அலசல்
சமூகம்
Published:Updated:

பிகில் எஸ்.ஏ.சி... மெர்சல் விஜய்... ‘தெறி’ அரசியல்!

 விஜய், எஸ்.ஏ.சந்திரசேகர்
பிரீமியம் ஸ்டோரி
News
விஜய், எஸ்.ஏ.சந்திரசேகர்

பொதுவாக தீபாவளிக்கு விஜய்யின் படங்கள்தான் பட்டாசு கிளப்பும். இந்த தீபாவளிக்கு அவர் குடும்ப விவகாரம் வெடித்துக் கிளம்பியிருக்கிறது.

தங்கள் கனவுகளை வாரிசுகளின் தோள்களில் தூக்கிச் சுமக்கவைப்பது பெரும்பாலான தந்தையர் தம் பொதுப்புத்தி. கால் நூற்றாண்டுக் காலத்துக்கும் அதிகமாகவே தன் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரின் அரசியல் கனவை தோளில் தூக்கிச் சுமந்த நடிகர் விஜய், இப்போது தந்தையின் கனவை வீதியில் வீசியிருக்கிறார். உண்மையில், இருவருக்குமே வேறு வழியில்லை... தந்தைக்கு வயது 80-ஐ நெருங்குகிறது. ‘இப்போதுவிட்டால் வேறு எப்போதும் கிடைக்காது; ஆக்டிவ்வாக இருக்கும்போதே அதிகாரத்தை ருசித்துவிட வேண்டும்’ என்று துடிக்கிறது எஸ்.ஏ.சி மனம். ‘இன்னும் நேரம் கைகூடி வரவில்லை; பல நூறு கோடி ரூபாய் வருமானத்தைக் கெடுத்துக்கொண்டு, அரசியலிலும் சோரம்போய்விடக் கூடாது’ என்று கணக்கு போடுகிறது விஜய்யின் கார்ப்பரேட் மனம். ‘நாளைய தீர்ப்பு’ எழுதிய தந்தைக்கு விரைவில் மகன், ‘புதிய தீர்ப்பு’ எழுதலாம் என்பதே இப்போதைய களநிலவரம்!

பொதுவாக தீபாவளிக்கு விஜய்யின் படங்கள்தான் பட்டாசு கிளப்பும். இந்த தீபாவளிக்கு அவர் குடும்ப விவகாரம் வெடித்துக் கிளம்பியிருக்கிறது. தேர்தல் ஆணையத்தில், ‘அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம்’ என்று எஸ்.ஏ.சி கட்சியைப் பதிவுசெய்ததை யாருமே எதிர்பார்க்கவில்லை. தகவல் வெளியானதுமே இதைக் கடுமையாக ஆட்சேபித்து, ‘எனக்கும் என் தந்தை பதிவுசெய்திருக்கும் கட்சிக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை’ என்று சீறினார் விஜய். இன்னொரு பக்கம் விஜய்யின் தாய் ஷோபா, ‘என்னைக் கட்டாயப்படுத்தி, ஏமாற்றி கையெழுத்து வாங்கிவிட்டார்’ என்று கண்களைக் கசக்க... பஞ்சாயத்து நீண்டுகொண்டிருக்கிறது.

விஜய்யைச் சுற்றி என்ன நடக்கிறது, புதியக் கட்சியைப் பதிவுசெய்ய வேண்டிய அவசியம் சந்திரசேகருக்கு இப்போது ஏன் வந்தது, விஜய்யின் அடுத்த மூவ் என்ன? இது குறித்தெல்லாம் விஜய் குடும்பத்துக்கு நெருக்கமானவர்கள், விஜய் மக்கள் இயக்கத்தின் முன்னாள், இந்நாள் நிர்வாகிகள், விஜய் ரசிகர்கள் என்று பலரிடமும் பேசினோம்.

அரசியலின் ஆரம்பப்புள்ளி!

