Published:Updated:

`டியரஸ்ட் மோடி ஜி... இதை வேதனையுடன் பதிவிடுகிறேன்'- கொதிக்கும் ராம்சரணின் மனைவி!

தெலுங்கு நடிகர் ராம்சரணின் மனைவியான உபாசனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரதமரின் இந்த நிகழ்ச்சி குறித்து கருத்து பதிவிட்டுள்ளார்.

உபாசனா
உபாசனா

மகாத்மா காந்தியின் 150 வது பிறந்தநாள் நிறைவடைந்ததையொட்டி நேற்று பிரதமர் நரேந்திர மோடியுடன் பாலிவுட் நடிகர்கள் மற்றும் திரைப்பட இயக்குநர்கள் கலந்துகொண்டு நிகழ்ச்சியைக் கொண்டாடினர். பிரதமர் இல்லத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் அமீர் கான், ஷாரூக் கான், கங்கனா ரணாவத், ஜாக்குலின் பெர்னாண்டஸ், ராகுல் ப்ரீத்தி சிங், இயக்குநர்கள் ராஜ்குமார் ஹிரானி, ராஜ்குமார் சந்தோஷி, அஸ்வினி ஐயர் திவாரி, நிதேஷ் திவாரி மற்றும் தயாரிப்பாளர்கள் ஏக்தா கபூர், போனி கபூர் மற்றும் ஜெயந்திலால் கடா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியின்போது, மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாள் நிறைவடைந்ததையொட்டி #ChangeWithin என்ற 100 விநாடி கலாசார வீடியோ ஒன்றை பிரதமர் வெளியிட்டார். இந்த நிகழ்ச்சி குறித்துபேசிய பிரதமர் மோடி, ``பாலிவுட்டின் முன்னணி பிரபலங்கள் உடனான சந்திப்பு பலனளித்தது. காந்திஜியின் எண்ணங்களை மக்கள் விரும்பும் சினிமா மூலம் பரப்புவது, அவரின் கொள்கைகளை இளைஞர்கள் நன்கு அறிந்திருக்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்துவது... என்பது போன்ற நாங்கள் இந்த நிகழ்வில் எண்ணங்களை பரிமாறிக்கொண்டோம்” என்று ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

`அலைகடலே.. அடியேனின் வணக்கம்...!’ - மாமல்லபுரம் கடற்கரையில் மோடி எழுதிய கவிதையின் தமிழாக்கம்

இதற்கிடையே, இந்த நிகழ்வில் புதிய சர்ச்சை ஒன்று வெடித்துள்ளது. தெலுங்கு நடிகர் ராம்சரணின் மனைவியான உபாசனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரதமரின் இந்த நிகழ்ச்சி குறித்து கருத்து பதிவிட்டுள்ளார். அதில், ``டியரஸ்ட் நரேந்திர மோடி ஜி, தென்னிந்தியாவில் இருக்கும் நாங்கள் உங்களை மிகவும் மதிக்கின்றோம். உங்களை பிரதமராக கொண்டதற்காக மிகவும் பெருமை கொள்கிறோம்.

உபாசனா
உபாசனா

ஆனால், பெரிய ஆளுமைகள், கலாசார அடையாளங்களின் பிரதிநிதித்துவம் இந்தி நடிகர்களுக்கு மட்டுமே கொடுக்கப்படுகிறது. தென்னிந்திய சினிமா முற்றிலும் புறக்கணிக்கப்படுவதாகவே நாங்கள் உணர்கின்றோம். நான் என் உணர்வுகளை வேதனையுடன் இங்கே வெளிப்படுத்துகிறேன். இது சரியான மனநிலையில் ஆக்கபூர்வமான முறையில் எடுக்கப்பட்டதாக நம்புகிறேன். ஜெய் ஹிந்த்!" எனப் பதிவிட்டுள்ளார்.

`சந்தோஷம் + வருத்தம்!’ மோடி - ஷி ஜின்பிங் சந்திப்பை சீனா எப்படிப் பார்க்கிறது?