Published:Updated:

லதா எங்கள் குடும்பத்தில் ஒருவர் - சிவாஜி கணேசன்

Sivaji Ganesan about Lata Mangeshkar

லதா மங்கேஷ்கருக்கு சிவாஜி கணேசன் செய்த சத்தியம்!

லதா எங்கள் குடும்பத்தில் ஒருவர் - சிவாஜி கணேசன்

லதா மங்கேஷ்கருக்கு சிவாஜி கணேசன் செய்த சத்தியம்!

Published:Updated:
Sivaji Ganesan about Lata Mangeshkar

சிவாஜி கணேசன் கூறுகிறார்:இருபத்திநான்கு மணி நேரத்தில் குறைந்தது இருபது மணி நேரமாவது எனது 'அன்புச் சகோதரி லதா மங்கேஷ்கரின் குரலை ரேடியோவில் கேட்டு ரசிக்கலாம்! ஏதாவது ஒரு நிலையத்தில் அவரது குயிலிசை ஒலித்துக் கொண்டே யிருக்கும். பல்லாயிரக் கணக்கான பாட்டுக்களைப்  பாடி, கோடிக்கணக்கான ரசிகர்களைப் பெற்றுள்ள லதா, இருபத் தைந்து வருடங்களாக இந்தி சினிமா இசைத் துறையின் இணையில்லாப் பேரரசியாகத் திகழ்வது வரலாறு கண்டிராத பெரும் சாதனை என்றே சொல்ல வேண்டும். இசையின் மூலம் பாரத மக்களின் இதயங்களில் நிரந்தரமான இடத்தைப் பெற்று விட்ட இந்தக் 'குரல் மேதை' க்கும் எங்கள் குடும்பத்திற்கும் உள்ள நெருங்கிய தொடர்பை நினைத்துப் பூரிப்பும் பெருமிதமும் அடைகிறேன் நான். நாங்கள் எப்போது பம்பாய் சென்றாலும் லதாவின் வீட்டில்தான் தங்குவோம். லதா சென்னைக்கு வரும் போதெல்லாம் எங்கள் வீட்டில்தான் தங்குவார். அவர் எங்கள் வீட்டிற்கு வந்து விட்டால் போதும், வீடே குதூகலத்தில் மூழ்கிவிடும். வீட்டில் இங்கும் அங்கும் அலைந்து கொண்டிருக்கும் போதே லதா பாடிக் கொண்டிருப்பார். அதை நான் கேட்டு ரசிப்பேன். சில

Sivaji Ganesan about Lata Mangeshkar
Sivaji Ganesan about Lata Mangeshkar

சமயங்களில் அவர் பாட, எங்கள் வீட்டுக் குழந்தைகள் டான்ஸ் ஆட, வீட்டில் பெரிய கலா நிகழ்ச்சியே நடைபெறும். லதா விற்குத் தமிழ் பேசவும் எழுதவும் சிறிது பயிற்சி உண்டு. நாம் தமிழில் பேசினல் புரிந்துகொண்டு விடுவார். தன்னுடைய புகழ், செல்வம் எல்லாவற்றையும் மறந்து எல்லோருடனும் எளிமையாகப் பழகும் சுபாவம் லதாவிடம் உண்டு. அவர் இளகிய மனம் படைத்தவர். ஒரு சிறிய குருவிக்குக் கூட தீங்கு நினைக்கமாட்டார். என் வாழ்நாளில், மறக்க முடியாத ஒரு நிகழ்ச்சியை இங்கு கூற விரும்புகிறேன். எனக்கு அசைவ உணவு என்றால் கொஞ்சம் விருப்பம் உண்டு. அதற்காக ஊரிலிருந்து நாற்பது, ஐம்பது குயில்களைப் பிடித்து வரச் சொன்னேன். அச்சமயம் எங்களுடன் தங்கியிருந்த லதா, கூண்டில் அடைக்கப்பட்டிருந்த குயில்களைப் பார்த்து லதா மங்கேஷ்கர் என்னிடம், 'இந்தக் குயில்களை எதற்காகக் கூட்டில் அடைத்து வைத்திருக்கிறீர்கள்?' என்று கேட்டார். 'இதென்ன கேள்வி, சாப்பிடுவதற்காகத்தான்...' என்றேன் நான். அவ்வளவுதான்! லதாவிற்கு அழுகையே வந்துவிட்டது. உடனே அவற்றைச் சுதந்திரமாகப் பறக்க விடும்படி என் னிடம் மன்றாடினார். இசைக் குயிலுக்குக் குயிலின் மீது அளவு கடந்த அன்பு இருப்பது நியாயம்தானே? குயில்களை வெளியே விட்டு விடும்படி உத்தரவிட்டேன். அன்று முதல் நான் குயில் கறி சாப்பிடப் போவதில்லை' என்று சத்தியம் செய்து விட்டேன். அந்த இரண்டு மூன்று நாட்கள் வீடு பூராவும் சுதந்திரமாக அவிழ்த்து 16 விடப்பட்ட குயில்களின் இசையும், நடமாடும் குயிலான லதாவின் பாட்டும்தான் எதிரொலித்துக் கொண்டிருந்தன! லதா, உடன் பிறவாத என் அன்புத் தங்கை.