“விஜய்யின் ஆரம்பகால சினிமா பயணம், சந்திரசேகரின் கடின உழைப்பாலேயே தொடங்கிவைக்கப்பட்டது. 1992-ல் வெளியான ‘நாளைய தீர்ப்பு’ படத்தில் ஆரம்பித்து, 1995-ல் வெளியான ‘விஷ்ணு’ வரை, ஐந்து படங்களை மகனுக்காக இயக்கி, விஜய்யின் முகத்தை தமிழக மக்களின் மனதில் பதியவைத்தார் சந்திரசேகர். ‘நாளைய தீர்ப்பு’ வெளியானவுடன், ஈரோட்டைச் சேர்ந்த மோகன்ராஜ் என்பவர்தான் முதன்முதலில் விஜய் நற்பணி மன்றத்தை ஈரோட்டில் தொடங்கினார். 1993-ல் மன்றத்தின் மாநிலத் தலைவராக விஜயராமனும், செயலாளராக அமரனும் வந்த பிறகு, தமிழகம் முழுவதும் ஓர் அமைப்பாக ‘விஜய் நற்பணி மன்றம்’ கட்டமைக்கப்பட்டது. இதை முன்னெடுத்துச் செய்தவர் சந்திரசேகர். விஜயராமனுக்குப் பிறகு திருவொற்றியூர் ஜெயசீலனும், ரவிராஜாவும் மாநிலப் பொறுப்புக்கு வந்தனர்.

சாலிகிராமத்தில் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி தற்போது குடியிருக்கும் சந்திரசேகருக்குச் சொந்தமான வீட்டில்தான், வாரம்தோறும் ரசிகர் சந்திப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மாவட்டவாரியாக ரசிகர்களைச் சந்தித்து விஜய் பேசுவார். அவர்களுடன் உணவருந்துவார், போட்டோ எடுத்துக்கொள்வார். விஜய்யின் பிறந்தநாளுக்கு இலவச நோட்டு, புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்கச் சொல்வார் சந்திரசேகர். அவரது எதிர்கால அரசியல் திட்டத்தின் ஆரம்பப்புள்ளியும் இங்குதான் தொடங்கியது. எஸ்.ஏ.சி-யின் இயக்குநர் மனம், இருபது ஆண்டுகளைத் தாண்டிய தொலைநோக்குப் பார்வையுடன் வெகு சிரத்தையாக விஜய்யின் அரசியல் எதிர்காலத்தை ஷாட் பை ஷாட்டாக உருவாக்கத் தொடங்கியது.

2006-ல் தி.மு.க ஆட்சி அமைந்த பிறகு, திரையுலகம் கருணாநிதியின் குடும்பக் கட்டுப்பாட்டுக்குச் சென்றது. சன் பிக்சர்ஸ், ரெட் ஜெயண்ட் மூவிஸ், க்ளவுட் நைன் மூவிஸ் என்று தி.மு.க வாரிசுகள் துறையை ஆக்கிரமித்திருந்தார்கள். ‘போக்கிரி’ படத்துக்குப் பிறகு பெரிய வெற்றியைப் பெறாமல் விஜய் துவண்டிருந்தபோது 2008, நவம்பரில் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக சென்னை சேப்பாக்கத்தில் அடையாள உண்ணாவிரதத்தை விஜய்யைவைத்து நடத்தினார் சந்திரசேகர். தமிழக அரசியல் களம் பரபரப்பானது. 2009 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு, அந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ராகுல் காந்தியைச் சந்தித்தார் விஜய். இளைஞர் காங்கிரஸ் பொறுப்பை அவர் ஏற்கப் போவதாகப் பேச்சுக் கிளம்பியது. ஆனால், விஜய் கதருக்குள் நுழையவில்லை.

தி.மு.க-வுடன் மோதிய எஸ்.ஏ.சி!

2009-ம் ஆண்டு, சென்னை தீவுத்திடலில் பெரிய மாநாடு நடத்தி, விஜய்யை அரசியலுக்குள் அழைத்துவரத் தயாரானார் சந்திரசேகர். தீவுத்திடலுக்கான அட்வான்ஸ் பணமும் செலுத்தப்பட்டது. மாநாட்டு ஏற்பாடுகளை மன்றத்தின் மாநிலத் தலைவர் ஜெயசீலன் செய்தார். எங்கேயிருந்து வந்த அழுத்தமோ, திடீரென மாநாடு ரத்தானது. இதற்கிடையே விஜய்யைவைத்து தி.மு.க குடும்பம் தயாரித்த ‘வேட்டைக்காரன்’, ‘சுறா’, ‘குருவி’ ஆகிய படங்களும் எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை. இருதரப்புக்கும் உரசல்கள் எழுத் தொடங்கின.

