Published:Updated:

விகடன் பிரஸ்மீட்: “விஜய் விளையாட்டாகப் பேசியிருக்கக்கூடாது!”

கமல்
பிரீமியம் ஸ்டோரி
கமல்

விகடன் பிரஸ்மீட்டில் கமல்! #VikatanPressMeet: விகடன் நிருபர்களுக்கு மட்டுமேயான பிரத்யேக பிரஸ்மீட் இது.

விகடன் பிரஸ்மீட்: “விஜய் விளையாட்டாகப் பேசியிருக்கக்கூடாது!”

விகடன் பிரஸ்மீட்டில் கமல்! #VikatanPressMeet: விகடன் நிருபர்களுக்கு மட்டுமேயான பிரத்யேக பிரஸ்மீட் இது.

Published:Updated:
கமல்
பிரீமியம் ஸ்டோரி
கமல்

“ ‘ஹேராம்’ படத்தை இன்றுவரை ஒரு இந்துத்துவ திரைப்படம் என்று விமர்சிக்கிறார்களே, அதுகுறித்த உங்கள் கருத்து என்ன?’’

- கார்த்தி

விகடன் பிரஸ்மீட்: “விஜய் விளையாட்டாகப் பேசியிருக்கக்கூடாது!”

“ஷேக்ஸ்பியரின் நாடகத்தில் மார்க் ஆண்டனியின் கடைசிப்பேச்சு சீஸரின் கிரீடத்தைக் கைப்பற்றிவிட வேண்டும் என்பதற்கான பேச்சு என்று யாராவது சொன்னால் என்ன செய்யமுடியும். புரூட்டஸுக்கு ஆதரவான பேச்சு என்று சொன்னால் என்ன செய்யமுடியும். ஏனென்றால், அதை மறுக்கவும் முடியாது. ‘Brutus is an honurable man’ என்கிற வரி அதில் மீண்டும் மீண்டும் வந்துகொண்டேயிருக்கும். ஒருவகையான வஞ்சப் புகழ்ச்சிதான் அது. அதேபோலத்தான் ‘ஹேராம்’ படமும்.

என்னுடைய மன்னிப்புக் கோரல்தான் ‘ஹேராம்’ படமே. ஒரு வைணவக்குடும்பத்தில் பிறந்து, பெரிய பக்திச் சூழலில் வளர்ந்த பையன் எப்படி பகுத்தறிவை நோக்கிப்போனானோ அதேபோல், காந்தி வெறுப்புப் பேச்சுகளைப் பேசிய என்னுடைய மன்னிப்புக்கோரல்தான் ‘ஹே ராம்.’

