Published:Updated:

ரஜினிகாந்த் இன்று மாலை சென்னை திரும்புகிறார்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திப்பாரா?

ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்

2021 தேர்தலுக்காக தனிக்கட்சி தொடங்கி அரசியலில் களமிறங்குவேன் என அறிவித்தவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். ஆனால், திடீரென கொரோனா நோய் பரவல் அரசியல் சூழலையே மாற்ற, அரசியலுக்கு வராமலேயே அரசியில் இருந்து விலகுவதாக கடந்த ஆண்டு டிசம்பரில் அறிவித்தார்.

கொரோனா பரவலுக்கு இடையிலும் வெற்றிகரமாக 'அண்ணாத்த' படப்பிடிப்புக்கு முழு ஒத்துழைப்புக்கொடுத்து நடித்து முடித்திருக்கிறார் ரஜினிகாந்த். அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்ததால், சன் பிக்சர்ஸ் ஏற்பாடு செய்திருக்கும் தனி விமானம் மூலம் இன்று மாலை ஐதராபாத்தில் இருந்து அவர் சென்னை திரும்புகிறார்.

'சிறுத்தை' சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படம் 'அண்ணாத்த'. கடந்த ஆண்டு திரைக்கு வந்திருக்கவேண்டிய 'அண்ணாத்த' படத்தின் படப்பிடிப்பு கொரோனா லாக்டெளன் காரணமாக கிட்டத்தட்ட ஓர் ஆண்டாகத் தள்ளிப்போனது. கடந்த ஆண்டின் இறுதியில் கொரோனாவின் தீவிரம் குறைந்த நிலையில் டிசம்பரில் ஐதராபாத் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் 'அண்ணாத்த' படப்பிடிப்பு தொடங்கியது. ஆனால், ஷூட்டிங் ஸ்பாட்டுக்குள் கொரோனா பரவல் மற்றும் ரஜினிக்கு உயர் ரத்த அழுத்தம் எனப் பிரச்னைகள் ஆரம்பிக்க படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

பின்னர் நான்கு மாத இடைவெளிக்குப்பிறகு கடந்த ஏப்ரல் 9-ம் தேதி ஐதராபாத்தில் ஷூட்டிங் தொடங்கியது. தொடர்ந்து ஒரு மாதம் நடைபெற்ற இப்படப்பிடிப்பில் கலந்துகொண்ட ரஜினி இந்தப்படத்துக்கான தனது முழு வேலைகளையும் முடித்துவிட்டார். இன்னும் டப்பிங் மட்டுமே மீதம் இருக்கிறது. அதனால் ரஜினிகாந்த் இன்று தனி விமானம் மூலம் சென்னை வருகிறார்.

தமிழகத்தில் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்ததும் சென்னையில் இருந்து கிளம்பியவர், தேர்தல் முடிவுகள் வெளியாகி மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆகப்பொறுப்பேற்றப் பிறகுதான் மீண்டும் சென்னை வருகிறார்.

மகள் திருமண விழாவில் மு.க.ஸ்டாலின் - ரஜினிகாந்த்
மகள் திருமண விழாவில் மு.க.ஸ்டாலின் - ரஜினிகாந்த்

தேர்தல் முடிவுகள் வெளியான அன்று ரஜினிகாந்த மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். அதில், ''கடும் போட்டியில், திறம்பட அயராது உழைத்து, வெற்றி அடைந்திருக்கும் என்னுடைய அன்பு நண்பர் மு.க.ஸ்டாலின், நீண்ட ஆயுளுடனும், ஆரோக்கியத்துடனும் இருந்து, அனைத்துத் தரப்பு மக்களும் திருப்தி அடையும் வகையில் ஆட்சி செய்து, தமிழகத்தை வளமான மாநிலமாக மாற்றி பெரும் பேரும் புகழும் பெற வேண்டும் என்று மனமார வாழ்த்துகிறேன்'' என்று குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் இன்று ரஜினிகாந்த் சென்னை திரும்பும் நிலையில் அவர் நேரில் சென்று மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

'அண்ணாத்த' படத்தைப்பொறுத்தவரை ரஜினியின் போர்ஷன் மட்டுமே முடிந்திருக்கிறது. கீர்த்தி சுரேஷ், நயன்தாரா சம்பந்தப்பட்ட காட்சிகளை கொரோனாவின் தீவிரம் குறைந்ததும் கொல்கத்தாவில் எடுக்க திட்டமிட்டிருக்கிறது படக்குழு.

அடுத்த கட்டுரைக்கு