அந்தக் காலகட்டத்தில் சினிமா தியேட்டர் களையும் கட்டுப்படுத்திவந்த தி.மு.க தலைவரின் குடும்பம், 2011, ஜனவரியில் ‘காவலன்’ படத்தை வெளியிடுவதற்கு 170-க்கும் குறைவான தியேட்டர் களையே ஒதுக்கியது. கொதித்துப்போனார் சந்திரசேகர். வடபழனி ஷோபா திருமண மண்டபத்தில் மன்றத்தின் நிர்வாகிகளை அழைத்து, ‘2011 சட்டமன்றத் தேர்தலில்

அ.தி.மு.க-வுக்கு ஆதரவளிக்கப்போகிறோம்’ என்று அறிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலத் தலைவர் ஜெயசீலன் உட்பட சுமார் 17 நிர்வாகிகள் மன்றத்தைவிட்டு வெளியேறினர். அதன் பிறகு, மன்றத்தின் தலைவரானார் புஸ்ஸி ஆனந்த்” என்றவர்கள், அப்பா - மகனுக்குள் விழுந்த விரிசலையும் சொல்ல ஆரம்பித்தார்கள்.

பிகில் எஸ்.ஏ.சி... மெர்சல் விஜய்... ‘தெறி’ அரசியல்!

கைமாறிய அதிகாரங்கள்!

“2011-ம் ஆண்டு வரை, மன்றம் தொடர்பாக விஜய்யை யார் சந்திக்க வந்தாலும், ‘அப்பாவைப் பாருங்க...’ என்று கூறிய விஜய், பிறகு ‘புஸ்ஸி ஆனந்தைப் பாருங்க...’ என்று சொல்லத் தொடங்கினார். ‘சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க ஜெயித்ததே விஜய் மன்றத்தால்தான்’ என்கிறரீதியில் சந்திரசேகர் கூறியது ஜெயலலிதாவை உஷ்ணமாக்கியது. இதனால், விஜய்யின் படங்களுக்குப் பிரச்னைகள் முளைக்கத் தொடங்கின.

‘இத்தனை பிரச்னைகளுக்கும் அப்பாதான் காரணம். அவர் அப்படிப் பேட்டி கொடுத்தாலதான் உங்க படத்தை எதிர்க்கிறாங்க’ என்று சிலர் விஜய்யிடம் கூறினர். இது அப்பா - மகன் உறவில் விரிசலை அதிகப்படுத்தியது. விஜய்யின் கால்ஷீட், சம்பளம் உள்ளிட்டவை சந்திரசேகரிடமிருந்து விஜய்யின் மேலாளர்கள், உறவினர் சேவியர் பிரிட்டோ உள்ளிட்டவர் களிடம் ஒப்படைக்கப்பட்டது. பனையூரிலுள்ள விஜய் வீட்டுக்கு சந்திரசேகர் சென்றால்கூட, தனது அறையிலிருந்து வெளியே வராமல் இருப்பாராம் விஜய். இரண்டு மணி நேரத்துக்கும் மேலாகக் காத்திருந்துவிட்டு, மகனைச் சந்திக்க முடியாமலேயே திரும்பி வந்த சம்பவங்களும் நடந்திருக்கின்றன. இதற்கிடையே, சந்திரசேகருக்கு நெருக்கமானவர்கள் பலரும் மன்றத்திலிருந்து ஓரங்கட்டப்பட்டனர். 37 மாவட்டங்களுக்கு இருவர் வீதம் இருந்த மன்றக் கட்டமைப்பு, இன்று சகட்டுமேனிக்குப் பிரிக்கப்பட்டு சுமார் 115 பேர் மாவட்டத் தலைவர்களாக இருக்கிறார்கள்” என்றனர்.

ஒன்றரை மாதத்துக்கு முன்பு, கன்னியாகுமரியிலுள்ள ஒரு தனியார் ஹோட்டலில் மன்றத்திலிருந்து நீக்கப்பட்ட சுமார் 20-க்கும் மேற்பட்டவர்கள் ஒன்றுகூடி ரகசியக் கூட்டம் நடத்தியிருக்கிறார்கள். தனிக்கட்சி தொடங்குவது குறித்து அந்தக் கூட்டத்தில் தீவிரமாக விவாதிக்கப்பட்டிருக்கிறது. வீடியோ கால் மூலமாக கூட்டத்தில் கலந்து கொண்ட சந்திரசேகர், கட்சியைக் கட்டமைக்கும் பணியை ஒவ்வொரு மாவட்டத்திலும் செய்யச் சொல்லியிருக்கிறார். இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டு ஆத்திரத்தின் உச்சிக்கே சென்றுவிட்டாராம் விஜய்.