ஒரு வாரப்பத்திரிகையில் காந்தி அவர்களின் பிறந்தநாளுக்காக ஒரு கட்டுரை கேட்டபோது ‘டியர் மோகன்’ என ஒரு கடிதம் எழுதியிருந்தேன். அந்தக் கடிதத்தில் ஒரு மன்னிப்புக்கோரல் இருக்கும். ‘54-ல் பிறந்த ஒரு பையன்... உன்னைச் சுட்டதற்காக சாரி... உன்னுடன் உரையாட வேண்டும். மறுபடியும் மறுபடியும் உன்னைச் சந்திக்க முயற்சி செய்கிறேன். ஆனால் உன் தலைக்குப்பின்னால் இருக்கும் சூரியவட்டம் என்னைத் தெரியவிடாமல் செய்கிறது. நான் கூட்டத்தில் இருந்து கை காட்டினால் நீங்கள் என்னைப் பார்ப்பதும் எனக்குத் தெரிய வேண்டாமா? எவ்வளவு நாள்தான் உங்களுக்குத் தெரியாமல் கைகாட்டிக்கொண்டே இருப்பது. உங்களைச் சுற்றியிருக்கும் காதி கமாண்டோக்களைக் களையுங்கள். நான் உங்கள் அருகில் வரவேண்டும்’ என எழுதியிருந்தேன். அதன் நீட்சிதான் ‘ஹேராம்’ படம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நான் காந்தியின் ரசிகனாக மாறிப்போனேன். அதை ‘ஆன்ட்டி காந்தி படமாக’ சிலர் நினைத்தார்கள் என்றால் அவர்களுக்கு ‘ஹேராம்’ புரியவில்லை, சினிமா தெரியவில்லை என்று அர்த்தம். என்னுடைய மிகப்பெரிய முயற்சி அது. நல்ல நடிகர்கள், நல்ல டெக்னீஷியன்களை வைத்துச் செய்தபடம். நவாஸுதின் சித்திக்கி அந்தப்படத்தில் உதவி இயக்குநர். படத்தின் நீளம் குறித்து அவர் நடித்த காட்சிகள் கடைசியில் நீக்கப்பட்டன. அந்தப் படத்தின்வழியாகச் சொல்ல எனக்குப் பல கதைகள் இருக்கின்றன. துஷார் காந்தியின் நட்பு, திருமூர்த்தி பவனில் நடந்த அற்புதமான விஷயங்கள் என எல்லாம் நிகழ்ந்தது ‘ஹேராம்’ படத்தால்தான். எல்லோரும் சொல்வதுபோல எனக்குப் பெரிய நஷ்டத்தை ஏற்படுத்திய படம் அல்ல அது. டேபிளில் எங்களுக்கு லாபம்தான். காந்தி கணக்கு என யாரும் தவறாக நினைத்துவிடக்கூடாது என்பதற்காக இதைச் சொல்கிறேன்.’’

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

‘`நீங்கள் பாடியதில் உங்களுக்குப் பிடித்த பாடல் எது?’’

- ஜெனிஃபர்

‘` ‘சுந்தரி நீயும்’ பாடல். அந்தப் பாடலை ஜேசுதாஸ் அவர்கள்தான் பாடவேண்டும் என ஆசைப்பட்டேன். ஆனால், இளையராஜா என்னைப் பாடவைப்பார் என நான் நினைக்கவேயில்லை. ஆண்டாளின் ‘மார்கழித் திங்கள்’ என்பதைவைத்து இயற்றப்பட்ட பாடல் அது. ஆனால் அதை ராஜா மாற்றியவிதம் அருமை. ஜீனியஸ் அவர். அதில் பாட வாய்ப்பு கிடைத்ததே எனக்குப் பெருமை என நினைக்கிறேன்.’’

“ ‘16 வயதினிலே’ படத்தை ரீமேக் செய்தால் பரட்டை, சப்பாணி, மயில் கேரக்டர்களில் இப்போது நடிக்க உங்கள் சாய்ஸ் யார் யார்?’’

- அய்யனார் ராஜன்

kamal
kamal

“நிறைய திறமையான இளம் நடிகர்கள் இருக்கிறார்கள். இயக்குநர் யார் என்பதுதான் முக்கியம். பாரதிராஜாவுக்கு ரீப்ளேஸ்மென்ட் யார் எனக் கண்டுபிடிப்பதுதான் சிரமம். ஏனென்றால், அந்தப் படத்தின் கதாநாயகன் அவர்தான். பிறகுதான் நாங்களெல்லாம். பாரதிராஜாவுக்கு மாற்று யார் என்பதுதான் முக்கியம். நல்ல இயக்குநர் கையில் படம்போக வேண்டும். நல்ல இயக்குநர் கையில் மாட்டவில்லை என்றால் உங்களுக்கு ரஜினிகாந்தும் கிடையாது, கமல்ஹாசனும் கிடையாது. அதனால்தான் நான் இயக்குநர் ஆனேன். நல்ல இயக்குநர்களின் எண்ணிக்கை குறையும்போது என்னுள் பயம்வந்தபோது நான் இயக்குநர் ஆகிவிட்டேன். ‘அப்ப உங்களை நல்ல டைரக்டர்னு நீங்களே சொல்லிக்கிறீங்களா?’ என்றால், நீங்கள் சொல்லும்வரை நான் காத்திருக்க வேண்டுமா என்ன? நான் அதை முதலில் நம்பவேண்டாமா? எல்டாம்ஸ் சாலையில் யாரும் என்னைத் திரும்பிக்கூடப் பார்க்காத நிலையிலும், நான் என்னை நல்ல நடிகன் என்று நம்பியதால்தான் நான்கு பேராவது அதை வழிமொழிந்தார்கள். எனக்கே நம்பிக்கை இல்லை என்றால் எப்படி? இளையராஜா சான்ஸ் கேட்கக்கூடப் போகமாட்டார். சான்ஸ் வரவில்லையென்றாலும் பரவாயில்லை என்று உட்காருவார். அவருக்குத் தெரியும் அவர் யாரென்று. அதற்குக் காரணம் கர்வம் கிடையாது. ஒரு நல்ல கலைஞனை யாரும் அவமானப்படுத்திவிடக்கூடாது என நினைத்திருப்பார், அவ்வளவுதான்.’’