வருடத்தில் எது தவறினுலும் ராக்கி பண்டிகை யின்போது எனக்கு ராக்கி அனுப்பாமல் இருக்கவே மாட்டார். அதற்கு 'ரட்சா பந்தன்' என்று பெயர். என் வாழ்விற்கும் தாழ்விற்கும் சகோதரனு ன நீதான் பொறுப்பு' என்று சகோதரனின் கையில் சகோதரி கட்டும் ஒரு நோன்புக் கயிறு அது. அன்புடன் நானும் என் தங்கை அனுப்பிய அந்த ராக்கியைப் பல நாட்கள் கையிலேயே கட்டிக் கொண்டிருப்பேன்.

தீபாவளிப் பண்டிகைக்கு இங்கிருந்து என் தாயார், லதாவிற்குப் பரிசுப் பொருட்களை வாங்கி அனுப்புவார். அதே போல் அங்கிருந்து எங்கள் வீட்டிற்கும் நிறையப் பரிசுகள் வரும். லதாவின் இசைப் பணியின் வெள்ளி விழா கொண்டாடப்படும் இச்சமயத்தில், ஆனந்த விகடன் மூலமாக என் குடும்பத்தினரின் வாழ்த்துக்களை அவருக்குத் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

Sivaji Ganesan about Lata Mangeshkar
Sivaji Ganesan about Lata Mangeshkar

கமலா கணேசன் கூறுகிறார்:முதல் சந்திப்பிலேயே என் மாமியாரின் அன்பையும் மதிப்பையும் பெற்று விட்டவர் லதா. என் கணவரும் என் மாமியாரும் என் நாத்தனாரிடம் எத்தனை அன்பும் பாசமும் கொண்டிருக்கிறார்களோ, அதே அளவு அன்பும் பாசமும் லதாவிடமும் கொண்டிருக்கிறார்கள். லதா எங்கள் வீட்டில் வந்து தங்கும்பொழுது சாதாரண விசிட்டர் மாதிரியோ, விருந்தாளி மாதிரியோ நடந்து கொள்வதில்லை. எங்கள் குடும்பத்தில் ஒருவராகவே இருந்து, மகிழ்ச்சியுடன் நாட்களைக் கழித்து விட்டுப் போவார். லதாவின் இசைத் திறமையும் குரலினிமையும் கற்பனைக்கே எட்டாத ஒரு சாதனையாகும். லதாவுக்குக் கடவுள் மீது மிகவும் பக்தி உண்டு. அதற்கேற்ப கடவுளுடைய அருளும் லதாவுக்கு நிரம்ப உண்டு. லதா இவ்வளவு காலம் சினிமா வானில் மங்காத இசை நட்சத்திரமாக ஒளி விட்டுப் பிரகாசிப்பதற்குக் கடவுளுடைய அருளும் ஆசியும் தான் காரணம் என்று நினைக்கிறேன். லதா என்னை 'அண்ணி' என்றுதான் அழைப்பார். ஆனால், நான் லதாவை, 'லதா' என்று அழைப்பது கிடையாது. எப்போதும் சாந்தமும் சிரிப்பும் குடி

கொண்டிருக்கும் லதாவைப் பார்க்கும் போதெல்லாம் எனக்குக் கலைவாணியின் நினைவுதான் வரும். அதனால் நான் லதாவை 'சரஸ்வதி' என்றே அழைப்பேன். அண்ணனும் சகோதரியும் ஒரு பெண் எப்படித் தன் அண்ணனிடமும் தன் தாயிடமும் நடந்து கொள்ள வேண்டுமோ அவ்விதமே லதா என் கணவரிடமும், என் மாமியாரிடமும் நடந்து கொள்ளுவார். ஆனால், அவர்கள் வெளியே சென்ற பின்னர் என்னிடம்தான் தன் குறும்புத்தனத்தை எல்லாம் காட்டுவார். அதைப் போலவே லதா பேசும் தமிழ் எனக்கு மட்டும் தான் புரியும். நான் பேசும் ஹிந்தி, லதாவிற்கு மட்டுமே புரியும். ஒரு சமயம் லதாவும் நானும் காரில் பாந்த்தியன் ரோடில் போய்க் கொண்டிருந்தோம். அப்போது நடிகர் பாலாஜி வீட்டைக் காட்டி என் அரை குறை இந்தியில் நான், 'இதுதான் பாலாஜி மந்திர் என்று சொல்லி விட்டேன். (இந்தியில் 'கர்' என்றால் வீடு. அந்த வார்த்தை எனக்கு அப்போது நினை வுக்கு வராததால் 'மந்திர்’, அதாவது கோயில் என்று சொல்லிவிட்டேன்.) குறும்புக்கார லதா, உடனே அந்தப் பக்கம் திரும்பி கோயிலைக் கண்டது போல் பயபக்தியுடன் கன்னத்தில் போட்டுக் கொண்டார்! இங்கு வந்து தங்கும் போது லதா மிகவும் விரும்பிச் சாப்பிடுவது 'முறுகல் தோசை'. பம்பாய் போகும்போது கைத்தறி சேலைகள்தான் வாங்கிக் கொண்டு போவார். நான் விபூதி பூசித்தான் பொட்டுவைத்துக் கொள்வேன். என்னைப் பார்த்து விட்டு, அதே போல் லதாவும் விபூதி பூசி, பொட்டு வைத்துக் கொள்ள ஆரம்பித்தார். பிறந்தகத்திலிருந்து புக்ககம் போகும் பெண்ணைப் போலவே ஒவ்வொரு முறையும் எங்களை விட்டுப் பிரியும் போது லதா துயரமடைவார். ஒவ்வொரு முறையும் கலங்கிய கண்களுடன் அவர் விடைபெறும் காட்சியை என் கணவரும் நானும் என்றுமே மறக்க முடியாது!

(30.04.1967 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...)