ரஜினி டு எம்.ஜி.ஆர் ரூட்!

‘ரஜினி அரசியலுக்கு வருவார். அவருடன் கூட்டணி வைத்து மகனை அரசியலில் ஆளாக்கலாம்’ என்பதுதான் சந்திரசேகரின் ஆரம்பகாலத் திட்டம். ஆனால், அரசியலுக்குள் ரஜினி என்ட்ரி கொடுக்காததால், எம்.ஜி.ஆர் ரூட்டுக்கு மாறிவிட்டார் சந்திரசேகர்.

இது குறித்துத் தனக்கு நெருக்கமானவர்களிடம் சந்திரசேகர், “2009 நாடாளுமன்றத் தேர்தலில் விஜயகாந்துக்கு விழுந்த 10 சதவிகித வாக்குகளைவிட நமக்கு அதிகமாகக் கிடைக்கும். மைனாரிட்டி சமூகத்தினரின் ஆதரவும் விஜய்க்கு இருக்கிறது. இப்போது அரசியலில் இறங்கினால், 2021 தேர்தலிலேயே கணிசமான இடங்களைக் கைப்பற்றிவிடலாம். ஒருவேளை ஆட்சியைப் பிடிக்க முடியாவிட்டாலும்கூட, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் கட்சியை வலுப்படுத்திவிட்டு 2026-ல் ஆட்சியைக் கைப்பற்றிவிடலாம். 1967-ல் தி.மு.க ஆட்சியைப் பிடித்த பிறகு, தன் படங்கள் மூலமாகத் தனக்கென்று பெரிய இமேஜைக் கட்டியெழுப்பினார் எம்.ஜி.ஆர். அதுதான், 1972-ல் அவர் தனிக்கட்சி ஆரம்பித்தபோது கைகொடுத்தது.

அதே பாணியில், சினிமா மூலமாகக் கட்சியை வளர்க்கலாம். 1996-ல் தனக்கு வந்த வாய்ப்பை ரஜினி நழுவவிட்டதால்தான் இன்றுவரை அவருக்கு அரசியல் ஓப்பனிங் கிடைக்கவில்லை. விஜய்க்கும் அப்படியொரு நிலை ஏற்பட்டுவிடக் கூடாது. விஜய் கொஞ்சம் ரிசர்வ் டைப்தான். தொடக்கத்தில் பேசுவதற்கு யோசிப்பார்... ஆனால், கட்சியைப் பதிவுசெய்துவிட்டு, அழுத்தம் கொடுத்தால், வேறு வழியில்லாமல் அரசியலில் இறங்கிவிடுவார்” என்றெல்லாம் பேசினாராம்.

சந்திரசேகருக்கு நெருக்கமானவர்கள் நம்மிடம், “அரை நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே சமூகப் படங்கள், அரசியல் படங்கள் கொடுத்துவந்த சந்திரசேகருக்கு, எப்படியாவது அரசியலில் காலூன்றிவிட வேண்டும் என்பதே தீராத தாகமாக இருக்கிறது. இப்போதே அவருக்கு 78 வயதாகிவிட்டது. இனியும் தாமதித்தால், இனி எப்போதுமே அவர் அரசியலுக்கு வர முடியாது. குறைந்தபட்சம் ராஜ்ய சபா எம்.பி பதவியையாவது வகித்துவிட வேண்டும் என்று அவர் ஆசைப்படுகிறார். அதனால்தான், அவர் துடிப்புடன் இருக்கும்போதே, அரசியலுக்குள் மகன் மூலமாக என்ட்ரி கொடுத்துவிட வேண்டுமென்று நினைக்கிறார். அதனால்தான் இந்தக் கட்சிப் பதிவு” என்றார்கள்.

விஜய் டார்கெட் 2026!

ஆனால், விஜய்யின் கணக்கோ வேறு மாதிரியாக இருக்கிறது. தற்போது ஒரு படத்துக்கு சுமார் 70-80 கோடி ரூபாய் சம்பளமாகப் பெறுகிறார் விஜய். வருடத்துக்கு இரண்டு படங்கள். இது தவிர ஏரியா உரிமை உள்ளிட்ட சிலபல வருமானங்கள், இதர பிசினஸ்கள். இவற்றையெல்லாம் கணக்கிட்டால் ஐந்து ஆண்டுகளில் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் வருகிறது. இந்த வருமானத்தைக் கெடுத்துக்கொள்ள வேண்டுமா என்பதுதான் விஜய்யின் கேள்வி.