“கமல் படத்தின் இயக்குநர் யாராக இருந்தாலும் கமல்தான் படத்தை இயக்குவார் என்று சொல்லப்படுவது பற்றி..?’’

- ரஞ்சித் ரூஸோ

“நல்லவேளை, பாலசந்தர் சார் இப்போது உயிரோடு இல்லை. இருந்திருந்தால் என் காதையும், உங்கள் காதையும் சேர்த்துத் திருகியிருப்பார். அதெல்லாம் இயக்குநரைப் பொறுத்தது. இதே கேள்வியை இயக்குநர் நண்பர் ஒருவரும் என்னிடம் கேட்டிருக்கிறார். ‘கமல்ஹாசன் என்கிற நடிகரின் படம் மிகவும் நன்றாக வரவேண்டும் என்கிற ஆர்வம் எனக்கு அதிகம். அதனால் நல்ல கெட்டிக்காரன்தான் இயக்குநர் ஆகவேண்டும் என நினைப்பேன். திடீரென்று உங்களைப்போன்ற ஒரு முட்டாள், இயக்குநராக வந்து அமைந்துவிட்டால் நான் என்ன செய்வது’ என்று அவரிடம் கேட்டேன். அதோடு பாதியிலேயே அவர் டைரக்ஷனை விட்டுவிட்டுப் போய்விட்டார். எனக்கு நல்ல நண்பர்தான் அவர்.

என்னோடு பணிபுரிந்த எல்லா இயக்குநரிடமும் கேளுங்கள். நான் ஒரு உதவி இயக்குநராகத்தான் அந்தப் படத்தில் பணியாற்றியிருப்பேன். நான் இயக்கிய படங்களிலேயே நான் இயக்குநராக இருந்ததில்லை என்பதுதான் உண்மை. நான் இயக்கும் படங்களில் என்னுடைய முதல் உதவி இயக்குநர்தான் ஷாட், ஆக்‌ஷன் எல்லாம் சொல்வார். நான் பரீட்சைக்குப் போகும் மாணவன்போல உட்கார்ந்திருப்பேன். கட் மட்டும்தான் நான் சொல்வேன். காட்சி நன்றாக முடியவேண்டும் என்பதற்காக அந்த கட் சொல்லும் உரிமையை மட்டும் என்னிடம் வைத்திருப்பேன். மற்றபடி என்னுடைய அரங்கில் மேஸ்திரிபோல ஒருவர் இருப்பார்.

சினிமா என்பது ஒரு ஜனநாயகக் கலை. ஆர்ட் டைரக்டர் ஒழுங்காக வேலை செய்யவில்லை என்றால் படம் நன்றாக வராது. ஒரு ஃபோக்கஸ் புல்லர் சரியாக வேலை செய்யவில்லை என்றால்கூடப் படம் தோற்றுவிடும். அதனால் எல்லோரும் சேர்ந்து செய்யும் வேலைதான் சினிமா. அதில் கமல்ஹாசனும் ஒருவன். நாடகத்தில் ஆசிரியர் என்று ஒருவர் இருப்பார். ஆனால் சினிமாவில் ஆசிரியர்கள் யாரும் கிடையாது. எல்லோருமே மாண வர்கள்தான்.’’

