கலையுலகின் கறுப்பு தினமாக ஜூலை 21 விடிவதற்கு முதல் நாள்... சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிவாஜி தொடர்ந்து இருமத் துவங்கினார். தன்னருகில் இருந்த மகள் சாந்தியிடம் தூக்கம் தூக்கமா வருதும்மா. உடம்பு பூராவும் ரொம்ப வலிக்குது. நம்ம வீட்டுக்கே போயிடலாம்மா." என்று திரும்பத் திரும்பச் சொல்லத் துவங்கினார் சிவாஜி. கடைசியாக தன் மகள் கையால் ஆரஞ்சுபழம் ஜூஸ் சாப்பிட்டுவிட்டு கண் மூடினார். நினவுகள் மெள்ள மழுங்க, உடல் தூக்கித் தூக்கிப் போடத் துவங்கியது. சனிக்கிழமை மாலை.... இமயத்தின் இதயத்துடிப்பு மெதுமெதுவே அடங்குகிறது என்ற தகவல் எப்படித்தான் காற்றில் பரவியதோ. அப்போலோ மருத்துவமனை நோக்கி வி.ஐ.பி-க்கள் வந்து குவிவதற்குள்ளேயே ரசிகர்கள் பதற்றத்துடன் வந்து கூடத் துவங்கிவிட்டனர்.

மருத்துவமனையின் முதல் தளத்தில் உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவு அறைக்கு முன்பிருந்த சிறிய வராண்டாவில் சிவாஜியின் குடும்பத்தினர் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருக்க, ஸ்விட்சர்லாந்தில் படப்பிடிப்பில் இருந்த பிரபுவுக்கு தகவல் அனுப்பிவிடலாம் என்று டாக்டர்கள் சொல்லிவிட்டனர். மாலை ஏழு மணி தாண்டியபோது அவரது உடலுக்குள் போய் வந்துகொண்டிருந்த செயற்கை சுவாசமும் நிறுத்தப்பட்டது.
மருத்துவ வட்டாரத்தில் இருந்து 'சிவாஜி காலமானார்' என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானபோது மணி 8.10. “கலையுலகம் நல்ல நடிகரை இழந்து தவிக்கிறது. நாங்கள் நல்ல நண்பரை இழந்து தவிக்கிறோம். கடந்த சில வருடங்களாக எங்கள் நிறுவனத்தில் சிவாஜி மிகுந்த பற்றுடையவராக இருந்தார்' என அந்த மருத்துவமனை நிர்வாகமும் கண்ணீர்விட்டது. சிவாஜியின் மனைவி கமலா அம்மாளுக்கு அழுதழுது மூச்சு அடைப்பு ஏற்பட, அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், உடனடியாக அவருக்கு ஓய்வு வேண்டும் என மகன் ராம்குமாரிடம் சொல்லி, திநகர் போக் ரோடு வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். கடந்த சில வருடங்களாக சிவாஜியின் இதயத்தை இயக்கிக் கொண்டிருந்த பேஸ் மேக்கர் கருவியை ஆபரேஷன் மூலம் அகற்றத் துவங்கினார்கள் மருத்துவர்கள். இந்த பேஸ்மேக்கர் கருவியை அடுத்து வேறொரு இதய நோயாளிக்குப் பொருத்த முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள். ஆனால், சிவாஜி இதயத்திலிருந்து அதை அகற்றக் காரணம் அதுவல்ல. உடலை எரியூட்டும்போது, இந்தக் கருவி உள்ளே இருந்தால் அதில் உள்ள சில வேதிப் பொருட்கள் வெடித்துச் சிதறுமாம்!)