விஜய்க்கு அரசியல்ரீதியாக ஆலோசனை அளிக்க ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி, வருமான வரித்துறையின் முன்னாள் அதிகாரி உள்ளிட்டோரைக்கொண்ட டீம் ஒன்று இருக்கிறது. இந்த டீமில் விஜய்க்கு நெருக்கமான நண்பர்கள் சிலரும் இருக்கிறார்கள். “தனது மகனைச் சுற்றி நால்வர் அணி விஷமாகச் செயல்படுகிறது” என்று சந்திரசேகர் குறிப்பிட்டது புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட இந்த டீமை மையப்படுத்தித்தானாம்.

இந்த டீம்தான் விஜய்யிடம், “தமிழ் சினிமாவுல இன்னிக்கு நீங்கதான் நம்பர் ஒன். ரஜினியும் ஆக்டிவ்வா இல்லாததால், குறைந்தது ஐந்து வருஷத்துல இன்னும் நீங்க டாப்ல போகலாம். இப்போ அரசியலுக்கு வந்தால் உங்களால வாக்குகளைத்தான் பிரிக்க முடியுமே தவிர, ஜெயிக்க முடியாது. தி.மு.க., அ.தி.மு.க மாதிரி தமிழ்நாடு முழுவதும் உறுதியான கட்டமைப்பும் உங்களுக்குக் கிடையாது. இப்போது அரசியலில் இறங்கினால், இதுவரை சம்பாதித்த பணத்தையெல்லாம் வாரி இறைத்து வீணாப்போயிடும். தவிர, அரசியல் சாயம் ஏறினாலே, சினிமா சான்ஸ் குறைஞ்சுடும். வருமானமும் கையைவிட்டுப் போய்விடும். வருகிற அஞ்சு வருஷத்துல சினிமா படங்கள் மூலம் அரசியலுக்கான பேஸ்மென்ட்டை வலுவாக்கிக்கிட்டு, மாநிலம் முழுக்க ஒரு கிராமம் விடாமல் இயக்கத்தின் கட்டமைப்பையும் பலப்படுத்திவிட்டு, 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு அரசியல்ல நுழையலாம்” என்று அட்வைஸ் செய்திருக்கிறார்கள். அதற்குப் பிறகுதான், சந்திரசேகர் ஆரம்பித்துள்ள கட்சிக்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று காட்டமான அறிக்கை விஜய்யிடமிருந்து வெளிவந்திருக்கிறது.

பிகில் எஸ்.ஏ.சி... மெர்சல் விஜய்... ‘தெறி’ அரசியல்!

கட்சிப் பதிவு வாபஸ்?

இதற்கிடையே நவம்பர் 8-ம் தேதி, சந்திரசேகரும் விஜய்யும் வீடியோ காலில் பேசினார்கள் என்று கூறப்படுகிறது. இதற்கான ஏற்பாட்டை ஷோபா செய்தாராம். அப்போது, தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்துள்ள விண்ணப்பத்தை வாபஸ் வாங்கும்படி விஜய் கூறினாராம். அதற்கு சந்திரசேகர், “வாபஸ் வாங்குகிறேன். அதற்கு முன்பு ஆனந்த் உட்பட சிலரைப் பதவியிலிருந்து நீக்க வேண்டும். பழையவர்களுக்கு மீண்டும் பொறுப்பு தரப்பட வேண்டும்” என்று கண்டிஷன் வைத்திருக்கிறார். டென்ஷனான விஜய், “முதலில் வாபஸ் வாங்குங்கள். பிறகு பார்க்கலாம்” என்று சொல்லியிருக்கிறார். குடும்ப உறுப்பினர்கள் மூலமாக பஞ்சாயத்து தொடர்கிறது. விரைவில் கட்சிப் பதிவை வாபஸ் வாங்குவது குறித்து சந்திரசேகரிடமிருந்தோ அல்லது விஜய்யிட மிருந்தோ புது அறிவிப்பு வெளியாகலாம். அநேகமாக சந்திரசேகருக்கு ஓய்வளிக்கும் அறிவிப்பாகக்கூட அது அமையலாம்!

இந்த விவகாரம் தொடர்பாகத் தொடர்ந்து ஊடகங்களில் எஸ்.ஏ.சி பேசிவந்த நிலையில், இந்த இதழ் அச்சில் ஏறும் முன்பாகக் கடைசிகட்ட நிலவரம் குறித்து அறிய அவரைத் தொடர்புகொண்டோம். சோர்வான குரலில் பேசியவர், “ஷுட்டிங்கில் இருக்கிறேன். இப்போது வெளிப்படையாகப் பேச முடியாது. விரைவில் உங்களிடம் மனம் திறக்கிறேன்” என்றவரின் குரலில் நிறைய குழப்பங்கள் தொனித்தன.

விஜய் எனும் பெரும் பிம்பத்தை படிப்படியாகக் கட்டமைத்தவர், அரசியல் அறுவடைக்கு ஆசைப்படுகிறார். ரத்தமும் சதையுமாக, பாசமும் நேசமுமாக இருந்த எத்தனையோ உறவுகளை கூறுபோட்ட வரலாறுகொண்டது தமிழக அரசியல். எஸ்.ஏ.சி-யும் விஜய்யும் மட்டும் விதிவிலக்கா என்ன?

கட்சி, பதிவானது எப்படி?

விஜய்யின் கட்சிப் பதிவு விவகாரத்தின் பின்னணியில் இருந்தது, அனைத்திந்திய எம்.ஜி.ஆர் மக்கள் முன்னேற்றக்கழக பொதுச்செயலாளரும் சினிமா இயக்குநருமான எம்.ஜி.ஆர் நம்பிதான். அவரிடம் பேசினோம். “டெல்லியில் பிரபலமான வழக்கறிஞர் சமீர்கானிடம் கட்சியைத் தொடங்குவது குறித்து சந்திரசேகரும் நானும் பேசினோம். பொதுக்குழு உறுப்பினர்கள் என்கிற முறையில் 100 பேர் கையெழுத்து தேவைப்பட்டது. அதற்கும் ஏற்பாடு செய்தார் சந்திரசேகர். நவம்பர் 5-ம் தேதியன்று தேர்தல் கமிஷன் வேலையை முடித்துக்கொண்டு, டெல்லியிலிருந்து சென்னைக்குக் கிளம்பினேன். அதன் பிறகு இவ்வளவு விவகாரங்கள் நடந்துவிட்டன” என்றவரிடம், “என்னை ஏமாற்றி கையெழுத்து வாங்கிவிட்டார் என்கிறாரே ஷோபா?” என்று கேட்டோம்.

“கட்சி தொடங்குவதற்கான விண்ணப்பத்தில், 27-க்கும் அதிகமான கையெழுத்துகளை போட்டிருக்கிறார் ஷோபா. கட்சியின் நிர்வாகி என்கிற வகையில், மூன்று வருட ஐ.டி ரிப்போர்ட், அசையும், அசையா சொத்து டாக்குமென்ட்டுகள், வங்கிக் கணக்குகள் என்று பல ஆவணங்களில் கையெழுத்து போட்டிருக்கிறார். இப்போது அவர் மாற்றிப் பேசுவது ஏன் என்று தெரியவில்லை” என்றார்.

கமலா... கமலாலயமா?

மேற்கண்ட விவகாரத்தில் வேறு சில தகவல்களும் ஓடுகின்றன. ``ரஜினியுடன் இணைந்து தேர்தலைச் சந்திக்கலாம் என்பது கமலின் திட்டமாக இருந்தது. அது கைகூடாததால், கமல் தரப்பிலிருந்து சிலர், ‘கூட்டணியாக இணைந்து தேர்தலைச் சந்திக்கலாம்’ என்று எஸ்.ஏ.சி-க்கு வலை விரித்தார்கள். அதனாலேயே அவர் கட்சியைப் பதிவு செய்தார்” என்றும் சொல்கிறார்கள். இன்னொரு பக்கம், இதன் பின்னணியில் பா.ஜ.க இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. சமீபத்தில் நடிகர்கள் பலரையும் டெல்லி பக்கம் ஒதுங்கச் செய்த ஃபைனான்ஸ் நடிகர் ஒருவர் மூலம் சந்திரசேகரின் மனதில் கமலாலயம் தரப்பு சலனத்தை ஏற்படுத்தியது என்றும் சொல்கிறார்கள்!