“விஜய் சமீபகாலமாக அதிகம் அரசியல் பேச ஆரம்பித்திருக்கிறார். ‘நான் முதலமைச்சரானால் இதையெல்லாம் செய்வேன்’ என்றுகூட விளையாட்டாகச் சொல்லியிருக்கிறார். அவர் அரசியலுக்கு வந்தால், உங்களின் நிலைப்பாடு என்னவாக இருக்கும்? விஷால், சூர்யா எனப் பல நடிகர்களும் அரசியல் ஆர்வத்துடன் இருக்கிறார்கள். இவர்களையெல்லாம் ஒரு குடைக்குள் கொண்டுவந்தால் உங்களுடைய இலக்கை அடைய இலகுவாக இருக்கும் என நினைக்கிறீர்களா?’’

- கார்க்கிபவா

vijay
vijay

“நீங்கள் கேட்கும்போதே ‘விளையாட்டாக’ என்று ஒரு முன்பதிவைச் செய்துவிட்டீர்கள். அவர் விளையாட்டாக அதைப்பேசியிருக்கக்கூடாது என்பதுதான் என் விருப்பம். யாருக்கு வேண்டுமானாலும் அந்த ஆசை இருக்கலாம். அதற்கான தகுதியை வளர்த்துக்கொள்ள வேண்டும். அதற்கான உத்வேகத்தைக் காண்பிக்க வேன்டும். அவரை நான் அரசியலுக்கு வரவேற்று ரொம்ப நாள் ஆகிவிட்டது.

இளம் நடிகர்கள் குறித்த கேள்விக்கு என்னுடைய பதில் என்பது, அவர்கள் என்ன சித்தாந்தத்துடன் வருகிறார்கள், எத்திசை நோக்கிச் செல்லவேண்டும் என்று நினைக்கிறார்கள் என்பதுதான் முக்கியம். நாங்கள் செல்ல நினைக்கும் திசையும், அவர்கள் செல்ல நினைக்கும் திசையும், தமிழகம் எப்பாதையில் செல்லவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இருந்துவிடக்கூடாது.

‘நீட்லாம் இருந்துட்டுப்போதுங்க... நல்லது’ எனச் சொல்லிவிட்டு வந்தார்கள் என்றால் அது விவாதிக்க வேண்டிய விஷயம். அவசரத்துக்கு வேண்டுமானால் கைகுலுக்கிக்கொள்ளலாமே தவிர அந்த விவாதம் தொடர்ந்து நடந்து கொண்டேதான் இருக்கும்.’’

“நீங்கள் சந்தித்த மிகப்பெரிய பாராட்டு, மிகப்பெரிய அவமானம் பற்றிச் சொல்ல முடியுமா?’’

- விஜயானந்த்

“அவமானத்தை மறப்பது மனதுக்கு நல்லது. அவமானத்தை மறக்கமுடியவில்லை என்றால் எல்லோரும் தற்கொலைக்கு முயற்சி செய்வார்கள். அதனால் அதை மறந்துவிட வேண்டும். ‘எக்ஸர்ஸைஸ் எல்லாம் செய்து உடம்பு சரியாகிவிட்டது... இனி நான் ஒரு முழு ஆண்மகன்’ என்று 15 வயதில் நான் நினைத்தபோது மூன்று பேர் என்னை அடித்து நொறுக்கிக் கீழே போட்டுவிட்டார்கள். தார் மணம் எப்படி இருக்கும் என்று என்னால் அன்றுதான் உணரமுடிந்தது. ஏனென்றால், ரோட்டில் படுக்கவைத்து என்னை மிதித்துவிட்டார்கள். ஆனால், அதையே நான் நினைத்துக்கொண்டி ருந்தேன் என்றால் எழுந்து நடந்திருக்கவே மாட்டேன். இன்று சொல்லும்போது எவ்வளவு சாதுர்யமாக அதை மறந்துவந்திருக்கிறேன் என்று புரியும். ஆனால் மனது முழுவதும் மறக்காது. கனவிலாவது வரும். ஆனால் அதையே நினைத்துக்கொண்டிருந்தால் நடக்கக்கூட முடியாது. நிறைய அவமானங்கள் நடந்திருக்கின்றன. அப்படி அவமானப்படுத்தியவர்களை மீண்டும் சந்தித்து அவர்களுக்கு உதவிகள் செய்யும்போது ஒரு மகிழ்ச்சி. ‘இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்’ எனும் குறளை வாழ்ந்து பார்த்தால் தெரியும். சொல்லிப்பார்த்தால் புரியாது.

