Published:Updated:

‘வாத்தி கம்மிங்?’ ரசிகர்களுக்கு அரசியல் ஆசை காட்டும் விஜய்?

விஜய்
பிரீமியம் ஸ்டோரி
விஜய்

அதிகம் பேசாமல் மௌனமாக இருப்பது விஜய்யின் தனிப்பட்ட இயல்பாகவோ, சினிமாவில் ஒரு கேரக்டராகவோ இருக்கலாம்.

‘வாத்தி கம்மிங்?’ ரசிகர்களுக்கு அரசியல் ஆசை காட்டும் விஜய்?

அதிகம் பேசாமல் மௌனமாக இருப்பது விஜய்யின் தனிப்பட்ட இயல்பாகவோ, சினிமாவில் ஒரு கேரக்டராகவோ இருக்கலாம்.

Published:Updated:
விஜய்
பிரீமியம் ஸ்டோரி
விஜய்

‘விஜய் மக்கள் இயக்கம் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுகிறது’ என்று வெளியான செய்திக்கு, மக்களிடமோ... ஏன் ரசிகர்களிடம்கூட பெரிய வரவேற்பு இல்லாதது, மன்ற நிர்வாகிகளுக்கு ஷாக். அறிவிப்புக்குப் பிறகு, தமிழ்நாடே பற்றிக்கொள்ளும், விவாதங்கள் சூடு பறக்கும், சமூக ஊடகங்களில் பேசுபோருளாகும் என்றெல்லாம் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் “ம்ம்ம்... சரி அப்பறம்?” என்கிற ரேஞ்சில் இது டீல் செய்யப்பட்டதை, அவர்கள் எதிர்பார்க்கவே இல்லை. அதேசமயம், இதுவரை விஜய்யிடமிருந்தோ அவரது இயக்கத்திலிருந்தோ முறையாக அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. பின்னணி குறித்து விசாரித்தோம்...

‘வாத்தி கம்மிங்?’ ரசிகர்களுக்கு அரசியல் ஆசை காட்டும் விஜய்?

“நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலின்போதே, அனைத்துத் தொகுதிகளிலும் பூத் கமிட்டிகளை அமைத்து தேர்தலைச் சந்திக்கத் தயாராக இருந்தார் விஜய். ஆனால், குறுகியகாலமே இருந்ததால் போட்டியிட முடியாமல் போனது. இந்தநிலையில், மக்கள் இயக்க மாவட்டச் செயலாளர்களை செப்டம்பர் 10-ம் தேதியன்று நேரில் வரச்சொல்லி பனையூரிலுள்ள தலைமை அலுவலகத்திலிருந்து அழைப்பு வந்தது. அன்று நடந்த கூட்டத்தில், உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவது என்கிற நிலைப்பாட்டைப் பகிரங்கமாக அறிவித்தார் ‘விஜய் மக்கள் இயக்க’த்தின் மாநிலப் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த். மாவட்டச் செயலாளர்களிடம் கருத்து கேட்கும் படலமும் நடந்தது. தேர்தல் பணிக்கான பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட்டு விட்டனர். சில இடங்களில் ‘விஜய் மக்கள் இயக்கம்’ சார்பில் வேட்புமனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுவருகின்றன. ‘விஜய் நேரிடையாகப் பிரசாரத்துக்கு வரப்போவதில்லை. அதேசமயம், விஜய் மக்கள் இயக்கக் கொடியையும் பெயரையும் தேவையான இடங்களில் பிரசாரத்துக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்’ என பனையூர் தரப்பு சொல்லிவிட்டது” என்றார்கள் விஜய் மக்கள் இயக்கத்தினர்.

``இன்னொரு பக்கம் `விஜய்க்குத் தெரியாமல் புஸ்ஸி ஆனந்த் அவராக இப்படி ஓர் அரசியல் நிலைப்பாட்டை எடுத்துவிட்டார்’ என்று எஸ்.ஏ.சந்திரசேகர் தரப்பினர் சொல்லிவருகிறார்களே...’’ என்று கேட்டோம்...

‘வாத்தி கம்மிங்?’ ரசிகர்களுக்கு அரசியல் ஆசை காட்டும் விஜய்?

விஜய் - எஸ்.ஏ.சி பனிப்போர்!

