ஓட்டை உடைசலான ஒரு டப்பா பஸ்ஸை வைத்துக்கொண்டு தமாஷ் பண்ணியிருக்கிறார் மலையாள டைரக்டர் தாஹா! தன் தந்தையை மோதிக் கொன்ற பஸ்ஸை நஷ்ட ஈடாகப் பெறுகிறார் முரளி. அந்த பஸ்தான் அவருக்கு நடமாடும் வீடு. கூடவே அத்தை மகன் வடிவேலு.
வங்கியில் கடன் வாங்கி அந்தப் பாடாவதி பஸ்ஸை ஃபாஸ்ட் ஃபுட் கடையாக்குவது அவர்கள் லட்சியம். திடீரென ஒரு லம்பாடிப் பெண் (புதுமுகம் பசந்தி) அவர்கள் பஸ்ஸில் தஞ்சம் அடைகிறாள். பாண்டிச்சேரி அமைச்சர் பி.வாசு-வின் மகள்- வசந்தி.
தந்தையின் போக்குப் பிடிக்காமல் ஓடிவந்து தஞ்சம் புகுந்தவர் என்பது முரளிக்குத் தெரிய வருகிறது. அதற்கு முன்பாகவே முரளிக்கு வசந்தி மீது காதல் வேறு! மகளைக் கண்டுபிடித்து இழுத்துப் போய் எதிர்க்கட்சித் தலைவரின் மகனுக்குக் கல்யாணம் செய்து வைக்கப் பார்க்கிற பி.வாசுவின் திட்டத்தை முறியடித்து, முரளி அந்தப் பெண்ணைக் கைப்பிடிப்பதுதான் சுந்தரா டிராவல்ஸ் கதை.

கிச்சன், பாத்ரூம், பெட்ரூம் என்று ஒரு பழைய பஸ்ஸுக்கு பேச்சிலர் ரூம் எஃபெக்ட் தந்திருப்பது அழகு. அந்த பஸ் கக்குகிற புகையில் சாலை யோரம் நிற்கிற மனிதர்கள் சிக்கி அட்டைக்கரி ஆகிற முதல் ஸீன் சிரிக்க வைக்கிறது.
அதே ஐடியாவை ஏழெட்டு முறை காட்டும்போது அலுப்புதான் வருகிறது.எலிகாமெடியும் அதே! ஆரம்பத்தில் கிச்... கிச்... அப்புறமெல்லாம் ப்ச்.. ப்ச்!

முழுநீள காமெடி படம் என்பது முரளிக்குப் புது அனுபவம். காமெடியில் மனிதர் அத்தனை கஷ்டப்படுகிறார். கதாநாயகியாக புதுமுகம் வசந்தி. எந்த எக்ஸ்பிரஷனும் இல்லாத ஒரு முகம். ம்... பாடல் காட்சிகளுக்காக ஒரு ஹீரோயின்!
வடிவேலு, அவரிடம் வேலை தேடி வந்த இளவரசு, வாங்கிய கடனை வசூலிக்க வந்த மலையாள சேட்டன் தங்கராஜ்... மூவரும் நிச்சயதார்த்தம் நடக்கிற வீட்டில் புகுந்து போதையில் ரகளையடிக்கிற காட்சிதான் படத்தின் ஆறுதல் அம்சம்.
‘நிலவு ஒண்ணு’ பாடலில் மட்டும் பளிச்செனத் தெரிகிறார் இசையமைப்பாளர் பரணி.பஸ், எலி இரண்டையும் வைத்தே படத்தில் சரிபாதி காமெடிக் காட்சிகள்.
சுந்தராடிராவல்ஸ் - குழந்தைகள் ஸ்பெஷல்!
- விகடன் விமர்சனக்குழு