பேஸ்மேக்கர் அகற்றப்பட்ட பின், உடல் அடுத்த இரண்டு நாட்களுக்கு கெடாமல் இருக்கும் வகையில் ‘எம்பாம்’ செய்யும் பணிகள் நடந்தேறின. கடந்த ஒரு வருடமாகத்தான் சிவாஜி உடல்நிலை மிக மோசமாகத் துவங்கியது. தன் பேத்தி சத்தியலட்சுமி (சாந்தியின் மகள்) மீது உயிரையே வைத்திருக்கும் சிவாஜி, அவரது கணவர் சுதாகரன் கைது செய்யப்பட்டபின் மிகமிக நொந்த மனநிலையில் இருந்தார். ஆலமரம் போல் பேத்தி, பேரன்களோடு தழைத்து விளங்கிய கூட்டுக் குடும்பத்தில் தன் பேத்தி சத்தியலட்சுமி மீது அவர் அளவு கடந்த பாசம் வைத்திருந்ததற்கு காரணம் உண்டு. சத்தியலட்சுமி பிறந்த ராசியால்தான் தனது குடும்பத்தில் அடுத்தடுத்து பல நல்ல காரியங்கள் நடந்ததாக நம்பினாராம் சிவாஜி சத்தியலட்சுமி கைக்குழந்தையாக இருந்ததிலிருந்து தனது கடைசி காலம் வரை எங்கே வெளியே கிளம்பினாலும் அவரைத்தான் எதிரில் அழைப்பார் சிவாஜி. "தாத்தாவுக்கு ஒரு முத்தம் கொடுடி ராசாத்தி” என பாசத் தழுதழுப்புடன் கொஞ்சிவிட்டுப் போவாராம். "அந்தப் பேத்தியின் திருமணம் நாடறிய நடந்தபோதும் சிவாஜி ஏனோ சந்தோஷமில்லாமல் இருந்தார் எம்.ஆர்.சி. நகரில் ஜெயலலிதா தலைமையில் நடந்த அந்த திருமணத்துக்கு சாதாரண கதர்வேட்டி சட்டையில் போய் வாழ்த்திவிட்டு, ஒரு வாய்கூட சாப்பிடாமல் திரும்பினார்" என்கிறார்கள் அவரது குடும்பத்துக்கு நெருங்கியவர்கள். இத்தனை பாசம் வைத்திருந்த தன் பேத்தியின் வாழ்க்கையில் இப்படியொரு புயல் அடித்ததில் மிகவும் தளர்ந்துபோன சிவாஜி, "இப்படி ஆகிப்போச்சேடி ராசாத்தி...!' என்று அடிக்கடி சத்தியலட்சுமியிடம் கண்கலங்குவாராம். பத்து நாட்களுக்குமுன் தன்னைச் சந்திக்க வந்த திரைப்படத் தயாரிப்பாளர் ஒருவரிடம், 'எதுக்கு வாழனும்னு இருக்குப்பா' என்று சொல்லி, கண்ணோரங்களில் நீர்த்துளி காட்டியிருக்கிறார். கடந்த சில தடவைகள் உடல் தளர்ந்து அவசரமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும்போதெல்லாம், கலங்கி நிற்கும் குடும்பத்தாரைப் பார்த்து "நான் அப்படி எங்கே போறேன். உடம்பு சரியானப்புறம் திரும்பவும் வந்துடப் போறேன்" என சொல்லித் தேற்றுவாராம்.
அதேபோல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று ஒரளவு தெம்பானதும் ஆஸ்பத்திரிப் பணியாளர்களிடம், 'இப்போ நான் நல்லாயிட்டேன், பார்க்கறிங்களா' என அறைக்குள்ளேயே சிங்க நடை நடந்து காட்டுவாராம்.
இந்த கடைசி தடவை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது இதெல்லாம் நடக்கவில்லை. சென்னை - போக் ரோடிலுள்ள அன்னை இல்லத்தின் மாடியில்தான் அவரது அறை. சிவாஜி தூங்கும் கட்டில் நல்ல உயரமாக இருக்கும். அதில் ஏறிப் படுக்கவே சிறு படிகள் உண்டு. சில மாதங்களுக்கு முன்னர்தான் டாக்டர்கள் அட்வைஸ்படி, கட்டிலின் உயரத்தை தரையோடு தரையாக குறைத்திருக்கிறார்கள். உயரம் குறைவதைத் தாங்க முடியாத சிவாஜி, ‘என்னப்பா இது? பேசாம நான் தரையிலேயே படுத்துடலாம் போலிருக்கே’ என்றாராம்.
சினிமா பிஸி இல்லாமல் போன பிறகு. தினசரிகள் படிப்பதை வழக்கமாக்கிக் கொண்டாராம். எந்த செய்தியாவது தன்னைப் பாதித்தால், அதைப் பற்றி தன்னை சுற்றியுள்ளவர்களிடம் கருத்துகளைப் பரிமாறிக் கொள்வார். கடைசியாக மனித உரிமை மீறல்கள் குறித்து சோனியா வெளியிட்ட அறிக்கையைப் படித்தவர், "பரவாயில்லப்பா... இந்தப் பொண்ணு (சோனியா) நல்லாத்தான் அரசியல் பண்ணுது... அவங்க மாமியார் மாதிரி போல்டா பேசுது” என்றாராம் கண்களை அகல விரித்துத் தலையாட்டியபடி. ‘அன்னை இல்ல’த்தின் வெளியே உள்ள பிரமாண்ட வராண்டாதான் ஒவ்வொரு பிறந்த நாளன்றும் சிவாஜி கம்பீரமாக அமர்ந்து நண்பர்களையும் நலம்விரும்பிகளையும் சந்திக்கும் இடம். புத்தம்புது பட்டு டிரஸ்ஸில் கால் மேல் கால் போட்டு அமர்ந்து வேடிக்கையும் சிரிப்புமாக குடும்பத்துடன் குலாவுவாராம்.
அதே வராண்டாவில் தான் அவரது உடல் கண்ணாடிப் பெட்டியில் கிடத்தப்பட்டிருந்தது. பிறந்தநாளில் அவர் அளியும் புத்தம்புது பட்டு டிரஸ் உயிரில்லாத அவரது உடலை அலங்கரித்தது.
முக்கிய முடிவுகள் எதை எடுப்பதானாலும் தனது தாயார் படத்துக்கு முன் நின்று அனுமதி கேட்பது அவரது வழக்கம். வெளி ஆட்கள் யாராவது ஆசி கேட்கும்போது, “அந்த முருகன் துணையால எல்லாம் நல்லா நடக்கும்ப்பா” என்று சொல்பவர், தன் குடும்பத்தார் ஆசி கேட்கும்போது, “ராஜாமணியம்மா நம்மளையெல்லாம் நல்லா வெச்சிருப்பா” என்று தன் தாயை நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்வாராம்.ஓய்வாக வீட்டில் இருக்கும் சமயங்களில் சுற்றம் மற்றும் நண்பர்கள் குடும்பப் பிரச்னைகளுக்கு அவர் பஞ்சாயத்துப் பண்ணி வைக்கிற விதமே அலாதிதான்.கணவன் - மனைவிக்குள் தகராறு என்று வந்தால், முதலில் கணவனை தனியே அழைப்பாராம். “டேய்! பொண்டாட்டி ஏதாவது கேட்டா எடுத்த எடுப்புல முடியாதுனு சொல்லாதே. சரி செய்யறேன்னு சொல்லு அப்புறமா முடிஞ்சதை செய்...” என்பாராம். பிறகு மனைவியை அழைத்து, "அம்மா! ஊர்ல ஆயிரம் அயோக்கியனுங்க இருக்கான். உன் புருஷன் தங்கக் கட்டி. தெரிஞ்சோ தெரியாமலோ அவன் தப்பு பண்ணியிருந்தாலும் அவனைப் போட்டு பாடாப்படுத்தாதே. பேசாம வீட்டைவிட்டே ஓடிப் போயிடலாமானு இருக்கு அப்படினு உன் புருஷன் புலம்பறான். அவன் போய்ட்டா அப்புறம் சண்டை போட உனக்கு யாரு இருக்கா?" என்பாராம்.

பிறகு, இருவரையும் ஒன்றாக வைத்து சமாதானம் செய்து தம்பதி சிரிக்கச் சிரிக்கக் கிளம்பிப் போவதை ரசிப்பாராம்.“காலையில் டிபன் சாப்பிடுற நேரத்தில் பேச்சுவார்த்தையை ஆரம்பிச்சாருன்னா, மதியம் சாப்பாட்டு நேரம் சமாதானம் ஆயிருக்கும்” என்கிறார்கள் அன்னை இல்லத்து பணியாளர்கள்.
சின்ன சைஸில் ஒரு பாக்கெட் டிரான்சிஸ்டர் அவரது கடைசி காலத்தில் கூடவே இருந்தது. அதில் பழைய சினிமாப் பாடல்களை விரும்பிக் கேட்பாராம். அதுவும் தான் நடித்த படங்களிலிருந்து பாடல்களை ஒலிபரப்பினால் அந்தக் கால நினைவுகளில் மூழ்கிவிடுவாராம். டி.வி.யில் பழைய படங்களைப் பார்த்து ரசிப்பாராம். அந்தப் படத்தில் நடந்த சம்பவங்களை தன் குடும்பத்தோடு பகிர்ந்து கொள்வாராம்.
பேரப் பிள்ளைகளோடு சரிசமமாகச் சிரித்து பேசி விளையாடுவது என்றால் உயிர். பகலில் ஒரு குட்டித் தூக்கம். ஆசையாக வளர்த்த புறாக்களுக்கு தன் கையால் தீணி போடுவதும் பிடிக்கும். என்ன வேலையிருந்தாலும் இரவு ஒன்பது மணிக்கு தூங்கப் போய்விடுவார். ஜோசியத்தில் மிகுந்த நம்பிக்கை கொண்ட சிவாஜி, குடும்ப நலத்துக்காக வீட்டில் விசேஷ பூஜை நடத்த சம்மதம் தெரிவித்தார். வாஸ்து சாஸ்திரப்படி அன்னை இல்லத்தின் முன்னால் இரண்டு நுழைவு வாயில் இருக்கக் கூடாது என்று ஒரு ஜோசியர் சொல்ல, இடது பக்கமிருந்த வாசலை செங்கல் வைத்துக் கட்டி காம்பெளண்ட் சுவராக மாற்றிவிட்டார்கள். சிவாஜியின் மரணத்தைத் தொடர்ந்து, உடல் பார்வைக்கு வைக்கப்பட்டபின், அஞ்சலி செலுத்த உள்ளே வந்தவர்கள், வெளியே செல்வதற்கு வழியில்லாமல் இருந்தது. நடிகர் சங்கத் தலைவரான விஜயகாந்த், சிவாஜியின் மூத்த மகன் ராம்குமாரை அணுகி தயக்கத்தோடு 'காம்பெளண்ட் சுவரில் கொஞ்சம் இடிக்கணும்' என்று சொல்ல... "அப்பாவே கண்மூடிட்ட பிறகு இதுல யோசிக்கிறதுக்கு என்ன... செய்யுங்க!" என்று ராம்குமார் கண்கலங்க, ஒர் ஆள் மட்டும் வெளியேறுகிற மாதிரி சுவர் இடிக்கப்பட்டது. வீட்டுக்குப் பின்னாலேயே ஒரு மினி தியேட்டர் உண்டு. தான் உச்சாணிக் கொம்பில் நடித்துக் கொண்டிருந்த காலங்களில், தனது படங்களை அங்கேதான் குடும்பத்தினருக்குப் போட்டுக் காட்டுவாராம் சிவாஜி காலப்போக்கில் நடிப்பிலிருந்து அவர் மெள்ள விலகத் தொடங்கிய பிறகு அந்தத் தியேட்டரும் கவனிப்பாரற்றுப் போனது. ‘என்னைக் கொஞ்சம் தூங்க வைத்தால் வணங்குவேன் தாயே. இன்று மட்டும் அமைதி தந்தால் உறங்குவேன் தாயே! என்ற ‘புதிய பறவை’ படப் பாடலும்கூட அங்கே நிச்சயம் ஒலித்திருக்கும்.
- எஸ். சரவணகுமார், பொன்ஸீ, மை.பா. நாராயணன் அட்டை
படங்கள் - பொன். காசிராஜன், உசேன், என்.விவேக்