“நடிகர் விஜய்க்கும் அவருடைய தந்தை எஸ்.ஏ.சந்திரசேகருக்கும் இடையே சில மாதங்களுக்கு முன்பிருந்தே பனிப்போர் ஆரம்பித்துவிட்டது. எஸ்.ஏ.சி., புதிய கட்சி ஒன்றை ஆரம்பிக்கும் முயற்சியில் இறங்க, நடிகர் விஜய் தனது பெயரையோ, இயக்கக் கொடியையோ எஸ்.ஏ.சி தரப்பினர் பயன்படுத்தக் கூடாது என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். உடனே, ‘அப்பா எஸ்.ஏ.சி மக்கள் இயக்கம்’ என்கிற பெயரில் தேர்தல் கமிஷனில் பதிவுசெய்ய எஸ்.ஏ.சி முயன்றார். பிறகு அதையும் கைவிட்டவர், ‘காமராஜர் அண்ணா மக்கள் இயக்கம்’ என்ற பெயரில் புதிய இயக்கமொன்றைப் பதிவுசெய்தார். அந்த இயக்கத்தின் பெயரில், தேர்தலில் போட்டியிடப்போவதாகச் சொன்னவர், ஏனோ பதுங்கிவிட்டார். அதன் பிறகு, அரசியலில் எந்தவொரு நடவடிக்கையிலும் அவர் இறங்கவில்லை. பனிப்போர் தொடர்ந்தாலும், ‘விஜய் அரசியலுக்கு வருவார்’ என்று எஸ்.ஏ.சி திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டே இருந்தார். அவர் சொன்னதுபோலவே, உள்ளாட்சித் தேர்தலில் எங்கள் இயக்கம் களமிறங்குகிறது. விஜய்க்கு தெரியாமல் புஸ்ஸி ஆனந்த் செயல்படுகிறார் என்பதை யாரும் நம்ப மாட்டார்கள்” என்றார்கள்.

நடிகர் விஜய்யின் ரசிகர் மன்றத்தில் 14 வருடங்கள் மாநிலத் தலைவர் பதவியில் இருந்தவர் ஜெயசீலன். அவரிடம், விஜய்யின் அரசியல் நிலைப்பாடுகள் குறித்துக் கேட்டோம்...

“நிச்சயமாக அவர் அரசியலுக்கு வருவார்... வந்தும்விட்டார். நான் 1997 முதல் 2011 வரை விஜய்யுடன் இருந்தேன். நடப்பு அரசியல் பற்றிய அனைத்து விவரங்களையும் தெரிந்துவைத்திருப்பார் விஜய். ஒருமுறை, அரசியலில் ஈடுபடுவதற்கு முன்னோட்டமாக 2007-ல் கலைஞர் கருணாநிதி முதல்வராக இருக்கும்போது, சென்னை தீவுத்திடலில் மாநிலம் முழுவதுமுள்ள மன்றத்தினரை அழைத்து பெரிய மாநாடு நடத்த முடிவுசெய்தார். ஆனால், அந்த நிகழ்வு திட்டமிட்டபடி நடைபெறவில்லை. ஆனாலும், அரசியல் ஆர்வம் விஜய்க்குத் தொடர்ந்தது. இலங்கைப் பிரச்னைக்காக சென்னை சேப்பாக்கத்தில் ஒரு நாள் உண்ணாவிரதம் இருந்தார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு நடந்தபோது, நீட் விவகாரத்தில் அரியலூரில் மாணவி தற்கொலை செய்துகொண்டபோது... பாதிக்கப்பட்டவர்களை நேரில் கண்டு ஆறுதல் சொன்னார். தன் மக்கள் இயக்கம் மூலம் எத்தனையோ நல்ல காரியங்களைச் செய்துவருகிறார். அவரை நாங்கள் தலைவராக, தமிழக வருங்கால முதல்வராகப் பார்க்கிறோம்” என்றார்.

எஸ்.ஏ.சந்திரசேகர்
எஸ்.ஏ.சந்திரசேகர்

விஜய் சாரின் ஆசி உண்டு!

விஜய் மக்கள் இயக்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்திடம் பேசினோம். “மன்றத்தினர் அவர்களாகத்தான் பனையூரிலுள்ள அலுவலகத்துக்கு வந்தனர். உள்ளாட்சித் தேர்தல் பற்றி பேச்சுவந்தது. கடந்தமுறை நடந்த உள்ளாட்சி மன்றத் தேர்தலில், விஜய் மக்கள் இயக்கத்தினர் 128 இடங்களில் போட்டியிட்டு ஜெயித்திருந்தனர். “தற்போது ஒன்பது மாவட்டங்களில் போட்டியிடலாமா?” என்று கேட்டனர். “உங்கள் விருப்பம் என்று சொன்னேன். அவர்களும் போட்டியிடத் தயாராகிவிட்டனர்’’ என்றவரிடம், “இந்த முடிவு, நீங்களாக எடுத்தது... விஜய்க்குத் தெரியாது என்கிறார்களே?” எனக் கேட்டோம். “விஜய் சாரின் ஆசி உண்டு. அவ்வளவுதான்!” என்று மட்டும் சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்தார் புஸ்ஸி ஆனந்த்.

“அதிகம் பேசாமல் மௌனமாக இருப்பது விஜய்யின் தனிப்பட்ட இயல்பாகவோ, சினிமாவில் ஒரு கேரக்டராகவோ இருக்கலாம். அரசியல் விவகாரங்களில் அறிவிப்புகளையும் மறுப்புகளையும் உரிய நேரத்தில் வாய் திறந்து சொல்லாவிட்டால், அது தேவையில்லாத சர்ச்சைகளுக்கு வழிவகுக்கும். அப்பாவி ரசிகர்களுக்கு அரசியல் ஆசைகாட்டி, தேர்தலில் ஆழம் பார்க்கிறாரா விஜய்?” என்று ஆதங்கப்படுகிறார்கள் அரசியல் ஆர்வலர்கள்.