பெருமை, பாராட்டு எனச் சொல்லும்போது அந்தந்த வயதுக்கு ஏற்ற தேவை அது. அவ்வப்போது அது தேவைப்படும். ஆரம்பத்தில் என்னை யாரும் கவிஞன் என்று சொல்லிடமாட்டார்களா என்கிற ஆசை எனக்குண்டு. ‘அடப்போடா பைத்தி யக்காரா, உன்னை நடிகன்னு சொல்லப்போறாங்க’ என பாலசந்தர் சார் ஞாபகப்படுத்தினார். நடிகன் என வந்தபிறகு யாராவது இயக்குநர் எனச் சொல்லமாட்டார்களா என ஆசைப்பட்டேன். அதுவும் சொல்லிவிட்டார்கள். இப்போது என்னை மனிதனாக மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என ஆசைப்படுகிறேன். அதனால்தான் நான் ‘உங்கள் நான், உங்கள் நான்’ என அடிக்கடி சொல்லிக்கொண்டேயிருக்கிறேன். அவர்களில் ஒருவனாக நான் மாறவேண்டும் என்கிற என் ஆசையைச் சொல்லிக்கொள்வதுதான் அது. இன்று மக்களின் மைந்தனாக என்னை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான் என்னுடைய பெரிய ஆசை.’’

“சமூக ஒழுக்க மதிப்பீட்டில் கமல் எப்போதுமே சிக்கிக்கொள்ளவில்லை. ஆனால் அவர் எதையெல்லாம் மறுத்தாரோ அது திருமணமோ, ஆண்பெண் உறவோ அதையெல்லாம் பிக்பாஸ் மேடையில் பேசுவதாகத் தோன்றுகிறது. பொதுப்புத்தியில் இருக்கும் ஒழுக்கமதிப்பீடுகளைத் தற்போது பின்பற்ற ஆரம்பித்துவிட்டாரா கமல்? இது தனிப்பட்ட கமலிடம் நிகழ்ந்திருக்கும் மாற்றமா அல்லது அரசியலுக்குத் தேவை என்று மாற்றிக்கொண்டதா?’’

- கார்க்கி பவா

“தனிப்பட்ட முறையில் கமல்ஹாசன் படிப்படி யாக அதே திசையில்தான் பயணித்துக்கொண்டி ருக்கிறேன். இம்மானுவேல் கான்ட் என்கிற தத்துவஞானி சொன்ன விஷயம் என் அண்ணன் வழியில் எனக்கு வந்தது. ‘YOUR LIFE SHOULD BE LIVED TO THE FULLEST WITH MINIMUM DISCOMFORT TO YOUR CO HUMAN BEINGS’’ இதுதான் அவர் சொன்னது. அதிக சேட்டைகள் செய்யும் உங்கள் பிள்ளையை ரயிலில் அழைத்துவருகிறீர்கள். நீங்கள் தூங்கிக்கொண்டிருக்கும்போது அந்தக் குழந்தை ரயிலின் ஓரத்துக்குப்போய் விளை யாடினால் ‘ஏய் அங்கெல்லாம் போகக்கூடாது’ என அதட்டுவது அவசியம். எனக்குப் பிள்ளைகள் விளையாடினால் பிடிக்கும். ஆனால் உங்களுக்கு எப்படியோ என எனக்குத் தெரியாது. அதனால் உங்கள் சார்பாகச் சொல்வதுதான் அது. மற்றபடி என்னுடைய சிந்தனைகள் முன்பு எப்படி நவீனப்பட்டிருந்தனவோ இன்னும் அதே நவீனத்துடன் என்னுள் வாழ்ந்துகொண்டி ருக்கின்றன.’’

“இந்திய சினிமாவில் நீங்கள் யாருடைய நடிப்பைப் பார்த்து அசந்திருக்கிறீர்கள்? கமலின் சினிமா வாரிசு யார்?”

- தார்மிக் லீ

திலீப்குமார், நவாஸுதின் சித்திக்கி, ஷஷாங்க் அரோரா
திலீப்குமார், நவாஸுதின் சித்திக்கி, ஷஷாங்க் அரோரா

“நல்ல நடிகர்கள் எல்லாம் என் வாரிசாக இருக்கவேண்டும் என்கிற பேராசை உள்ளவன் நான். பூனா பிலிம் இன்ஸ்டிட்யூட்டில் ‘How does it feel to be the best actor in india’ என்று என்னிடம் கேட்டார்கள். நல்லதொரு பாராட்டு மாலை. ஆனால் அதை வாங்க மறுத்துவிட்டு நான் ‘நாட் யெட்’ என்று சொன்னேன். யூசுஃப்கான் என்கிற திலீப்குமார் என்ற நடிகர் உயிரோடு இருக்கும்போதே அந்தப் பொசிஷனை யாரும் தொட முடியாது என்று சொன்னேன். அந்தமாதிரி எனக்குத் தெரியும், என்னுடைய பெருமை என்னவென்று. அது கிடைக்கும் காலத்தில் கிடைக்கும். அதேசமயம் அடுத்த முக்கிய நடிகர் ஏற்கெனவே வந்துவிட்டார் என்பதுதான் என்னுடைய ஃபீலிங். இவ்வளவு நாள் வராமல் இருந்ததற்கு, இவ்வளவு தாமதம் ஏற்பட்டதற்கான பொறுப்பை ரசிகர்கள்தான் ஏற்க வேண்டும். அதேசமயம் உங்கள் கேள்விக்கு மழுப்பிவிட்டேன் என நினைக்கக்கூடாது. நிறைய நடிகர்கள் இருக்கி றார்கள். தமிழ்நடிகர்ளைச் சொல்லவில்லையே என்று கோபம்கொண்டால் நான் சொல்லவே மாட்டேன்.

ஃபகத் ஃபாசில்
ஃபகத் ஃபாசில்

இந்தியில் சொல்ல வேண்டும் என்றால் என்னிடம் உதவி இயக்குநராக இருந்த நவாஸுதின் சித்திக்கி. அவரும் எல்டாம்ஸ் ரோடில் இருந்து புறப்பட்டவர் என்று சொல்வதில் எனக்குப் பெருமை. அதேபோல் பக்கத்து மாநிலத்தில் ஃபகத் ஃபாசில் இருக்கிறார். இன்னொருவர் ஷஷாங்க் அரோரா. நாகேஷ் சாயலில் இருக்கிறார் என்பதால் பிடித்திருக்கிறதா என்றுகூட நான் பலமுறை யோசித்திருக்கிறேன். சிறப்பான ஓர் இளம் நடிகர் அவர். இவர்களெல்லாம் முக்கியமான நடிகர்கள்.’’

- தொடரும்...

அடுத்த வாரம்...

  • திரையுலகில் முன்வைக்கப்பட்ட ‘மீ டூ’ குற்றச்சாட்டுகள் குறித்து?

  • நீங்கள் கட்சி ஆரம்பித்தபோது ரஜினி என்ன சொன்னார்?

  • கருணாநிதி இல்லாத தி.மு.க - ஜெயலலிதா இல்லாத அ.தி.மு.க?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism