெடுத்துக் கொண்டிருந்தார்!

செட்டில் ஓர் இளைஞர் தனியே நின்றுகொண்டு, தானே நடித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். பாலசந்தரோடு நான் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது அவர் அந்த இளைஞரைச் சுட்டிக் காட்டி, ``பாலா!

இந்தப் பையன் பெயர் சிவாஜி ராவ்... கொஞ்ச நாள் பொறுத்துப் பார். இவன் பெரிய ஸ்டார் ஆயிடுவான்" என்றார்!`பாலசந்தரிடம் நடித்தவர்கள் யார் சோடை போயிருக்கிறார்கள்?' என்று நினைத்துக் கொண்டு வந்த வேலையை முடிக்க முற்பட்டேன். வேலையும் முடிந்தது. வெளியே வந்தேன்.

எதிரே ஆர்ட் டைரக்டர் ராமசாமி வந்தார். `அந்த சிவாஜி ராவுக்குத்தான் இப்போ ரஜினிகாந்த்துன்னு பேர். அடடா..! என்ன பிரமாதமா நடிக்கறாரு! உடனே அவரைப் பேட்டி கண்டு எழுதுங்க...

இன்ஸ்டிடியூட் ஸ்டூடண்ட்!" என்றார்.கொஞ்ச நேரம் ரஜினியோடு பேசிவிட்டு நான் அசால்டாக வந்து விட்டேன். சத்தியமாகச் சொல்கிறேன், அன்று நான் பார்த்த ரஜினி இத்தனை பெரிய நட்சத்திரமாக வருவார் என்று எதிர் பார்க்கவே இல்லை. ராக்கெட் வேகத்தில் முன்னேறி விட்டார்.

டைரக்டர் பாலசந்தர், ஆர்ட் டைரக்டர் ராமசாமி இவர்கள் வாயில் ஒரு பிடி சர்க்கரையைக் கொட்ட வேண்டும். இப்போது சந்தித்தாலும் ரஜினி `மூன்று முடிச்சு' காலத்தில்b சந்தித்தது போலவே பழகுகிறார். அடக்கம் அதிகமாகக் காணப்படுகிறது. கேட்ட கேள்விகளுக்கு `டாண் டாண்’ என்று ஆங்கிலமும் கொச்சைத் தமிழும் கலந்த பதில் கிடைத்து விடும்.

Rajinikanth - A Reporter's Diary
Rajinikanth - A Reporter's Diary

உடல் நலம் சரியில்லாமல் போயிருந்து, உடல் தேறி மறுபடியும் ஷூட்டிங் சென்ற அன்றுகூட அவரைச் சந்தித்தேன். அடக்கமாகவும் தெளிவாகவும் பதிலளித்தார். `கண்ணாடியை உடைத்தார், ஆட்களை அடித்தார்’ என்று செய்தி வந்ததையெல்லாம் என்னால் நம்பவே முடியவில்லை. அத்தனை சாதுவாக இருந்தார்.

ஆஸ்பத்திரி வனவாசத்திற்குப் பிறகு இவரிடம் கடவுள் பக்தியை அதிகமாகக் காண்கிறேன். ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமி பக்தர். வாரத்திற்கு ஒரு நாள் எப்படியாவது திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமி மடத்திற்குப் போய் வந்து விடுகிறாராம். அது மட்டுமல்ல, 1980 வருடப் பிறப்பின் போது பல மாதா கோவில்களுக்கும் போய் வந்தார். ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகளைப் பற்றிய பாடல்களும் ஸ்லோகங்களும் அதிகம் தெரியும். அவற்றை முணுமுணுத்துக் கொண்டேயிருப்பார்.

சினிமாவில் நுழைந்த புதிதில் இவர் இரவு 12 மணி, ஒரு மணிக்குக்கூட மவுண்ட் ரோடில் ஸ்கூட்டரில் சுற்றிக் கொண்டிருந்ததை நான் பல முறை பார்த்திருக்கிறேன். இப்போது அப்படியெல்லாம் பார்க்க முடிவதில்லை.

கமலைப் போலவே இவரிடமும் டெலி போனிலேயே பேசி, பத்திரிகைக்கு விஷயம் வாங்கி விடலாம். சில நடிகர்களைப் போல `நேரே வாங்க, பேசலாம்' என்று நம்மை அலைக்கழிக்க மாட்டார்.

இவரிடம் நான் கவனித்த பாராட்ட வேண்டிய ஒரு குணம் : மற்ற நடிகர்களைப் பற்றியோ நடிகைகளைப் பற்றியோ அநாவசியமாக `கமெண்ட்’ அடிக்க மாட்டார். ஏன், வாயையே திறக்க மாட்டார். எனக்கும் ஒருவரிடம் போய் மற்றவர்களைப் பற்றி வம்பு கேட்கும் பழக்கம் இல்லை.

ஒரு முறை `பில்லா' ஷூட்டிங்கின் போது இவரிடம் மற்ற நடிகர்களைப் பற்றியும் நடிகைகளைப் பற்றியும் வேண்டுமென்றே மெதுவாகப் பேசிப் பார்த்தேன்.

ஊம்! மூச்...! என் பேச்சை லாகவமாக இந்தக் காதில் வாங்கி, அந்தக் காதால் விட்டுக் கொண்டிருந்தார். அதே சமயம் சிரித்துக் கொண்டே வேறு எதைப் பற்றியோ எனக்கு சுவாரஸ்யமாக விளக்கிக் கொண்டிருந்தார். மற்றவர்களைப் பற்றிப் பேசாமல் இருப்பதே இவரிடம் இருக்கும் பெரிய ப்ளஸ் பாயிண்ட்.

சில நடிகர்கள் நடிக்க செட்டுக்குள் வந்துவிட்டால் பேசுவதற்கு அல்லது பக்கத்து செட்டுக்கு என்று வெளியே போய் விடுவார்கள். ஆனால் ரஜினி அப்படியல்ல! ``நீங்கள் போகலாம்" என்று டைரக்டர் சொன்ன பிறகுதான் நகருகிறார்.

நாம் முன்பு எப்படி இருந்தோம், இப்போது எப்படி இருக்கிறோம், இனி எப்படி இருக்க வேண்டும் - என்று `பக்கா'வாகக் கணித்து வைத்துக் கொண்டிருக்கிறார் ரஜினி.

புதுப்பேட்டையில் ஒரு சந்து வீட்டில் பல வருடங்கள் வாடகை கொடுத்துக் கொண்டு குடியிருந்தார். நட்சத்திரமான பின் மிக மிக லேட்டாக சமீபத்தில்தான் சொந்தமாக வீடு வாங்கிக் கொண்டார்.

எந்த முடிவு எடுப்பதானாலும் நிதானமாக - நன்கு யோசித்துத் தான் முடிவெடுப்பார். கொட்டினோம், கவிழ்த்தோம் என்று பரபரக்கத் தன் சொந்தக் காரியங்களைச் செய்யமாட்டார்.

இவர் திருமண விஷயமும் அப்படித் தான் போலும்; இன்னும் யோசித்துக் கொண்டேயிருக்கிறார்!

- பாலா

(07-12-1980 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...)
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism